Pages

Saturday, December 31, 2011

ஒன்று கழிய இரண்டு வருகிறது

இறுதிப்பொழுதுகளில்
மீதமிருக்கும்
மணித்தியால எண்ணங்கள்

நாசித்துடிப்பில்
சோகத்தளிம்புகளை மட்டும்
பார்க்குது
பாவப்பட்ட மனம்.

அத்தனை வேதனைகளை
விரட்டியடிக்குது
வெளிச்சப்படுத்திய
சில சந்தோசங்கள்
சில்லறைகளால் நான்..

ஒவ்வொரு புதிசும்
இருக்கை பற்றி நீளச்செய்கிறது
பழசு
வாழ்க்கையின் நிலையாமையாய்

தீர்ந்துபோனது என்ற
நினைப்பில் இருக்க
காராம்பசுவாய்
வருகிறது வாழ்க்கை
ஓ...
நாளை புதிதாய்
பிறக்கிறது புத்தாண்டு...

மாற்றங்கள் கொண்டு
மாற்றங்களால் வாழ்கை
மனக்குதிரை ஓட்டப்பட
இருக்கிறது
லாடங்களுடன் நான்..

ஒன்று கழிய
இரண்டு வருகிறது..
இன்னும் வரும்
இதயம் சுமக்கும் இனிமையும்
சுமையும் சுமையிறக்கும்
தனிமையும் வருகவே..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்








Saturday, December 24, 2011

இது ஸ்டேடஸ் - 22

26 Nov
"நீ இருந்தால் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இல்லை என்றால் உனது நேரான தலைமைத்துவ நினைவுகளுடன் நான்."

27 Nov
"உறுமி (தமிழ்) பாடல்கள் என்னமோ செய்யுதே.."

28 Nov
"இந்த சில் என்ற காற்று. குளிருது மனசு..."

28 Nov
"இதயப்பூக்கள் பூக்கும் இனிய நேரம்
இன்பம் கலந்த வாழ்க்கைக் காலம்
புன்னகைத்தோம்
கலாசாலை
விழித்துக் கொண்டது
இந்தப்பூக்கள் இன்னும் வேண்டும் என்று"

29 Nov
"ஒற்றைத் தலையிடியும்
ஒரு தலைக்காதலும்
தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்.."

1 Dec
"தூரதேசத்தில் இருந்தால்தான் உறவை நீளவேண்டுமென்கிற எண்ணம் முளைக்குது. ஆனா நாங்க பக்கத்துவீட்டில இருக்கிறவனுக்கே SMS, FB Mes அனுப்புவோம்ல.."
"ஒவ்வொரு எதிர்மறையான அனுபவங்களே எங்களை வழிப்படுத்தும் நேரான சிந்தனையுடைய அனுபவங்கள் எங்களை ஊக்கப்படுத்தும்."

1 Dec
"மெல்லினம் வழுக்கினாலும் வல்லினம் வாழும்"

"இந்த இரவு நீண்டுகொள்க
முடிக்கப்படாத வேலைகள் குறைந்துகொள்க
கண்களே எனக்காக விழித்திருங்கள்
நெஞ்சமே என்னை துடிப்புடன் வைத்துக்கொள்"

2 Dece
"ஒவ்வொரு கூலியாளும் கவனமான படிப்பினைகள் மூலம் என்றோ ஒரு நாள் முதலாளியாகணும். மாற்றங்கள் எப்பொழுதும் தேவை"

"சில கனவுகள் கலைப்பதற்கு என்றும் சில கலைந்துபோவதற்கு என்றுமாய் போனாலும் எல்லாம் கனவுகள் என்பற்குள் அடக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனது.."

6 Dece
"இருக்கும் போது கேக்க மாட்டானுகள் இல்லாதநேரம் கேட்டால் நான் என்ன பண்ணுவேன் ##Feeling##""

7 Dec
"சிலநேரம் சிலபேரிடம் கோவிக்கணும் போல இருக்கும். அவர்களும் இவர்கள் போலே என்று எண்ணி..."

"எங்களால் செயல்படுத்தப்படும் எந்தவொரு வேலையிலிருந்தும் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
கற்றுக்கொண்டு அதைவிட சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுங்கள்."

8 Dec
"உன்பேர் சொல்லும் பிள்ளை போராடி வெல்லும்பிள்ளை
அம்மா நீயே நீயே நானே நீயே.... ##உயிர்ப்பாட்டு கவி வாலி ##"

"அழுவதில்கூட ஆறுதல் இருக்குது. ஏனோ என்னவென்று தெரியாமல் அழவேண்டும் என்ற உணர்வு எகுறுது"

"கண்களில் ஒழுகும் ஓரிரு கண்ணீர் துளிகளே ஆயிரமாயிரம் அன்புகளை முடுக்கிவிடும் ஆறுதலைக்கொடுத்து"

9 Dec
"சிலநேரம் சிலபேரைப் பார்த்தால் பாவப்படவேணும்போல இருக்கும். ஏதோ சில விளம்பரமானவர்களிடம் ஒட்டிக்கொண்டு தூசு தட்டும்போதும் இவர்களாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேறும் எண்ணம் முடிச்சவிழ்க்கப்பட மாட்டாதா என."

"ஆகாயம் நிறமாறிப்போகட்டும்
ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாது...
##நெஞ்சே நெஞ்சே நீ எங்க பாடல்##"

10 Dec
"நான் சில நேரம் காணமல் போகலாம். ஆனாலும் அழிக்கப்பட்ட உணர்வு இல்லை. அத்தனை தேடல்களிலும் பேச்சின் நுனிநாக்கில் நுகரப்படுவேன். எவ்வாறெனினும் எனக்குள்ளே நீங்களும் உங்களுக்குள்ளே நானும்"

"சர்வதேச மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10,
துஷ்பிரயோக மற்றும் மனித மதிப்புகள் மீறல்களுக்கு எதிராக 'மனித உரிமைகள் கொண்டாட' மற்றும் மனித உரிமைகள் பிரகடனம் பற்றிய விளக்ககாட்சியை உலகம் முழுவதும் (இன்று) சனிக்கிழமை அனுசரிக்கும்படியாக வேண்டும்."

"காத்திருக்கிறேன் அம்மா ஊட்டிவிடும் கார்த்திகை விளக்கு நிலாச்சோறுக்கு."

"சந்திரகிரணமும் போயிற்று. ரசிக்கவேண்டிய நேரத்தில் இருந்த நிலாவும் போயிற்று. இப்ப முழுசா இருந்து என்ன பயன் என்நித்திரைக்கு இல்லையா வழி,,"

11 Dec
"இடி இடிக்குது.
இருண்டுபோகுது காலைப் பொழுது.
காற்றுச் சீரமைப்பி திறக்கப்பட்டிருக்கிறதா - இல்லை
குளிரூட்டியாக்கப்பட்டிருக்கிறதா வானம்.
இன்னும் சில நேரத்தில் ஒடுங்கல் நிலைமாற்றம்""

"வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும் .
அது உனக்குள் உள்ள உனது பலத்தை புரியவைக்கும்.
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்.
நல்ல அனுபவம் கிடைக்கும் போது மகிழ்ச்சியும்,
மோசமான அனுபவம் கிடைத்து துன்பம் அடையும் போது
அதையும் ஏற்றுக்கொண்டு மனப்பக்குவமும் அடைய வேண்டும்."

11 December
"ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா... மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று."

12 Dec
"எனதருமை செல்வங்களே. எழுதுங்கள். இன்று உங்கள் முதலாவது தடைதாண்டல். கவனமாகவும் தெளிவாகவும் எழுதுங்கள். உங்களால் முடியும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஆசிர்வாதங்களுடன் வாழ்த்துக்கள். ##All de best my dear students ##GCE O/L Examination"

14 Dec
"கண்ணீர் சிந்தியபோதும் இரத்தமாய் சிவந்தது தாய்ப்பூமி
கண்ணீர் சிந்தும்போதும் தண்ணீர் தரமறுக்குது விடுதிப்பூமி ##வீடல்ல விடுதியடா தமிழா##
**ஏக்கம்**"

"இரண்டுபேரும் மனசுவச்சு பேசிட்டீங்கண்ணா இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு வரும் கண்டிப்பா## நண்பனுடன் சொல்லுங்கள்# வெற்றி வானொலி#"

17 Dec
"நீ இல்லை என்பதை விட நினைவுகளே போதும்.
நிஜங்களைவிட கனவுகளில் காயங்கள் இல்லை."

18 Dec
"மேற்கே காத்திரு. கிழக்கிலிருந்து சூரியன் கிளம்புகிறது. நாளைய விடியலில் சந்திக்கிறேன்.

21 Dec
"கண்ணில் ஒரு தீ.
கருத்தரித்த
காட்சிகளையும் பிரசவிக்க
ஏங்கும்
விரல்நுனி.."

21 Dec
"எனக்காக வாங்கின பொருளொன்றை வீட்ல காட்டுறத்துக்கே பயப்படவேண்டிக்கிடக்கு... வீடு கிடக்கிற கிடையில இம்புட்டுகஸ்டப்பட்டு ஆசைப்படவேண்டி நான்...##வீட்டுப்புள்ளயாய் இன்னும்##"

22 Dec
"நானும் சில புத்தகங்களும்.."

23 Dec
"நேற்றிரவு முதலாய் தொடரும் அடைமழையும் குளிரும் இன்னும் படிக்கவும் பாடசாலைவேலைகளைச் செய்யவும் உதவிற்று..##Hot raining##"

"தாய்நிலம், தாய்த்தமிழ், தமிழன் என்ற சொல்லடையாளங்களால் அனேகம் பேர் அனேகம் பேரை மொக்கைபோட்டுக்கொண்டும் ஒருவர் (பலர்) இன்னொருவர் மீது (இன்னும்சிலமேல்) ஆதிக்கம் செலுத்துவது அடக்குமுறைகுள்ளாக்குவதாக உணரப்படுவது, உண்மையில் புத்திசாதுர்யமற்ற செயலே.. வெறுமையாக அரசியல் என்றதுக்குள் வட்டங்களும் சதுரங்களும் கொண்டு சதுரங்கமேசையில் தமிழ் கொலை செய்யப்படுதலே !!##சில கருத்தாடல்களை பார்க்கும்போது##"

"அஸ்க் ஹஸ்க்.. ஏனோ தன்னாலே ...## நண்பன் படப்பாடல்## பிடிச்சிருக்கு."

24 Dec
"பகைப்பதற்காய் புகை வைத்துவிட்டு பகைமை பற்றிய நலன்விரும்பிகளின் ஏக்கம் என்ன? #சூடு#"



இன்றைய படம் : நாளைய தினத்துக்காக
இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்




Friday, December 23, 2011

அடைமழையும் அவியலும்

எங்களுக்கு வடகீழ்ப்பருவப் பெயர்ச்சிக்காலம் என்றாலே மாரிகாலம் தான். மாரிகாலம் வரும் என்று பலர் முன்னாயத்தங்களை மேற்கொள்ளுவது மாரிகாலத்தைப்பற்றி பயம் அதற்காக எவ்வாறு செலவு செய்வது, எப்படி வருமானமற்ற நிலையில் வாழ்வது என்ற எண்ணப்பெருங்கடல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

வறுமை என்ற நிலமை, வருமானம் குறைந்த வாழ்வாதார தன்மை, உலர்காலங்களில் அன்றாடத் தொழில் செய்து தினம்வருமானம் ஈட்டும் தன்மை போன்றவற்றில் இருப்பவர்களாலே தான் இம்மாரிகாலத்தின் வேதனைகளை முற்றாக அனுபவிக்கமுடிகின்றதாக இருக்கின்றது. ஆயினும் ஏனையவர்ளாலும் கஸ்டப்பட்டே கடந்து செல்லவேண்டிய காலம் இது.

சாப்பாடு என்பது மூன்றுவேளையும் சோறும் கறிகளுமாய் ஆன கிராமத்து நரகத்து வழக்கம். ஆனால் கிராமத்திலே எரிபொருள் தட்டுப்பாடான நிலமை தொடரும் காலம் இது. விறகு (கொள்ளி என்றும் அழைப்பர்) அடுப்பிலே எரிப்பதற்கு எடுத்துக்கொள்ள முடியாத தொடர்மழைக்காலம். ஆதலால் மூன்றுவேளைக்குரிய சாப்பாடுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டிய நிலமை.
இக்காலத்திலே தான் அந்த வட்டமேசைகளும் பக்கத்துவீட்டு உறவுகளும் சேர்ந்த ஒரு பானை "அவியல்". என்னடா இது என்று வியக்காதீங்க. சோளன் Zea mays, மற்றும் கச்சான் (நிலக்கடலை)Arachis hypogaea போன்றவைகளின் காலமும் இதுதான். இவற்றினை அவித்து அனைவரும் சுவைத்து பசிபோக்குவது வழமை.



அத்தோடு மட்டுமில்லாமல் மாரிகாலத்திலே தான் உப்புக்கருவாடும் பழஞ்சோறும் (தண்ணிச்சோறும்) தின்னும் அருமைவிளங்கும். அதைவிட மத்தியானப்பசியை கோதுமைமாப் பிட்டு, கோதுமைமா ரொட்டித்துண்டுகள் மிளகாய் தேங்காய்ப்பூ சேர்த்து குழைத்து உண்ணல் அற்புதமான சுவையும் சுமைஇறக்கிய வாழ்வுமாய் மாரிகாலப்பொழுது வீட்டுக்குள்ளே கரைந்தோடும்....

என்னதான் ஆனாலும் பஞ்சம் என்பது தளைகட்டும் காலம் இதுதான் என்பதால் பிடிக்காமையும் தான்.
மாரி வந்தாலே கூட பஞ்சம் வரும்.

Thursday, December 15, 2011

காதல் கடந்துசெல்கிறது

காற்று நுரைக்கும்
ஈரப்பொழுதுகள்
காதல் தடவும்
பார்வைவீச்சுகள்

உயரக்குடை பிடித்த
நீ
தேகம் நனைத்த
சாரல்

நேர்கோட்டு வீதியில்
பயணித்தேன்
குறுக்கு கோடுகளில்
நிறுத்திவிட்டாய்

கரடுமுரடான தார்வீதியை
கார்பட் விரித்த
தளமாக்கிவிட்டாய்

நீ சாலையைக் கடக்கும்
பாதசாரி
நான் நிறுத்திய
சைக்கிளோட்டி

பச்சைவிளக்கு
எரிகிறது

காதல்
கடந்துசெல்கிறது




Monday, December 12, 2011

சிதறும் சில்லறைகள் - 20 (பாரதியும் ரஜனியும்)


டிசெம்பர் 11
எட்டயபுர விற்பன்னன். தமிழ்மொழியின் சிற்பி. பெண்விடுதலைக் கவி என்றெல்லாம் ஆன மகாகவி சுப்பிரமணியபாரதியாரின் ஜனன தினம். எட்டயபுரத்திலே  1882 ஆம் ஆண்டு பிறந்து எத்தனையோ தமிழிலக்கியத்தின் இலேசுத்தன்மையையும் தமிழ்வீரத்தின் திறனையும் ஒரு முழுமையான மொழியில் இருக்கவேண்டிய பண்புகளையும் சொல்லிச்சென்றார் சுப்பிரமணியபாரதியார்.
"ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா."
என்ற பாப்பா பாட்டே நான் கற்றுக்கொண்ட முதல் பாடல் என நினைக்கிறேன். அதற்குப்பிறகு "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்றும் பிறகு "நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலை எனது நண்பனின் அண்ணன் புனிதன் அண்ணா(போர்களவீரனானான்) பாடிய பின்னர் உதடுகள் உச்சரிப்பில் எழுந்தது.
சில பாடல்கள் கேட்கும்போது பிடித்துவிடும் பின்னர் யார் எழுதியது என்று பார்க்க பாரதியார் என்றதும் இன்னுமின்னும் உள்ளுர இனிக்கும். ஆனாலும் கடந்தவருடமே சொந்தமாக 13-12-2010 அன்றுதான் சொந்தமாக பாரதியார் கவிதைகள் என்ற புத்தகம் வாங்க என்னால் முடிஞ்சது. அதற்குமுன் இரவலாய் பெற்று வாசித்திருக்கிறேன். ஆயினும் சொந்தமாக வந்தபின்பு வாசிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. இவரது புதுமையும் எழுத்து வன்மையும் தன்மையும் ஈர்த்துக்கொண்டே இருக்கும்.
பாரதியார் பற்றி விக்கிப்பீடியாவில் இங்கு காண்க.

கார்த்திகைவிளக்கீடும் சந்திரகிரகணமும்
இவ்வருடத்தின் இறுதிசந்திரகிரணம் கார்த்திகை விளக்கீடு அன்று சேர்ந்து வந்தது. நான் எப்போதும் இந்நிகழ்வைக் கொண்டாட மறுப்பதில்லை. காரணம் அம்மா தயிர்,வாழைப்பழம், பால் என்பன சேர்த்து ஒன்றாக வெண்பொங்கலில் கலந்து பிசைந்துதரும் பாற்சோறு. அதனை அம்மாவே ஊட்டிவிடுவதும் எங்கவீட்டின் சிறப்பு. சின்னப்பருவத்தில் மெழுகுதிரி கொழுத்திக்கொண்டு வீதிகளில் குறிப்பிட்ட தூரங்கள் இரவுப்பொழுதை "கார்த்திகைக்காரோ பாலுஞ் சோறும் தின்னவாடோ" என்று கத்திக்கொண்டு திரிந்து கார்த்திகைக்காரனைக் கூப்பிடும் நிகழ்வு தித்திக்கும் உணர்வு.
இவ்வருட கார்த்திகை மற்றும் சந்திரகிரகணப்படங்கள் சில.

அம்மாவின் கார்த்திகை நிலாச்சோறு தின்ற திமிரில் மருகள்

நிலவைமறைத்த பூமி

வீட்டு சுற்றுமதில் சுவரில் கார்த்திகைத்தீபங்கள்.


டிசெம்பர் 12
தனது வித்தியாசமான சுப்பரான நடிப்பு. உதவும் நோக்குடன் செயல்படும் தன்மை என்றெல்லாம் தமிழ்சினிமாத்துறையில் என்றும் பதினாறாக "சுப்பர் ஸ்டார்" ரஜினிக்காந்தின் பிறந்தநாள். வாழ்த்துக்கள் தலைவா. ரஜினிகாந்தின் இணையத்தளம் இங்குகாண்க இவர்பற்றி விக்கிப்பீடியாவில் இங்கு செல்க

அண்மையில் வந்ததில் பிடித்த பாட்டு


ஆனாலும் இன்று இன்னொரு நண்பனின் ஸ்டேடஸ் முகநூலில் பாருங்க.


டிசெம்பர் 12 இல் ஓவியம்

"நாம் எமது வீட்டுச்சுவரில் தொங்குவதற்காக இயற்கையின் புகைப்படங்களை விட அழகான படங்கள் வண்ணப்பூச்சு ஓவியங்கள் வரையாமல் குறைந்தபட்சம் ஒரு கலையின் அடித்தளங்களை அமைத்து,நாம் உருவாக்க வேண்டும் ஒரு கலை மனிதநேயத்தையும் சொல்லும். ஓர் இதயத்தின் உட்புறத்தில் கலை உருவாக்கப்படும்."
இவ்வாறு சொன்னவர் தான் நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் எட்வர்ட் மண்ச்.(Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) இவரது படைப்புகள் அற்புதமானவை. இவருக்கான இணையத்தளத்தை உருவாக்கியவர் றோம் ஜெஷ்டர் (Roman Jaster)இங்குசென்று எட்வர்ட் மண்ச்சின் கைவணங்களைக் காண்க.

பிடித்த ஒரு ஸ்டேடஸ்
அண்மையில் முகநூலில் பிடித்தது.

டிசெம்பர் 13
நாளைய தினமும் 13-12-11 என வரும் ஒரு தினமே.

Thursday, December 8, 2011

பின் இருக்கையில் நான்


அழகிய புகைப்படங்கள்
நழுவி நழுவி
அழகிய ஓவியங்கள்
விலகி விலகி

பேருந்தில் நீ
யன்னல் ஓரம்
முன்னிருக்கையில்

எத்தனை அவஸ்தையிலும்
சிறதறடிக்கும்
அழகிய கூந்தல்

சிக்கிய தலைமுடி
கண்ணுக்குள்

அத்தனை வேகங்களை
விசிறியடிக்கும்
நான்
துள்ளி எழுந்து
இருந்துகொண்டு



அவளா நீ
அவளாய்த்தான் இருக்கணும்
நீ

உரசி உரசிக்கொள்ளும்
உதிரம் கொதித்துக்கொள்ளும்

ஒரு திரும்பல் வேண்டும்
தவநிலையின்
ஒற்றைக்காலில்
நான்
பின்னிருக்கையில்






Sunday, December 4, 2011

வெட்டப்படுகிறது.


நானாய் உருவிவந்து
உரமிட்டதில்லை
நீயாய் கேட்டு
உயரமிட
மறுத்ததுமில்லை

ஏதோ ஒரு பறவையின்
எச்சில் துப்பி
தப்பித்தவறி
வந்து விழுந்து
விட்ட அந்த பழமும்
விதையும்

இன்று
நீ
விருட்சம்

நீ வெறும் சப்பையாக
இருந்திருந்தால்
இவ்வளவுகாலம்
இருந்திக்கமாட்டாய்
எப்பவோ
குப்பையாகியிருப்பாய்

உன்னை வெட்டியே நாம்
வாழணும் என்று உணரவேண்டி

அங்கே காகங்கூட கூடு கட்டிவாழுது
அதற்கும் உலைவைச்சி
வீட்டின் கூரையைப் பிய்துவிடுமென்று
பாவம்
வேம்பு வெட்டப்படுகிறது


இனி எங்கே அந்தப்பட்டை
எங்கே அந்த கொட்டைகள்
மருந்துக்கு அரைத்தெடுக்க

அந்த துளிர்கொண்ட பசுமை எங்கே
இலை உரசி வருடும் காற்று எங்கே

கூடுகட்டிய காகங்கள் எங்கே
சல்லாரி இசை இசைக்கும்
இலைகள் எங்கே


Thursday, December 1, 2011

வேலைத்தளங்களும் மாற்றங்களும்

ஒவ்வொரு மாற்றம் எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும். இருக்கவேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளும் கற்றுத்தரும் இந்த மாற்றங்கள் வாழ்வில் மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்தும்.

மாற்றங்கள் சிலவேளை சந்தோசச் சாரல்களைத் தூவிச்செல்லும். சிலநேரம் கண்ணீர்ப்பூக்களால் அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஒரு ஸ்டேடஸ்,
"ஒவ்வொரு கூலியாளும் கவனமான படிப்பினைகள் மூலம் என்றோ ஒரு நாள் முதலாளியாகணும். மாற்றங்கள் எப்பொழுதும் தேவை."
ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு வேலைத்தளத்தில் வேலைசெய்யும்போது ஒரு முதலாளி அல்லது முகாமையாளர் போன்ற ஒருவர் மூலமே அதிக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு பலவேலையாட்களால் அந்நிறுவனம் அல்லது வேலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கும். பல்வேறானவர்களின் மனிதஉழைப்பு அதாவது அடிமட்ட வேலையாட்களாலே உயர்மட்ட முகாமைத்துவம் சிறக்க நிறுவனம் திறனாக இயங்கும்.
இங்கு மூளையைச் சலைவை செய்து தொழில்வாண்மைமிகு அனுபவமுள்ள முகாமையாளராலேயே நிறுவனத்தை மிகச்சிறப்பாக கொண்டுசெல்ல முற்படமுடிகிறது. ஆனால் பல்வேறு அடிமட்டங்களில் சிந்தும் வியர்வை உண்மையில் சிவப்பு இரத்தங்களாலே இயங்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டும் ஏற்றுக்கொள்ளாததன்மையால் நகர்கிறது.

இதற்காகவேண்டி மாறங்கள் அவசியம். அந்த வேலைத்தளத்தின் அடிமட்டத்தில் வேலைசெய்பவன் அல்லது அவனது பிள்ளை உயர்மட்டம்வரை செல்லவேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. இங்கே மாற்றங்கள் ஒரு வஞ்சனையோடு அல்லது வாஞ்சியோடு வளரவேண்டியதில்லை. மாற்றங்கள் உணர்ந்து சிறப்பான சேவையாற்றி பல்வேறு திறமைகளை வெளிக்காட்டுவதன் மூலம் கொண்டுவரப்படவேண்டியதே.

ஏனெனில்,
'அரசசேவையில் 20 வருட சேர்விஸ் 30 வருட சேர்விஸ் என்றெல்லாம் பலர் சொல்லுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இஙகு அவர்சொல்லிய அந்த வருடங்களில் உழைத்த உழைப்பு வினைத்திறனாய் அமைந்திருக்காது. திறனாக இருக்கலாம். அதற்காக அதற்காக முழுமையானவர்களாக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் மிகத்திறமைசாலிகள் என்றும் தம்பட்டமடிக்க முடியாது.


எந்தவொரு வேலையிலும் மாற்றங்கள் தேவை. ஆக அந்த மாற்றம் தான்வேலைசெய்யும் தளத்தில் உயர்வடையச் செய்யும் மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டிதும், அவர்களை அதே வேலைத்தளத்தில் சிறப்பான முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் சிறப்பாக மேற்கொள்ளத்தூண்டும்.

ஆனாலும் ஏறத்தாழ 5 - 8 வருடங்கள் வரையே ஏதாவது ஒரு துறையில் இருத்தல் சிறப்பாக, நமது வேலைகளையும் நமது திறமைளையும் வினைத்திறனாகவும் (Efficiency), விளைதிறனாகவும் (Productivity) வெளிக்காட்டமுடியும்.

இதன்பின்னர் வேறுதுறையில் அல்லது முன்னேற்றகரமான நிலையில் வேலையைச் செய்வோமானால் இதோ வினைத்திறனையும் விளைதிறனையும் பெற்றுக்கொள்ள முடியும் நல்ல படிப்பினைகள் (Lesson Learning) மூலம்,
இதனால் எந்நவொரு வேலையிலும் கூடியகாலம் இருந்து அலுப்பறைகளைக் நமக்கும் மற்றவர்களுக்கும் கூட்டிக்கொள்ளாமல் நாங்கள் களைப்படையாமல் மகிழ்ச்சியான சிந்தனையுடன் மிகச்சிறப்பாக பணியாற்றலாம் இல்லையா? ஒரே வேலைத்தளத்தில் தொடர்ந்திருக்கும் போது பல்வேறு மனஉழைச்சலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியேற்படும். இதனைத்தவிர்ப்தற்கு மிகச்சிறந்த மருந்தே "மாற்றங்கள் உணரப்படவேண்டும்"(Feel the change) என்பதாகும்.


இதற்காக 'இத்தின வருச சேர்விர்ஸ்' என்று மொக்கை போடாம இந்தக்காலம் என்னுடைய காலம் என்று சொல்லக்கூடியவாறு செயலாற்றல் சாலச்சிறந்தது எனக்கருதுகிறேன்.
மாற்றங்கள் அவசியம் தேவையல்லவா,??




Sunday, November 27, 2011

இது ஸ்டேடஸ் - 21


"அப்பாடா எப்பவோ செய்யவேண்டிய வேலையொன்று ஏதேதோ நொண்டிச் சாட்டுக்களால் விடுபட்டு இப்பதான் 90 வீதமாக முடித்திருக்கிறேன்.எதையும் ஆரம்பிச்சிடனும் முடிக்கணும் என்று எண்ணிக்கொண்டிருப்பதை விட களத்திள இறங்கிடணும் என்கிற என்பதை உணர்த்தியது. ##4 வருடத்துக்கு முன்னய வீட்டு வேலை##"

"உன்பார்வை உள்பார்வையா உதட்டுப்பார்வையா.."

"ஒவ்வொரு நிகழ்வும் மதிப்பீடு அல்லது அளவீடு செய்யப்படவேண்டும். அப்போதே நமது பலமும் பலவீனமும் வாய்ப்புகளும் எதிர்ப்பினைகளும் தெரியக்கூடும்"

"சுற்றியடிக்கும் காற்று சிதறடிக்கும் மழை. குளுகுளுவென்ற கூதல்.
இந்தப்போர்வை எதற்கு
நீ அணைக்கும் பொழுது."

"நீ விட்டுச்சென்றதுகளையும் தொட்டுதொட்டுப் பார்த்து களவு எண்ணம் வந்ததுவோ என்னவோ
நீ களவாடிப்போனது என்னை மட்டும் என்பது உண்மை...
ஏனோ இன்னுமின்னும் தொட்டுப்பார்த்துக்கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளை."

"அந்தக்கண்ணாடிக்குள் எத்தனை திமிருகளைக் கண்டேன்.
அங்கேதான் நான் என்னைக் கொன்றேன்.
குத்துமதிப்பாய் என்னைப் பார்த்ததும் நானும் குத்திக்குத்திக் கொன்றேன். ##அந்தநாள் ஞாபகம்##"

"அனுபவத்துக்காகவே உறவு என்று வைத்துக்கொள்க. பிழையான/எதிரான/எதிர்மறையான அனுபவங்களை நாம் ஏற்றுக்கொள்ள கஸ்டமாக இருப்பது இயல்பு. இருந்தாலும் இழப்புக்களை விட இருந்துகொண்டு அனுபவிப்பது மேல்....."

"நீண்ட காலமாக பல நண்பர்களுடன் மனம்விட்டு உறவாட முடியாதது என்னை ஏதோ செய்வதாய் உணர்கிறேன். அன்புகளை இழந்ததுபோல் உணர்வானது எனக்குள் மாறுதல்கள் இடியப்பச்சிக்கலான மனது.
பாவம் என்று என்னை நானே அடித்து அழுது ஆர்ப்பரிக்கின்றேன்.."

"விடிகின்றபொழுது இனிதாகட்டும்... எதிர்பார்ப்புகள் தவிர்த்து.."

"இன்றைய முதலாவது நற்சிந்தனை நிகழ்வு மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியனாய்.
"புன்சிரிப்புக் கொண்டு மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நமது மனதையும் மகிழ்ச்சியுற செய்யுங்கள்" இதுவே இன்றைய சிந்தனையாய்.."16 November

"இசைவாக்கிக்கொள்ளல் தவிர்ப்பதை விட மேல். நானும் உங்களுடன் அல்லது நீங்கள் என்னுடன்"
(Adaptation is better than Avoiding... so be with me / am with u)


"சப்தங்களை வெறுக்கும்போதுதான் நிசப்தங்களை வாசிக்க முடிகிறது. வாழ்க்கையையும் சேர்த்து."

"இத்தனைநாள் எதற்கு?
கருக்கொண்ட மறுகணம் உருக்குலைந்தால் என்ன?
வெறுக்கின்ற வாழ்க்கை.
விதிமுடிக்கின்ற நாள் எதுவென தேடும் மனம்!
இன்பத்தை நுகரமறுக்கும் துன்பத்தில் உழன்றுதுடிக்கும்."


"இரவுகள் தீண்டும் கனவுகள் நான்
கனவுகள் வாழும் இரவும் நான்"


"நெருக்கங்களினால் பலநேரம் சொல்லவேண்டிய வேதனைகளையும் சிலநேரங்களில் பேசும் ஓரிரு வார்த்தையும் புன்சிரிப்பும் செய்துவிடும்"


"உன்னுடைய அழைப்புக்களை தவறியதால் உன்னைத் தவறவிடுகிறேன் என்றா அர்த்தம்.
##ஒற்றைத்தலைவலியும் அவஸ்தையும்.. ##
உன்னுடைய ஒவ்வொரு அழைப்பும் பெறுமதியானது. :)
(தயவுசெய்து என்னுடைய அழைப்புக்காக காத்திரு... )"

"தன்னம்பிக்கையீனம் சோம்பலுடன் வளர்கிறதே..."

"மஞ்சள் கலந்து வேப்பிலை கொத்தும் சேர்த்து அம்மா வைச்சித்தந்த அந்த சுடுநீர் குளியல்,
விழுந்த வலிகளைக் கண்டறிய முடிந்தது. அந்த வலிகளையும் உன் அன்பு பிசைந்த தன்மையையும் நுகருகிறேன் தாயே."

"என்னுடைய உந்துருளியின் முதலாவது விபத்து. ஆனாலும் பழைய உந்துருளிளைக்கொண்ட அந்த வயது முதிர்ந்தவரின் உயிரைக்காப்பாற்றும் அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன். நன்றி உந்துருளியே."
"First accident with my mo-bike. But I managed to safe that old motorbike rider's life. Thnx my motorbike to control. Tnx god."
##22 October 2011 at 9:40 ##


"இன்னொருவன் உழைப்பில் வாழ்வதை விட நம்மட உழைப்பில் நாலுபேருக்கு சோறுபோடணும்டா அதுதான் ஆம்பிளையலுக்கு அழகும் திமிரும். ##இண்டைக்கு நண்பனொருவன் இன்னொருவனுக்கு ஒறைக்கவைச்சான்##"


"இந்த அரச(இலவச) பாடசாலைகள் தேவையில்லை என எண்ணத்தோன்றுகிறது. தேவைக்கில்லாத விடயங்களும் பிள்ளைகள் கரிசனையில்லாத கல்விச் சிந்தனையும் ஆசிரியர் தொழில்சார்முறைச் சிந்தனையுமாய் அமைகிறது. இதில் 1 - 5 % மான மாணவர்களே நன்மையடைகின்றனர். :("

"இந்த இரவுப்பாதைகளிலும் கனவுபாதைகளில் வரமாட்டேன் என்றுரைக்காதே
நான் கனவுப்பாதைகளிலும் ஏரோபிளேனில் போவதை விட
சைக்கிளில் போவதையே விரும்புகிறேன் எனக்குத் தெரியும்
எனது கால்களில் விசை அதிகம்"


"இந்த இரவுகளில் சில நேரம்
சிலுவைகளை சுமக்கமுடிகிறது
சிலநேரம் கண்ணீர்ப்பூக்கள் அர்ச்சிக்கப்படுகின்றன..."


"மீண்டும் இரவுகளை அலாறம் செய்யும்
அழுகைகள் தீண்டும் இரவுகள்
உனக்காக கண்முழிக்கும் உள்ளங்கள். #ஆராரிரோ.. ஆராரிரோ#"

"பூவொன்று பூமிபார்த்தது.
வீடு சிரிப்பு மழை பொழிந்தது."

"மற்றவர்களின் நலம் விசாரிப்பில் ஒரு திருப்தி இருக்கிறது. அரட்டையாயிருந்தாலும் அங்கே இதயம் பேசிக்கொள்ளமுடிகிறது. சில பேரின் முகத்திலே பெரும் புன்னகை மட்டும் தடவிக்கொள்ளும். இதயம் இரும்பாயிருக்கும். ஆனால் சிலபேரிடம் இரும்பும் இதயமாய் இருக்கும்.."

இன்றைய படம்

Saturday, November 26, 2011

சிதறும் சில்லறைகள் - 19 (மீண்டும் நான்.)

எழுத எழுத நினைத்து
எழுதாமல் போனேன். ஆனாலும் இன்றைய ஸ்டேடஸ்
"நீ இருந்தால் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இல்லை என்றால் உனது நேரான தலைமைத்துவ நினைவுகளுடன் நான்."

அதற்காக உன்னை முழுமையாக ஏற்கிறேன் என்று அர்த்தப்படவில்லை.

தலைமைத்துவம் என்பது எவ்வளவு கஸ்டம் என்பது அந்த இடத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும். 'தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால் தான் தெரியும்' என்று சொல்வுவோமே. அதேபோலத்தான் தலைமைத்துவமும், தலைவர் பதவியும், பொறுப்புக்களும், கடமைகளும் அதனை ஏற்றுக்கொள்ளும்போதுதான் தெரியும் அந்தக் கஸ்டங்களும் நமது பலமும் (Strength), பலவீனமும்(Weakness), வளமும் வாய்ப்புக்களும் (Opportunity and resources), அச்சுறுத்தல்களும் (Threats). நீங்களும் அந்த இடங்களை இடம்பிடித்துப்பாருங்கள் எங்கே நாம் 'நரம்பில்லாத நாக்கால்' காசில்லாததால் வார்த்தைகளை உளறித்தான் விட்டமோ என்று பல ஏக்கங்களும் தப்பு அல்லது தவறுகளும் உணர்த்தப்படும் எதிர்மறையான சிந்தனையுடன். அதேபோல் பலமும் வெற்றி முனைப்புகளும் திறமைகளும் தெரிந்துகொள்ளப்படும் நேர்சிந்தனையாக.

நாளைய நாள்
எனது மெளனங்களுடன் கூடிய அஞ்சலி விளக்குகளை ஏந்திக்கொள்கிறேன் மனதிலும் காயப்பட்ட உள்ளங்களுடன் அழுதுகொள்ளும் நெஞ்சங்களுடன்.

1997/98 பருவகாலங்களில் எழுதியது. வாசியுங்கள் இம்மாதத்துக்கு பொருந்தும்.சில சொற்களை தவிர்த்து சில மாற்றங்களுடன்


வீழ வாழும்

மஞ்சமதில் வீரத் தாலாட்டு கேட்டுற்ற
நெஞ்சமிது வீழாது
நெஞ்சமதில் ஈரத் தமிழ்கேட்டு
வஞ்சஞ்கொண்ட மனது
வஞ்சகனை கண்டுற்று வாசனைகள்
கொண்டு போற்றுவது
பிஞ்சுகளிடமு மில்லை அஞ்சாத்
தமிழன் நெஞ்சுரமுடையான்

தமிழுக்குயிராகி உடல் போர்த்து
உளந்தமிழ்ப் பயிராகி
தமிழுக்குயிராகி உடல் விதைத்து
உடல் தமிழுறவாகி
தமிழுக்குடலாகி உயிர்பிணைத்து
எம்மை தமிழுறவாக்கி
தமிழுக்குறவாகி தமிழ் தளைகட்டி
தமிழான வீரர்களே வாழ்க

கழிபகலும் கங்குற் பொழுதும் களநில
வரம் கண்டு மனம் கறங்கும்
விழிக்கின்ற பொழுது போதும் அவன்
விதிமுடிக்கின்ற தின மின்றென
விடிகின்ற எந்த பொழுதும் தமிழ்
தாய் உதிக்கின்ற நிலமென
விரிகின்ற நிலம் போதும் இருளிடத்து
விடுவிக்க வீரர் மாழும்

கங்குல் மணி யடிக்க கசை யடி
கொடுக்க மனம் கடுவளியா
பொங்கும் மணி யடிக்க கடிது
பூங்குழலேந்தி தாக உளமாய்
வெங்கள மணியடிக்க எம்மின
வீறுசிறக்க வெற்றியென்று
வீழிகிடைக்க மங்கலம்
உலமறிய தமிழெழும்

காப்பிழந்த தாமரையாய் தமிழ்
கற்பிழக்க பொறுக்குமோ
காப்பாள் கொப்பிழக்கா தாமரையாய்
குழல்பிடித்து கடிமரம் நட்டதே
காவிழந்த பலமரமாய் தமிழ்போ
வதோ அவன் வீழவே
காப்பிழக்கா வீரம் வீழுமே
தமிழ் வாழுமே

அதிவேக நெடுஞ்சாலையும் அபிவிருத்திகளும் சில சோகங்கங்களும்

ஆனாலும் நாளைய தினம் 27-11-2011 இலங்கையின் புதிய பரிணாமங்களின் வளர்ச்சியாக 7000 கோடி ரூபாய்களின் செலவில் அதி(???) வேக பாதை கொட்டாவவிலிருந்து மாத்தறையின் கொட்டகம வரையான இலங்கையின் நீண்டதும் பெரியதுமான அதிவேக நெடுஞ்சாலை மாண்புமிகு ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட இருக்கிறது. வரவேற்கிறேன். வெவ்வேறாக பல்வேறு முன்னேற்றங்கள் அவசியம் தேவை மாற்றங்களுடன்.
ஆனாலும் நாளைய தினம் தமிழ்மக்களின் உயிர்நாள் அப்பேர்ப்பட்ட நாட்களில் அனேகமாக பல அபிவிருத்தித்திட்டங்களின் திறப்புவிழா நடைபெறுவது அண்மைய காலங்களில் நிகழ்வதன் மூலம் தமிழ்மக்களின் உணர்வுகளில் ஊசிஏற்றுவதாக உள்ளதாய் இருக்கிறதல்லவா.
ஆனபோதும் "எரிகின்ற காயத்துக்கு அமிலம் ஊற்றாமல் மருந்துகளும் ஆறுதல் வார்த்தைகளும் தந்தால் என்ன"....

மாண்புமிகு ஜனாதிபதியின் ஆட்சியில் என்னைப்பொறுத்தவரையில் சொல்லக்கூடிய உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பது பாதை/வீதிகளின் அபிவிருத்தி. முதல்ல கஸ்டப்பட்டு பல மணித்தியாலங்கள் செலவிட்டு அலுப்படைந்து போனபோது நேரங்களை மிச்சப்படுத்தியபோதும் வாகன விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதை தவிர்க்கமுடியாத நிலைகாணப்படுகிறது. இதற்காக கட்டாயம் மக்களுக்கு சரியான பாதை ஓட்டுதல் பற்றிய விளக்கப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கலாம் இவர்கள் என்ன கள்ள அனுமதிப்பத்திரங்களுடனா ஓட்டுனராகிறார்கள் என்று. என்னதான் ஊழல் ஒழியவேண்டும் என்று கத்தினாலும் அரசாங்க அலுவலகங்கள் அதிகாரிகள் மட்டத்தைப் பார்த்தால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திணைக்களங்கள், பாதுகாப்புத் திணைக்களங்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்கள், நிவாரணப்பணிகளில் இலஞ்ச ஊழலை தவிர்க்க முடியாமல் இருப்பது கண்கூடு.

வரவேற்கிறோம்
நேற்றுமுதல் முன்னணி பத்திரிகையொன்று தனது விஸ்தரிப்புகளில் ஒன்றாக "டிஜிட்டல் யுகம்" எனும் பகுதியில் வலைப்பூக்களின் வலுவை அதிகரிக்கும் நோக்குடன் "வலைப்பூக்களோடு விளையாடுவோம்" என்று மிக நேர்த்தியாகவும் வெளிப்படையான பல்திறமையான ஊடகத்துக்கேற்ற மிகத் திறமையினராக தனது வலைப்பூவை எழுதுவதுபோல் வித்தியாசமான பாணியில் எழுத்துக்களை கையாண்டு பெருமிக்கிறார் நண்பர் மருதமூரான் (இவரது வலைப்பூவுக்கு இங்கு செல்க)இவரது இந்த முயற்சிக்கு ஆயிரம் கைதட்டல்கள் நெஞ்சுநிமிர்த்தி.வாழ்த்துக்கள் நண்பரே.


ஒரு பாடல்
ஒவ்வொரு பாடல்களில் ஒவ்வொரு சுவை. இந்தப்பாடலில் தவில் மற்றும் கிளரினட் அற்புதமாய் விளையாடியிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை. அதைவிட நான் ரசிக்கிறேன் ஏ.ஆர். ரஃமானின் அந்தக்கால இனிய படைப்பாய். புதியமன்னர்கள் படத்தில் மனோ மற்றும் குழுவினர்

வானில் ஏணி போட்டு
ஹோய் கட்டு கோடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று
ஹோய் தட்டு கை தட்டு
மின்னல் நமக்கு தங்க சங்கிலி
விண்மீனேல்லாம் சின்ன மின்மினி
வானவில்தான் நம்
வாலிப தேசிய கொடி



கடைசியாக

"கைகொடுங்கள் கையால் அடிக்காதீர்கள் கையாலாகாதவனில்லை.
தோள்கொடுங்கள் தலை கொடுப்பேன் தலையாலடிக்காதீர்கள்.
தலைக்கனமானவன்."

"உனக்குக் கீழே இருப்பவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று கண்ணதாசன் சொல்லிய வரிகள் நம்மட விதி அவ்வளவுதான் என்று ஏக்கப் பெருமூச்செறிய மட்டுமே உதவும். இவ்வசனம் எங்களை வளர்காது. "நமக்கு மேலே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து முன்னேறு" அதாவது முன்னேற்றத்தின் பாதையில் இருப்பவர்கள் நாம் எப்போதும் எங்களுக்கு இருப்பது அல்லது எங்களது தகமைகள் அல்லது திறமைகள் போதும் என்று எண்ணாமல் எங்களை விட உயர்வான நிலையில் உயர்வான பதவியில் உயர்வான இடத்தில் இருப்பவர்களைப் பார்த்தாவது முன்னேற்றத்தின் பாதையைத் திட்டமிட்டு வளர்ச்சியின் போக்கில் நாம் இருக்கவேண்டும். இதற்காக அவர்கள் எவ்வாறு கஸ்டப்பட்டு அந்த இடத்தை அடைந்தார்களோ அந்த கஸ்டங்களான அனுபவங்கள் எங்களை இன்னுமின்னும் வழிப்படுத்தி முன்னேற்றத்துக்குக் கொண்டுசெல்லும் இல்லையா?.

Thursday, October 6, 2011

இது ஸ்டேடஸ் - 20

"நான் எழுதவும் பழக்கிட்டேனடி. நீ இன்னுமின்னும் எழுதிக்கொள். உன்னால் உலகம் எழுதப்படவேணும். ஆனா என்று சொல்ல நீ மாமா என்றே சொல்லி நானா என்றாய். இன்று உன் பொறுமையும் எழுதவேண்டுமென்ற முனைப்பும் போதுமடி. எனக்கு அகரம் எழுதிய உன் தாத்தா முன் உனக்கு எழுதியது இன்னுமின்னும் எனக்கு வலிமை சேர்த்துவிட்டதடி. மொத்தத்தில் இன்றைய நாள் இரட்டிப்பு மகிழ்ச்சி."


""மிகவும் சிறப்பான நாளாக இந்நாளையும் தேக்கிக்கொண்டது மனது. நன்றி என்னருமை ஆசிரியர்களே! என்னையும் ஓர் ஆசிரியனாக்கிய என்னருமை மாணாக்கர்களே... எனது ஆசிர்வாதங்களையும் கடவுள் நல்லாசியுடன் என்றும் உங்களோடு நான் இருப்பேன்""##ஆசிரியர் தினம்##

"நாளைய நாளும் 'அ' எழுதப்போறன் .. மருகளே உனது வாழ்விலும் மற்றோர் வாழ்விற்கும் எழுந்து நில் எழுத்துக்களால் துணிந்து நில்.. நாளை உனக்காக அகரம் முதலாய் கொணர்கிறேன்...
##ஏடு தொடங்கல்##"

"UNESCO வினால் உலக ஆசிரியர் தினம் ஒக்டோபர் 5 ஆக இருந்தாலும் ஒக்டோபர் 6 தான் இலங்கையில் கொண்டாடப்படுகிறது. எனது வாழ்விலும் ஒளியேற்றிய அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி ஆசான்களே. நாம் என்றும் உங்களோடு."

"இந்தநாளும் தொலைக்கிறது.. வேண்டாதவை வந்து ஏற்றுக்கொள் என்றும் வேண்டியது தேடாமலும் போகிறது.."

"ஏதாவதொன்று பிடித்துவிட்டவுடனே அதுபற்றிய தேடல் அதிகரிக்கும் போதுதான் அந்தஒன்று பற்றிய தெளிவும் கிடைக்கிறது. விருப்பமும் விரும்பாமையும் தான்.."

"தவறுதலாகக்கூட நீ அனுப்பும்
உன் வெறுமையான sms கிடைக்கும் போதும்
உன் மனதை எண்ணிக்கொள்ள முடியுது
நீ என்னை தவறுதலாகக்கூட நினைக்கிறாய் என்று""

"சில அழுகைகள் கூடிய(ஆழ்ந்த) அன்பினாலும் வந்துதொலைக்கிறது. ஆனால் அப்பொழுதும் சிரிக்கமுடிவது நம்மளப்பற்றியே சிந்திக்கிறது குறைவு என்று. ##ஒரு பரிசுப்பொருளும் நானும் படும்பாடு##"

"பரிசு கிடைக்கும் என்று யோசியக்காரன் சொல்லுவதில்லை எனக்கு.
ஆனால் அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்பதில் கடவுள் இல்லை என்று நான் எண்ணுவதுமில்லை. அவர்கள் என்னோடு எனக்காக.. நன்றி அந்த உள்ளங்களுக்கு."


"நேற்று, தம்பியொருவன் தனது தாய் தான் செய்துவந்த இடியப்பம் விற்று உழைத்த தொழிலை விடச் சொன்னால் விடுவதாக இல்லை என்று கவலைப்பட்டுக்கொண்டான். தான் பயிர்ச்செய்கையை ஆரம்பித்திருப்பதாகவும் அதனால்தான் தனது குடும்பம் இற்றைக்கு ஒரு வருடத்துக்குமேல் சாப்பிட்டு வருவதாகவும் சொன்னது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தனது தந்தை போரினால் இறந்தும் குடும்பத்தை தாங்கும் இவன், மனதை என்னமோ செய்தான்.""25 September at 21:03"

"ஒரு முடிவெடுத்தால் மாற்றாமல் தொடர்ந்திடணும் நாளை என்பதை விட இப்பொழுது என்று சென்றால் முடிந்துவிடும். #பதிவு எழுதியாச்சு##"

""பெரிய கனவுகளால் திருப்தியளிக்க முடிவதில்லை. ஒரு சிறிய சொற்களே பெரும் வெற்றிகளுக்கா ஆரம்பிக்கும். சிறியவிடயத்திலிருந்தே உரிய வெற்றியடைய முயற்சியுங்கள்""

இன்றைய படங்கள் இரண்டு

ஏடுதொடங்கல் மருமகளுக்கு எனது மாமாவுடன் நானும்








Saturday, September 24, 2011

சிதறும் சில்லறைகள் - 18


நேற்றைய நாள்
2003 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2008 ஆம் ஆண்டு நிலத்துக்கடியில் கட்டிமுடிக்கப்பட்ட நியுத்திரன் அலைவுகளுக்கான ஒபேரா (OPERA) பரிசோதனையில் தகவல் சேகரிப்பு நடைபெற்று பரிசோதனையின் ஒரு முடிவாக " அணுவின் உபதுணிக்கைகளில் ஒன்றான நியுத்திரன் (Neutron) கற்றைகளின் வேகம் ஒளியின் வேகத்திலும் (3x10^8 m/s) அதிகமாய் இருப்பதாக" உறுதிசெய்த நாள்.
இங்கு செல்க மேலும் விபரங்களுக்கு
1
2

பாடலும் காட்சியும்
இது நண்பரொருவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்ததுதான். ஏனோ இத்தனைதூரம் என்னைக் கொண்டுசெல்லுது என்று தெரியல. அற்புதமாய் அத்தனையுமாய் சிறப்பாக இருக்குது. பாருங்க.

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்




ஏழாம் அறிவு.
அண்மையில் வெளிவந்த பாடலில் ஏழாம் அறிவுப்பாடலும் மொக்கையாய் ஹரிஸின் அதே சொதப்பலாக அமைந்தாலும். இந்தப்பாடல் "இன்னும் என்ன தோழா என்று பால்ராம் ஆரம்பிக்கும்

யாருமில்லை தடைபோட உன்னைமெல்ல எடைபோட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே..
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்..
மீண்டும் மீண்டும் எழுவோம்
....

பனிமூட்டம் வந்து படுத்தென்ன சுடும் பகலவன் மறையுமா...
அந்த
பகை மூட்டம் படியாமல் எங்கள் இருவிழி உறங்குமா.

தெரிந்த பழகிய வரிகளாய் அமைந்தாலும் இதயத்தில் இணைந்திருக்கும் இசையாய் வரிகள் துவம்சம் செய்யுது.
அப்படியே கேட்டுப்பாருங்கள்.



கவிதை

எந்த அவசரப்பொழுதுகளிலும்
நீ மறக்கலாம்
ஏன் யார் என்ற நினைவே
இல்லாமல்போகலாம்.
ஆனாலும் என் "முதல்" என்ற ஒன்றில்
நீ மட்டுமே இருப்பதால்
நீ என்னுள் நிரந்தரமாய்
உயிர்ப்பித்திருப்பாய்.

ஸ்டேடஸ்
தவறிய என்னுடைய ஸ்டேடஸ்கள் சில .......

"எந்தமனக்குழப்பமான பிரச்சனைகளையும் இன்பமாக பேசி அலசுவதால் குறைத்துவிடலாம். பேசாமல் இருப்பதால் என்னபயன்? உன்னையும் இழக்க நான் தயாரில்லை. விதண்டாவாதங்களால் ஏற்படும் விரிசல்களை விட புன்னகைக்கு ஆயிரமாயிரம் மடங்கு வலிமை அதிகம்."

"யார் யாரோ எல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு
நானும் யாருக்கோவெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு..
இப்படியே நீளுகிறது அன்பென்னும் அட்சயம்"

"உன் பேனா முனையிலே
நீ எழுதப்படுவாய்
உன் எழுத்துக்களால் உன்
பெற்றோர் ஆசிரியர்களினது
பெயர்கள் எழுதப்படும்.
வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்களுடன்... Wish u all the best for AL Students"

"ஆயிரம் மாற்றங்களை செய்திடணும் என்று எண்ணிக்கொண்டிருப்பதை விட ஒரு மாற்றத்தையாவது ஆரம்பித்துவிடுவதும் வெற்றி தான்
##எண்ணியகருமமாற்றல்##"

"நீ (நீங்கள்) நேசிக்க மறந்தாலும் உன்னை (உங்களை) நினைக்கத் தவறுவதேயில்லை.
நினைவுகளும் கனவுகளும் சேர்ந்த கலவையில் நான் அருட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.
ஓ... நான் சுயாதீனமானவன்.."

"உங்கள் இறந்தகாலம் இழந்தகாலம் என்பது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அல்ல! அல்ல!! ##அண்மையில் வானொலியொன்றில் கேட்டது## பிடித்தது"

"பேர் கேட்கும் இடங்களிலே கால் வைத்து சிரிக்கும் தலைகள் வளர்ந்துகொண்டே இருக்கும்... அந்தப் "பெயரில்" ஒட்டிக்கொண்டு... ##பிறநம்பிகள் = தன்னம்பிக்கையிலிகள்##"

"அத்தனை உயரங்களையும் தாண்டுவேன், நீ என் ஊன்றுகோலை வெட்டிவிடலாம். உணர்வுகளை களவாட முடியாது
அவை எனக்குச் சொந்தமானவை."

"சில கனவுகள் காணவேண்டுமென்றே பல கனவுகள் காணாமல் போகின்றன. மொத்தத்தில் எல்லாமே கனவு வாழ்க்கையடா இது"
"மற்றவர்களினதும் எனதுமான கடினவேலைகளால் அன்பான பல உறவுகளின் அழைப்பைக்கூட மதிப்பளித்து கதைத்துக்கொள்ள முடியாத நிலமை கொஞ்சம் கஸ்டமானதுதான். ##தவறிய தொலைபேசி அழைப்புக்கள்##

ஒரு படம்

மாமா என்று சொன்னவள் "மாம்" என்று அழைக்கிறாளே.. ஒருவேளை இவளை நான் 'மருகள்' என அழைப்பதாலா?
ஆனாலும் இவளின் ஆள்காட்டி விரலில் இருப்பது நான்.
அந்த புன்சிரிப்பில் விழுந்துவிடுவது எல்லோரும்.
நீ தேவதை தான்.


Friday, August 26, 2011

தழும்புகள்

மூச்சுக்காற்றில்
முதுகு வலித்த நாட்களை
இப்பொழுது மூச்சிரைக்கிறேன்

அழுகிய பழத்தில் நுரைக்கின்ற
புழுவாவேன் என்று
அப்பா அடித்த தழும்புகளை
தடவிப்பார்க்கிறேன்
அங்கு ஆழமாய்
எழுதப்பட்ட 'நீ'

முட்டித்தட்டி நாக்கு புரண்டு
இல்லை இல்லை
ஓம் ஓம் என்று
இல்லை என்பதற்கு ஓமும்
ஓம் என்பதற்கு இல்லையும்
மனக்கண்களின்
மெய்கண்ணைக் கண்டது
சிரிப்புச் சிரிப்பாய் இப்பொழுது

எந்த அவசரப்பொழுதுகளிலும்
நீ மறக்கலாம்
ஏன் யார் என்ற நினைவே
இல்லாமல் போகலாம்
ஆனாலும்
என் "முதல்" என்ற ஒன்றில்
நீ மட்டுமே இருப்பதால்
என்னுள்
நிரந்தரமாய் உயிர்ப்பித்திருப்பாய்

Tuesday, August 23, 2011

தாய்மை துறக்கவா.....

வில் வளை மேனி
தேடும் தேனீ

கொல்லை புறம் ஈரம்கூட
நனைக்க முடியாத
முள் தைக்கும் முகங்களில்
பறந்து பாய்ந்து போகும்
மோகினி

கைக்குழந்தை சரிந்திட
இடுப்பில் இறுகிட
கிறீஸ் தடவி போகிறான்
காவாலிப்பயல்
கைக்குழல் பிடித்தது
நினைந்து
இங்கு தாய்மை துறக்கவா
கண்ணீருக்கும் எல்லை உண்டு
கனமான மனம் வேகுது.

தொட்டுவிடாதே- இனி
மூச்சுக்காற்றும்
உன்னை மயக்கஞ்செய்யும்

Monday, July 11, 2011

இது ஸ்டேடஸ் - 19

"எத்தனையோ இரவுகளிலும் சூரியனைக் கண்டுகொண்ட போதும்,
பகல்களும் காயம் செய்கிறது இருண்டுகொண்டு இந்நாட்களில்"

"கொஞ்சம் மின்னல்
கொஞ்சம் காற்று,
கொஞ்சும் மழை,
கெஞ்சும் சுகம்,
இடைநிறுத்தப்படுகிறது
தொடர்பு சாதனம்."

"பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு எமது இதய அஞ்சலி!.
இறுதி நீண்ட நித்திரைக்கு தமிழ் வணக்கம்."

"ஓரங்குல சந்தோசத்துக்காக ஒரு முழம் கஸ்டப்படவேண்டிக்கிடக்கு. ##ஊர்க் கோயில் திருவிழாவும் குடும்பமும்.##"

"நட்புக்குண்டோ அடைக்கும் தாழ்.... நான் நினைக்கவேயில்லை. ஆனால் அதுவாய் ஆனது. உணர்வின் உரசல்களில் சிக்கிய இதயங்கள் நட்பில் சிறப்பே.."

"எல்லா வலிகளுக்கும் மருந்து கிடைப்பதில்லை.
காயங்கள் காய்ந்து போகாமல்..."

"உனக்கான கடமையில் நான் தவறேன். காத்திரு அந்தத்திருநாளை கண்குளிர கொண்டுவருவேன். இந்த நாளும் கடந்துதான் போகும்.
கனமான தம்பி நான் பாரங்களை குறைத்துவிடும் வல்லமை என்னிடமே. மலர்ந்துவிடு... இன்றைய பொழுதும் உனக்கு வெற்றிப்பொழுதாக அமையட்டும்.
இனிய பிறந்தநன்நாள் வாழ்த்துக்கள் சோதரியே..."

"மற்றவர்களின் தோல்விகளும் வெற்றிகளும் நம்மளை(எங்களை) வறுத்தெடுக்கும் போது நமது கவலைகளும் திருப்பதிகளும் போதும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்."

"பல்வேறுதிறமைகளிலிருந்தும் ஒரு சில பலவீனமான தன்மையை உணர்ந்துகொள்ளுதலே முன்னேற்றத்துக்கு தடையாகிவிடும்
சிலவேளை அவற்றைக்கண்டு பலவீனமாக்குவதால் வெற்றியும் கிடைக்கும்"

"இல்லை இல்லை என்றபோது நமக்கு உண்டு என்று ஆகியது.
இன்று நீ இல்லை என்று சொன்ன போதே
நான் உண்டு இல்லை ஆகிறேன்..
- நண்பனுக்காக --."

"நீண்ட நாளைக்குப்பிறகு அண்ணன்மார்களோடு சங்கமம் பார்லி வித்துக்களின் விளைபொருளில்"

"ஒருமாதிரியா முறையாக திட்டமிடப்படாத ஒரு வேலை திருப்தியாக முடிச்சாச்சு...
எதையும் பிளான் பண்ணணும் இல்லையேல் வேலைப்பளுவும் மன அழுத்தமும் அதிகம்."

"எத்தனையோ எவற்றையோ மறைத்தும் மழுப்பியும் வாழும் வாழ்க்கையில் பல அன்புகளை முலாம்பூசிக்கொள்ள நேரிடும்.."

"ஒவ்வொரு இரவும் நாளைய நாள் எப்படி அமையும் என்ற கேள்வியோடும், இப்படி இருக்கணும் என்ற கற்பனையோடும் கழிகிறது. நாளையையும் நலமாக்கும் வண்ணம் எண்ணத்தை ஏற்றிக்கொள்ளமுனைகிறேன்.."

"தெரிந்து ஒரு தவறு செய்துகொண்டு இருப்பது கஸ்டமாகவே அமைகிறது. வேண்டுமென்றே தவறைத்தூண்டுகிறது. என்னசெய்வதென்று அறியாமல் நான்.."

"இப்போதைய நாட்கள் கொஞ்சமும் பிடிக்காமல் போவதாய் ஏனோ தானோ என நகருகிறது.. நானும் நகர்த்திக்கொண்டு ஏனோ போகிறது"

"அரசாங்கம் காணொளியை பயங்கரவாதிகளாக பார்க்கும் எண்ணமே ஆக மக்கள் பற்றிய சிந்தனையை மறைத்து மழுப்புவதையும் அதற்காக பயங்கரவாதிகளை அழித்ததாகவும் அழிப்பதற்கு உதவியநாடுகளுடன் சேர்ந்து ஆதரவுதிரட்டுவதையும் மட்டுமே கொண்டிருப்பதையே வலுவாகக்கொண்டிருக்கிறது.
மக்கள் பற்றிய ஜனநாயக எண்ணமோ அக்கறையோ எப்போதும் வெளிக்காட்டாத அரசியலில் தமிழ்மக்கள் என்றாலே பயங்கரவாதிகளாகவே பார்த்து தட்டிக்கழிப்புப்போக்கினையே காட்டுகின்றனர்.
இன்னும் ஏதோ நல்லது மக்களுக்கு நடந்தாகணும் என்ற எண்ணம் மட்டுமே."


"நேற்றிரவு கஸ்டப்பட்டு பார்த்தேன் முழுமையாக அல்ல. ஆனால் நான் அழுதுவிடுவேன் என என் அக்கா அப்பா சொன்னபோதும் அவர்களும் அழுதுவிடவே.. ஓரமாய் அம்மா கண்களைக்கசக்கி இனி நீ பாத்துவிடாதே என்றது இன்னும் அதைவிட்டு விலகமுடியாத நிலைமை. இது இப்படித்தான் இருக்கும் என எண்ணியிருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே கனத்துவிட்டது இதயம்."


"சிலநேரம் " நான் நலமாக இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பலவற்றை மறைக்கவேண்டிவருகிறது மற்றவர்களுக்காக... மற்றவர்களுக்கு வலிக்கக்கூடாதென்று வலித்துக்கொண்டு.."

இன்றைய படங்கள்.

எனது மருகள் ஊஞ்சலாடுகையில்

கடந்த ஞாயிறன்று, அவளுக்கு கோயிலில் மொட்டை போட்ட பின்னர் அவளது தலைமுடிக்காக அவள் ஏங்கிய தருணம் இனிமேல் முடிவழிப்பதில்லை என்ற உணர்வைக்கூட்டிச்சென்றது.

Thursday, July 7, 2011

களுதாவளைப் பிள்ளையார் ஆலய திருவிழா

தகவல்: காண்க


படம் பார்க்க:



ஒரு பூசையின் சில வினாடிகள்

இங்கு காண்க



இறுதி நாள் இரவு பவனி வந்த பறவைக்காவடி நேர்த்தியின் காட்சி.


தீர்த்தோற்சவப் பெருவிழாவின் படங்கள்.


தீர்த்த உற்சவம்



Tuesday, June 28, 2011

காலச்சக்கரம்

கனவு நிலையில்
துலக்கமும் தூக்கமும் இல்லா
உணர்வு மட்டும்

இருக்கிறதா இல்லையா என
ஒவ்வொரு அரசியலாய்
நகர்கிறது
இன்றைய பொழுதும்

காத்திருந்து இருந்து
பழகிப்போய்
ஒட்டிய மண்
தட்டிக்கொண்டு
விழுந்துவிட்ட பழுத்த பல்லாய்
முரசுச் சொற்களாலும்
வரும் என்றே
நகர்த்திக்கொண்டு

யார் யாரோ வாழ
ஏனோ தானோ என வாழ
வாழப்படாமல்
வாழுகிறோம்

நன்றி மணிஜீ படத்துக்கு

Sunday, June 19, 2011

வலிகளால் ஒரு வரலாற்றுத்தேடல் - 'கொட்டியாரம் இலக்கிய மரபு'

வலிகளால் ஒரு வரலாற்றுத்தேடல் - 'கொட்டியாரம் இலக்கிய மரபு' நூல் விமர்சனம்.


'அனாமிகா' பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக விளைந்த 'கொட்டியாரம் இலக்கிய மரபு' எனும் தொகுப்பு நூல் ஒரு வரலாற்றின் தடங்களை, தமிழின் பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படுத்தலின் ஆரம்பமாக வெளிவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைகலாசார பீடாதிபதி பாலசுகுமார் அவர்களின் மற்றொரு அடயாளப் பொக்கிசமான 'கொட்டியாரம்' தொகுப்பாக அமைந்த இந்நூலில் பிரமிளா சுகுமார் அவர்களின் அற்புதமான பதிப்புரையே செல்வச்சிறப்பு மிக்க எழில்கொஞ்சும் எல்லா வளமும் கொண்ட அந்த கொட்டியாரப்பூமியின் மண்ணின் மணத்தைச் சொல்லும் அழகு அருமை.
எல்லோருக்கும் கிட்டாது என நினைக்கிறேன். தோட்டங்கள், பண்படுத்திய நிலம், விளைந்த நெல்மணிகள் என்றும் மருதம், நெய்தல், முல்லை மூன்றும் குழைந்து எழுந்த அந்த புன்னிலம் 'கள்ளம் கபடமில்லாம நல்ல மக்கள், மரியாதை, பண்பு, உபசரிப்பு என்று எல்லா பழக்கங்களும் என்னுள் வந்து செறிய' என்ற வசனமே அத்தனை நெருசல்களில் அகப்பட்ட மனதை இலகுவாக்கி மண்ணின் பெருமையை பறைசாற்றும்.

அடுத்து முன்னுரையை பாலசுகுமார் அவர்கள் அழகாக தொகுத்து இருக்கிறார். தாய்நிலத்தின் தொன்மையையும் அதனோடு இணைந்த அத்தனை ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் சொல்லும் அழகில் நமக்கு அந்த நிலத்தை சென்றுவந்த ஒர் உணர்வு பீறிட்டு எழும். அந்த அழகும் வளமும் நிறைந்த நித்திலத்தை வாசிப்பில் நுகரமுடியாது உணர்வின் உரசல்களில் தான் அந்த கனம் தெரியும். ஆனாலும் முன்னுரையே முழுசாக விளைந்த நெல்மணியாகிறது.

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம் என்று ஆரம்பிக்கும் வரலாற்று ஆய்வில் கிறிஸ்துவுக்கு முன்னைய மற்றும் பிந்திய காலப்பகுதியில் சான்றுகளை விளக்கி கொட்டியாரத்தின் புராதனத்தை அதன் தொன்மையை வெளிக்கொணர கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டட சிற்ப மற்றும் இடிபாடுகள் என்று அத்தனை விடயங்களினூடு சான்றுகளை அடுக்கிக்கொண்ட கட்டுரை அற்புதமான ஆய்வாகவும் அதனிறுதியில் சொல்லியிருக்கும் ' கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிறபொழுது மேலும் விரிவான விளக்கங்களைப் பெறமுடியும். இது ஒரு அறிமுகக்குறிப்பே' என்று சொல்லும் போதே இந்நூலின் தொடர்ச்சியானதன்மையை வெளிக்காட்டிநிற்கிறது.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய 'கொட்டியாரப்பற்றுப் பிரதேசத்தின் பொருளாதார வளவாய்ப்புக்கள்' என்ற ஆய்வுக கட்டுரையில் இம்மானிலத்தின் செல்வச்செழிப்பான பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மக்கள் மேற்கொள்கின்றனர் என்பதை தௌ்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

அடுத்து மண்சார்ந்த மக்கள் என்ற சொற்றொடரே மக்களின் காலக்கண்ணாடியாக இருக்கும் இலக்கியங்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் மக்கள் எவ்வாறு எவ்வகையான இலக்கியங்களை மேற்கொண்டனர் என்பதை மண்மொழி இலக்கியங்கள், மரபுசார் சிற்றிலக்கியங்கள், தொல்சீர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகம் என்னும் பகுப்புக்களாகப் பிரித்து அழகாக எளிமையாக சிறப்பாக முற்குறிப்போடு சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலின் மற்றொரு சிறப்பு. 'மண்மொழி இலக்கியங்களில்' கிழக்குமாகாணத்துக்கே தனித்துவமான நாட்டார் இலக்கியக்கூறுகள் பலவற்றின் சிலவற்றை இப்பகுப்பில் காணலாம். உழவு, கொம்பு, வசந்தன், கும்மி, கும்ப விழா போன்றவற்றில் இடம்பெறும் பாடல்களில் சிலவற்றை அச்சுருவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் பள்ளு, குறவஞ்சி, உலா போன்ற மண்சார் மரபிலக்கியங்களில் காணப்படும் குளிர்த்தி, காவியம், தாலாட்டு, அகவல், மான்மியம், ஊஞ்சல் போன்றவை மரபுசார் சிற்றிலக்கியங்களின் சில கொட்டியார மண்ணின் மைந்தர்களால் பாடப்பட்ட காவியங்கள், அம்மன் பாடல்கள் என்பன இப்பகுப்பில் அடங்குகின்றன. இங்கே யுத்த சூழ்நிலைகளால் அழிந்துபோனவைகள் போக மீதியில் பொறுக்கி எடுக்கப்பட்டவைகளின் சிலவற்றை இங்குகாணலாம். ' காலம் அழித்ததுபோக மீதியாக இருப்பற்றை தேடிப்பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இளம் சந்ததியினர் ஈடுபடவேண்டும்' என்று சொல்லும்போதே இளம் சமுதாயத்துக்கு விடப்பட்டுள்ள இந்த இலக்கியச் சங்கிலித் தொடரை தொடர்பறா நிலையில் பேணவேண்டும் என்பதை காட்டிநிற்கிறது.

அடுத்து இடம்பெறும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுப்பில் தமிழில் வழியான காவியமரபு பற்றிக்குறிப்பிட்டு அங்கே கொட்டியாரத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடிஅமாவாசை விழாவில் படித்து பயன்சொல்லும் திருக்கரைசைப் புராணத்தின் சில அழகான பாடல்களை அச்சுருவேற்றம் செய்தமை அற்புதம்.

நாவல்கள் என்ற பகுப்பில் முழுமையாக எந்த நாவலும் இடம் பெறாமல் சில நாவல்களின் சுவைமிகு குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கபட்டுள்ளது. கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தின் வாழ்வின் கண்ணாடியான நாவல்களில் இப்பிரதேசத்து சிறப்பையும் வரலாற்றையும் எடுத்தியம்பக்கூடியதாக இருப்பதனால் அவரது நாவல்களின் ஒரு சில பகுதிகளை இப்புத்தகத்தின் வாயிலாக நாம் காணலாம். அடுத்து சிறுகதைகள் என்ற பகுப்பு. இங்கே ஈழத்து சிறுகதைகளின் ஆரம்ப படையல்களைத் தந்த இலங்கையர்கோன் கொட்டியாரப்பிரதேசத்தில் அரச அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்பது அவரது சிறுகதைகளில் மண்ணின் நடத்தைசார் பாதிப்புகளை எடுத்துக்காட்டியதை கொட்டியாரத்தின் சிறப்பை நுகரலாம். அத்தோடு சிறுகதைகளுக்கு மேற்கோள் காட்டும் வண்ணம் 'ஈழத்து சிறுகதை மன்னன்' கலாநிதி வ.அ. இராசரெத்தினம் அவர்களதும், மூதூர் அ.ச. பாய்வா மற்றும் கேணிப்பித்தன் அவர்களதுமான சில சிறுகதைகளை கொண்ட இப்புத்தகம் மெருகேறி வாசிக்கத்தூண்டும் ஒரு இலக்கியப்படைப்பாக நிற்கும்.

'கவிதைகள்' என்கிற பகுப்பில் மரபு மற்றும் புதுக்கவிதைகளை ஆக்கிய அத்தனை கொட்டியாரப்படைப்பாளிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முனைப்பில் அப்படைப்பாளிகளின் சில சிறப்பான கவிதைகளை காலத்தின் வடுக்களில் கொட்டியாரம் பட்ட அவஸ்தைகளையும் சமூகத்தின் அத்தனை காலப்பகுதிகளிலும் அடைந்த துயரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை உதிர்க்கும் மனதையும் நெஞ்சில் கனத்தையும் காட்டிநிற்கும் கவிதைகளுக்கு ஒரு வணக்கம்.

கடைசியில் பண்பாட்டுக்கலைகளின் வளர்ச்சியில் ஒரு தமிழ்க்கிராமத்து மண்ணின் வெளிப்பாடாக எழுந்த 'கூத்து' அக்கொட்டியாரப்பூமியிலும் அண்ணாவிமார்களால் பயிற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எழுந்த நாடகக்கலைகளை கொட்டியாரப் பிரதேசமும் கட்டிக்காத்து பல இசைக்கழகங்களால் மேடையேற்றப்பட்டன என்பதை நிரூபிக்கும் வண்ணம் அப்பிரதேசத்தில் எழுந்த நாடகங்களில் சிலவற்றை இத்தொகுப்பில் இணைத்து ஒரு பண்பட்ட கலாசாரத்தின் தமிழின் இன்ப இலக்கியங்ளை வெளிக்கொணர்ந்து மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வாண்மையைக் கொண்டுசெல்லக்கூடிய தன்மையைக் காட்டி நிற்கிறது.

Wednesday, June 15, 2011

இது ஸ்டேடஸ் - 18

"எல்லாரையும் சுற்றி ஏதோ ஓர் அரசியல்
ஏதோ ஒரு வகையில் அரசியலைச் சுற்றி எல்லாரும்"

"எவ்வளவு இன்பங்களை அனுபவிக்க முடியுமோ அனுபவிக்கிறேன் கிராமத்தின் சிறப்பே இதுதான் .கண்ணகி அம்மன் கோயிலில் நாங்கள்"

"ஒவ்வொரு பாதிப்புக்களிலேதான் தாக்கங்களும் மனக்கஸ்டங்களும் வரும்.ஏன் சந்தோசமும் கூட. அது மாற்றமா தடுமாற்றமா என்பது புரியமறுக்கும்."

"மட்டக்களப்பு செட்டியூர் கண்ணகை அம்மன் சந்நிதிதன்னில் நமது அண்ணன்மார் மீண்டும் ஒரு இறுவட்டு வெளியிட்டனர் "அம்மன் காவியம்" என இன்று. இன்றைய கல்யாணக்கால் பூசையுடன் இனிய பொழுது அம்மன் நிகழ்வாய் எய்திய மகிழ்ச்சியும்..."

"என்னே வெயில்.. ஆஆஆஆ கண்ணைக்கட்டுதே.. வியர்வைகளால் உடல் நனையுதே.. ஆங்.. 35 டிக்கிறி செல்சியஸ்..."

"சொந்தத்தில் (சுயநலத்தில்) மற்றவர்களின் கண்களும் மனசும் குளிர்மை காணும் என்ற எண்ணம் மட்டுமே
குளிர்ந்தால் போதும் ஆறுதலடையும் மனம் ##புகைப்படங்களும் நானும்##"

"தாந்தாமலை முருகன் கோயிலுக்கு அம்மாவைக்கூட்டிக்கொண்டு சென்று மீண்டது மகிழ்ச்சி. எண்ணைக்காப்பு அம்மா வைத்தார்.."

"என்னை வாசிக்கும் வயலின்
நீ
உன் இசையின் முதல் ரசிகன்
நான்"

"உன் வாழ்க்கையின் நீள அகலங்களைத் தெரியாவிட்டாலும் ஆழ அன்புகளையும் ஆறிய காயங்களையும் அறிவேன்.. பட்டதால்தான் உன்னைால் மற்றவர்(வை)களையும் தடவிக்கொள்ள முடிகிறது.."

"உனக்குள் உருவாக உருவாக்க எண்ணாத அளவுக்கு இல்லாத அந்த உந்தன் பல்புலமை இருந்தென்ன லாபம்."

"தமிழில் 'வணக்கம்' என்றே வரும். காலை மாலை மதிவ வணக்கம் மற்றும் வணக்கங்கள் தமிழில் இந்த (தனியார்)வானொலிகளின் சேர்க்கைகளினால் வந்த வினை. ஆக தமிழில் சொல்லும் வணக்கம் நேரமோ காலமோ காட்டாது. இதனால் உலகில் எவரோடும் வணக்கம் என எந்நேரமும் சொல்லமுடியும். ஆனால் இந்த காலைவணக்கம் சொல்ல மற்றொருவருக்கு மாலைவணக்கம் சொல்லவேண்டி வரும். அதை விட தமிழுக்கே வணக்கம் சிறப்பாக அமைவதால் வணக்கமாக்குக.. .."

தமிழுக்கே ஆன சிறப்புக்களில் இதுவும் ஒன்று ஆக அந்த அந்த மொழிகளின் சிறப்புப் பதங்களை அவ்வாறே சொல்லல் அழகும் பெருமையும். ..."

"இருத்தல் என்பது மாறுதலுக்காக
மாறுதல் என்பது வளர்ச்சிக்காக
வளர்ச்சி என்பது நீ யாராக இருக்கிறாய் (படைப்புத்திறன்) என்பதற்காக
முடிவில்லாத வகையில் உன்னைப் படைத்துக்கொள்வது."
###டாக்டர். வால்டர் ஸ்டேபிளஸ்.. தமிழ்மொழிபெயர்ப்பு புத்தகம் வாசிப்பிலிருந்து...##

"எழுதப்படாத சொற்கள் போல எழுதப்படாத உணர்வுகளும் அதிகம்.
என்னுள்ளும் தேக்கத்தில் தான்"

"இருந்த போது இருந்த காதலைவிட இல்லாதபோதுதான் காதல் காதலிக்கப்படுகிறது.. இல்லையேல் அத்தனை காதல் வரலாறுகள் எழுதப்பட்டிருக்காது.."

"அத்தனை அரசியலுக்கும் உண்மையில் நடுவுநிலைமை சரிந்துவிடும் ...
அப்போதும் அரசியல், ரகசியமாக நடுவுநிலைமையை எடுத்துக்காட்டுவது அரசியல்"

"ஒவ்வொரு அங்குலமாக ஒரு சொட்டுக் குறைவில்லாமல் கிராமத்தை அனுபவிக்கிறேன்.
விட்டுப்பிரிந்தாலும் அதற்கும் சேர்த்து.."

இன்றைய படங்கள்
தாந்தாலை முருகன் கோயிலின் பிள்ளையார் கோயிலின் எண்ணைக்காப்பு படங்கள்..



Monday, June 13, 2011

செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயம் - சடங்கும் வழக்குரையும் 02

வைகாசி பொறந்தாலே( பிறந்ததும்) வெயில் நீங்கி இதம் குளிரும் குளிர்த்திப்பாடல்களால் நிலம் நனையும் என்று ஆதங்கப்பட்டு வாழும் ஈழத்திருநாட்டார்.

கிராமங்கள் தோறும் கண்ணகை அம்மன் கோயிலும் அதன் திருவிழாவாக பெயர் பெறும் சடங்குமுறைகளும் சிறப்புப்பெயர் கொண்டழைக்கின்றோம்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் மரபிலக்கியங்களாக இந்த சிற்றிலக்கியங்களின் நீட்சியாக அம்மன் பாடல்கள் மண்சார் வெளிப்படையாகவும் காணப்படுகின்றன. இங்கு குளித்திப்பாடல்கள், காவியப்பாடல்கள், தாலாட்டு, மான்மியம், ஊஞ்சல் என்று பலவகையான பொக்கிசங்களாக மரபுவழிச் சின்னங்களாக இருக்கின்றன.

"அன்று தொட்டுப் பாண்டியநாடு மழைவறங்கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக்கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியள் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவோடு சாந்திசெய்து, நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது"
- சிலப்பதிகார உரை

இந்த சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி காரணமாக வெம்மைநோய் வந்துநீங்குதல் பற்றி கூறப்பட்டுள்ளது. வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, கண்ணோய, பெருஞ்சுரம், மங்கமாரி போன்ற சூட்டுநோய்கள் கண்ணகி அம்மனின் கோபத்தினால் பரவுவதான எண்ணப்பாடு ஐதிகம் இங்கு உள.

இதனால் காளியின் அம்சமான கண்ணகித் தாயிக்கு நேர்த்திக்கடன் செய்தலை வழக்கமாகக் கொண்டு வழிபாடு செய்தல் இன்றும் இருக்கும் மரபு.

இதற்காக மற்றும் குழந்தைப்பேறு, மாங்கல்ய வரன் என்றும் பல்வேறு வேண்டுதல் என்றும் அவைகளுக்கெல்லாம் நேர்த்தி வைத்து மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அலகிடுதல், கற்பூரச்சட்டி எடுத்தல் என்றும் சடங்கு காலத்தில் பொன்னாலும் வெள்ளியிளாலும் செய்யப்பெற்ற கண்ணுருவங்குளம் கண்மணிகளும் அம்மனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தல் அடயாளப்பொருட்கள் என்றழைப்பர்.

இரவுவேளையிலும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த ஆசான்

அடயாளப்பொருட்களை பெறுவதில் மக்கள்

திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் ஆலயங்களில் காணலாம்.

நமக்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயமே மிகப்பிரசித்திபெற்று விளங்குகிறது. எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆலயம் இருந்தாலும் இக்கண்ணகி அம்மன் ஆலயம் மிகச்சிறப்புப் பொருந்தியது காரணம் இவ்வாலயத்தில் கிரான்குளம், குருக்கள்மடம்,செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை ஆகிய ஊர்களைச்சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சடங்குகளை நடத்துதே.

இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது; மாவிடிக்கக்கூடாது2 புலால் உண்ணக்கூடாது; இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

கண்ணகை அம்மன் சடங்கு என்றாலே மனசுக்கு என்னமோ இதமான மகிழ்ச்சியான உணர்வு இப்பிரதேச ஊர்மக்களுக்கு வருவது இயல்பு. காரணம் கண்குளிரும் மனம் மகிழும் பல நிகழ்வுகள் நடந்தேறுவதே.

முதல்நாள் - கதவு திறத்தல்

முதல் நாள் கதவு திறத்தல் என்று அழைப்பர். அம்மன் கோயில் சடங்கு ஆரம்பம் என்பதைக்குறிக்கும் நாள். இந்நாள் எப்போ வரும் என்று ஏங்கிக் கேட்டு அம்மாவைக் குடைதலே இவ்விழாவின் சந்தோசத்தை அதிகரிக்கும். எங்கட செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயச்சடங்கின் கதவுதிறத்தல் கிரான்குளம் மக்களால் நிகழ்த்தப்படும்.

சடங்கு

சடங்கு என்ற சொல் அம்மனுக்கு நடக்கும் பூசையைக்குறிக்கும். இங்கே உடுக்கு வாத்தியங்களோடு அம்மன் காவியம் பாடுதல்,உடுகுச்சிந்து பாடுதல் அம்மானைக்காய், சிலம்பு என்பவற்றை கிலுக்குதல் (குலுக்குதல்), குரவைபோடுதல், அவ்வேளையில் ஆலத்தி எடுத்தல் என்பனவைகளும் அடங்குகின்றன.
நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும்

கல்யாணக்கால் சடங்கு

கல்யாணக்கால் சடங்கு தேற்றாத்தீவு மக்களுக்கு உரிய சடங்காக அமைகிறது செட்டிநகர் கணணகை அம்மன் ஆலயத்தில்.
கல்யாணக்காலினை பூவரசுகம்பம் ஒன்றினை ஆலயமண்டபத்தினுள் நட்டு ஆடை அலங்காரம் அணிகலன்காலால் ஒரு பெண்ணென கோலம் செய்து கண்ணகை அம்மனாகப் பாவித்து கோவலனார்க்கு திருமணம் செய்துவைத்தல் அதற்குரிய பாடல்களோடு வழிபட்டு சடங்கு செய்தல் இன்றும் வழக்கு.


குளுத்தி
தினமும் முறையான சடங்கு நடந்தேற இறுதிநாளில் நடைபெறும் நிகழ்வே "குளுத்தி" என்று அழைப்பர். குளித்தியிரவு சடக்கும் சடங்கிலே பொங்கலிடுதல் முதன்மையாகவும் பொங்கல் விழா முடிவுற சுண்ணமிடித்தல் இதமான நிகழ்வாக அமையும். பின்னர் குளுத்திப் பாடல் படிக்கத் தொடங்கி அம்மனின் கோபங்கள் தணியச்செய்து "வாழி" எனும் பாடல்கள் பாடப்படும். அம்மனை வரம்வேண்டிப் வாழ்த்தும் சேர்ந்து பாடும்பாடல்களாக அமையும்.
கடைசியில் "பாணக்கம்" வழங்கப்படும் இதனை குளுத்திப்பாணக்கம் என்றழைப்பர். இது ஓர் அமிர்தமாக சுவையேறியதாக இருக்கும்.
இவ்விழா செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயத்தில் களுதாவளைவாழ் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.


வழக்குரை


மட்டக்களப்பிலே கண்ணகி கோயில்களில் கண்ணகி வரலாற்றுரைப்பதாக அவள் பெயராலோ, இளங்கோவடிகள் பெயராலோ, அவள் உரைத்த வழக்கின் பெயராலோ கொண்டமைந்த "வழக்குரை" என்றும் "வழக்குரைக் காவியம்" என்று அழைக்கபடும் காவியம் தினந்தோறும் பகலில் பாடுவது சிறப்பு.
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமாக இந்த வழக்குரைக் காவியமானது சிலம்பிலே காணும் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலைசேர்ந்து வளர்ந்துவரும் ஒன்றாய் பல வேறுபாடுகள் கொண்ட கதையாய் உடையதாய் காணப்படுகிறது.

இன்று காலையில் பாடும் போது..


வசந்தன் ஆடல்

"வசந்தன்", "வசந்தன் கூத்து" என்று அழைக்கப்படும் கூத்து மரபு இன்றும் வழக்கில் உள்ளது. அனேகமாக கண்ணகை அம்மனின் சடங்கிலே இவ்வாடல் நிகழ்த்தப்படுவது வழக்கம்.
செட்டியூர் கண்ணகை ஆலயத்தில் தேற்றாத்தீவு மக்களின் பூசை நாளில் தேற்றாத்தீவு பிள்கைகளால் ஆடப்படுவது இயல்பும் சிறப்பும்.



தண்ணீர்ப்பந்தல்


ஒவ்வொரு கிராமத்திலிருந்து நடைநடையாக வரும் அடியார்களுக்கு வெயிலில் தாகத்தைப்போக்கும் முகமாக வீட்டுக்கு முன் வேலியோரங்களில் தண்ணீர் குடங்கள் வைத்திருக்கும் தன்மை இம்மக்களின் தொன்றுதொட்டு வாழவைக்கும் தன்மையை எடுத்துக்காட்டி நிற்கும். இதைவிட சந்திகளிலும் கோயில்களிலும் தாகசாந்தி செய்யும் நிலையமாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கும்.





மடிப்பிச்சை எடுத்தல்

மடிப்பிச்சை எடுத்தல் அம்மன் ஆலயம் என்றாலே பெண்களுக்கு நேர்த்திக்காகவும் அம்மனுக்கு வேண்டுதலுக்காகவும் வீடு வீடாய் சென்று ஒற்றைப்படை இலக்கத்தில் 5 அல்லது 7 அல்லது 9 வீடுகளுக்குச் சென்று "கண்ணகை அம்மன் பேரால மடிப்பிச்சை போடுங்கோ" என்று அம்மனுக்கு தமது சேலையின் முந்தனையில் எடுத்து வேப்பிலையின் துளிரிலைகளை தலையில் சூடி கையிலும் எடுத்துக்கொண்டு நெல்லைச் சுமந்து வெற்றுக்கால்களுடன் கோயிலுக்கு சென்று அவற்றை கொடுத்தல் இப்பொழுதுகளிலும் நடைபெறுகிறது.
இம்மடிப்பிச்சை எடுப்பதற்கு சிறுபிள்ளைகளும் ஆயத்தம்கொள்வது அவர்களுக்கு அளப்பரிய சந்தோசத்தை ஏற்படுத்தும்.
இன்று காலையே நமது மருமகளொருத்தி ஆரம்பிச்சுட்டாள் பாருங்க



தோரணம் கொண்டுவருதல்


கோயில் அலங்கார வேலைகளில் ஈடுபடும் இளைஞர்


கடைத்தெரு

மனதை உருக்கும் பறவைக் காவடிகள்


காலையில் காவடி எடுத்தல்



செட்டியூர் கண்ணகை அம்மன் காவியம் நேற்று (12-06-2011) எமது சண்.இன்பராஜனால் பாடப்பட சிவகுரு தணிகசீலனால் இசைக்கோர்வை செய்யப்பட்டு இந்து இளைஞர் மன்ற செயலாளர் த.விமலானந்தராஜாவினால் அம்மன் ஆலயத்தில் வெளியிடப்பட்ட இறுவட்டிலில் உருவான பாடலை கேளுங்கள்.




இன்று இரவு குளுத்தி நிகழ்வுடன் இனிய நாட்கள் விடைபெறும் அடுத்தவருடம் வரை தித்திக்கும் நினைவுகளுடன்.

இங்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் படங்களைக் பாருங்கள்


உசாத்துணை நூல் : மட்டக்களப்புத் தமிழகம் வித்துவான் வீ.சி.கந்தையா

சடங்கும் வழக்குரையும் 01

கண்ணகை அம்மன் என்றாலே மட்டக்களப்புக்கு மிகவும் சிறப்பும் பெருமையும் அமைவது மகிழ்ச்சி.
கண்ணகி என்று சிலம்பினுள் வரும் இங்கே கண்ணகை என்ற சிறந்த பொருளாக திரிபுற்றது காண். கண்- நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையான கண்ணின் ஒளி கண்ணுக்கு அணிகலன் ஆக பொருள்பொதிந்து வழிபாட்டுக்கும் சடங்கு என்ற பதங்களால் ஆன கிராமத்து மண்ணின் பெருமையும் சிறப்புமாய் அமைகின்றது. "சடங்கு" என்றுரைத்தல் அம்மன் கோயில்களில் நடக்கும் பூசையினைக் குறிக்கும் இதனால் கண்ணகையம்மன் சடங்கு என்று அழைக்கப்படும் இவ்விழா வருடந்தோறும் வைகாசி வளர்மதி நாட்களில் இடம்பெறும்.
கதவு திறத்தல், என்ற சொற்பதத்தால் ஆரம்ப விழா முதல்நாள் சடங்காக அமையும். நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும். உடுக்கு வாத்தியங்கும் சிலம்பு ஓசையும் சேர்ந்து அம்மன் காவியம் உடுக்குச் சிந்து பாடுதல், கல்யாணக் கால் சடங்கு, என்பனவும் இங்கு சிறப்பானவை. சடங்கு நாட்களில் நேர்த்திக்கடனாக பல சிறப்பான பக்திபூராக அடியார்கள் வழிபடுவர் அம்மனை.
செட்டிபாளையம் அம்மன் கோயில் என்றாலே எங்கள் பிரதேசத்தில் ஊரில் வெகு சிறப்பாக ஒரு கொண்டாட்டம். இங்கு கண்ணகை அம்மன் காவியம் சிறப்பு இங்கு போய் காண்க இந்த பாடல்
இப்பாடல் எமது மண்ணின் சிறப்புப் பொருந்திய ச.இன்பராஜன் அவர்கள் பாட இசைச்சேர்க்கை ஒலிப்பதிவை தணிக சீலன் அவர்கள் உருவாக்கத்தில் அமைந்தது சிறப்பே..
















வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு