Pages

Friday, December 31, 2010

சிதறும் சில்லறைகள் - 10 (திரும்பிப்பார்க்கிறேன்)

வருட ஆரம்பம்:
விடைபெறும் ஆண்டுக்காக சென்ற வருட இறுதி இடுகைக்கவிதை போ 2009 வா 2010
......
கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல
வா
புது வருடமே...
உன்னை விட
எனக்குத் தெம்பு
இருக்கிறது
இருந்தாலும்
உன் வரவு நல்வரவாகட்டும்

மனதுக்கு வெள்ளையடித்து
உன்னை வரவேற்போம்

கண்களில் விளக்கேற்றி
உன்னை
வெளிச்சப்படுத்துவோம்
...........

பதிவுலகில் இக்கவிதையே ஒரு வெற்றியானது. பின்பு தொடர்ந்து தொடர் பதிவுகளினால் 2010 ஆம் ஆண்டு மட்டுமே நூறு இடுகைகளை தாண்டக்கூடியதானது(இப்பதிவுடன் 106 இடுகைகள்)பதிவுலக திருப்தியாக கருதுகிறேன். அதற்காக கஸ்டப்பட்டு , மனம்கவர்ந்து, பிடித்து பிடிக்காமல் வாசித்து பின்னூட்டி எதை எதையோ எல்லாம் சாதிக்க(??) உறுதுணையான அனைவருக்கும் நன்றி. தொடர்ந்திருங்கள். இப்பதிவுகளை இணைத்த திரட்டிகளுக்கும் நன்றிகள்.

வெற்றிகள்:
எனது கிராமத்து பாடசாலை மற்றும் பிள்ளைகளின் வறுமை நிலைமை என்பவை தொடர்பாக எழுதிய பதிவுகளால் எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு தூண்டுதலையும் எமது பாடசாலை மற்றும் பிள்ளைகளுக்கு உதவும் எண்ணத்தையும் ஏற்படுத்தியது கடந்த வருட வெற்றிகளில் ஒன்று.
கடந்த மாசி (February) மாதத்திலிருந்து பொருளாதார வசதி குறைந்த குடும்பச் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தினை மூன்று பிள்ளைகளுக்கு என ஆரம்பித்து சித்திரை மாதத்தில் இன்னும் இருவர் சோக்கப்பட்டு (வரும் தை மாதத்திலிருந்து மேலும் இரு பிள்ளைகளை இணைக்கக்கூடியதாக இருக்கும்)இச்சேவைக்கு ஒரு பாலமாக இருப்பது மகிழ்ச்சி வெற்றி. இவ்வுதவிச்சேவையை எமது உறவு கனடா வாழ் திரு.இரா. இராஜேந்திரா அவர்களுக்கு நன்றி கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது" இதற்காக யாரோ ஒரு பிள்ளைகளுக்காக அவர்கள் கல்விக்காக ஆற்றும் உதவி எப்போதும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. இவ்வுதவிச்சேவை கடவுளுக்கு செய்யும் திருத்தொண்டாகவே எண்ணுகிறேன். எங்கெல்லாம் படிப்பதற்கு பிள்ளைகள் கஸ்டப்படுவதை உணருங்கால் ஏதாவது முடிந்தளவு உதவுங்கள் நாளைய விருட்சங்கள் வளர வாழ்த்துங்கள். இது தொடர்பான எனது முந்தைய இடுகை
அதேபோல் எமது பாடசாலைக்காக எமது கனேடிய வாழ் உறவுகள் சேர்ந்து பெருந்தொகை நிதி உதவியளித்தமைக்கும் நன்றிகளை சொல்லுகிறோம். என்றும் இணைந்திருங்கள் எமது கிராமத்தோடு.

நட்பு வெற்றி:

இணையம் மூலம் யாரோ யாரோ ஆனவர்களையும் முகம் தெரியாமல் முகவரி அறியாமல் எழுத்துக்களால் இணைந்த இதயங்கள் எத்தனையோ பேர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆனால் அகத்தின் எண்ணம் பதிவில் நுகரலாம். இவ்வாறு எங்கோ ஆனவர்களையும் இதயம் தடவிப்பார்க்க வைக்கும். சமூகவலைத்தளங்கள் மூலம் அவர்கள், நிலைமை அறிய அவர்களுக்கு நல்லதோ அல்லது அதற்கு எதிர்மாறாவோ ஏற்படின் அவர்களை எட்டிப்பார்த்து நலம் கேட்டு பங்கெடுக்கும் தன்மை வெற்றி என்றே சொல்லலாம்.
ஒரு எழுத்துப்பிழை கண்டு அதைச்சொல்லி மின்மடல் அனுப்ப அதன் பின் இணைந்த அந்த நல்லுறவு, அறிவாளன் எனக்கு கிடைத்த கடந்த வருட நட்பு வெற்றி. வாழ்த்துக்கள் தல. உங்களால் வாசிப்புப்பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டேன். புத்தகங்களை வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன். மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். அதிகளவு பதிவெழுதும் எண்ணத்தை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்திருங்கள் என்னோடு எழுத்தோடு.

மனம் கவர்ந்த பாடல்:
எல்லோரையும் மனசு வலித்த பாடல் "பூக்கள் பூக்கும் தருணம் ..." இப்பாடல் பற்றி முன்பொரு பதிவிட்டிந்தேன். சிதறும் சில்லறைகள் - 2
அந்தப்பாடல் இங்க வீடியோவில் ஆனால் இந்த காணொளி அழகாக இருக்கு வரிகளுடன்.
பாருங்கள்


எனது வாழ்வில்
கடந்த வருட ஆரம்பகாலங்களில் கஸ்டங்களை எதிர்நோக்கியிருந்தேன். ஆனாலும் எனது மருமகள் சயுரந்திரி பிறந்த தருணம் எனக்கு தனியார் துறையில் வேலை ஒரு திட்டத்துக்காக கிடைத்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. எல்லோரும் அதிஸ்டக்கார மாமா என்று சொன்னார்கள் அப்போது.
நன்றி எனது தூக்கத்தை கலைத்து இனிய மனதை தந்த எனது மருமகளே நன்றி உனது வெற்றிகளுக்கு துணையாக இருப்பேன்.
இப்பொழுது தடுமலும் இருமலுமாய் கஸ்டப்படுகிறாள்
என்தாயுடன் என் மருமகள்



பின்னர் ஆசிரியத்துவத்துக்கு போட்டிப்பரீட்சையின் மூலம் தெரிவாகி இணைந்துகொண்டேன். இவ்வாறு மீண்டும் பாடசாலையில் உருவாக உருவாக்க. மட்டற்ற மகிழ்ச்சி.

பதிவர் சந்திப்பு
அனேக உறவுகளை சந்திக்க கிடைத்தது சந்தோசம்.

கவலை:
சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் பாடவேண்டும் என்கிற செய்தி. அது ஓய்ந்துபோனாலும் தீ மூட்டப்பட்டதாக உணர்ந்தேன். தமிழிலும் முழுமயாக பாடவராது எனக்கு அதன்மேல் ஒரு விருப்பம் விருப்பபடாமல் போனதால்.ஆனாலும் மனசுக்கு கவலையளித்த விடயம் இது. இதற்கு வலுச்சேர்க்கும் படியாக இப்பொழுது ஆரம்பித்திருக்கும் "சிலோன்" சிறிலங்காவாக இருப்பது. தமிழில் இலங்கையா? இல்லை "சிறிலங்கா" வா "ஸ்ரீ லங்கா" வா என இன்னும் தெளிவாக இல்லை.

சில பேரை இழந்திருப்பது கவலையானது. அதேபோல் இணைந்திருக்காமல் இருப்பதும் அதே நட்பில் தவறானது.

தெளிந்தும் தெளியாமலும்
சீனா உலகநாடுகளில் முதன்மை பெற்று வருகிறது. அண்மைய ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் என்று விளையாட்டுத்துறைகளிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தியிருப்பது மற்றைய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையா அச்சுறுத்தலா என்பதும் நமது நாடு இந்திய, சீன பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்ந்து உறவாடுவதும் இன்னொரு சிந்திக்ககூடிய பிரச்சனைக்க வழிவகுக்குமா?? என்பது.

ஒரு ஸ்டேடஸ்:

"அங்கு நான் இருக்கிறேனா என்பது எனக்கு நீ சொன்னால்தான் தெரிந்துகொள்வேன்.
என்மனதில் நீ இருப்பதை நான் உனக்கு சொல்லும் போதுதான் புரிந்துகொள்வாய் என்பதை நான் அறிவேன்."

ஊடுறுவல்
எப்போதும் மற்றவர்களை மற்றவர் விடயத்தை ஆராய்வதில் சிலருக்கு ஏன் மனிதருக்கு இருக்கும் இயல்பு. இது சிலநேரங்களில் தேவையாகிறது. சில நேரங்களில் வெறுப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது. இணையத்தில் இந்த புல்லுருவிகள் (ஹக்கர்ஸ்) இருப்பது விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் போல.(அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது.) ஆனாலும் அந்த ஜூலியன் பால் அசாங் (julian paul assange) இன் நேர்மை பிடிச்சிருக்கு காரணம்
//வலையமைப்பின் பாதுகாப்பு வலையங்களை உடைத்து உட்புகுந்தால் கணினிகளுக்கோ, அதிலுள்ள கோப்புகளுக்கோ எந்த சேதத்தினையும் விளைவிக்காதீர்கள், உங்கள் உட்புகுதலுக்கான ஆதாரங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த சேதத்தினையும் செய்யாதீர்கள்', இவை ஜூலியனின் உபதேசங்கள். ///
மேலதிக தகவல்கள் சுடுதண்ணியில்
இருந்தாலும் மற்றவர்களின் தகவல்களை அறிய முயற்சிகளை மேற்கொள்ளுவது ???

நன்றி


விடைபெறும் வருடத்திற்கான முந்தைய கவிதையின் சில வரிகள்

ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்

நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு

நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்

விடைபெறுகிறேன்
புதுவருட வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு
அனைவருக்கும் இனிய வருடமாகவும் சந்தோசச்சாரல்கள் நிறைந்த வருடமாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

Tuesday, December 28, 2010

நீ உதித்து உதிர நான் உயிர்ப்பித்து

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் ஆனாய்

பூக்களாய்
சிரிப்புக்கள்
இலைகளாய்
சிலிர்ப்புக்கள்
தளைகளாய்
உயர்வுகள்
பழங்களாய்
வெற்றிகள்

ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் உதிர்ந்தாய்

உதிர்ந்த பூக்களாய்
எண்ணங்கள்
இலையுதிர்வுகளாய்
தோல்விகள்
வாடிய தளைகளாய்
மனவெழுச்சிகள்



ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்

நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு



நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்

Sunday, December 26, 2010

கல்லறைகளில் கண்ணீர்ப்பூக்கள்

ஆண்டுகள் ஆறு
ஆனாலும்
நினைவுகளில் வழியுது
அந்த கோர முகம்.
நிகழ்வும் சேர்ந்து
வதைத்துக்கொண்டுதான்
இருக்கிறது

"அம்மா
அப்பா
அண்ணா
அக்கா
மகள்
மகன்
பிள்ள
மாமா
மாமி
தம்பி
தங்கச்சி
பாட்டி
தாத்தா"
உயிர் பின்னிய
உறவுகள்
"அது
உடல்"
என்று
கடைசியில்
எதுவுமில்லா...

'கண்டுபிடிச்சாச்சா'
'இன்னுமில்லையா'
'ஒரு கை இல்லை'
'முகம் இல்லை'
'ஏதாவது ஒரு துண்டு'

விசிறி அடிச்சு
விழுத்திவிட்டுப்போன
வார்த்தைகளும்

உங்களோடு
நாம்
இருக்கிறோம்
கண்ணீரையும் சேர்த்துக்கொண்டு
துடைக்கும் விரல்களாய்
உணர்வுகளாய்...
சாந்தப்படுத்திக்கொண்ட
உள்ளங்களும்....

இன்றும்
மனக்கல்லறைகளில்
பூக்கள் தூவிக்கொண்டு
இதயத்தை துவட்டிக்கொண்டு
கண்களை ஈரப்படுத்திக்கொண்டு
அஞ்சலிக்கிறோம்....




எங்கெல்லாம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோ அவர்களுக்காக அஞ்சலிக்கிறோம்.. உங்கள் உயிர் அவதியாய் பிரிந்தாலும் ஆத்மா சாந்திஅடையட்டும். சுனாமியின் சுவடுகளாய் மனதில், கல்லறைகளில் பூக்கள் சொரிகிறோம்

Saturday, December 25, 2010

சிதறும் சில்லறைகள் - 09

இன்றைய நாள்
நத்தார் தினப்பண்டிகை
"இந்நாள் இனிய நாளாக அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்"

இன்றைய குறுஞ்செய்தி:

உங்கள் மகிழ்ச்சியின் வெளிச்சத்தில்
அன்பு கொண்டு அன்பு செய்க
இதயம் கொண்டு இன்பம் செய்க
யேசு பாலனின் இனிய நாளில்
வெற்றி தேவதைகள் உங்களைச்
சுற்றி வரட்டும்



நமது வாழ்க்கையில் சில நாட்கள் மறக்கமுடியாத நாட்களாக இருக்கும் நாம் சிலவேளை சில செயற்பாடுகளையும் மறக்காமல் இருக்கவேண்டும் என்று ஒரு நினைவில் நிற்கக்கூடிய நாட்களைத் தெரிவுசெய்வதும் வழமை.
அதேபோல்தான் நானும் இதேபோன்ற கிறிஸ்மஸ்தின நாளில் தான் எனது (புதிய)கணணியை வாங்கினேன் இற்றைக்கு நான்கு வருடங்கள் முன்பு. எனக்கு உதவியாக அல்லது தொல்லையாக இது இன்னும் இருந்துவருகிறது...

கவிதை கடந்தவருட நத்தார் பண்டிகைக்காக
வைக்கோலில் ஒர் ஒளிப்பிளம்பு
உலகம் மீட்க பிறந்த
உத்தமரின்
இத்தினம் முதல்
மனமெங்கணும்
மகிழ்ச்சி மலர்கள்
பூக்கட்டும்...

பதிவர் சந்திப்பு
ஒவ்வொருவர் வாழ்விலும் சந்திப்பு எப்போதும் இனிமையாகவும் நினைவில் நிற்கக்கூடியவையாகவும் இருப்பது மகிழ்ச்சியையும் சில சந்தர்ப்பங்களில் அதற்கு எதிர்மறையாகவும் இருக்கும். ஆனாலும் பதிவர் சந்திப்பு என்பது முகம் தெரியா எங்கெங்கோ ஆனவர்களையும் வலைப்பின்னலினூடாக அரட்டைகளிலும் தொலைபேசிகளினூடும் பதிவுகளினூடும் இணைந்த இதயங்கள் முகம் கொண்டு பேசும் இனிய பொழுது இப்பதிவர்சந்திப்பு.
கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழ்வலைப்பதிவர்கள் நாம் ஒன்றிணைந்தோம் சந்திப்புக்காக. மகிழ்ச்சி. இதற்கு முன்னைய நாளிலும் கிறிக்கட் விளையாட்டில் ஈடுபட்டோம். தித்திப்பு.

முதலில் இதனை ஏற்பாடு செய்த மாலவன் நிரூஜா(ஏற்பாட்டுக்குழு முதல்வர்), அனு, ,கங்கோன் கோபி , வரோ, அஸ்வின், வதீஸ் ,பவன், அனைவருக்கும் முதலில் நன்றிகள். காரணம் வேலைப்பளு உலகத்தில் சந்திப்புக்கு அனைவரையும் இணைத்து ஒருமிக்கவைப்பது இக்காலகட்டத்தில் மிகவும் கடினமாகதாகவே இருக்கிறது. ஆனபொழுதிலும் நாம் ஒன்றிணைந்தது மகிழ்ச்சி.
இச்சந்திப்புக்காக அனுவின் அம்மாசெய்துதந்த உருளைகள்(ரோல்ஸ்), நீரூஜாவின் வீட்டிலிருந்து வந்த கேசரி, பக்கோடா(எங்கிருந்து என்று சொல்லமாட்டன்), பவன் குழைத்த அன்னாசி மென்பானம் அனைத்தும் நல்லா இருந்தது.
ரோல்ஸ்க்காக அருவக்கத்திகொண்டு உருளைக்கிழங்கு தோலுரித்த கங்கோன், வதீஸ், மற்றும் அதிகாலை 6 மணிக்கு ???? எழுந்து வந்து அன்னாசித் துண்டுகளாக்கிய வதீஸ், பல்வேறு உதவிகள் புரிந்த வரோ, பக்கோடாவை அடிக்கடி மென்றுவிழுங்கி தொப்பையை வளர்த்துக்கொண்டிருந்த நிரூஜா, மென்பானத்தை குடித்து முடிக்கவேண்டுமென்று உழைத்த மருதமூரான் மற்றும் கங்கொன், நேரலைசெய்த மது...இப்படியே நல்ல இனிமையான நினைவுகளுடன் இனிதான சந்திப்பில் பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

பதிவுஎழுதுதல் பற்றி பல்வேறு வாதங்கள் எழுந்தன.
அவற்றுக்காக நான். நேரலையின் அரட்டையில் நண்பர் நிமலபிரகாஷ் சொன்ன விடயம்
முதல்ல பதிவர்கள் என்றால் பதிவு அதிகமாக எழுதுங்க பிறகு அதை மேலும் விரிவுபடுத்தலாம்.
சில படங்கள்


இனிய அந்நாள்

இப்பதிவர் சந்திப்பிலே நினைவாக எனக்கு தேவைப்பட்ட ஒரு பொருளை வாங்கமுடிவு செய்தேன் இதற்காக எனக்காக உதவிய கெளபோய்மது என்றும் நெஞ்சினில். அதைவிட ஒரு நீங்கா நினைவுகளையும் என்னுடனும் பகிரந்தது பன்மடங்கு சந்தோசமும் நினைவுளும்.
மது உங்கள் அம்மாவுக்காக

ஒரு தாய்மையின் தன்மையை உறுதியை உருவாக்குதிறனைக்கண்டு நெகிழ்ந்தேன். தாயே உனக்கு நான் யாரோ ஆகலாம் உள்ளத்தில் எனக்கு ஏதோ ஒரு தீயை வளர்த்துவிட்டாய். எங்குற்றாலும் எனது வாழ்த்துக்களையும் உனது மக்களின் சந்தோசமாய் ஏற்றுக்கொள்க. நீ வாழீ...

ஒரு ஸ்டேடஸ்


உறவுகளுக்காக ஏங்கும் உலகிலே கிடைக்கும் நல்உள்ளங்களில் மகிழ்ச்சி விதைகளையும் அன்பு வேர்களையும் பயிரிடுக. அதை கவனமாக தொடர்ந்து வளர்க்க முயல்க.
ஒவ்வொரு உணர்வுகளுக்குள்ளும் அன்புறவு கொள்க. நட்பின் நீளம் வெல்க.

Friday, December 24, 2010

இது ஸ்டேடஸ் -09

""நீ மலை உச்சியின் உயர்ந்த சைபிரஸ் மரங்களாக இருக்காவிட்டாலும்
மலையடிவாரத்தின் புற்களாய் இருக்கலாம் . அதிலும் சிறந்த புல்லாய் இரு..""
(பாடசாலை பரிசளிப்பு விழாவில் பெற்றது )

""நண்பர்களை உற்றுநோக்குபவன் எதிரியை நேசிப்பவன்.
இருவருமில்லையேல் என் பாதையில் சறுக்கல்கள் ஏற்படலாம். ஆனாலும் இவர்கள்
இருவரையும் விட குடும்பத்தில் வாழ்பவன்.""


"நட்பின் நீளங்கள் புரியாவிட்டாலும் அதன் தாகம் உணர்வாய் ஒருநாள்"

"ஓ.. உயிரில்லா உயிர்க்கலத்திணிவு ஆண்டுகொள்கிறது.. ஈரவலய உடல்வெப்பம் உலர்வலயமாகிறது. பல நாட்களின் பின் இப்படி ஒரு கஸ்டம் ##வைரஸ் காய்ச்சல்#"

"மனக்குழப்பத்தில் மனஅழுத்தத்தில் ஒரு நல்லுறவு மரணத்தை வாங்கிக்கொண்டது என்னை இன்று அழுத்திவிட்டது. கண்ணீரைச் சொரிந்து தள்ளியது.:'((""

"காத்திருக்கிறேன் ஒரு மாறுதலுக்காக. மாற்றம் எனக்குள் ஆயிரமாயிரம் விதைகளை வளர்க்க காத்திருக்கிறேன். விருட்சங்களே பொறுத்திருங்கள். வேராகிறேன்""

""நான் "சேறு" தாமரைகளே! வளர்ந்து மலர்ந்துகொள்ளுங்கள். காத்திருக்கிறேன் உங்களுக்காக""

""மீண்டும் பாடசாலையில் உருவாக இல்லை உருவாக்க""

""இன்பமும் துன்பமும் நிறைந்த வேதனையில்.... அழதாலும் சிரித்தாலும்... வாழ்க்கை என்றே முற்றுப்புள்ளி...""

""இன்று மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் புனரமைப்பு நானும் செயற்குழு உறுப்பினரானேன். விரைவில் தமிழால் தமிழுக்கு எப்போதும் போலவே உரமூட்ட ஆரம்பம்
20 Nov ""

""எந்த இடத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு எந்த இடத்தில் எதைச்சொல்லக்கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்##பிடித்திருக்கு""

""எமது ஊர் பாடசாலையிலிருந்து வாழ்த்துக்களைக் கேட்டதாக தகவல் வீட்டிலிருந்து காதுகளை இனிதாக்கி உறவுகளுக்கு நன்றி கூறுகிறோம்.""

""மண்ணில் வாழ்வதை விட மற்றவர்களின் மனதில் வாழ்வதில் தான் உண்மை வாழ்க்கை இருக்கிறது.##இன்று கிடைத்த குறுஞ்செய்தி##""

""நேற்றைய பொழுது ஒரு தாய்மையின் தன்மையை உறுதியை உருவாக்குதிறனைக்கண்டு நெகிழ்ந்தேன். தாயே உனக்கு நான் யாரோ ஆகலாம் உள்ளத்தில் எனக்கு ஏதோ ஒரு தீயை வளர்த்துவிட்டாய். எங்குற்றாலும் எனது வாழ்த்துக்களையும் உனது மக்களின் சந்தோசமாய் ஏற்றுக்கொள்க. நீ வாழீ....""

""சில சந்தோசங்கள் என்னைச் சலவைசெய்தாலும் அழுக்கை மனது கழுவப்படமுடியாமல் தவிக்குது ............"'

நமது பதிவர் சந்திப்பின் ஒரு உன்னத படம்.

Thursday, December 23, 2010

ஈழத்துப்பூராடனாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி

"'தேற்றாத்தீவு ஈழத்துப்பூராடனாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளையும் அனுதாபங்களையும் அன்னாரின் குடும்ப உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.... _தேனூர் வாழ் சமூகம்"'"

ஈழத்து பூராடனார் என இலக்கிய உலகில் அறியப்பட்ட திரு. செல்வராசகோபால் அவர்கள் கனடாவில் Mississauga நகரில் 21 .12 .2010 அன்று காலமாகிவிட்டார்


நமது பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகப்புத்தக குறிப்பிலிருந்து
பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் நினைவின் சுவடுகளில்
by Balasingam Sugumar on Wednesday, 22 December 2010 at 16:07


பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார்

தமிழ் மொழி தொன்மை யான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டு ள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் இலக்கியம், இலக்கணம், அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப் புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.

சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள். சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு. சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள்.

சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டி ருப்பார்கள். சுருங்கச் சொன்னால் சிலர் இயலிலும் சிலர் இசையிலும், சிலர் நாடகத்திலும் இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு.

மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் இலங்கையில் பிறந்து இன்று கனடாவில் வாழும் அறிஞர் ஈழத்துப் பூராடனார் (பிறப்பு 13.12.1928) அவர்களின் படைப்புகளை யான் பதினேழாண்டுகளாக நன்கு அறிவேன். எண்பத்திரண்டு அகவையிலும் அடக்கமும் அமைதியும் கொண்டு தமிழுக்கு உழைப்பதைத் தம் கடமையாகக் கொண்டு இவர் இயங்குகிறார்.

பதிப்புத் துறையில் இவருக்கு மிகப் பெரிய பட்டறிவு உண்டு என்பதாலும் தாமே அச்சுக்கூடம் வைத்திருப்பதாலும் தமிழுக்கு ஆக்கமான நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார். தம் நூல்களைத் தமிழ் வழங்கும் உலகப் பல்கலைக்கழகம் சிலவற்றிற்கு அன்பளிப்பாக வழங்குவதைக் கடமையாகக் கொண்டவர். கனடாவில் இவர்களின் அச்சகம் சிறப்புடன் செயல்படுகின்றது. நூல்களும் இதழ்களும் குறிப்பிடத்தகும் தரத்துடன் வெளிவருகின்றன.

ஈழத்துப் பூராடனாரின் படைப்புகள் கண்டு உலகமே வியக்கும்படியாக இவர் தம் தமிழ்ப் படைப்புகள் உள்ளன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர் இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.

ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் இந்த நிகண்டு நூலைப் படைக்க அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். மட்டக்களப்பில் பயிலப்பட்டு வரும் சொற்கள் மற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குப் புதியதாக இருப்பதுடன் மட்டக்களப்பில் இருப்பவர்களுக்கே பல தடுமாற்றங்களை உண்டு பண்ணுவதை உணர்ந்து ஆசிரியர் இந்த நூலை இயற்றியுள்ளார். ஈழத்துப் பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,



1. உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)

2. அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)

3. தொழிற் பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)

4. இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)

5. கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்கள்)

என ஐந்து வகையாகப் பகுத்துத் தமிழுக்கு அணிசெய்யும் அழகிய நூலைத் தந்துள்ள இவர் பணியை எவ்வளவு போற்றினாலும் தகும். வழக்கில் பொருள் விளங்காத சொற்களை நிலைப்படுத்தி விளக்கம் தந்துள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984இல் முதல் பதிப்பும் (48 பக்கம்) இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தன. மட்டக்களப்பிற்கு மாட்சி தரும் பாடும்மீன் என்னும் நீரர மகளிரின் பெயரில் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள், சொற்றொடர்களின் அகராதி’ என்னும் ஈழத்துப் பூராடனாரின் மற்றொரு சொல்லாய்வுக்கு உரிய நூலும் குறிப்பிடத் தகுந்ததே ஆகும். மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள், பழக்க வழக்கம், பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப் பூராடனார் வழங்கியுள்ளார். மட்டக்களப்பின் மகிழ்வுப் புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள் வயல் இலக்கியம், ஊஞ்சல் இலக்கியம், வசந்தன் கூத்து ஒருநோக்கு, மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்கள் இவரின் நாட்டுப்புறவியல் துறைக்குரிய பங்களிப்பாக விளங்குகின்றன.

நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள் கூத்தர்வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், மட்டக்களப்பு மாநில இருபாங்குக் கூத்துகளை விளக்கும் வகையில் இவர் தந்துள்ள கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம், வடமோடி கூத்து, இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும், கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும், கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை இரு பாங்குக் கூத்துக்கலைஞன் ஏசு.ஈ. கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை என்னும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாகும்.

மொழிபெயர்ப்பு வகையில் நம் ஈழத்துப் பூராடனார் அவர்கள் தம் பன்மொழி அறிவுகொண்டு பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். கிரேக்க நாட்டின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட் ஓடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டு வடிவில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதுவரை கிரேக்க நூல்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் நம் ஈழத்துப் பூராடனாரின் பணிகள் போற்றத் தகுந்தன.

இலங்கையில் பிறந்து கல்விப் பணியாற்றி ஓய்வாக வாழ்க்கை வாழ வேண்டிய சூழலில் இடம்பெயர்ந்தாலும் தம் தமிழாய்வுக்கு விடை தராத ஈழத்துப் பூராடனாரின் கிரேக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இங்கு தனித்துச் சுட்டத்தக்கன.

ஈழத்துப் பூராடனாரின் கிரேக்க காவிய மொழிபெயர்ப்பு

அறிஞர் ஈழத்துப் பூராடனார் கிரேக்க மொழியில் ஓமார் எழுதிய ஒடிசி இலியட்டு காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும். கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மூலமாகக் கொண்டு நம் ஈழத்துப் பூராடனார் தமிழில் செய்யுளில் தந்துள்ளார். தமிழ் போல் உயரிய மொழியான கிரேக்க மொழி பாவியங்கள் அந்த மொழியின் இலக்கியச் செழுமையை உணர்த்துவதுடன் கிரேக்க மக்களின் கடல் பயண அறிவு, இசை அறிவு, நாடக அறிவு என யாவற்றையும் காட்டும் ஆவணமாக உள்ளது.

ஈழத்துப் பூராடனார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். 11100 பாடல் வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிரேக்க மொழி ஓமரின் காப்பியங்கள் பற்றி ஈழத்துப் பூராடனார் பின்வரும் குறிப்புகளைத் தந்துள்ளார்.

‘கிரேக்க மொழி தமிழைப் போன்று செம்மொழி இலக்கியம் படைத்த ஒரு பண்டைய மொழி. இதில் உள்ள மகாகாவியங்களில் ஹோமர் மகாகவியின் ஒடிஸ்சியும் இலியட்டும் மிகவும் பழைமையுஞ் சிறப்பும் வாய்ந்தவை. இதன் கிளைக் கதைகளாகவே ஆதிக் கிரேக்கத்தின் பிந்திய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை அநேகமாக நாடக வடிவிலேயே அமைந்துள்ளன. கப்பற் பயணங்களிற் தேர்ந்தவராய் கிரேக்கர் முதலிடம் வகித்தது போல் நாடக அரங்குகளை அமைப்பதிலும் நடத்துவதிலும் அவர்கள் தலையா சிறப்புற்றிருந்தனர். எனவே நாடக இலக்கியங்கள் அங்கு நிலைபெற்று வளரலாயிற்று. (இலியட் பக்கம் 8)

பண்டைக்காலத்தில் கூத்தும் நாடகமும் செழித்திருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 99 வகையான கூத்துக்களை எடுத்துக்காட்டும் சிலப்பதிகார உரையாசியர் அடியாக்கு நல்லார் தமிழகத்தின் செழித்த கூத்து மரபுகளை நமக்கு நினைவூட்டியுள்ளது போல் கிரேக்கர்களின் நாடக இசையறிவு யாவும் கிரேக்க மொழியில் இருந்துள்ளதை ஈழத்துப் பூராடனார் தமிழுக்கு வழங்கியுள்ள தமிழாக்கத்தின் வழியாக அறிய முடிகிறது.

அண்மைக் காலமாக ஈழத்துப்பூராடனார் ஐஞ்குறுநூற்று அரங்கம், சூளாமணித் தெளிவு, கல்லாடம் கற்போம், சொல்லாடுவோம், நைடதம் யாருக்கும் ஒரு ஒளடதம் ஆய்வுக் கண்ணோட்டம், சீவகசிந்தாமணி, ஆய்வுச் சிந்தனைகள், பெருங்கதை ஆய்வுநோக்கு, உள்ளிட்ட நூல்கள் பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ் நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக உருவாக்கியுள்ளார். தமிழ்மொழியின் தோற்றம், அதன் சிறப்பு உணர்த்தும் நூலாக இது உள்ளது.

இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும், உலகளவில் தமிழ்ப் பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.

தமிழ் கணிப்பொறித் துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செயற்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட பெத்லகேம் கலம்பகம் என்ற நூலே தமிழில் கணிப்பொறியில் அச்சான முதல் நூலாக விளங்குகிறது

நன்றி சுகுமார் சேர்.

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்! -முனைவர் மு.இளங்கோவன் விரிவாக எடுத்துரைக்கிறார்

Wednesday, December 15, 2010

பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும்

இருவரும்
பல தடவைகளில்
நாம்

'நீ'
'நான்'
உரிமையாய்
ஒருமைப்பட்டுக்கொண்டது
வார்த்தைகள்

செல்போனிலும்
சில்மிசங்களாய்
நீண்டுகொண்ட
வாழ்க்கை
'குறுஞ்செய்திகளாய்'

இதுவரை யாருக்கும்
அறிமுகப்படுத்த முடியாமல்
நட்பும் காதலும்
உரிமைப் போராட்டம்
நடத்திக்கொண்டது

நானும் நீயும் மறுத்தாலும்
ஈரப்பொழுதுகளின்
இருட்டு போர்வையில்
கண்கள் உதிர்த்த
வெப்பத்துளிகளுக்கும்
மூச்சுகுழல்வாயில்
முட்டி மோதிய
காதல்காற்றுக்களுக்கும்
சொல்லிவிட்டுப்போ
பிரிகின்ற நேரம்
உரிமையோடு
என்ன
உறவென்று

பிரிந்துவிடு
நீயாக
பிரித்துவிட்டு போகாதே
தானாக

நானும் காதலும்
வாழ்வோம்
இப்போதும்
நாம்

Monday, December 6, 2010

தித்திப்பு (சுயமாக சுகமாக வெற்றி)

வணக்கம்
எதிர்பார்த்து எதுவும் நடைபெறாமல் போனால் கவலை. மனதுக்கு ஒரு நெருக்கடி ஆனாலும் அவ் எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஒரு தித்திப்பு இல்லையா.

எங்க ஊர் பாடசாலையின் வறுமையும் திறமையையும் இங்க பார்த்திருப்பீங்க.

அதே போல் கடவுள் எங்கே .....பிள்ளைய பாருங்க.. பார்த்திருப்பீங்க.



எமது பாடசாலையின் வறுமையின் அல்லது முயற்சியாண்மையில் வெற்றிகளில் பொருளாதாரம் தடையாக இருக்கின்றது என்பது எமது கண்களால் துருப்பட்டுக்கொண்டிருந்த விடயம்.

ஆனாலும் எங்கெல்லாம் மனம் காயம் படும்போதெல்லாம் காயம் ஆற்ற மனம் ஏங்கும் உணர்வு நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கும் என்பதை காணக்கூடியதாக இருந்தது எனக்கு.

காரணம் இவற்றின் எழுத்துக்களாலே எமது மண்ணின் பல உறவுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது இந்தப்பதிவுலகத்தில் நான் அடைந்த வெற்றிகளில் ஒன்று.
இதுமட்டுமன்றி நமது வறுமை அல்லது பொருளாதார வசதிகுறைந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஒருசிலபேரது இடைவெளியை நிரப்பக்கூடியதாக எமது கனேடிய வாழ் உறவுகளின் முயற்சிகளால் அன்பளிப்புக்கள் நிதியுதவிகள் கிடைத்தது பதிவுலகத்தில் முழுமையாக நான் பெற்ற உயர்ந்த வெற்றி.
இதையும் தாண்டி எமது கிராம பாடசாலையின் பரிசளிப்பு விழா 2010 ஆண்டுக்கு நடைபெறுவது பொருளாதார பின்னடைவால் நிறுத்தப்படும் என்றிருந்த நிலையில் எமது புலம்பெயர் உறவுகளிகள் கனேடிய வாழ் உறவுகள் மூலம் நாம் எட்டமுடியாத இலக்கை அடையவைத்தது எமது உறவுகளின் உணர்வுகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தவிர வேறென்ன கூறமுடியும்.

ஆக உறவுகளின் தேக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது. அதேபோல் எமது கிராம பிள்ளைகளின் திறமை அவர்கள் பொருளாதாரத்தினால் தடைப்படக்கூடாதென்ற பண்பு நம் எல்லோர் மனதிலும் இருக்கிறது என்பது மனதுக்கு இன்னுமின்னும் ஒரு புத்துணர்வைத்தந்தது.

ஆனாலும் இன்று இன்னொரு சம்பவம். கண்ணீரின் ஓரங்களை நனைத்துவிட்டுப்போனது. எனது வீட்டிற்கு ஒரு தாய் வந்து ' தனது பொருளாதார பின்னடைவைப்பற்றியும் கணவன் நீங்கிய பின்னர் கஸ்டப்பட்டு தனது பிள்ளைகளை வளர்க்கும் தன்மையையும் மற்றும் தனது பிள்ளைகளின் திறமைகளையும் சொல்லியபோது கடவுளுக்கும் கண்ணீர் கசிஞ்சிருக்கும். நான் இந்த வேலைகளில் இருந்து சற்று ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தபோது இப்படி ஒருநிலையை உணர்ந்தபோது ஒரு வாக்கியம் எனது சிறுபராயத்தில் எனக்காக சொல்லப்பட்டது எனது மாமாவால்
சுவாமி விவேகானந்தரினது பொன்மொழி அது.
"நன்மை செய்யப் பிறந்த நீ
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாதிரு"

இந்த பொன்மொழி எங்கெல்லாம் கஸ்டம் தெரிகிறதோ அங்கெல்லாம் எனது மனது பார்க்கும்போது கண்கள் வாசிக்கும் ஒரு வாக்கியம். ஒவ்வொருமுறையும் நான் நானாக இருக்கிறேனா என்று என்னையே கேட்டுக்கொள்ளும்.

இன்று இந்த தித்திப்பு ஒரு சுயபுராணமாய் இருக்கலாம். ஆனாலும் எமது உறவுகளின் ஒன்றுசேர்ந்த இந்த முயற்சியை தொடர்ந்து எமது பிள்ளைகளுக்காக செய்யவேண்டும் என்ற தன்மையைச்சேர்த்துவிடுகிறது.

Saturday, December 4, 2010

வயலினும் வாழ்க்கையும்

ஏதேதோ
இடறுமுடக்காய்
வாசித்தாலும்
மழழையின்
மழை

சந்தம் பொருந்திய
சங்கீதமானாலும்
குழந்தை பாடும்
பாட்டு

சூரியன் வரவை
வர்ணித்தாலும்
இயற்கையின்
அரவம்

நான்
நாண்
கைகளே
மீட்டுகின்றன

வயலினே
வாழ்க்கை

புன்னகைக்கும்
பூக்களே
நண்பர்கள்

மரங்களின்
இலைகளின்
ஓசையல்ல
என்னிதயத்தின்
பாஷையடா
நமது வீரத்தின்
தீரமடா
வாருங்கள் நமக்காக
வாசிப்போம்



இந்தப்படம் இங்கிருந்து சுட்டது. நன்றி ஜனா அண்ணன்
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு