Pages

Tuesday, June 28, 2011

காலச்சக்கரம்

கனவு நிலையில்
துலக்கமும் தூக்கமும் இல்லா
உணர்வு மட்டும்

இருக்கிறதா இல்லையா என
ஒவ்வொரு அரசியலாய்
நகர்கிறது
இன்றைய பொழுதும்

காத்திருந்து இருந்து
பழகிப்போய்
ஒட்டிய மண்
தட்டிக்கொண்டு
விழுந்துவிட்ட பழுத்த பல்லாய்
முரசுச் சொற்களாலும்
வரும் என்றே
நகர்த்திக்கொண்டு

யார் யாரோ வாழ
ஏனோ தானோ என வாழ
வாழப்படாமல்
வாழுகிறோம்

நன்றி மணிஜீ படத்துக்கு

Sunday, June 19, 2011

வலிகளால் ஒரு வரலாற்றுத்தேடல் - 'கொட்டியாரம் இலக்கிய மரபு'

வலிகளால் ஒரு வரலாற்றுத்தேடல் - 'கொட்டியாரம் இலக்கிய மரபு' நூல் விமர்சனம்.


'அனாமிகா' பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக விளைந்த 'கொட்டியாரம் இலக்கிய மரபு' எனும் தொகுப்பு நூல் ஒரு வரலாற்றின் தடங்களை, தமிழின் பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படுத்தலின் ஆரம்பமாக வெளிவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைகலாசார பீடாதிபதி பாலசுகுமார் அவர்களின் மற்றொரு அடயாளப் பொக்கிசமான 'கொட்டியாரம்' தொகுப்பாக அமைந்த இந்நூலில் பிரமிளா சுகுமார் அவர்களின் அற்புதமான பதிப்புரையே செல்வச்சிறப்பு மிக்க எழில்கொஞ்சும் எல்லா வளமும் கொண்ட அந்த கொட்டியாரப்பூமியின் மண்ணின் மணத்தைச் சொல்லும் அழகு அருமை.
எல்லோருக்கும் கிட்டாது என நினைக்கிறேன். தோட்டங்கள், பண்படுத்திய நிலம், விளைந்த நெல்மணிகள் என்றும் மருதம், நெய்தல், முல்லை மூன்றும் குழைந்து எழுந்த அந்த புன்னிலம் 'கள்ளம் கபடமில்லாம நல்ல மக்கள், மரியாதை, பண்பு, உபசரிப்பு என்று எல்லா பழக்கங்களும் என்னுள் வந்து செறிய' என்ற வசனமே அத்தனை நெருசல்களில் அகப்பட்ட மனதை இலகுவாக்கி மண்ணின் பெருமையை பறைசாற்றும்.

அடுத்து முன்னுரையை பாலசுகுமார் அவர்கள் அழகாக தொகுத்து இருக்கிறார். தாய்நிலத்தின் தொன்மையையும் அதனோடு இணைந்த அத்தனை ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் சொல்லும் அழகில் நமக்கு அந்த நிலத்தை சென்றுவந்த ஒர் உணர்வு பீறிட்டு எழும். அந்த அழகும் வளமும் நிறைந்த நித்திலத்தை வாசிப்பில் நுகரமுடியாது உணர்வின் உரசல்களில் தான் அந்த கனம் தெரியும். ஆனாலும் முன்னுரையே முழுசாக விளைந்த நெல்மணியாகிறது.

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம் என்று ஆரம்பிக்கும் வரலாற்று ஆய்வில் கிறிஸ்துவுக்கு முன்னைய மற்றும் பிந்திய காலப்பகுதியில் சான்றுகளை விளக்கி கொட்டியாரத்தின் புராதனத்தை அதன் தொன்மையை வெளிக்கொணர கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டட சிற்ப மற்றும் இடிபாடுகள் என்று அத்தனை விடயங்களினூடு சான்றுகளை அடுக்கிக்கொண்ட கட்டுரை அற்புதமான ஆய்வாகவும் அதனிறுதியில் சொல்லியிருக்கும் ' கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிறபொழுது மேலும் விரிவான விளக்கங்களைப் பெறமுடியும். இது ஒரு அறிமுகக்குறிப்பே' என்று சொல்லும் போதே இந்நூலின் தொடர்ச்சியானதன்மையை வெளிக்காட்டிநிற்கிறது.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய 'கொட்டியாரப்பற்றுப் பிரதேசத்தின் பொருளாதார வளவாய்ப்புக்கள்' என்ற ஆய்வுக கட்டுரையில் இம்மானிலத்தின் செல்வச்செழிப்பான பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மக்கள் மேற்கொள்கின்றனர் என்பதை தௌ்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

அடுத்து மண்சார்ந்த மக்கள் என்ற சொற்றொடரே மக்களின் காலக்கண்ணாடியாக இருக்கும் இலக்கியங்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் மக்கள் எவ்வாறு எவ்வகையான இலக்கியங்களை மேற்கொண்டனர் என்பதை மண்மொழி இலக்கியங்கள், மரபுசார் சிற்றிலக்கியங்கள், தொல்சீர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகம் என்னும் பகுப்புக்களாகப் பிரித்து அழகாக எளிமையாக சிறப்பாக முற்குறிப்போடு சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலின் மற்றொரு சிறப்பு. 'மண்மொழி இலக்கியங்களில்' கிழக்குமாகாணத்துக்கே தனித்துவமான நாட்டார் இலக்கியக்கூறுகள் பலவற்றின் சிலவற்றை இப்பகுப்பில் காணலாம். உழவு, கொம்பு, வசந்தன், கும்மி, கும்ப விழா போன்றவற்றில் இடம்பெறும் பாடல்களில் சிலவற்றை அச்சுருவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் பள்ளு, குறவஞ்சி, உலா போன்ற மண்சார் மரபிலக்கியங்களில் காணப்படும் குளிர்த்தி, காவியம், தாலாட்டு, அகவல், மான்மியம், ஊஞ்சல் போன்றவை மரபுசார் சிற்றிலக்கியங்களின் சில கொட்டியார மண்ணின் மைந்தர்களால் பாடப்பட்ட காவியங்கள், அம்மன் பாடல்கள் என்பன இப்பகுப்பில் அடங்குகின்றன. இங்கே யுத்த சூழ்நிலைகளால் அழிந்துபோனவைகள் போக மீதியில் பொறுக்கி எடுக்கப்பட்டவைகளின் சிலவற்றை இங்குகாணலாம். ' காலம் அழித்ததுபோக மீதியாக இருப்பற்றை தேடிப்பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இளம் சந்ததியினர் ஈடுபடவேண்டும்' என்று சொல்லும்போதே இளம் சமுதாயத்துக்கு விடப்பட்டுள்ள இந்த இலக்கியச் சங்கிலித் தொடரை தொடர்பறா நிலையில் பேணவேண்டும் என்பதை காட்டிநிற்கிறது.

அடுத்து இடம்பெறும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுப்பில் தமிழில் வழியான காவியமரபு பற்றிக்குறிப்பிட்டு அங்கே கொட்டியாரத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடிஅமாவாசை விழாவில் படித்து பயன்சொல்லும் திருக்கரைசைப் புராணத்தின் சில அழகான பாடல்களை அச்சுருவேற்றம் செய்தமை அற்புதம்.

நாவல்கள் என்ற பகுப்பில் முழுமையாக எந்த நாவலும் இடம் பெறாமல் சில நாவல்களின் சுவைமிகு குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கபட்டுள்ளது. கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தின் வாழ்வின் கண்ணாடியான நாவல்களில் இப்பிரதேசத்து சிறப்பையும் வரலாற்றையும் எடுத்தியம்பக்கூடியதாக இருப்பதனால் அவரது நாவல்களின் ஒரு சில பகுதிகளை இப்புத்தகத்தின் வாயிலாக நாம் காணலாம். அடுத்து சிறுகதைகள் என்ற பகுப்பு. இங்கே ஈழத்து சிறுகதைகளின் ஆரம்ப படையல்களைத் தந்த இலங்கையர்கோன் கொட்டியாரப்பிரதேசத்தில் அரச அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்பது அவரது சிறுகதைகளில் மண்ணின் நடத்தைசார் பாதிப்புகளை எடுத்துக்காட்டியதை கொட்டியாரத்தின் சிறப்பை நுகரலாம். அத்தோடு சிறுகதைகளுக்கு மேற்கோள் காட்டும் வண்ணம் 'ஈழத்து சிறுகதை மன்னன்' கலாநிதி வ.அ. இராசரெத்தினம் அவர்களதும், மூதூர் அ.ச. பாய்வா மற்றும் கேணிப்பித்தன் அவர்களதுமான சில சிறுகதைகளை கொண்ட இப்புத்தகம் மெருகேறி வாசிக்கத்தூண்டும் ஒரு இலக்கியப்படைப்பாக நிற்கும்.

'கவிதைகள்' என்கிற பகுப்பில் மரபு மற்றும் புதுக்கவிதைகளை ஆக்கிய அத்தனை கொட்டியாரப்படைப்பாளிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முனைப்பில் அப்படைப்பாளிகளின் சில சிறப்பான கவிதைகளை காலத்தின் வடுக்களில் கொட்டியாரம் பட்ட அவஸ்தைகளையும் சமூகத்தின் அத்தனை காலப்பகுதிகளிலும் அடைந்த துயரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை உதிர்க்கும் மனதையும் நெஞ்சில் கனத்தையும் காட்டிநிற்கும் கவிதைகளுக்கு ஒரு வணக்கம்.

கடைசியில் பண்பாட்டுக்கலைகளின் வளர்ச்சியில் ஒரு தமிழ்க்கிராமத்து மண்ணின் வெளிப்பாடாக எழுந்த 'கூத்து' அக்கொட்டியாரப்பூமியிலும் அண்ணாவிமார்களால் பயிற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எழுந்த நாடகக்கலைகளை கொட்டியாரப் பிரதேசமும் கட்டிக்காத்து பல இசைக்கழகங்களால் மேடையேற்றப்பட்டன என்பதை நிரூபிக்கும் வண்ணம் அப்பிரதேசத்தில் எழுந்த நாடகங்களில் சிலவற்றை இத்தொகுப்பில் இணைத்து ஒரு பண்பட்ட கலாசாரத்தின் தமிழின் இன்ப இலக்கியங்ளை வெளிக்கொணர்ந்து மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வாண்மையைக் கொண்டுசெல்லக்கூடிய தன்மையைக் காட்டி நிற்கிறது.

Wednesday, June 15, 2011

இது ஸ்டேடஸ் - 18

"எல்லாரையும் சுற்றி ஏதோ ஓர் அரசியல்
ஏதோ ஒரு வகையில் அரசியலைச் சுற்றி எல்லாரும்"

"எவ்வளவு இன்பங்களை அனுபவிக்க முடியுமோ அனுபவிக்கிறேன் கிராமத்தின் சிறப்பே இதுதான் .கண்ணகி அம்மன் கோயிலில் நாங்கள்"

"ஒவ்வொரு பாதிப்புக்களிலேதான் தாக்கங்களும் மனக்கஸ்டங்களும் வரும்.ஏன் சந்தோசமும் கூட. அது மாற்றமா தடுமாற்றமா என்பது புரியமறுக்கும்."

"மட்டக்களப்பு செட்டியூர் கண்ணகை அம்மன் சந்நிதிதன்னில் நமது அண்ணன்மார் மீண்டும் ஒரு இறுவட்டு வெளியிட்டனர் "அம்மன் காவியம்" என இன்று. இன்றைய கல்யாணக்கால் பூசையுடன் இனிய பொழுது அம்மன் நிகழ்வாய் எய்திய மகிழ்ச்சியும்..."

"என்னே வெயில்.. ஆஆஆஆ கண்ணைக்கட்டுதே.. வியர்வைகளால் உடல் நனையுதே.. ஆங்.. 35 டிக்கிறி செல்சியஸ்..."

"சொந்தத்தில் (சுயநலத்தில்) மற்றவர்களின் கண்களும் மனசும் குளிர்மை காணும் என்ற எண்ணம் மட்டுமே
குளிர்ந்தால் போதும் ஆறுதலடையும் மனம் ##புகைப்படங்களும் நானும்##"

"தாந்தாமலை முருகன் கோயிலுக்கு அம்மாவைக்கூட்டிக்கொண்டு சென்று மீண்டது மகிழ்ச்சி. எண்ணைக்காப்பு அம்மா வைத்தார்.."

"என்னை வாசிக்கும் வயலின்
நீ
உன் இசையின் முதல் ரசிகன்
நான்"

"உன் வாழ்க்கையின் நீள அகலங்களைத் தெரியாவிட்டாலும் ஆழ அன்புகளையும் ஆறிய காயங்களையும் அறிவேன்.. பட்டதால்தான் உன்னைால் மற்றவர்(வை)களையும் தடவிக்கொள்ள முடிகிறது.."

"உனக்குள் உருவாக உருவாக்க எண்ணாத அளவுக்கு இல்லாத அந்த உந்தன் பல்புலமை இருந்தென்ன லாபம்."

"தமிழில் 'வணக்கம்' என்றே வரும். காலை மாலை மதிவ வணக்கம் மற்றும் வணக்கங்கள் தமிழில் இந்த (தனியார்)வானொலிகளின் சேர்க்கைகளினால் வந்த வினை. ஆக தமிழில் சொல்லும் வணக்கம் நேரமோ காலமோ காட்டாது. இதனால் உலகில் எவரோடும் வணக்கம் என எந்நேரமும் சொல்லமுடியும். ஆனால் இந்த காலைவணக்கம் சொல்ல மற்றொருவருக்கு மாலைவணக்கம் சொல்லவேண்டி வரும். அதை விட தமிழுக்கே வணக்கம் சிறப்பாக அமைவதால் வணக்கமாக்குக.. .."

தமிழுக்கே ஆன சிறப்புக்களில் இதுவும் ஒன்று ஆக அந்த அந்த மொழிகளின் சிறப்புப் பதங்களை அவ்வாறே சொல்லல் அழகும் பெருமையும். ..."

"இருத்தல் என்பது மாறுதலுக்காக
மாறுதல் என்பது வளர்ச்சிக்காக
வளர்ச்சி என்பது நீ யாராக இருக்கிறாய் (படைப்புத்திறன்) என்பதற்காக
முடிவில்லாத வகையில் உன்னைப் படைத்துக்கொள்வது."
###டாக்டர். வால்டர் ஸ்டேபிளஸ்.. தமிழ்மொழிபெயர்ப்பு புத்தகம் வாசிப்பிலிருந்து...##

"எழுதப்படாத சொற்கள் போல எழுதப்படாத உணர்வுகளும் அதிகம்.
என்னுள்ளும் தேக்கத்தில் தான்"

"இருந்த போது இருந்த காதலைவிட இல்லாதபோதுதான் காதல் காதலிக்கப்படுகிறது.. இல்லையேல் அத்தனை காதல் வரலாறுகள் எழுதப்பட்டிருக்காது.."

"அத்தனை அரசியலுக்கும் உண்மையில் நடுவுநிலைமை சரிந்துவிடும் ...
அப்போதும் அரசியல், ரகசியமாக நடுவுநிலைமையை எடுத்துக்காட்டுவது அரசியல்"

"ஒவ்வொரு அங்குலமாக ஒரு சொட்டுக் குறைவில்லாமல் கிராமத்தை அனுபவிக்கிறேன்.
விட்டுப்பிரிந்தாலும் அதற்கும் சேர்த்து.."

இன்றைய படங்கள்
தாந்தாலை முருகன் கோயிலின் பிள்ளையார் கோயிலின் எண்ணைக்காப்பு படங்கள்..



Monday, June 13, 2011

செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயம் - சடங்கும் வழக்குரையும் 02

வைகாசி பொறந்தாலே( பிறந்ததும்) வெயில் நீங்கி இதம் குளிரும் குளிர்த்திப்பாடல்களால் நிலம் நனையும் என்று ஆதங்கப்பட்டு வாழும் ஈழத்திருநாட்டார்.

கிராமங்கள் தோறும் கண்ணகை அம்மன் கோயிலும் அதன் திருவிழாவாக பெயர் பெறும் சடங்குமுறைகளும் சிறப்புப்பெயர் கொண்டழைக்கின்றோம்.
தமிழ் இலக்கிய வரலாற்றின் மரபிலக்கியங்களாக இந்த சிற்றிலக்கியங்களின் நீட்சியாக அம்மன் பாடல்கள் மண்சார் வெளிப்படையாகவும் காணப்படுகின்றன. இங்கு குளித்திப்பாடல்கள், காவியப்பாடல்கள், தாலாட்டு, மான்மியம், ஊஞ்சல் என்று பலவகையான பொக்கிசங்களாக மரபுவழிச் சின்னங்களாக இருக்கின்றன.

"அன்று தொட்டுப் பாண்டியநாடு மழைவறங்கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக்கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியள் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவோடு சாந்திசெய்து, நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது"
- சிலப்பதிகார உரை

இந்த சிலப்பதிகாரத்திலேயே கண்ணகி காரணமாக வெம்மைநோய் வந்துநீங்குதல் பற்றி கூறப்பட்டுள்ளது. வைசூரி, குக்கல், வெப்பு, சின்னம்மை, வயிற்றுக்கடுப்பு, கண்ணோய, பெருஞ்சுரம், மங்கமாரி போன்ற சூட்டுநோய்கள் கண்ணகி அம்மனின் கோபத்தினால் பரவுவதான எண்ணப்பாடு ஐதிகம் இங்கு உள.

இதனால் காளியின் அம்சமான கண்ணகித் தாயிக்கு நேர்த்திக்கடன் செய்தலை வழக்கமாகக் கொண்டு வழிபாடு செய்தல் இன்றும் இருக்கும் மரபு.

இதற்காக மற்றும் குழந்தைப்பேறு, மாங்கல்ய வரன் என்றும் பல்வேறு வேண்டுதல் என்றும் அவைகளுக்கெல்லாம் நேர்த்தி வைத்து மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அலகிடுதல், கற்பூரச்சட்டி எடுத்தல் என்றும் சடங்கு காலத்தில் பொன்னாலும் வெள்ளியிளாலும் செய்யப்பெற்ற கண்ணுருவங்குளம் கண்மணிகளும் அம்மனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தல் அடயாளப்பொருட்கள் என்றழைப்பர்.

இரவுவேளையிலும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த ஆசான்

அடயாளப்பொருட்களை பெறுவதில் மக்கள்

திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் ஆலயங்களில் காணலாம்.

நமக்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயமே மிகப்பிரசித்திபெற்று விளங்குகிறது. எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆலயம் இருந்தாலும் இக்கண்ணகி அம்மன் ஆலயம் மிகச்சிறப்புப் பொருந்தியது காரணம் இவ்வாலயத்தில் கிரான்குளம், குருக்கள்மடம்,செட்டிபாளையம், மாங்காடு, தேத்தாத்தீவு, களுதாவளை ஆகிய ஊர்களைச்சேர்ந்தவர்களும் ஒன்றாகச் சேர்ந்து சடங்குகளை நடத்துதே.

இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது; மாவிடிக்கக்கூடாது2 புலால் உண்ணக்கூடாது; இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது.

கண்ணகை அம்மன் சடங்கு என்றாலே மனசுக்கு என்னமோ இதமான மகிழ்ச்சியான உணர்வு இப்பிரதேச ஊர்மக்களுக்கு வருவது இயல்பு. காரணம் கண்குளிரும் மனம் மகிழும் பல நிகழ்வுகள் நடந்தேறுவதே.

முதல்நாள் - கதவு திறத்தல்

முதல் நாள் கதவு திறத்தல் என்று அழைப்பர். அம்மன் கோயில் சடங்கு ஆரம்பம் என்பதைக்குறிக்கும் நாள். இந்நாள் எப்போ வரும் என்று ஏங்கிக் கேட்டு அம்மாவைக் குடைதலே இவ்விழாவின் சந்தோசத்தை அதிகரிக்கும். எங்கட செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயச்சடங்கின் கதவுதிறத்தல் கிரான்குளம் மக்களால் நிகழ்த்தப்படும்.

சடங்கு

சடங்கு என்ற சொல் அம்மனுக்கு நடக்கும் பூசையைக்குறிக்கும். இங்கே உடுக்கு வாத்தியங்களோடு அம்மன் காவியம் பாடுதல்,உடுகுச்சிந்து பாடுதல் அம்மானைக்காய், சிலம்பு என்பவற்றை கிலுக்குதல் (குலுக்குதல்), குரவைபோடுதல், அவ்வேளையில் ஆலத்தி எடுத்தல் என்பனவைகளும் அடங்குகின்றன.
நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும்

கல்யாணக்கால் சடங்கு

கல்யாணக்கால் சடங்கு தேற்றாத்தீவு மக்களுக்கு உரிய சடங்காக அமைகிறது செட்டிநகர் கணணகை அம்மன் ஆலயத்தில்.
கல்யாணக்காலினை பூவரசுகம்பம் ஒன்றினை ஆலயமண்டபத்தினுள் நட்டு ஆடை அலங்காரம் அணிகலன்காலால் ஒரு பெண்ணென கோலம் செய்து கண்ணகை அம்மனாகப் பாவித்து கோவலனார்க்கு திருமணம் செய்துவைத்தல் அதற்குரிய பாடல்களோடு வழிபட்டு சடங்கு செய்தல் இன்றும் வழக்கு.


குளுத்தி
தினமும் முறையான சடங்கு நடந்தேற இறுதிநாளில் நடைபெறும் நிகழ்வே "குளுத்தி" என்று அழைப்பர். குளித்தியிரவு சடக்கும் சடங்கிலே பொங்கலிடுதல் முதன்மையாகவும் பொங்கல் விழா முடிவுற சுண்ணமிடித்தல் இதமான நிகழ்வாக அமையும். பின்னர் குளுத்திப் பாடல் படிக்கத் தொடங்கி அம்மனின் கோபங்கள் தணியச்செய்து "வாழி" எனும் பாடல்கள் பாடப்படும். அம்மனை வரம்வேண்டிப் வாழ்த்தும் சேர்ந்து பாடும்பாடல்களாக அமையும்.
கடைசியில் "பாணக்கம்" வழங்கப்படும் இதனை குளுத்திப்பாணக்கம் என்றழைப்பர். இது ஓர் அமிர்தமாக சுவையேறியதாக இருக்கும்.
இவ்விழா செட்டியூர் கண்ணகை அம்மன் ஆலயத்தில் களுதாவளைவாழ் மக்களால் நிகழ்த்தப்படுகிறது.


வழக்குரை


மட்டக்களப்பிலே கண்ணகி கோயில்களில் கண்ணகி வரலாற்றுரைப்பதாக அவள் பெயராலோ, இளங்கோவடிகள் பெயராலோ, அவள் உரைத்த வழக்கின் பெயராலோ கொண்டமைந்த "வழக்குரை" என்றும் "வழக்குரைக் காவியம்" என்று அழைக்கபடும் காவியம் தினந்தோறும் பகலில் பாடுவது சிறப்பு.
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமாக இந்த வழக்குரைக் காவியமானது சிலம்பிலே காணும் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலைசேர்ந்து வளர்ந்துவரும் ஒன்றாய் பல வேறுபாடுகள் கொண்ட கதையாய் உடையதாய் காணப்படுகிறது.

இன்று காலையில் பாடும் போது..


வசந்தன் ஆடல்

"வசந்தன்", "வசந்தன் கூத்து" என்று அழைக்கப்படும் கூத்து மரபு இன்றும் வழக்கில் உள்ளது. அனேகமாக கண்ணகை அம்மனின் சடங்கிலே இவ்வாடல் நிகழ்த்தப்படுவது வழக்கம்.
செட்டியூர் கண்ணகை ஆலயத்தில் தேற்றாத்தீவு மக்களின் பூசை நாளில் தேற்றாத்தீவு பிள்கைகளால் ஆடப்படுவது இயல்பும் சிறப்பும்.



தண்ணீர்ப்பந்தல்


ஒவ்வொரு கிராமத்திலிருந்து நடைநடையாக வரும் அடியார்களுக்கு வெயிலில் தாகத்தைப்போக்கும் முகமாக வீட்டுக்கு முன் வேலியோரங்களில் தண்ணீர் குடங்கள் வைத்திருக்கும் தன்மை இம்மக்களின் தொன்றுதொட்டு வாழவைக்கும் தன்மையை எடுத்துக்காட்டி நிற்கும். இதைவிட சந்திகளிலும் கோயில்களிலும் தாகசாந்தி செய்யும் நிலையமாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டிருக்கும்.





மடிப்பிச்சை எடுத்தல்

மடிப்பிச்சை எடுத்தல் அம்மன் ஆலயம் என்றாலே பெண்களுக்கு நேர்த்திக்காகவும் அம்மனுக்கு வேண்டுதலுக்காகவும் வீடு வீடாய் சென்று ஒற்றைப்படை இலக்கத்தில் 5 அல்லது 7 அல்லது 9 வீடுகளுக்குச் சென்று "கண்ணகை அம்மன் பேரால மடிப்பிச்சை போடுங்கோ" என்று அம்மனுக்கு தமது சேலையின் முந்தனையில் எடுத்து வேப்பிலையின் துளிரிலைகளை தலையில் சூடி கையிலும் எடுத்துக்கொண்டு நெல்லைச் சுமந்து வெற்றுக்கால்களுடன் கோயிலுக்கு சென்று அவற்றை கொடுத்தல் இப்பொழுதுகளிலும் நடைபெறுகிறது.
இம்மடிப்பிச்சை எடுப்பதற்கு சிறுபிள்ளைகளும் ஆயத்தம்கொள்வது அவர்களுக்கு அளப்பரிய சந்தோசத்தை ஏற்படுத்தும்.
இன்று காலையே நமது மருமகளொருத்தி ஆரம்பிச்சுட்டாள் பாருங்க



தோரணம் கொண்டுவருதல்


கோயில் அலங்கார வேலைகளில் ஈடுபடும் இளைஞர்


கடைத்தெரு

மனதை உருக்கும் பறவைக் காவடிகள்


காலையில் காவடி எடுத்தல்



செட்டியூர் கண்ணகை அம்மன் காவியம் நேற்று (12-06-2011) எமது சண்.இன்பராஜனால் பாடப்பட சிவகுரு தணிகசீலனால் இசைக்கோர்வை செய்யப்பட்டு இந்து இளைஞர் மன்ற செயலாளர் த.விமலானந்தராஜாவினால் அம்மன் ஆலயத்தில் வெளியிடப்பட்ட இறுவட்டிலில் உருவான பாடலை கேளுங்கள்.




இன்று இரவு குளுத்தி நிகழ்வுடன் இனிய நாட்கள் விடைபெறும் அடுத்தவருடம் வரை தித்திக்கும் நினைவுகளுடன்.

இங்கு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் படங்களைக் பாருங்கள்


உசாத்துணை நூல் : மட்டக்களப்புத் தமிழகம் வித்துவான் வீ.சி.கந்தையா

சடங்கும் வழக்குரையும் 01

கண்ணகை அம்மன் என்றாலே மட்டக்களப்புக்கு மிகவும் சிறப்பும் பெருமையும் அமைவது மகிழ்ச்சி.
கண்ணகி என்று சிலம்பினுள் வரும் இங்கே கண்ணகை என்ற சிறந்த பொருளாக திரிபுற்றது காண். கண்- நகை என்ற இரு சொற்களின் சேர்க்கையான கண்ணின் ஒளி கண்ணுக்கு அணிகலன் ஆக பொருள்பொதிந்து வழிபாட்டுக்கும் சடங்கு என்ற பதங்களால் ஆன கிராமத்து மண்ணின் பெருமையும் சிறப்புமாய் அமைகின்றது. "சடங்கு" என்றுரைத்தல் அம்மன் கோயில்களில் நடக்கும் பூசையினைக் குறிக்கும் இதனால் கண்ணகையம்மன் சடங்கு என்று அழைக்கப்படும் இவ்விழா வருடந்தோறும் வைகாசி வளர்மதி நாட்களில் இடம்பெறும்.
கதவு திறத்தல், என்ற சொற்பதத்தால் ஆரம்ப விழா முதல்நாள் சடங்காக அமையும். நாள்தோறும் மதியம்(பகல்), இரவு பூசைகள் சடங்குப்பூசையாக கொள்ளப்படும். உடுக்கு வாத்தியங்கும் சிலம்பு ஓசையும் சேர்ந்து அம்மன் காவியம் உடுக்குச் சிந்து பாடுதல், கல்யாணக் கால் சடங்கு, என்பனவும் இங்கு சிறப்பானவை. சடங்கு நாட்களில் நேர்த்திக்கடனாக பல சிறப்பான பக்திபூராக அடியார்கள் வழிபடுவர் அம்மனை.
செட்டிபாளையம் அம்மன் கோயில் என்றாலே எங்கள் பிரதேசத்தில் ஊரில் வெகு சிறப்பாக ஒரு கொண்டாட்டம். இங்கு கண்ணகை அம்மன் காவியம் சிறப்பு இங்கு போய் காண்க இந்த பாடல்
இப்பாடல் எமது மண்ணின் சிறப்புப் பொருந்திய ச.இன்பராஜன் அவர்கள் பாட இசைச்சேர்க்கை ஒலிப்பதிவை தணிக சீலன் அவர்கள் உருவாக்கத்தில் அமைந்தது சிறப்பே..
















Wednesday, June 8, 2011

என் தெரு

யார் யாரெல்லாம்
என் தெருவில் இப்பொழுது

என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை

உன்னைச் சூழ்ந்துகொண்டதே
சுத்திகரிக்கபட வேண்டிய காற்று
நான் சுவாசிப்பதே
உயிர்க்காற்று

உன்தன் சாலைகளில்
சலவை செய்யவேண்டிய
மனிதர்கள் அதிகம்

இங்கே
சேறுகளில் கால்கழுவி
வேர்த்து உழைத்து
மனம் சிரித்து
முகம் விரிக்கும்
கைகள் ஆயிரம்

என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை

நீ வந்து போ
நான் உன்னையும் நேசிப்பேன்
ஆனாலும் உன்வருகை
இயல்பாக இருக்கவேணும்



Tuesday, June 7, 2011

எங்கேயும் காதல்

மெழுகிய வசீகரம்
தீயில் கருக்கம்
மண்மணம் எழுந்த
முதல் மழை

இசையில் வழிந்த
இதயநரம்புகள் வாசித்த
வயலின்

தடுமாற்றங்களில் தெரிந்த
மாற்றம்

காற்றுவெளில் கத்தித்திரிந்த
பறவை
வீட்டுவாசல்களில் முற்றத்து மல்லிகை
ரசிக்கும் விரல்கள்

இனம்புரிந்த ஆட்டம்
அத்தனையும் சொல்லும்
காதல் என்ற மகுடம்
சூடிக்கொண்ட லோலிட்டா என்று..

* எங்கேயும் காதல்..*

நான் காதலிக்கப்படுகிறேன்


ஒருமுறை தொலைந்த கணம்
நீ மட்டும் தான்

அன்புக்கும் பாசத்துக்கும் சேர்த்த
உறவு
வெல்லும் தோற்கும் எண்ணம்
முதல்முதலானது

கண்சொன்ன வார்த்தைகளில்
நீ
சுளித்துக்கொண்ட தருணங்களில்
தெரிந்தவைகள் எல்லாம்
இல்லாதபோது கொல்லும்
காட்சிகளாகுமென்பது சொல்லும்
மனசு அழுது கட்டியாகி
விழ எத்தனித்த அந்த
கண்ணீர்

உன்னைப் பிரிந்ததைப் பற்றிய வருத்தம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு
கொண்டு செல்லப்போகிறேன் என்ற
ஏக்கத்தாலே போகிறது

கண்ட போது
மீண்டும்
துளிர்த்துக்கொண்ட
நகல் சிரிப்பில்
சாயமா இரத்தமா
ஆழமா ஏக்கமா

நானும் நீயும் சேர்ந்திருந்தால்
இத்தனை நீளம் போகுமா




Monday, June 6, 2011

இது ஸ்டேடஸ் - 17

""சில நேரங்களில் சில முடிவுகள் நமக்கே அபத்தமாக தோன்றும். அவசரத்திலும் அடுத்தவர்களோடு சேர்ந்தும்..
நிதானமும் நம்பிக்கையும் சில வேளைகளில் தவிறிப்போகின்றன நம்மைப்போல சுற்றியுள்ளவர்களை ஒரே(?) வரிசையில் நோக்கும் போது....
வேறுபாடுகள் அன்பில் தெரிவதில்லை..""

"தோல்வியை காதலிக்க கற்றுகொள் ...இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு....."##நண்பனொருவனின் ஸ்டேடஸ்.. ##

"தமிழ்சங்க கலந்துரையாடல் விபுலாநந்தர் முத்தமிழ் விழாவை ஒட்டி.. திருப்தி.
அங்கே வித்துவான் ஞானரெத்தினம் ஐயாவும் வருகை தந்தது மகிழ்ச்சி.
தமிழ்மொழி வாழியவே..."


""நீ கேள்வியோடு குந்தியிருப்பதே விடைசொல்ல முடியாத , விடைகளைத் தேடாத வாழ்க்கை வாழ்கின்றாய் என்று தானே அர்த்தம்.""

"உன் கடலைக்கு நான் இலக்கானதைப் பற்றி கவலையைவிட
உனக்கு இஸ்டப்பட்ட வாழ்க்கை கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி"

"புலனாய்வு என்ற சொல்லே ஒரு சந்தேகமும் அதனால் அதுதொடர்பான சந்தேக ஆராய்ச்சியும் அதை நிரூபிக்கும் செயலே.."

"தடுமாற்றம் என்பது ஒரு உள்மன மாற்றத்தினாலேயே தானே.."

இப்பொழுதும் சொல்லுறேன் கேளுடி
" நீ என்னை விரும்பணும் என்பது அவசியமில்லை. இதுவரை நீ என்னோடு பழகிய அன்புகளுக்காக நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன் நீ போனால் என்ன இருந்தால் என்ன
நேசிப்பு ஒன்றுதான்." மாற்றம் எனக்கில்லை உனக்குள் தான்

"எத்தனையோ சப்தங்களின் பின்னர் தான் நிசப்தங்கள் வரும் என்பது உண்மை. அத்தனை சத்தங்கள் போட்ட உடல் களைப்படைந்து புத்துணர்ச்சி ஏற்படவேணும் அதுவரை நிசப்தங்களே சிறந்தது. ஆகவே சப்தங்கள் தேவை. பொதுவாக மெளனங்களிலே அனேகமானவை எழுதப்படும்"

"இந்த கணணித்திரை கற்பனைத் திரை தானே.. இதை ஆவணத்தில அடக்கலாமா... அப்போ புத்தகம் ஆவணம் என்பது.##டவுட்டு##
(கற்பனையிலே இவ்வளவா... )"

"எல்லோரும் திறவுங்கள் என்று சொன்னால் யார் பூட்டி இருக்காங்க.... ##டவுட்டு##"

"நேசி...
நேசிக்கப்படுவாய்...
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்ச்சி...."- பாடலும் அனுபவமும்.

"குறள் 140:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
முதுமொழி:
அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்..
##???##"

"அன்பு அளவிடலில் அலகு இல்லை
உணர்வுகளால் மட்டும் கலக்கும் உறவு அது.."

"ஊர் சுத்துகிறேன் பாடல்கேட்டுக்கொண்டு.நடை நடையாய் ஒரு பின்னேரப்பொழுது.. அழகிய கிராமச்சூழல்"

" இந்த இரவு மணித்தியாலங்கள் நிமிடங்களாக முடியாதா?
என் தயாயின் மடியிலும் தந்தையின் நெஞ்சத்திலும் முகம் புதைக்க"
##பேரூந்துப்பயணத்தின் போது##

"ஓ.. சூரியனே கொஞ்சம் பொறு நான் வந்து ஒளிர்கிறேன் நாளை. நான் ஆரம்பித்துவிட்டேன்..."

இன்றைய படங்கள்
நம்ம ஊரின் சில காட்சிகளும் மருமகள்மாருடன் கடற்கரையும்...







Saturday, June 4, 2011

"கா" கொண்ட செந்தமிழ் நாடு...

ஏய் பல்லேலக்கா பல்லேலக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏய் …பல்லேலக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா

இந்த சிவாஜிப் பாடல் கேட்கும் போதே இந்த "கா" பற்றி ஒரு அருமை இருக்கு என எண்ணலாம்.

"இலங்கைப் பேச்சுத்தமிழ் பிரதேச அடிப்படையிலேயே பல கிளை மொழிகளாக ஆராய்ப்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ் என்பன எவ் வகையான நோக்கினும் அக்கிளை மொழிகளுள் முக்கியமானவை. இந்திப்பேச்சுத் தமிழோடு ஒப்பிடும்போது இலங்கைப்பேச்சுத் தமிழ் செந்தமிழுக்கு மிகவும் அண்மையில் உள்ளது. இலங்கைப் பேச்சுத் தமிழில் எந்தக்கிளைமொழி செந்தமிழ் பண்புடையதென்ற வினா எழுகின்றது. யாழ்ப்பாணப்பேச்சுத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையதென்ற கருத்து 1918 ஆம் ஆண்டு ஹோர்னல் (Hornell) என்பவரால் வெளியிடப்பட்டுள்ளதாக கூய்ப்பர் (Kuiper) தெரிவித்துள்ளார். மட்டக்களப்புத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையதென்ற கருத்து 1966 ஆம் ஆண்டில் கமீல் சுவெலபில்லினால் (Kamil Zvrelebil) வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய பெருமையுடையது மட்டக்களப்புத் தமிழ்" என்று பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் பற்றிய குறிப்புக்களை முனைவர் மு.இளங்கோவன் குறிப்பிடுவதை இங்கே காண்க.


மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டுள்ள மொழிவழக்கு இன்றும் மட்டக்களப்புத் தமிழ்வழக்கில் காணலாம். பேச்சுவழக்கிலே தமிழ் எழுத்து வழக்கையும் இலக்கியச் செம்மையையும் காணலாம்.

"இலக்கிய வழக்குச்சொற்களில் இடம்பெறும் சில ஒலிகளுக்குப் பதிலாக பேச்சுவழக்கில் வேறு சில ஒலிகள் இடம்பெறுவது "இருவழக்கு" மொழிகளிற் சாதாரணமாகக் காணப்படும் ஒரு மொழியியற் பண்பாகும். தமிழ் இலக்கியவழக்குச் சொற்களிலும் படுவான்கரைத் தமிழ்ச் சொற்களிலும் இடம்பெறும்" என முனைவர் அ.சண்முகதாஸ் படுவான்கரைத் தமிழ் பற்றி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"புள்ளலெக்கா புள்ளலெக்கா - உன்ர
புருசனெங்க போனதுகா
கல்லூட்டுத் திண்ணையில
கதைபழகப் போனதுகா"

என்று மட்டக்களப்பு நாட்டுக்கவி வழக்கில் "கா" என்னும் அசைமொழி இரு பெண்களின் வினாவிலும் விடையுமாய் வந்திருக்கிறது. இங்கு "வீடு" என்ற சொல் மருவி "ஊடு" என கல்லூடு என்ற தொடரில் வருகிறது.

"யா, கா, பிற, பிறர்க்கு, அரோ, போ, மாது என வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி" - சொல் 279

என்னும் தொல்காப்பியர் சூத்திரத்தில் காட்டப்பட்டுள்ள ஏழு அசைச் சொற்களும் பண்டை செய்யுள் வழக்கில் இருக்கிறது.

நன்னூலில் கலித்தொகையுள் "காண்டி" என்னும் முன்னிலைவினை சேர்ந்து "கா" என்ற அசைநிலைச் சொல் இருந்தது எனவும் பின் மருவியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆயினும் மட்டக்களப்புத் தமிழகத்திலே செய்யும் வழக்கிலும் பேச்சுவழக்கிலும் "கா" காணலாம். "கா" என்ப உயர்ந்தோர் வழக்காக அமைக்கப்பட்டதை நன்னூலில் காணலாம்.
"காண்டிகா கால்கள் கழலுமே" என்பது மட்டக்களப்பு புலவர்மணி அவர்களின் 'பகவத் கீதை வெண்பாவின் ஓரடி ( மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வீ.சி. கந்தையா)

தமிழில் தொல்காப்பியர் காலத்து அசைநிலை இடைச்சொற் பிரயோகம் இன்றும் வழக்த்திலுள்ளது இம்மொழிவளம் இன்னும் சங்கத்தின் தொடர்பாய் அமைவது சிறப்புப்பொருந்திய தமிழின் சிறப்பு.

"மட்டக்களப்பிலே ஆடவர் தோளிலும் கா
அரிவையர் நாவிலுங் கா" என்ற ஒரு தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார் (பக்.19, மட்டக்களப்புத் தமிழகம்)
"மறுகா" - மறுகால், பிறகு என்று பொருள்படும்.

இன்னும் இப்பொழுதும் தாயை விளிக்கும் " கோ" "கா" என்று காணலாம்.
'அம்மா! கோ!! வாவங்கா...வாகா! " என்பது அம்மா வா அம்மா என்பதைக்குறிக்கும்.

அரிசிக்காரி குத்தரிசி மூடையைச் சுமந்த வண்ணம் " அரிசிரிக்கே அரிசி" என்று சொல்ல வாங்கும் பெண்ணொருத்தி "பச்சரிசாகா.. செவப்பரிசாகா.. " என்பர்.

இங்கே அரிசி விற்கும் பெண் - அரிசிக்காரி எனவும்
பச்சரி - வெயிலில் காய வைத்து அவிக்காதல் குற்றப்படும் அரிசி ஆகவும்
செவப்பரிசி - செந்நிற அரிசி தவிட்டு அரிசி ஆகவும் கொள்ளப்படும்.

மேற்குறிப்பிட்ட பாடலில் வரும் "புள்ளலெக்கா" என்பதில் "பிள்ளை" என்பது புள்ள என்று வந்திருக்கிறது. அனேகமாக ஆண்பிள்ளைகளை 'பிள்ளை்' என்றழைப்பர் ஆயினும் மட்டக்களப்பிலே பெண்களையே பிள்ளை என்றழைப்பது பெருமை.

இதனாலேயே மட்டக்களப்பில் தாய்வழிப் பரம்பரையில் தாய் பிள்ளையுடன் சேர்ந்து வாழுதல் வழக்கு. இதனால் தாய்வழிக் குடியே பிள்ளையின் குடியாக குடிப்பரம்பரை வளர்கிறது. பெண்மைக்கு பெருமை சேர்த்து கல்யாணத்தின் பின்னர் தாயுடன் மகள் அதாவது பிள்ளை மருமகனும் சேர்ந்து வாழும் குடும்பமுறை இன்றும் மட்டக்களப்பிலே இருக்கிறது.

இன்றும் பண்பாடு கலாசார விழுமியங்களை வெளிக்காட்டும் தமிழ் கொண்ட வளம்மிகு நாடு.



பாடல் இங்கே...வாழ்த்துகிறோம் சகோதரர்களே.



Thursday, June 2, 2011

படுவான்கரையும் எழவேண்டிய விடயங்களும் - 01

"நெஞ்சாலி விளைவேலி ஆயிரமூர் புரக்கும்
திருவோங்கி நிறைவுடைய செல்வமெல்லாஞ் சுரக்கும்
அஞ்சாயல் மடவார்க்கட் கறநெறிஆர்மனமு முருக்கும்
துஞ்சாம லிரவுபகல் மள்ளர்குரல் களிக்கும்
சுவாமிவிபு லாநந்தர்யா ழிசைநின் றொலிக்கும்
மஞ்சாரும் பொழில் மட்டு மாநாட்டி னினிய
மண்வளம்போல் வாழ்வாரின் மனவளமு மினிதே"


என்று புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பின் பெருஞ்சிறப்பைப் பற்றி எழுதிய பாடல்.

விக்கிபீடியாவில் மட்டக்களப்பு இங்குகாண்க

மட்டக்களப்பின் இயற்கை வனப்பையும் இருப்பையும் பற்றி யாழ்நூற் புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்
"மட்டகளப்பிலே முப்பது மைல் நீள் வாவி ஒன்றுள்ளது. இது கடலோடு கலக்கும் வடகோடி அமிர்தகழி என்னும் புண்ணியப் பழம்பெருபதிக்கு அணிமையானது.
அழகிய தெற்குக் கோடிக்கு அணிமையாக மேற்குக்கரையிலே மண்டூர் என்னும் புண்ணிய பழம்பதியுமுளது. வாவியின் மேற்குக்கரை முழுவதும் மருதத்தண்பணைகளாகும். கிழக்குக் கரையிலுள்ள ஊர்கள் தெங்கு, மா, பலா முதலிய மரங்கள் செறிந்து கண்ணுக்கும் மனதுக்கும் உவகை தருவன. புலியன் என்னும் வேடர்குலத் தலைவன் அரசுபுரிந்த இடமாதலினால் முன்னாளில் 'புலியன்தீவு' என வழங்கப்பெற்றதும் இந்நாளில் 'புளியந்தீவு' என வழங்கப்படுவதும் மூன்று மைல் சுற்றளவுடையதுமான அழகிய நகரம் ஒன்று காவிரி நடுவணமைந்த திருவரங்கம் போல மட்டக்களப்பு வாவியின் நடுவணமைந்துள்ளது. இந்நகர் மட்டகளப்புப்பிரிவுக்குத் தலைநகராகும்" (மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வீ.சி. கந்தையா)

மட்டுநகரத்திலிருந்து "எழுவான்கரை" அதாவது வாவியின் கிழக்குக்கரை சூரியன் எழும்திசையிலுள்ள கரை, அதன் வழியே தென்முகமாக நெடிய வீதி கிராமங்களினூடு செல்கிறது.
"படுவான்கரை" என்பது பொழுதுபடும் மேற்குத்திசைக்கரை. இதன்வழியே பயணஞ்செய்தாலே கண்ணுக்கும் மனதுக்கும் இனிய புதிய உயிர்க் காட்சி. பழந்தமிழ்ப் பண்புடன் இன்றும் வாழும் உழவர் அங்கே உளர். உழவர்தம் உயிர்போன்றே செல்வமான மந்தைகள் மேயும் முல்லை நிலத்தைச் சார்ந்துள்ள வயல்களும் தனியழகுடன் தனித்துவமாய் தோற்றமளிக்கும். முதிரை, கருங்காலி முதலிய மரங்கள் நிறை சோலைக்காடுகளும் சிள்வண்டின் ஓசையும் காடுகளிலிருந்தும் மலைச்சாரல்களிலிருந்தும் எடுக்கப்படும் நறுந்தேனும் " பாலொடு தேனாறு பாயந்தோடு நன்னாடு" என்று மட்டக்களப்புக்கு புகழையும் தரும் நிலமாகும்.(மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வீ.சி. கந்தையா)

மட்டக்களப்பின் நிருவாகக் கட்டமைப்புபடத்தைஇங்குகாண்க
இதில் படுவான்கரை கீழே பார்க்க
மட்டக்கப்பு வாவியே எழுவான் கரையையும் படுவான் கரைரையும் பிரித்துகோடிட்டுக் காட்டுகிறது. படுவான்கரையில் நிருவாகப்பிரிவிலே போரதீவுப்பற்று, மண்முனை தென்மேற்குப்பற்று, மண்முனை மேற்குப்பற்று ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன. எழுவான் கரைக்கும் படுவான் கரைக்கும் இடையிலான போக்குவரத்து மண்முனை, குருக்கள் மடம் ஆகிய துறைகளினூடாக வாவியைக்கடந்து செல்லமுடிகிறது. ஆயினும் பட்டிருப்பு பாலம் மற்றும் வவுணதீவுப் பாலம் என்பன மட்டுமே தரைவழிப்பாதையில் உள்ளன.
தொன்று தொட்டு வாழும் இந்நிலமக்களின் போக்குவரத்துக்கு இன்னமும் சரியான பாதைகள் மற்றும் பாலங்கள் புனரமைக்கப்படாமல் அவர்களின் இயல்புவாழ்க்கைக்கும் தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் எப்பொழுதும் எழுவான்கரையை நாடவேண்டியவர்களாக உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் மட்டக்களப்புக் குறிப்பு;
"மட்டக்களப்பு வீரம் படைத்த தமிழ்நிலம். அதற்கு கவித்திறன் உண்டு. கலைவளம் உண்டு. பொருள் வளம் உண்டு. ஈழம் முழுவதற்கும் தேவையான நெல்லை அளிக்கக்கூடிய வளமுண்டு. மரபுவழி வந்த கலைகள் நிறைய உண்டு. யாரோடும் தலை நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் உண்டு."
இந்தக்குறிப்பிற்கே முழுப்பொருத்தப்பாடு உண்மையில் படுவான்கரைக்கே உள்ளதெனலாம். இன்றும் வழக்கிலுள்ள அத்தனை செல்லவச் செழிப்புமிக்க வளம்பெறு நிலமாக இருக்கும் இந்நித்திலம் வீரம் விளைநிலமாக கொள்ளப்பட்ட இந்நிலம் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாகவும் இன்னமும் நிமிர்ந்து வளரமுடியாத தன்மையில் இருப்பது வேதனையான விடயம்.
ஆயினும் இங்கிருந்து பல்வேறு துறைகளில் துறைபோந்த திறன்வாய்ந்தவர்களும் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு எழுவான் கரை மற்றும் நகர்ப்புறங்கள் ஏன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற ஒரு அசாதாரண சூழ்நிலையினால் இப்பொழுது வறுமை என்பதையும் முன்னேற தவிக்கும் மக்களையும் காணக்கூடியதாக இருப்பதற்கு என்னைப்பொறுத்த வரையில் போர்ச்சூழலும் திட்டமிட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ப்படாமையுமே காரணமாகும்.

இம்மக்களில் படித்தவர்களைத் தேடிப்பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறது. ஆக இப்பிரதேசத்துக்கு பெருமளவில் கல்வியறிவையும் எதிர்கால நம் சந்தததிகளுக்கு உரிய பொறுப்புக்களையும் வழங்கவேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால் இப்பிரதேசத்துக்கு முதலில் போக்குவரத்து ஒழுங்குகளை செவ்வனே நிறைவேற்றுதல், ஏற்கனவே திட்டமிட்ட அம்பிளாந்துறை- குருக்கள்மட, மற்றும் மண்முனை பாலங்களை அமைத்தல் என்பன இப்பிரதேசத்தில் கல்விபயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் மக்களின் அவசர தேவைகளுக்கும் வியாபாரவிருத்திக்கும் உரிய கடமையாகும்.

மற்றும் இன்னமும் இப்பிரதேச மக்களின் கல்வியில் முழு அக்கறை செலுத்தாமல் அவர்களின் கல்வியில் காட்டும் அசமந்தப்போக்குகளையும் எதிர்மறைச்சிந்தனைகளையும் களைந்து இப்பிரதேச பிள்ளைகளின் வளர்ச்சிக்கு வெளிச்சம் காட்ட அனைவரும் முன்வரவேண்டும்.
இப்பிரதேசத்தில் கலைத்துறையிலும் வணிகத்துறையிலும் ஆங்காங்கே பட்டதாரிகளின் அதிகரிப்பு இருந்தாலும் விஞ்ஞான கணித துறையில் பாரிய வெற்றிடம் காணப்படுகிறது.

மற்றும் இப்பிரதேச மக்கள் அதிகமானோர் விவசாயிகளாகவும் கூலி விவசாயிகளாகவும் காணப்படுகின்றனர். இதற்கடுத்ததாக மீன்பிடித்தொழிலாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரே காணப்படுகின்றனர். இதனால் அரச தொழிலில் ஈடுபடுவோர் மிக்குறைந்த சதவீதத்தினரே இதற்கு பிரதான காரணமே இப்பிரதேச கல்வியறிவில் கல்விகற்றலில் குறைவும் தாழ்வும் ஏற்பட்டதே. ஆதலால் இனிவரும் சமுதாயத்தில் இக்கல்வியறிவியலில் உயர்ச்சியைக் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது.


வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு