Pages

Tuesday, November 30, 2010

நரகமும் சொர்கமும் (எயிட்ஸ் தினம் 2010)

நான் அழிந்து
என்னை
அழித்துவிட்டுப்போன
"உறவு"

எனக்காக
தற்செயலாக
வேண்டுமென்றே
ஆளாக
ஏற்றப்பட்ட "ஊசி"

உதடு கடித்து
உமிழ்ந்து உசுப்பிய
முத்தம்
என்னில் சிக்கிய
"இரத்தம்"

சொல்லவில்லை
நீர்ப்பீடன எதிரி
இணைக்கப்பட்டிருக்கு
இறந்துவிடு என்று

கிழிந்த சேலையில்
தெரிந்தது
வாழ்ந்த வாழ்க்கை

இழந்தபோதுதான்
உணர்வானது
இருந்தவரை
வாழ்க்கை

சொர்க்கமும்
நரகமும்
வார்த்தையிலும்
வாழும் 'நல்'
வாழ்க்கையிலும் தான்

ஒரு எயிட்ஸின் புலம்பல் பார்க்க

Sunday, November 28, 2010

சிதறும் சில்லறைகள் - 08 (வாசிப்பு)

உலகம் உன் வசம்

பலநாட்களாக எழுத இருந்து எழுதாமல் போன விடயம் தொடா்பாடல் ஆனால் அதுபற்றி எழுதுவதற்கிடையில் என்கையில் ஒரு புத்தகம் கிடைத்தது.
அது உலகம் உன் வசம் - சோம. வள்ளியப்பன் எழுதியது. பல விடயங்கள் நமக்குத் தெரிந்த நாம் தவறிழைக்கின்ற நிறைய தகவல்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறார். அவசியம் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்.
"எந்த இடத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதில் உள்ள தெளிவு, எந்த இடத்தில் எதைச்சொல்லக் கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்" இதுவே இந்தப்புத்தகத்தின் நோக்கக்கூற்றாக இருக்கிறது.
மற்றவர்களுடன் எப்படித்தொடர்பு கொள்ளவேண்டும் என்பதில் தெளிவான விளக்கங்கள் போதியளவு உதாரணங்களுடனும் மேற்கோள்காட்டி எழுதியிருப்பது வாசிக்க மனதோடு ஒத்துப்போகிறது.
பேச்சுப்பற்றி
"அழகாக, சாமர்த்தியமாக, கோர்வையாக, தெளிவாக, சுருக்கமாக, நகைச்சுவையாக, தேவையான நேரத்தில், புரியும்படி, தேவைப்படும் நேரங்களில் விளக்கமாக, சமயத்தில் உடனடியாக, வேறு சில சமயங்களில் கொஞ்சம் பொறுத்து, கவனமாக, சொல்ல நினைக்கும் பொருள் விளங்கும்படியாக... - எனப் பல்வேறு சந்தர்ப்ங்களில் பல்வேறுவிதமாக நாம் பேசவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறார். இப்படி பலவிடயங்களை பல ஆதரங்களுடனும் புனைவுகளுடனும் எழுதியிருக்கிறார். நல்லதொரு கையாள்கை அந்த எழுத்துக்களில் தெரிகிறது. வாசியுங்கள் அதன்படியாவது முயற்சியுங்கள் நானும் முயற்சிக்கிறேன்.


திருவிழாவில்
ஒரு
தெருப்பாடகன்


தலைப்பே ஒரு கவிதையாகி நிக்கிறது. மு.மேத்தாவின் படையல்களில் அதிக வலிகள் பல இடங்களில் தெரிந்தாலும் கார்த்திகைக்கென நான் மீண்டும் ஒருமுறை படித்த இந்தபுத்தகம் கவிதையின் நுரைகளில் நுழைந்து அவதிப்பட்டேன்.
"
எங்கள் தேசத்தில்
ஒவ்வொரு கட்சிக்கொடியும்
உயரத்தில்தான் பறக்கிறது
எங்கள் சகோதரர்களின்
தாழ்ந்த குனிந்த
தலைக்கம்பங்களின் மீது!
"
எங்கேயே என்னை உசுப்பிவிட்ட வரிகள்.
தமிழனின் கதை என்ற தலைப்பில் தலைப்பே அத்தனையையும் அடுக்கிக்கிட்டு போகிறது.
விழிகளைத் திறக்கும் விறகுகள் என்ற கவிதை குடிசையின் இலட்சணங்களை படம்போட்டுக்காட்டுகிறது. அசோகவனத்தில் ஒரு சோகவனம் நம்ம நாட்டை.............

"பூந்தோட்டமே
அங்கு
பொசுங்கிப் போன பின்
மரங்கள்
இங்கே
மாநாடு போடுகின்றன"

இது ஈழத்துப்பூக்கள் என்ற கவிதையில் ..........
அதிக கவிதைகள் நமது நாட்டுக்காக எழுதப்பட்டவைகளாக இரசிப்பதா வெறுமனே வாசிப்பதா என்று தெரியாமல் கண்களின் ஓரங்களில் ஈரத்தை உதிர்த்துக்கொண்டு நான்.

கவிஞன்

முற்றுமுழுதாக மாதாந்தக் கவிதைச் சஞ்சிகையாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலிருந்து வெளிவரும் இந்தக் கவிஞன் இதழ் கஸ்டப்பட்டு வந்துகொண்டு இருக்கிறது. இன்னுமின்னும் இளையோர்களையும் கவிஞர்களையும் காலத்தை தின்றவர்களையும் தேடி வாசியுங்கள் வாங்கிக்கொண்டு எழுதிக்கொள்ளுங்கள் இன்னுமின்னும் வளரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

Saturday, November 27, 2010

மெளனித்து............

கனவாகிப்போன
கனவான்களின்
கனவுகளுக்குமாய்

கருவாக்கி உருவாக்கிய
கருவாகி உருவான
கருத்தாகிப்போன
கருக்களுக்குமாய்

வேரைத்தேடி புறப்பட்ட
விருட்சங்களுக்குமாய்

காற்றாகிப்போன
புயல்களுக்குமாய்

சூரியனை வருவிக்க
ஐதரசன் சுவாலை தின்ற
நட்சத்திரங்களுக்குமாய்

மனமே ஒளிர்க
மெளனமாய்

(நன்றி கார்க்கி முகப்புத்தக படம்)

Wednesday, November 24, 2010

குடித்துவிட்டுப்போகுது போர்வைக்குள்

துளி
சாரல்
தூறல்

அடைமழை
கூதல்
கண் முழிப்பு
கம்பளிப் போர்வை
காது விழிப்பு

கூரையிலிருந்து
சொட்டுகள்
ஓடுகளில் விரிசல்
........
......
மயான அமைதி
மரம்முறியும் இலை
தழை தலை அசைவு
முரட்டு சங்கீதம்

பெருந்துளி
கூரையிலும்
மண்ணிலும்
தாரைகள்

தலைமாட்டில் அம்மா
"டேய்
டீ சுடுகுது"

தடுமாற்றம்

மழை
குடித்துவிட்டதால்

மனதில் ஓட்டைகள்
மழை ஒழுகட்டும்

போர்வைக்குள்
நான்


Saturday, November 20, 2010

பால்நிலை (Gender)

பால்நிலை (Gender) என்றால் என்ன?

பால்நிலை என்பது சமூகத்தினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட சமூகப்பாத்திரங்கள் அவை பின்வரும் விடயங்களை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகின்றன
வேலை பெறுப்புக்கள்
தீர்மானம் எடுத்தல்
வெளிச்செல்லுதல்
வளங்களை அடையும் வழிகள்
சமூகவியல், சமூகப்பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்கள்.

இதனால் எமது அன்றாட வாழ்க்கை மேற்கூறப்பட்ட விடயங்களினால் பால்நிலை மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

எமது யதார்த்தத்திலிருந்து சில கேள்விகள்:
- சம அளவான வேலைக்கு ஆண் தொழிலாளர்களைவிட பெண் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாகக் கொடுக்கப்படுவது ஏன்?

- குடும்பத் தலைவராக ஒரு பெண்ணை ஏன் குறிப்பிடுவது இல்லை? ( பெண் மட்டுமே குடும்பத்தில் வருமானத்தை ஈட்டுபவராக இருப்பினும் ஆண்களை மாத்திரமே குறிப்பிடுகின்றனர்.)

- ஆண்மை பெண்மை பற்றிய எமது விளக்கம் என்ன?

பால்நிலை வேறுபாட்டின் முக்கியத்துவம் யாது?

ஆண்களினதும் பெண்களினதும் அனுபவங்கள் வித்தியாசமானது! அவர்களின் தேவைகள் வித்தியாசமானவை! அவர்கள் பாவிக்கும் வளங்களும் வித்தியாசமானவை!

பால்நிலை பாரபட்சங்களை அடையாளப்படுத்தி, வெளிக்கொணர்ந்து தீர்ப்பதனால் மாத்திரமே வேலை செய்யும் சமூகத்திலுள்ள அனைவரும் பயனடைவார்கள். இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் பலவீனமான குழுக்கள் மீண்டும் மீண்டும் குரல் கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
(வயது முதிர்ந்தோர், பிள்ளைகள், விசேட தேவை உள்ளவர்கள்). இதனால் தங்களது தேவைகளை உரிய முறையில் வெளிக்கொணர முடியாதவர்களின் தேவைகள் நம்மை வந்து அடையாது.
ஆகவே அபிவிருத்திட்டத்திற்குரிய பயன் பெறப்பமாட்டாது. முயற்ச்சி வீணாகும். இவர்களும் இச்சமூகத்தை சேர்ந்தவர்களே! ஆகவே அவர்களை அடையாளம் கண்டு முன்கொண்டுவர முயற்சி செய்வோம்.

பால்நிலை பகுப்பாய்வு என்றால் என்ன?
Joan W. Scott ('பாலியலானது வரலாற்று பகுப்பாய்வுக்கு ஓர் பிரயோசனமான வகை'The American u;istorical Review, Vol. 91, No. 5, Dec. 1986, pp. 1053-1075), historian;
இவரின் நூலிலிருந்து

- ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாட்டை (தனிப்பட்டதும் குழுவாகவும்) ஏற்படுத்துவதுடன் பால்நிலை வேறுபாடானது பால்நிலை கோட்பாட்டுச் சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- பால்நிலை வேறுபாட்டுக்கிடையேயான இடைவெளி சமூக உறவுகளுடன் தொடர்புபட்டதாக அமையும் (சமூக வாழ்வின் கோட்பாட்டை உருவாக்கும்) மற்றும் பால்நிலை வேறுபாடு ஓர் பகுப்பாய்வுப் பகுதியாகும்..

இப்பகுப்பாய்வு பின்வருவனவற்றின் அடிப்படையில் அமையும்
1. அடையாளங்கள்
2. நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள்
3. அடையாளக் குறியீடுகளின் விளக்கப்படுத்தல்கள்

இதை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்?
1. உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் பிரச்சினைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யவும்;. இதில்; பால்நிலை பாரபட்ச நிலைப்பாடுகளும் தாக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2. பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல். பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
3. பால்நிலை தொடர்பான விழிப்புணர்வும் வேறுபாட்டுத் தன்மையும் எமது சமூகத்திற்கிடையே அதிகரிக்கப்பட வேண்டும்;.
4. பால்நிலை பகுப்பாய்வை உங்கள் வேலைத்தளங்களில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நடைமுறைப்படுத்தவும்.

இது ஒரு பகிர்தல். ஒரு பயிற்சிப்பட்டறையின் போது பெற்றுக்கொண்ட விடயம். பால்நிலை சம்பந்தமான உங்கள் கருத்துக்களை பகிருங்கள் முடிந்தால்.விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

Friday, November 19, 2010

சிதறும் சில்லறைகள் - 07(பெரிதுவத்தல்)

இன்றைய நாள்:
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இவர் இலங்கை ஜனநாயக குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக பதவியேற்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்திருக்கிறார்.

திருக்குறள்

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.(67)

விளக்கம்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.

தன்னிலை விளக்கம்

இக்குறள் என்தந்தை கற்றாரோ என்னவோ இல்லை. ஆனாலும் தமது பிள்ளை தன்னை விட கற்று சமுதாயத்தில் விஞ்ச வேண்டுமென்ற அவா ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் உண்மை உணர்வு. அப்பாவும் என் குடும்பமும் என்னை ஒரு கற்றவனாக்குவதல் சில வெற்றிகளைக்கண்டாலும் என்விருப்பத்தை அவர்களுக்காக விட்டுக்கொடுப்பதில் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதில் எனக்கு அதீத விரும்பம் கொண்டவனாய் இருப்பேன். ஆனாலும் அதிகளவில் பயன்பாடுகளில் சிக்கலைத் தோற்றுவிக்கும் அல்லது மூடநம்பிக்கைகளை களைவதிலும் அவர்களுக்கு அவை பற்றி தெளிவுபடுத்துவதிலும் ஒருவனாக இருப்பேன். அப்படியே எனது விருப்பமான தனியார் துறைவிடுத்து அரச துறைக்கு முதன் முதலாக இணைகிறேன். இது கூட என் தந்தை ஆசைப்பட்டு நுழைகிறேன். என்னை எப்படியோ அரச உத்தியோகத்தில் சேரு என்று முணுமுணுத்து அவர் விருப்பத்தை நோகடிக்காமல் இருப்பதில் பெரும் மகிழ்ச்சியுறுகிறேன்.

பாடல்

நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன் என்னை நனைத்துவிட்டுப்போன இப்பாடல்
இப்பொழுதும் அப்பாவுக்காக கேட்கிறேன்.



தேன் கிண்ணத்திலிருந்து

கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு
உயிரிருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீர்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், கார்த்திக்


புத்தகம்

இப்பெல்லாம் புத்தகம் என்றாலே உசிரு. படிக்காவிட்டாலும் வாங்கிக்கொள்ளவேண்டுமென்று ஒரு ஆவல். நான் படிக்காமல் போனாலும் யாராவது படிக்கட்டும் என்று உள்ளுணர்வு.
அண்மையில் சுஜாதாவின் மீண்டும் தூண்டில் கதைகள் படித்தேன். அதில் பத்துக்கதைகள் அற்புதமாய் எழுதிருக்கிறார் சுஜாதா அங்கே செல்போன்கள் பயனுள்ளவை,ஸ்டேடஸ், சென்னையில் மேன் ஹாட்டன் என்பன அவசியம் படிக்கவேண்டிய கதைகள்.

ஒரு ஸ்டேடஸ்'

"இன்பமும் துன்பமும் நிறைந்த வேதனையில்....
அழுதாலும் சிரித்தாலும்... வாழ்க்கை என்றே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது"

ஒரு படம்
அண்மையில் திருமலை சென்றபோது செல்போனுக்குள் சிக்கிய படம்.

Tuesday, November 9, 2010

மாற்றம் வேண்டி

வேதனை வழங்கல்களாய்
எனக்கு
ஆறுதல்கள்
அங்காங்கே சில
புன்னகைகளுடன்

வரம்புளில் வழியும்
வாழ்க்கை

ஒரு மாறுதலுக்காக
மாற்றம் எனக்குள்
ஆயிரமாயிரம்
விதைகளை வளர்க்க
விருட்சங்களே
பொறுத்திருங்கள்
வேராகிறேன்

Friday, November 5, 2010

தேனூரானும் நாட்டாரியலும் (சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்)

தேனூர் எனும் பெயர் எங்கட ஊர் தேற்றாத்தீவுக்கு வரக்காரணமே கவிஞர் தேனூரான் தான். தருமரெத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஊர் மேல்கொண்ட இலக்கியப் பாசத்தால் இப்புனைபெயரை தனதாக்கிக்கொண்டார். இவரை தேனூரான் மாமா என்று சிறுவயதுகளிலிருந்து அழைத்து வருகிறோம்.இலக்கியத்தில் மிகுந்த வல்லமைவாய்ந்த இவரைப்பற்றிய பதிவு இது.

இவருக்காக நான் எழுதிய கவிதை கலாபூசணம் விருதுபடைத்தபோது; இங்கு காண்க.

கிழக்கிலங்கை தமிழ்பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள் (ஆய்வரங்கக் கட்டுரைகள்) என்ற புத்தகம் அண்மையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக அமையப்பெற்றதை ஒர் ஆவணப்படுத்தலாகவே உணரலாம். இதில் நாட்டாரியல் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளில், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் தொன்மையையும் நாட்டுவழக்காறுகளையும் தெளிவாக எழுச்சிபெறச் செய்திருப்பது மகிழ்ச்சி.


கிராமத்து மண்ணின் மகிமையை அதன் நாட்டுவழக்கை தொன்றுதொட்டு வரும் பண்பை தமிழின் தொடர்ச்சித்தன்மையை அதிகளவில் படம் போட்டுக்காட்டும் புத்தகம் அது. அதைவிட ஆவணம் என்றே சொல்லலாம். ஆனாலும் அங்கே குறை (சொல்ல வேண்டியது ).
இப்புத்தகம் பல்வேறு சமூகத்தையும் மக்களையும் சென்றடையும் நோக்கு குறைவாக இருக்கிறது.பல்கலைக்கழக அல்லது இன்னொரு ஆய்வாளர்களுக்காக மட்டும் இருப்பதாக உணர்கிறேன். காரணம் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்குமா என்பது சந்தேகப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் அறிஞர்களால் உணர்த்தப்பட்ட ஆய்வரங்கக்கட்டுரைகளையே இப்புத்தகம் கொணர்ந்திருக்கிறது. ஆனாலும் பல்வேறு ஆய்வுகள் கருத்தரித்தும் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் கர்ப்பிணிகளாய் இன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
இப்புத்தகத்தினூடு எமது ஊரின் பெருமைசேர்க்கும் கவிஞர் தேனூரான் நாட்டார் அறிவியல் என்ற ஆய்வுக்கட்டுரையைத் தொகுத்துத்தந்துள்ளார்.

"ஒரு நாட்டான் நாட்டார் அறிவியில் பற்றி கூறுவது சிறப்பு, தான் உண்டவற்றை, உண்டு ரசித்தவற்றை அதனால் ஏற்பட்ட மகிழ்வை, பிறருக்குக் கொடுப்பது சொல்வது பொருத்தம், ஆண்டவனின் செல்வப்புதல்வர்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஏழையாயினும் சந்தோசச் செல்வம் பெரிதும் படைத்தவர்கள். அறிவியல் மேதைகள் தாம் பட்டினிகிடந்தும் தமது வீட்டுவாயிலில் வரும் விருந்தினர்களை இதயபூர்வமாக வரவேற்பார்கள். அழகிளராக இருந்தும் தமது அழகைப்பற்றி அகந்தை சிறிதும் அற்றவர்கள்......"
என்று முன்னுரைக்கும் போது நாட்டாரியலின் மேன்மை விளங்கும்.

வழமையான ஆய்வாக இல்லாமல் ஒரு வித்தியாசமான ஆனாலும் நாட்டாரியல் தொடர்பாக பல்வேறு அணுகுமுறைகளை சிந்தனைகளை கவிஞரின் எளிமைத்தன்மையைப் போலவே நுண்ணிய முறையில் தெளிவாக்கியிருப்பது அவருக்குரிய அந்த எழுத்தாற்றலை எல்லாருக்குமாக கொண்டுவந்திருப்பது தெளிவு.

நாட்டாரியலின் தொன்மையை எழுத்துலகில் தடம்புரளச்செய்வதில் இவருக்கு எப்போதும் பெருமையான விடயமும் இவருக்குரிய திறமையையும் வெளிக்காட்டுகிறது. பல்வேறு ஆய்வுகளுக்காக இவரின் துணையை நாடும் பல்கலைக்கழக பேராசியரியர்களும் மாணவர்களும் அவரிடமிருந்து தேனைப் பெற்று வெறும் கூடாக இவரைப் பார்ப்பது நமது மனதுக்கு கவலையாகவும் வெட்கப் படவேண்டிதொன்றாகவும் காணப்படுகிறது.
தமிழ் இலக்கிய விழா - 2010 சிறப்பு மலர் கிழக்குமாகாண கல்வி பண்பாட்டல்வல்கள் அமைச்சின் வெளியீட்டுநூலிலும் நமது மண்ணின் சிறப்புப் பேணும் மட்டக்களப்பு பிரதேச சடங்குசார் கூட்டுக்கலை வசந்தன் - கொம்புமுறி என்ற தலைப்பில் வசந்தன் கூத்து மற்றும் கொம்புமுறி விளையாட்டு என்பற்றை கலைநுட்பத்தின் வெளிப்பாட்டாக அற்புதமாக எவ்வாறு இக்கலைகள் நடைபெறுகிறது என பல்வேறாக ஆய்வெடுத்து எடுத்துரைக்கிறார். கொம்புமுறி விளையாட்டு எமது ஊரின் பெருமைசேர்க்கும் பழைமையான விளையாட்டு ஆதலால் தான் எமது கிராமத்தின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் பெயரானது கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் என்று. அத்தோடு மட்டுமில்லாது வசந்தன் கூத்து என்ற எமது மற்றுமொரு பாரம்பரிய ஆடல்வகையைபற்றிய எழுத்தாடலும் அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.
(அண்மையில் எமது கிராமத்தின் பாலமுருகன் கோயிலுக்கு பால்குடபவனி விழா நடைபெற்றபோது கவி தேனூரானும் வசந்தன் குழுவின் சில பாலகர்களும் பவனிவரும் போது)

ஆனாலும் வறுமையும் புலமையும் சேர்ந்திருப்பது இவரது வாழ்க்கைக்கும் பொருத்தம் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வசந்தன் கூத்துப்பற்றிய அச்சேற்றப்படாத பல்வேறு ஆய்வுகள் கட்டுரைகள் இன்னமும் கையெழுத்துப்பிரதியாக்கி வைத்திருப்பது மகத்தானது.

அவற்றுள் ஆய்வுப்பார்வையில்.....
  • வசந்தன் பாடல்கள் - என்ற கையெழுத்துப்பிரதியில் வசந்தன் எனும் பெயர் வரக்காரணம், தோற்றப்பின்னணிச் சுருக்கம், கண்ணகி இலக்கியங்கள், வசந்தன் பாடல்களின் அமைப்பும் கண்ணகி வழிபாடுகளும், வேளாண்மைச் செய்கையில் வசந்தன் என்று பல்வேறு அங்க இலக்கணங்களை வசந்தன் பாடல்கள் தாங்கி நிற்கின்றன.
  • வசந்தன் கூத்தின் தோற்றமும் வரவாற்றுப்பின்னணியும். - இதில் வசந்தன் கூத்தின் தோற்றம் மற்றும் சமூகப்பின்னணி, கொம்புமுறிச் சடங்கு, வசந்தன் கூத்தின் தற்கால நிலை என்று கூத்தின் தொன்மையும் தன்மையும் தற்கால நிலைமையும் என்று எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்தின் அளிக்கை முறை - இங்கு தேற்றாத்தீவு மற்றும் வந்தாறுமூலைக் கிராமங்களில் வசந்தன் கூத்தின் அளிக்கை முறைபற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்துப்பற்றிய ஓர் நோக்கு - இதில் களுதாவளைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு ஆய்வாக்கப்பட்டுள்ளது.
  • வசந்தன் கவிகள் - என்ற நூலாக்க்படவேண்டியதில் பராக்கே, ஊஞ்சல், தானானாப் பள்ளி, பிள்ளையார் வசந்தன், கள்ளியங்கூத்து, கூவாகுயில் வசந்தன், செவல்வாட்டு வசந்தன், அனுமான் வசந்தன், நாடக வசந்தன் என அத்தனை வசந்தன் பாடல்களும் கையெழுத்தாக்கப்பட்டுள்ளது


தேனூரான் பல்வேறு இலக்கியத்துறைகளில் துறைபோந்தனனாக இருக்கிறார். இயல், இசை , நாடக, மாந்திரிக, நாட்டு வைத்தியம் என்று பலவாறு திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகள் பெற்றாலும் பெருமை என்பது சிறிதுமின்றி பேரெடுக்கப் பிறந்தாலும் இலக்கியம் என்பது ஒவ்வொரு கலைஞனாலும் பயணிக்கக் கூடிதாக இருந்தாலும் அவனது ஆக்கங்கள் நூலுருப்பெறுவதில் பெருதுவைக்கும் இன்பம் அந்தந்த கலைஞனுக்கே சிறப்பு மட்டுமல்லாமல் இலக்கியத்தின் தொடர்ச்சித் தன்மைக்கும் தமிழின் நீடித்து நிலைபெறுதலுக்கும் அவசியம்.

செம்மொழித் தமிழினிச் சாகாது என்றால் ஒவ்வொரு கலைஞனின் படைப்புக்களும் வெளிப்படுத்த வேண்டும். நூலுருவாக்கம் என்பது ஆவணப்படுத்தலின் உச்சம். எனவே இந்தப் பண்படுத்தப்பட்ட தமிழ் நிலத்தை நூலுவாக்க முயற்சிக்கும் போது தமிழ் தாய் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள் என்பது திண்ணம்.

இவரின் படைப்புக்களில் சில அச்சேற்றப்படாமலும் அச்சேற்றி சில மீள்பதிப்புக்கு ஆளாகமலும் என..

  • "மட்டக்களப்பின் கிராமியக் கலைகள்"
  • "நாட்டார் கலையில் காவடியாட்டமும் இந்துகலாச்சாரமும்"
  • "மட்டக்களப்பின் மாந்திரிகைக்கலையும் ஒரு கிராமியக் கலையே"
  • "தேற்றாத்தீவு பாலமுருகன் பாமாலை"
  • "களுதாவளைப்பிள்ளையார் அற்புதப் பொன்னூஞ்சல்"
  • வடமோடி தென்மோடி கலந்த பரிசோதனையாக "அகலிகை" என்ற நாட்டுக்கூத்து

என்று இன்னும் பல எனக்குத் தெரிந்தவை பற்றி சொல்லுகிறேன். 2003 இல் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவை வெளியிட்ட "தேனகம்" என்ற நூலில் கூட "மட்டக்களப்பில் பறையர் சமூகம்" என்ற ஆய்வுக்கட்டுரை அவரின் சமூகவெளிப்பாட்டின் எழுச்சியை எடுத்தியம்புகிறது.

பல்கலைக்கழக மட்டத்தில் நோக்கும்கால் இவருக்கு எத்தனையோ பட்டங்கள் வழங்கலாம். ஏன் கிழக்குப்பல்கலைக்கழகம் இவரின் பல கட்டுரைகள் உட்பட பல்வேறு ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறதை மறுக்க முடியாது. ஆனாலும் பல்வேறு நூல்கள் படைக்க எத்தனிக்கும் இந்தக் கிராமத்துக்காரனினால் நூலுருவாக்கம் செய்யமுடியாமல் போவது கிராமத்துக்கலைகள் பண்பாடுகளின் வெளிச்சம் என்பவறை இழந்து இருப்பது மனவேதனை தரும் விடயம்.
இதுவே தான் சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்.

இவர் பற்றிய இன்னும் பல சிறப்புக்களை பிறிதொரு பதிவில் எழுதுவதற்கு ஆவலாக இருக்கிறேன். நான் இவர் பற்றிய வீடியோ மற்றும் ஆவணப்படுத்தலாக ஆரம்பித்திருக்கிறேன். இவர் போன்று இன்னும் பல இலைமறைகனிகளான பழம்பெரு இலக்கிய சமய கலாசார மூத்தவர்களைப்பறிய ஆய்வு எழுத ஆவலாக உள்ளேன். காரணம் இருக்கும் போது வாழ்த்தவேண்டும் அவர்களுக்கு புகழ்சேர்க்க வேண்டும் அவர்கள் திறமைகளை மெச்சவேண்டும். இறந்தபின் இவர்கள் பேசப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்ற முனைப்போடு....

யாராகினும் நூலுருவேற்ற விரும்பினால் கிராமத்துக்காரனின் படைப்பை ஆவணப்படுத்த முனைந்தால் தமிழுக்குச் செய்யும் ஒரு தொண்டாக இருக்கும் என்பது உண்மை.
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு