Pages

Saturday, November 28, 2009

டென்மாக் கொபன்ஹேர்கில் காலநிலை மாற்ற மாநாடும் உலக நாடுகளும் -டிசெம்பர் 2009

உலக பொருளாதாரம் இப்போது காலநிலைமாற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அதேபோல் உயிர்க்கோளம் மற்றும் உயிர்களின் நிலவுகையும் கேள்விக்குறியாகியுள்ளது. காபநீரோட்சைட்டு வாயுச் செறிவாக்கம் அதனாலான புவி வெப்பமடைதலும் ஓசோன் படை சிதைவும், இதன் பாரிய விளைவான துருவப் பனிப்பாறைகளின் உருக்கம் கடல் நீர் மட்ட உயர்வு போன்றவற்றால் காலநிலை மாற்றமடைந்து வருகிறது, இதற்கு மிக மூல காரணம் மனித சமுதாயமே. அதலால் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்று ஒரு உகந்த தீர்வைக் கட்டியெழுப்ப வேண்டியது நாங்களே.

டென்மார்க்கின் தலைநகர் கொபன்ஹேர்கில் டிசம்பர் மாதம் 7-18 ஆந் திகதிகளில் மாறிவரும் காலநிலையால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகளை எடுக்கும் பொருட்டு கால நிலை மாற்றம் சம்பந்தமான ஐக்கிய நாடுகளின் மாநாடு (United Nations Climate Change Conference 2009) நடைபெறவுள்ளது. இதில் உலகின் முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.


பச்சை வாயு வெளியேற்றம், தொழிற்சாலையின் கழிவுகள், போக்குவரத்து, நவீன ஆயுதங்களின் பயன்பாடுகளால் காலநிலை மாற்றமடைகிறது. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவதென்பதை ஆராயவும், அதற்கான தீர்வுகளை முன்வைக்கவும் காலநிலை மாற்ற மாநாடு வழிகோலும் என்பது திண்ணம்.

இதற்கு முன்னோடியாக கடந்த ஒக்டோபர் 17 ஆந் திகதி மாலைதீவில் கடலுக்கடியில் அமைச்சரவை மாநாடு நடத்தப்பட்டு அந்நாடு கடலில் மூழ்கவுள்ள அபாயம் உலகுக்குக் காட்டப்பட்டது.


மேலும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நீடித்த பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தே இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஆக்கபூர்வமான உடன்படிக்கைகள் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென முன்னர் விசனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இம்மாநாட்டில் 60 உலகத் தலைவர்களும் 192 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள இருப்பதனால், இம் மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது . காபனீரொட்சைட் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளைக் கொண்ட புதிய உடன்படிக்கை ஒன்று உருவாக்ப்பட இருப்பதாகவும் அறியப்படுகிறது.
உலகளவில் அதிகளவு காபநீரோட்சைட்டு போன்ற பச்சைவீட்டு (Green House) வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் முதன்மை வகிப்பவை உலக வல்லரசுகளும் குழு 8 (G8) மற்றும் குழு 10 (G10) போன்ற கைத்தொழில் நாடுகளுமே. இதனால் இந்நாடுகளின் தலைவர்கள் (உலகளவில் காபனீரொட்சைட்டை அதிகளவில் வெளியேற்றும் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்) பங்கேற்பது சந்தேகமாக உள்ளதாக சொல்லப்பட்டது.


பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீனப் பிரதமர் வேன் ஜியாபோ ஆகியோர் தங்கள் வருகையை உர்திப்படுத்தியுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிதரக்கூடியதே.
இதனிடையே ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கி மூன் இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் பூகோள வெப்பமடைதலைத் தடுக்கும் போராட்டத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக  இம்மாநாடு அமையும் என்று கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் அமேரிக்கா பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது பற்றி உத்தியோக பூர்வ அறிக்கையில் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரைக்கும் 17 % சதவீதக் குறைப்பும் அதிலிருந்து 30 % குறைப்பு 2025 ஆம் ஆண்டு வரைக்கும் பின்னர் 2030 ஆம் ஆண்டுகளில் 42 % சதவீத மாக குறைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த புதன்கிழமை திரு. ஒபாமா அவர்கள் தெரிவித்துள்ளார்.


இருந்தாலும் உலக காலநிலை மாற்றம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் விஞ்ஞானிகள், இதற்கு முன்னர் கைச்சாத்திட்ட கியோடோ உடன்படிக்கை 2012 ஆண்டுகளில் முடிவடைய இருப்பதனால் பூகோள வெப்பமாதலின் பாரிய தீங்கு விளைவுகள் மேலும் மேலும் ஏற்பட இருப்பதனால் இந்த மாநாட்டில் மிக உன்னதமான வலுப்பெற்ற ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆவலாய் உள்ளார்கள்.

காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்திற்காக தயாரிக்கப்பட்ட முக்கிய தரவுகள் மின்னஞ்சல்கள் மூலமான ஊடுருவல் மூலம் திருடப்பட்டிருப்பதாக காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இது குறித்த பகிரங்க விசாரணையொன்றும் நடத்தப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர் என்று பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது

பாருங்கப்பா இதிலேயும் புல்லுரிவிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்
எது எப்படியோ உயிர்க்கோளத்தைக் காக்க இந்த மாநாடு ஒரு தீர்க்கமான முடிவை எட்டுவதற்கு எமது வாழ்த்துக்கள்

Wednesday, November 25, 2009

மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை இணையத்தளத்தில்

மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை இணையத்தளத்தில் நம்ம கவிதை.. பெய்யென பெய்க..
பாருங்கள் பிடிக்குதா என்று

பெய்யென பெய்க...
புதன்கிழமை, 25 நவம்பர் 2009 00:00


பிள்ளைப்பூமிக்காய்
வானத்தாயின்
பாலமிர்தம்
இது
இளந்தைத் தூறல்
இன்பத்தின் சாரல்
உன்
ஒவ்வொரு துளியிலும்
உயிர் வளர்த்தேன்
கவிதைக்கு
தமிழ் சேர்த்தேன்

ஏர் உழுது எரு இட்டு
களை பிடுங்கி
விதை நட்டு
செழிக்கும் பயிர் கண்டு
சிரிக்கும் உழவர் கொண்டு
வாழ் உலகம் இன்பம்
வலை விரிக்க
உன் வரவு வேண்டும்
விதை நிலம்
கருத்தரிதுக்கொள்ள

இங்கு நிலவும்
உன் வரவு
பொங்கும் இன்பத்தின்
உறவு
கனவும் இனி
உன் உலகு

நனையும் உடல்
தேன் வார்த்த திடல்

வருவாய் தினம்
கண்குளிரும்
என் மனம்

- ரமேஷ் சிவஞானம்

Tuesday, November 24, 2009

பட்டதாரிகள், பரீட்சை, பணம், பயணம்,செலவழித்த மணித்தியாலயங்கள்

இது வானொலில் இரவுநேர நிகழ்ச்சிக்கு கவிவரிகளுக்காகக் கொடுத்த ஐந்து தலைப்புகள் என்று தப்பா நினைக்காதீங்க. சற்று ஆழப்பாருங்ககள்.
ஆம் இதுதான் இன்றைய இலங்கையின் பட்டதாரிகளின் பரிதாப நிலை ....

பட்டதாரிகள்
18,19 வயதுகளில் உயர் தரம் படித்து 20,21,22 வயதுகளில் பல்கலைக்கழகம் சென்று மூன்று அல்லது நான்கு வருடங்கள் வளாகத்தில் படிப்பில் சக்கை போட்டு(நம்ம பாஷையில் மொக்கை போட்டு)பட்டதாரியாகிறோம். இதுல மிகப் பாவப்பட வேண்டியவர்கள் நம்ம கிழக்கு மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பல நெருக்கடிகளுக்கு மத்தியில் படிப்பை மேற்கொள்கிறார்கள்.


சரி படிப்பை ஒருவாறு முடித்த பட்டதாரிகளானோம்.பின்னர் இலங்கையில் பாரம்பரிய வழக்கப்படி பட்டதாரிகள் எதிர்பார்ப்பது அரசாங்க வேலை அதான் கோழி மேய்ப்பது என்றாலும் கோணமேர்ந்துல மேய்க்கணும்.
இப்போ பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலும் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேலைவாய்ப்புக்கள் இருப்பதாலும் பட்டதாரிகள் போட்டிப் பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய(பரிதாப) நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் கடந்த 22 ஆந் திகதி ஒரு போட்டிப் பரீட்சைக்கு சென்ற கதையையும் கவலையையும் பாருங்க.

பரீட்சை
***************************************
தொழில் திணைக்களத்திற்கு தமிழ்மொழிமூல தொழில் அலுவலர்களை ஆட்சேர்த்தலுக்கான விசேட திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2008
"தொழில் திணைக்களத்திற்கு தமிழ்மொழிமூல தொழில் அலுவலர்களை ஆட்சேர்ப்பதற்குப் போட்டிப் பரீட்சை பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் தமிழ்மொழிமூலம் மட்டும் 2009 நவெம்பர் மாதம் கொழும்பில் நடத்தப்படும்."
ஆட்சேர்ப்புத் திட்டம் :
(அ) அங்கீகரிக்கப்பட்டுள்ள பதவிகள் 20 இல் 10 இன்படி மேலே 3 ஆம் பந்தியின் (i) ஆவது (ii) ஆவது உப பிரிவுகளில் காட்டப்பட்டுள்ள தகைமைகள் பெற்றுள்ள விண்ணப்பதாரிகளில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் நடத்தப்படும் எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி தொழில் ஆணையாளர் நாயகத்தால் தகைமைகள் மற்றும் சான்றிதழ்கள் பரீட்சிப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்படி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
(iv)பரீட்சைக் கட்டணம் ரூபா 300 ஆகும்.
**********************************************
இதுதான் இப்பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தலின் சில தகவல்கள்.
அங்கீகரிக்கப்பட்ட 10 பதவி வெற்றிடங்களுக்கு(திறந்த போட்டிப் பரீட்சைக்கு) பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரிகள் எண்ணிக்கை எப்படியும் 2500 க்கு மேல் இருக்கும்.(குத்து மதிப்பா போட்டிருக்கன் எண்ணிக்கை அதிகம் என்பதால்) தமிழ்மொழிமூல தொழில் அலுவலர்களை சேர்ப்பதற்கு தமிழ்மொழிமூலம் மட்டும் என்பதால் இப்பரீட்சையை தங்களுக்கே உரிய மாவட்டங்களில் நிகழ்த்தியிருக்கலாம். ஏன் எண்டா பரீட்சை வினாத்தாள் ஒரு மணிநேரம் மட்டும் தான், இதுதான் மிகக் கொடுமையாய் இருந்தது.

பணம்
அங்க இங்க கடன் வாங்கி பரீட்சைக்கு விண்ணப்பம் போட்டாச்சு. 300 ரூபா கட்டிட்டோம் சோதனைக்குப் போகணும் தானே. பயணச் செலவு மற்றும் பட்டபாட்டுச் செலவு அதான் சாப்பாடு,தங்குமிட செலவு...... ம்ம்ம் யாரை நோவோம்..... ஒரு அரசாங்க வேலைக்கு படும்பாடு....

பயணம்
கொழும்பு போகணும் .
கொழும்புக்கு போவதென்றாலே நம்ம அப்பா அம்மாவுக்கு காய்ச்சல் வந்துடும் செல்லப் பிள்ளைதானே என்ன செய்வானோ எண்டு. என்றாலும் புயலைக்கூட தோற்கடிக்கும் சக்தி அவனுக்குள்ள எண்ட நம்பிக்கை(இது போதும் நமக்கு)
கடந்த கால கசப்பான காடையர்களின் வெறித்தனத்தில் சிக்கித் தப்பியவர்கள் அதுதான் இந்தப் பயம் அவர்களுக்கு.
ஆனாலும் போவதென்று வெளிக்கிட்டாச்சு. நூடில்ஸ் சுத்தித் தந்தாள் என் அக்காள். தண்ணிப் போத்தலுடன் நான் ஒரு பயணப் பொதி சுமந்து கொண்டு.....
நம்ம ஊரில இருந்து பி.ப. 6.45 பேருந்தில் எறிட்டன். நான் பதிவு செய்த 31 ஆம் ஆசனம் இன்னொருவரின் இருப்பிடமானது, வேற ஒன்றுமில்லை அதே இலக்கத்தில் அவரையும் பதிவு செய்திருக்கிறார்கள். என்ன கொடும அப்பா. ஆனாலும் ஒரு அனாதையான ஆசனம் எனக்காக இருந்தது... அப்பாடா நிம்மதி பெருமூச்சு

செலவழித்த மணித்தியாலயங்கள்
பரீட்சை வினாத்தாள் ஒரு மணிநேரம் மட்டும் தான்.
ஒரு மணிநேர பரீட்சைக்கு நான் செலவழித்த மணித்தியாலயங்கள்....
ஐயோ ஐயோ ........!!!!!
ஏழரை மணித்தியால பேருந்துப் பயணம் கொழும்புக்கு!.. மூன்று மணித்தியாலம் அதிகாலை அரை குறை நித்திரை ஒரு லொட்ஜில்!!.... அப்படி இப்படி எண்டு இரண்டரை மணித்தியாலங்கள் இடம் தேடி காலைச் சாப்பாட்டுடன்.... ம்ம்ம்ம் பரீட்சை ஆரம்பம் ஒருமணித்தியாலயம் பறந்து போச்சு. முடிஞ்சு போயிற்று சோதனை. இரவு தான் அடுத்த பயணம் வீடு நோக்கி. மீண்டும் பேருந்தில் மறுதலையாக பயணம்... மொத்தத்தில் இரண்டு நாட்கள் போயிற்று வீணாய் பணமுடன்.....
பாவம் நம்மளப் போல அவதிப்பட்டவர்களுக்கு இது சமர்ப்பணம் .......

Monday, November 23, 2009

எதையும் பிளான் பண்ணி செய்யணும்

ஏதோ புதுசா சொல்லப்போறன் எண்டு நினைக்காதீங்க இது ஒரு டெஸ்ட் பதிவு அதான் பாருங்க வடிவேலு காமடி சீன்


Pokkiri Vadivelu Comedy 1

Friday, November 20, 2009

யுடியுப் வீடியோவை இப்படி இணைக்கலாம்

வீடியோ பதிவுகளை யூடியுப் மூலம் இப்படி இணைக்கலாம்.
முதல்ல  யூடியுப்க்கு செல்லுங்கள், அங்கே உங்களுக்கு பிடித்த பாடல் அல்லது வீடியோவை தெரிவு செய்யுங்கள். உதாரணமாக இங்க நான் கனா காணும் காலங்கள் என்ற நாடகத்தின் ஒரு பகுதியை எவ்வாறு இணைப்பது என்று காட்டுகிறேன்


அங்கே வலப்பக்க மேல் மூலையில் இருக்கும் "embed code"(சிவப்பு மையினால் வட்டமிட்டிக்காடிருக்கேன்) இதை கிளிக் பண்ணும் போது இவ்வாறு தோன்றும்

நீங்கள் இதை கொப்பி பண்ணி உங்கள் பதிவில் உள்நுழைந்து edit HTML லில் லிங்க் (link) என்பதைக் தெரிவு செய்து அதில் ஒட்டி கொள்ளுங்கள்.
இப்போ பாருங்கள் படம் தெரியுதா என்று
இதை ஆங்கிலத்திலே தருகிறேன்
go to the video in you tube..
then u will see a "embed code" in right side top
copy the code and paste it in ur blog!!
it will display
இது கூட ஒரு பதிவுலக நண்பர் (அரூண்) சொன்னதே நன்றிஅரூண் பதிவு :- மச்சான்ஸ்


">

Wednesday, November 18, 2009

காதல் காசுக்காக விற்கப்படுகிறது..

எனது கவிதை மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை இணையத்தளத்தில்


புதன்கிழமை, 18 நவம்பர் 2009 00:00

நினைவுகள் எழுதிய
நிலவு
வெட்கித் தலைகுனிந்து
புருவம் உயர்த்தி
நீ பார்த்த அந்த
பார்வை முட்கள்
சிரிப்பு வரைந்த
குழி விழுந்த கன்னங்கள்
உன் புன்னகை உதடுகள்

ரசித்தது உண்மை

பருவம் படர்ந்த
முனைப்புகள்
நான் விழுந்த
அந்த தடங்கள்

வெளிச்சம் காட்டிய
உன் மனது
விழுந்துகொண்ட
என் மனது

நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்"
உன் "சோல்" லில் சுற்றிக்கொண்ட
நானும்....
என்னைப்பற்றிக் கொண்ட
நீயும்....

உன்னோடிருந்த அந்த நாட்கள்
நம்மை எழுதிக்கொண்டது
"காதல் பறவைகள்" என்று
இப்போது எழுதி்க்கொள்ளட்டும்
அது ஒரு நிலாக்காலமென்று

என்னை உடுத்திக்கொண்ட
என் குடும்பம்
என் காதலை விட
கரன்சியைப் பார்க்கிறது
என் தங்கச்சியின் சீதனத்துக்காய்

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

என்மானம் விற்கப்படப்போகிறது
முடிந்தால்
கேள்விப்பத்திரத்துக்கு
விண்ணப்பித்துக்கொள்...

கிடைத்தால் மீண்டும்
துளிர்க்கும் நம் காதல்

வெடக்கப்படுகிறேன்
துக்கப்படுகிறேன்
முகம் புரியா யாருக்கோவாக
நான் அறியா எவளுக்கோவாக
என் காதல்
புதைக்கப்படப்போகிறது

என் காதல்
காசுக்காக
கரைக்கப்படப்போகிறது

காதல் தேவதையே
என்னை தூக்கிலிடு

அதற்கு முன்
என்னை காட்டிய
எனது குடும்பத்தை பற்றி
சற்றே .....
யோசித்துக்கொள்
என் குடும்பத்தின்
வாழ்க்கை புகையிரதம்
இந்த தண்டவாளத்தால் தான்
ஓட்டப்படுகிறது..

நீங்கள் சொல்லுங்கள்...

பாழாயப்போன என்
காதல்
நாசுக்காகவா?
என் வாழ்க்கை
காசுக்காகாகவா?

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

Tuesday, November 17, 2009

சில காட்சிகள்

அழகிய சில காட்சிகள் உங்களுக்கும் பிடிக்கிறதா என்று பாருங்கள். பிடிச்சிருக்கா??? இதற்கும் ஒரு வரலாறு உண்டு அடுத்த பதிவில் எதிர் பாருங்கள். இது எமது (தமிழர்) பிரதேசம் இப்போது அத்து மீறிய குடியேற்றம் இது  தான் கெவிலியாமடு



 

 
 
 

 



 

 

Thursday, November 12, 2009

மௌனம் கலையட்டும்

காதலர்களே
உங்கள் மௌனத்தைக்
கலைத்துவிடுங்கள்
காதுகளைக்
கூர்மையாக்குங்கள்



நீயாகிய நான்
நானாகிய நீ என்று
உங்கள் உணர்வுகளை
உங்களுக்குள்ளே
புதைத்துக்கொள்ளுங்கள்
உங்களை
இடம்மாறித்
தடம் மாறாமல்
தேடிக்கொள்ளுங்கள்



உறவுகள் உணர்வுகளாக
உரிமைகள்
தனிமைகளாகட்டும்

உள்ளக் குமுறல்கள்
எடுத்துச் சொல்லப்படட்டும்
கள்ளம் கலையட்டும்
கலைந்த காதலும்
துளிர்விட்டுக்கொள்ளும்

காத்திருப்புக்கள்
காதலின்
கதவடைப்புக்கள்
காத்திருந்தால்
காதலின் நீளம்
அளந்துகொள்ளுங்கள்



விட்டுக்கொடுப்புக்கள்
உள்ளப் புரிந்துணர்வுகள்
கள்ளமில்லா வார்த்தைகள்
காதலின் கவிதைகள்
காலத்தை வென்றவை



வெள்ளை மனதை
இன்னும் வெளிச்சமாக்குங்கள்
காதல் ஒளிரட்டும்
காதலோடு ......



Wednesday, November 11, 2009

பெய்யென பெய்க...



பிள்ளைப்பூமிக்காய்
வானத்தாயின்
பாலமிர்தம்
இது
இளந்தைத் தூறல்
இன்பத்தின் சாரல்
உன்
ஒவ்வொரு துளியிலும்
உயிர் வளர்த்தேன்
கவிதைக்கு
தமிழ் சேர்த்தேன்



ஏர் உழுது எரு இட்டு
களை பிடுங்கி
விதை நட்டு
செழிக்கும் பயிர் கண்டு
சிரிக்கும் உழவர் கொண்டு
உலகம் இன்பம்
வலை விரிக்க
உன் வரவு வேண்டும்
விதை நிலம்
கருத்தரிதுக்கொள்ள

இங்கு நிலவும்
உன் வரவு
பொங்கும் இன்பத்தின்
உறவு
கனவும் இனி
உன் உலகு



நனையும் உடல்
தேன் வார்த்த திடல்

வருவாய் தினம்
கண்குளிரும்
என் மனம்

மட்டக்களப்பு மாங்காடு மகா விஷ்ணு ஆலய கும்பாபிஷேக நிறைவும் சங்காபிஷகேம்

எங்கு எங்கு தமிழ் கலாசாரம் என்றோரை இங்கு நிறைவாக உண்டு என்று சொல்லும் மீன்பாடும் தேனாட்டின் எழில்மிகு மாங்காடு என்னும் ஊரில் இந்த அதிசயங்கள்...(நம்மட ஊருக்கு பக்கத்தில தான் )
ஆம் இறைவன் இல்லை என்றோருக்கு என்ன சொல்ல நான்??? பாருங்க இதைக் கேளுங்கள்.சென்ற வருடம் தான் இந்த அதிச நிகழ்வுகள். என்ன விசயத்த சொல்லாமல் சொதப்புரன் என்று நினைக்கிறீங்களா. சரி சரி ...

திரு. இராமசாமி இராமச்சத்திரன் என்பவர் தாம் வழக்கம் போல தமது கடற்கரை வளவுக்குள் ஒரு மரத்தடியில் சிறு கல்லை வைத்து விஷ்ணு பகவானையும் நாகதம்பிரானையும் மனதில் நினைத்து (உண்மையில் நிறுத்தி) வழிபட்டு வந்தார். இதுதான் கண்கண்ட தெய்வ வழிபாடு நம்ம ஊருல இது சிறப்பு.அவிசாவளையில் பிறந்த இராமசாமி இராமச்சத்திரன் என்பவர் ஒரு விஷ்ணு பக்தர். மாங்காட்டையே வசிப்பிடமாக கொண்டவர்
அன்று வழமை போல தனது ஆலய சுற்றுப் புறங்களை கூடிப் பெருக்கும் போது ஏதோ ஒன்று தன் கண்களுக்கு "பளீச்" என்று பட்டது. என்னடா அது என்று பார்க்க அங்கே ஐந்து தலை நாக சிலை தென்படவே நெஞ்சம் எல்லாம் படபடக்க பயபக்க்தியுடன் ஓடினாரு கட்டுப் பிள்ளையார் ஆலய பிரதம குரு குணேந்திரன் ஐயாவிடம்.... அன்று வியாழக்கிழமை ஆதலால் ஆலய குரு நான் நாளை வெள்ளிகிழமை வாறன் என்று சொல்ல,அடுத்த நாள் எப்ப உதிக்கும் என்று அவருக்குள் தெய்வ படபடப்பு அவசரமும் கூட நித்திரையும் இல்ல அன்றிரவு அவருக்கு.இருக்காதா பின்ன.
வெள்ளிக்கிழமையும் வந்தது ஓடிப்போய் சிவாச்சாரியார கூட்டிக்கொண்டு வந்து சமயப் பிரமாணங்களுக்கு ஏற்ப (மடை)வைத்து பூசை வழிபாட்டுடன் அந்த சின்னங்களை எடுத்துப் பார்க்க இன்னும் ஏதோ ஒன்று மேலும் தெரிய உடனே அதை தோண்டிப்பார்க்க அங்கே அற்புத லிங்கமும் அழகிய சங்கு ஒன்றும் வாமருக்மணி சமேத ஐம்பொன்னால் ஆன ஹரிகர வடிவ விஷ்ணு சிலையும் கண்டெடுக்கப்பட்டன
'அதிசயம் அதிசயம்'... என்று நினைத்து நம்ம ஊரு(மாங்காடு மற்றும் அயல் கிராம மக்களும்) மக்களும் தினமும் சென்று நம்பிக்கை கொண்டு வழிபட குருந்த மரம்,இத்தி மரம் அதோடு அரச மரமும் அதிசயமாய் ஒருங்கே வளர்ந்த அந்த அழகிய மர நிழலிலே மகா விஷ்ணு பெருமான் பள்ளி கொண்டான் நம்ம மக்களுக்கு அருள் பாலிக்க
இவர் தான் இராமசாமி இராமச்சந்திரன் ஐயா. அந்த மர நிழலின் குடிசையில் ஆலயம்


அங்கே அழகான நம்ம மச்சான் பேராழன் கும்புடுறான் பாருங்க 



ஆலய வழிபாடு தொடரவே மக்கள் சிந்தனையில் இந்த குடிசை ஆலயம் கோபுரமாகாதா என்ற கவலை... பின்னர் மக்கள் இதை தமக்குளே அடிக்கடி பேசிக்கொள்ள. பெருமான் வழியமைத்தார். மக்கள் கூட்டம் கூடினர் ஒரு வலுவான நிருவாக சபையை உருவாக்கினர்.
திரு.கந்தப்பெருமாள் - குணசேகரம் தலைவரானார் (இவர் மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசரும் கூட) செயலாளராக திரு.கணபதிப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களும் பொருளாளராக திரு.சிவபாலன் சிவாகரன் அவர்களோடு 13 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அப்படா ஒரு மாதிரி நிர்வாகசபை அமைத்தாயிற்று.
(இடமிருந்து வலமாக தலைவர் திரு.க. குணசேகரம், ஐயா இ.இராமச்சந்திரன்,பொருளாளர் திரு.சி. சிவாகரன்)


இனிஎன்ன என்று நினைக்க எப்படி ஆலயம் கட்டுவது எங்கு கட்டுவது என்று மனதில் ஒரே குழப்பம் இவர்களுக்கு. இராமசாமி இராமச்சந்திரன் (ஆலயத்துக்கு வழியானவர்) அவர்களே தமது இரண்டு ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர, மக்கள் திரண்டனர் ஆலய வளவு சுத்தம் செய்யப்பட்டது.. ஆலய கட்டடத்துக்கான சாஸ்த்திர அடிப்படையில் 11.03.2009அன்று நிலையம் எடுக்கப்பட்டது.பின்னர் 23.03.2009 அன்று அடிக்கல் நடப்பட்டது.மெய்யடியார்கள் இலவசமாக கட்டடப் பொருட்களை வாரி வழங்கினர். பெருமான் சந்நிதிக்கு மக்களே தமது உடலுழைப்பை நல்கினர். நாள் நாளாய் கோயில் கட்டடம் வளர்ந்தது. மூலஸ்த்தானம் மகாமண்டபம் மற்றும் கோவில் கிணறுடன் தீர்த்தக் கிணறும் கட்டி முடிக்கப்பட்டன..

 
 


ஒருவாறு கோவில் அங்கே அழகாக உருப்பெற்றது (கட்டடம் கட்ட்ப்பட்டதைச் சொல்லுறன்).
ஆலயத்தின் அழகிய முழுத்தோற்றம்





30.10.2009 அன்று கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது. மண்டலாபிஷேகம் தொடர உருத்திராபிஷேகம் நடைபெற்றது. நம்ம ஊருப்பக்கம் பல மாதங்களாக கடும் வரட்சி ஆனா என்ன அதிசயம் தெரியுமா கும்பாபிஷேகம் நிறைவுற்ற உடனே தொடங்கியது அடைமழை... (கடவுள் நம்பிக்கை)
இன்று(10.11.2009)மாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனியுடன் பெருமான் மகா விஷ்ணுவுக்கு பாலாபிஷேகமும் நிறைவுற தொடர்ந்து சங்காபிஷேகம் பின்னர் கிணற்று நீர்த் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வந்தது கும்பாபிஷேகம்.


சரி ஆலய சங்காபிஷேக நிறைவு நாள் நிகழ்வுகளில் சில பாருங்கள்



Monday, November 9, 2009

அர்த்தங்கள் நிறைந்த மௌனம்

இந்தக் கவிதை மீள் பதிவாகிறது எனது நண்பன் ஒருவனின் வேண்டுகோளுக்குஇணங்க.. பாருகங்கள் பிடித்திருக்கா என்று.

நண்பா இதோ உனக்காக அர்த்தங்கள் நிறைந்த மௌனம்



எத்தனை தடவைதான் என்
பார்வை அம்புகள்
உன் மேல்....
உன் மௌனத்தைக்
கலைப்பதற்கு

உன் மௌனம் என்னைக்
கொல்கிறதா
கொள்ளையடிக்கிறதா.........???
இன்னும் புரியாமல் நான்
உன் பின்னால்

என்னை என்றும் காதலிப்பதை
மௌனமாக சொல்கிறாயா
இல்லை
காதல் மௌனமானது என்கிறாயா ?????

நம் காதலின் சக்தி
பேசும் ஒலிச்சக்திகளால்
வீணாகி விடாமல்
காதலுக்கு சக்தி சேமிப்பா ??
சொல் மௌனமாய்
ஒரு வார்த்தை

வார்த்தைகளுக்காய் எத்தனையோ
கவிஞர்கள் காத்திருப்பு
ஆனால்
நீ
எத்தனையோ
கவிதைகளை பிரசவிக்கிறாய்
அழகிய மௌனத்தால்....


நிலவைப் பார்த்ததும்
நான் ரசிப்பது
ஒளிக்கீற்றுக்களை அல்ல
அதன் மௌனத்தை தானடி
அதுதான்...
உன் மௌனத்தின் ஆழத்தில்
இன்னும்
நான்
முத்தெடுக்கத் தவிப்பது

உன் மௌனத்துக்குள்
மூழ்கிவிட்டால் போதுமடி
காதலின் பாதி வாழ்க்கையை
வாழ்ந்துடுவேன்
மீதி வாழ்கையைப் பற்றியே
என் கவலை..


நீ
மௌனமாகவே இருந்துவிடு
இல்லையேல்
பிள்ளையார் பிடிக்கப்போய்
குரங்கான கதையாக
என் காதல் ஆகிவிடும்
என்ற பயம் எனக்கு.......

மழையின் பருவப்பிழையும் நம்மட வயல்களும்

பாருங்க நம்மட வயல்கள் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை.
யாரை நோவோம் .
நேரங்க்கெட்ட மழை. காலத்தை தவறவிட்ட மழை
காலத்துக்கே முடியல தரணத்துல தண்ணி தர ..... .
ஆனாலும் விதைத்தோம் முதல் மழை வந்த கையோடு. இப்போ அடை மழை பெய்யுது வாவியும் பெருக்கு ஏறுது வயல் வரம்புகளை மூழ்கியடிக்குது. பாவம் நம்மட மக்கள். யாரவது முகத்துவாரம் திறக்க முயற்சிக்கமாட்டாங்களா அரச அதிபரே சற்றுப் பாருங்கள். எங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்... 



 

 

 




 



Friday, November 6, 2009

வறுமையும் திறமையும் + எனது பாடசாலை

ஒரு திறமையின் கண்ணீர்
எனது ஆரம்பமே இங்குதான் (என்ன பிழையா ஆரமிச்சுட்டனே என்று நினைக்காதீங்க)
நான் தரம் எட்டு (அப்போ ஆண்டு எட்டு) வரும் வரைக்கும் எனது பாடசாலை மட் / றோ.க.த.கலவன் பாடசாலை என்றிருந்தது. பின்னர் தேத்தாத்தீவு மகா வித்தியாலயமாக மாற்றப்பட்டது. அப்போதிருந்தே என் பாடசாலை வறுமையின் பாதையில் பயணம். அது வேற ஒன்றும் இல்ல நம்ம ஊரு பொருளாதாரம் வறுமைக் கோட்டத்தாண்ட பயந்துகொண்டே இருந்தது இருக்குது. இப்பதான் கொஞ்சம் எகுறுது..
இருந்தாலும் மீண்டும் வறுமையின் கொடி பறக்குது ...(அப்போதிருந்தே இப்போ வரைக்கும் இதே எழுத்து இன்னும் புதுப்பிக்க முடியாமல்)



வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய இந்த பதிவு வாழ்க்கை சொல்லுது எண்டு நினைக்காதீங்க.கண்களில் கண்ணீர் பீறிட்டு வருகுதுப்பா அதுதான் ......
இப்போதுதான் வெற்றிகரமாக மாகாணத் தமிழ்த் தினப் போட்டிகள் வெற்றி வாகை சூடிய வாகரையில் நடந்தேறிச்சு.


 

நம்ம பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் மூன்று முதலிடங்களை மாகாண மட்டப் போட்டிக்கு கொண்டு செல்ல பட்ட வேதனையை எப்படிச்சொல்லுவது ......சற்று கேளுங்கள்
ஒன்று - கட்டுரையாக்கம்
அடுத்தது நாடகம்
மற்றையது வில்லுப்பாட்டு
(தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்குது)

அதிக மாணவர்கள் கூலித்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை விவசாயம் செய்யும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்.... மூன்று நிகழ்வுகளுக்கும் பங்குபற்றும் மாணவர்களை கூட்டிக் கொண்டு செல்ல போக்குவரத்து சாப்பாட்டு வசதிகளுக்கு எமது பாடசாலையில் அவ்வளவு நிதி இல்லை .... தனி வாகனம் கூட பிடிக்க வசதி இல்லாத நிலைமை...
பாவம் ஆசிரியர்களுடன் அதிபர் அதை விட நமது மாணவர்கள் ...

இருந்தாலும் அங்க இஞ்ச அடகு வைத்தாவது கூட்டிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரியர்களுக்கும் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆதங்கம் நமது மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும்.
ஒரு வாகனம் வாடகைக்கு பிடிச்சாச்சு ...


காசு அதிகம் தேவை... இனி என்ன போட்டியில் பங்குபற்றாத சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களையும் (ஆட்பலத்துக்கு இல்ல காசுப்பகிர்வுக்கு) கூட்டிப் போயாச்சு


கடும் மழை.... கடை இல்ல சாப்பாட்டுக்கு கறி சமைக்கணும் மீன் பிடிக்க கடலுக்கும் ஆத்துக்கும் அன்று யாரும் போகல மரக்கறிகளும் இல்ல .... புத்திசாலியா சில மரக்கறிகளை கொண்டு போனதால தப்பிட்டங்க ..... சமைக்கப் பட்ட பாடு


ஒரு மாதிரியா நிகழ்ச்சிக்கு தயாராயிட்டாங்க நம்ம பிள்ளைகள் ......
ஆரம்பமே அசத்தலாய் கட்டுரை முதலிடம் தங்கப் பதக்கம் ... தொடர்ந்து வில்லுப்பாட்டு தந்தது அடுத்த தங்கம்
இதுதான் இந்தவருட வில்லுப்பாடு குழு



(எமது மாணவ செல்வங்களின் வில்லுப்பாட்டு ஒளிப்பதிவை பிறகு தாரன்)

வில்லுப்பாட்டப் பத்தி சொல்லணும் சென்ற முறை ஆண்கள் பிரிவில் நம்ம பாடசாலைக்கு முதலிடம் கிடைத்தது .....நன்றிகள் தேநூரானுக்கே ...
சரி முதல் நாள் பெற்ற வெற்றிகளோடு களத்தில் அடுத்த நாள் நாடகத்துடன் நம்ம பிள்ளைகள் ...... மிக அழகாய் திறமையை வெளிக்காட்டினர்.... பங்கு பற்றிய மற்றைய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஏன் நடுவர்களுக்கே பிடிச்சுட்டு....
ஆயினும் கிடைத்தது இரண்டாமிடம் என்றதுமே நம்ம பிள்ளைகளோடு ஆசிரியர்களும் அழுது ஆர்ப்பரித்தனர்.........

ஏனெனில் வழமைக்கு மாறாக இம்முறை ஐந்து நடுவர்கள் (வழமையில் மூன்று)....
திரு,தண்டா என்பவரே தலைமை வகித்தவர் அனைத்து நிகழ்வுகளுக்கும் ...
அவரே வாய்விட்டு சொல்லிவிட்டாரு உண்மையில் தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்துக்கே முதலிடம் ஆனா சேனையூற்று (சரியா பெயர் ஞாபக மில்ல) மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருக்கிறார்கள் அவர்களையும் தட்டி எழுப்பவே அவர்களுக்கு கொடுத்தோம்... தயவு செய்து மன்னியுங்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு போக வேண்டாம் ...என்று ஆறுதல் சொல்லி நம்ம பிள்ளைகளின் திறமைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டம் தீட்டிட்டாரு .....

இப்போ நம்ம பிள்ளைகள் வெறுப்புணர்வுகளுடன் ..... அடுத்த போட்டிக்கு போகக் கூட தெம்பில்லாமல் ...... இப்போ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் ....பார்ப்போம் நல்லது நடக்குதா என்று.

ஏனெனில் தேசிய மட்டப் போட்டிகள் வழமையாக தலைநகரில் நடந்தால் அதற்கு கூட பணச் செலவைப் பற்றி யோசித்து இருக்கையில் இப்படி அநீதி அங்கேயும் நிகழ்ந்தால்(மற்றப் போட்டிகளுக்கும்) என்ற கிலேசத்துடன் எனது பாடசாலை ....
ஏதோ திறமைக்கு பரிசு கொடுங்கள். நமது மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமூட்டுங்கள்.
ஏழையின் சிரிப்பில் திறமையைக் காணுங்கள். அங்கே அவர்கள் வாழ்வுக்கு வித்திடுங்கள். எங்கு பிழை நடந்தாலும் சரியான பாதையைக் காட்டுங்கள். பெரியவர்களே!!! எமது பிள்ளைகளின் மனதில் காயங்களுக்கு இடம் கொடுக்காமல் ரணங்களுக்கு மருந்து கொடுங்கள். நாளைய தலைவர்கள் அவர்கள் முளையிலே கிள்ளி விடாதீர்கள்.
நீதி சொல்லும் நடுவர்களே ...!
நக்கீரர்களாகுங்கள் !!!
இருந்தாலும்
எமது மண்ணின் சொத்தான மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
முன்னேறுங்கள் தடைகளை உடைத்து

Wednesday, November 4, 2009

என் வீட்டு மாமரச் சுவை

பாருங்கப்பா நம்ம வீட்டு மாங்கனிகள் எவ்வளவு சுவை என்று.
அந்த அணில் சுவைக்கும் அழகைப் பாருங்க (கடித்துக் குதறி விட்டுது )












அட பாருடா அங்க காகமும் நாம என்ன விட்டுட்ட ஆளா எண்டு அதன் பங்குக்கு













மொத்ததில நாம சாப்பிட இல்லை ம்ம்ம்ம்

சரி படங்கள் பார்த்த பிறகு இந்தக் கவிதையையும் சற்று பாருங்க பொருந்துதா இல்லையா என்று

நீ வருவாய் என்று
நானும்
உனக்காக நான்
பருவம் படர்ந்து
வளர்ந்த போதும்
புரிய வில்லை உனக்கு
(என்) வேதனையும்
காடையர்களின்
காட்டுமிராண்டித்தனமும்
பாரு ....
என் உருக்குலைவும்
என் தேசத்து மக்களின் சீரழிவும்
இனியாவது வந்துவிடு
தரணத்தில்
என் தாயையும்
சகோதரர்களையும் காப்பாற்ற
நான் விழுந்தாலும்
இப்போது
விதையாகிறேன் .....

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு