Pages

Thursday, December 31, 2009

போ 2009 வா 2010

போ 2009 ஏ..!
போர் முடிந்த பூமியானாய்
நன்றி
அங்கு உலை வைக்கப்பட்டது
உயிர்கள்

இந்த மயான பூமியில்
இனி யார் அங்கு
மனிதப்பயிர்கள் வளர்ப்பது???

ஆராய்ச்சியாளர்களே.....!
உயிர்ச்சுவடுகள் ஏதும்
அகப்படுகிறதா???

அழுகுரல்கள் ஏதும்
கேட்கிறதா??
ஊன் வடிந்து
உயிராவது ஒழுகுகிறதா??
பாருங்கள்
எங்காவது மானுடம்
தெரிகிறதா என்று???

தமிழ் கொன்ற
2009 போகட்டும்
தமிழ் கொண்டு
2010 ஆளட்டும்

வாருங்கள் இனி
ஊர் கூடித் தமிழ்
தேர் இழுப்போம்
2010 இல்

இனியாவது
மூன்றெழுத்துக்களைக்
காப்பாற்றுவோம்
உயிர்,
தமிழ்...

வா 2010 தே...

வரும் வருடம்
நலம் தரும்
வருடமாகட்டும்

வாசிக்கப்படாமல் போன
பலபக்கங்கள் கொண்டு
வாழ்கைப் புத்தகம்
எழுதுவோம்
புது வருடத்தில்
வாருங்கள் தோழர்களே...

மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்
அங்கு
அனுபவக்காற்றைச்
சுவைத்து
வாழ்க்கை வரம்புகளில்
வழுக்காமல்
நடப்போம்

வா
புதுவருடமே...சுவாசிக்க
நல்ல காற்று தா
கடலோரம் காதல்
கவிதை வாங்க
தமிழலை கொண்டுவா


கிராமங்கள் தோறும்
மழலைகள்
மடியினில்
மடிக்கணணிகள்
கொண்டுவா..
இணையத்தில் கிராமத்து
தமிழ்ப்பூக்கள்
நிதம்பூக்க வேண்டுமல்லவா....

நிஜங்களைக் காணும்
கனவுகள் கொண்டுவா
நிம்மதியாய்
உறக்கம் கொள்ள
கவலைகள் மறந்த
நிலவு கொண்டுவா

கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல
வா
புது வருடமே...
உன்னை விட
எனக்குத் தெம்பு
இருக்கிறது
இருந்தாலும்
உன் வரவு நல்வரவாகட்டும்

மனதுக்கு வெள்ளையடித்து
உன்னை வரவேற்போம்

கண்களில் விளக்கேற்றி
உன்னை
வெளிச்சப்படுத்துவோம்விடைபெறா கேள்விகளுக்கு
விடைகாண்போம்
வா புதுவருடமே...

என்னினிய புதுவருட
வாழ்த்துக்கள்..

Wednesday, December 30, 2009

இது அறநெறி பரிசளிப்பு விழா..

இந்து சமயப் பண்பாடுகளை தடம் மாறாமல் இருக்க நல்ல கருத்துக்கள், சமய வழிகாட்டல்கள் மூலம் பிள்ளைகளின் ஒழுக்க விழுமியங்களுக்காக நம்ம ஊரில் அறநெறி வகுப்புக்கள் நடைபெறுவது வழக்கம். சமய சொற்பொழிவுகள், தேவாரப்பண்ணிசை, கோலம் போடுதல், இந்து சமய விழுமியங்கள் போன்றவற்றில் திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த 27-12-2009 ஞாயிற்றுக்கிழமை எமது தேற்றாத்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸ்ரீமத் தந்திரதேவா தபோவன ஆலோசகர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வு இதுதான்:
ஆரம்பம் சுனாமிப் பேரலையில் அகப்பட்டு மாய்ந்த அனைத்து உயிர்களின் ஆத்மா சாந்திக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலிதலைமையுரை அறிநெறிப்பாடசாலை அதிபர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள்

 


பிரதம விருந்தினர் ஸ்ரீ ரவிஜீ ஐயா அவர்களின் ஆசியுரைபரிசளிப்பு நிகழ்வும் பிள்ளைகளும்


 
 
 
 

 
 
 
 
 
 

 

வாழ்த்துக்கள் பிள்ளைகளே...
இவ் அறநெறி வகுப்புக்களை மிகச் சிரமத்திலும் ஒழுங்காக நாடாத்தி வரும் அதிபர் அவர்களுக்கும் அனைத்து ஆசிரிய உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டி நிற்கிறோம்

Tuesday, December 29, 2009

சீரழியும் வாழ்க்கை தேவைதானா???

மனசில் ஒன்று நிக்குது குத்துது... என் நெஞ்சில பட்டதை சொல்லுகிறேன். ஏன் இப்படி?? மாறுவானா அவன்?? மாற்றுவானா இவன்?? முழுமையாக வாசித்த பின் சொல்லுங்க...இது கதையல்ல நிஜம்.
.........................


ஒரு மாய உலகத்தின் நவநாகரிக வளர்ச்சியின் பால் கெட்டுப்போகும் பரிதாப மாணவர்களின் வரிசை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இப்போது நம்ம ஊரைப்போன்ற பல கிராமங்களில் போதை பொருள் விசேஷமாக கஞ்சா மற்றும் மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் தவித்துக் கொண்ருக்கின்றனர். பாவம் அவர்கள்.. ஊரில் மிக இலகுவாக உழைக்க வேண்டுமெனில் சாராயம்(மது) விற்கலாம். விரைவில் பணப்பை நிரம்பும். ஆனால் அதை விற்றவர்கள் நிம்மதியாக நல்ல நிலையில் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை. (இப்போது இதனைக்கட்டுப்படுத்த பல முயற்சிகள் சிவில் நிர்வாக ரீதியல் மேற்கொண்டு வருகிறார்கள்.எல்லாம் கண்துடைப்பமாவே உள்ளது)

இது பல பிரச்சனைகளை ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படுத்துகிறது. உருப்பட வேண்டுமென்று பிள்ளைக்கு ஏதும் ஏசினால் (திட்டினால்) போதும் இண்டைக்கு பிள்ளையால சிவராத்திரிதான்.. குடிச்சிக்கிட்டு குதறிவிடுவான் பெற்றோரை.. பால்யப்பருவம் படர்ந்தவன் தானே ஏதாச்சும் சொன்னா தாறுமாறா பண்ணிடுவானே என்று பயந்து வாழவேண்டிய நிலைமை இவன் பெற்றோருக்கு...ம்ம..


எங்க ஊருல ஒரு கஸ்டப்பட்டு வளர்ந்தவன் நல்லா படிச்சவன் படிச்சிக்கொண்டிருப்பவன். அவன் அப்பா ஒரு விவசாயி. மட்டக்களப்பில் இவனை கணித விஞ்ஞான பிரிவில் படிக்க விட்டு வெற்றியும் கண்டவர்.(அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன்...)
இவன் கால கஸ்டமா இல்லை, விட்டில் பூச்சி விளக்கில் விழுந்ததா தெரியவில்லை. நான் அறிந்தவரையில் இவன் நல்லவன் ஆனால் இவன் ஏன் இப்படி மாட்டினான் என்று தெரியவில்லை.
ஒருவன் கூடுகிற கூட்டத்தைப் பார்க்கையில் "இவன் உருப்பட்டமாதிரி தான்" என்று சொல்லுவர். அதேபோல் இவனும் சேர்ந்த கூட்டம் அப்படித்தான். அந்த கஞ்கா,பீடி, சாராயம், பியர் என்று... அதுக்கு அவர்கள் குழுக்குறி கூட ம்ம் நாய் கெட்ட கேட்டுக்கு இப்படியெல்லாம் அழியுதுங்க. இவனிடம் பல தடவைகள் சொல்லியிருக்கேன் அவன் கேட்டபொழுது தலையாட்டுவான். ஆனால், நிறைய பொய் சொல்லுவான் குடிப்பதற்காக புகைப்பதற்காக இப்படியெல்லாம் செய்யவில்லை என்று சத்தியம் பண்ணுவான் ஆனால் எல்லாம் தலைகீழா செய்யுவான். இவன் கெட்டுப்போவதைப் பற்றி அவன் பெற்றோருக்கும் தெரியும் ஆனால் கதைக்க முடியாத நிலைமை, ஏனெனில் இவன் எதிர்காலத்தில குடும்பத்துக்கு உதவவேணும் இல்லா விட்டா இப்பவே எங்கேயும் பொண்ணக் கூட்டிக்கிட்டு ஓடிருவான் என்ற பயம்.
இனி இவன் திருந்த இடம் வேண்டும் ஏனெனில் இவனின் இதயம் மெல்லியது. நுரையீரல் கருகப்பாக்கும். நாங்களும் குடித்தோம் கும்மாளமடித்திருக்கிறோம் பல்கலைக்கழத்தின் காற்றோடு மட்டும் இருந்தோம். ஊரில் பயப்பட்டு வளர்ந்தோம் வளர்கிறோம்.
ஆகால் இந்தப் பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு 18,20 வயதுகளிலே அடிமையாகிறதென்பது நமது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாவதோடு இவர்கள் பெற்றோருக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பது கவலைக்கிடமாக இருக்கிறது. தான் பாழ்பட்டு ஊர் பாழ்பட்டு நாடு பாழ்படுகிறது.
எனவே இப்பிள்ளைகளின் இந்தப்போக்கிலே மாற்றம் கொண்டுவர அனைவரும் நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும். இதற்கு அடிமையாக முக்கிய காரணம், இம்மாணவர்களுக்கு குடும்பப் பொறுப்புணர்ச்சி வளர்க்கப்படாமையும் அவர்களின் நேரம் அதிகமாக வீணாக கழிவதாலும் நேரம் கடத்துவதற்கு சரியான திட்த்தை இவர்களிடம் வளர்க்க முடியாமல் போவதாலும் இவர்களுக்கு உரிய விழிப்புணர்வு வழங்கப்படாமையுமே.
இவன் போன்ற படித்த உயர் தொழிக்குப் போக வேண்டியவர்களைக் கண்டு இப்போது வளரும் இளம் பிள்ளைகளும் இக்கெட்ட பழக்கங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
மிகவும் கவலையான மன வேதனைக்குரிய விடயம் இது என்னைப் போன்ற பல பேர் பார்த்த அல்லது பார்த்துக்கொண்டிருக்கின்ற சம்பவங்கள் தான் என்ன செய்வது எனறு தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் விடயமும் தான் ஏனென்றால் இவர்களைத் திருத்துவதற்காக சொன்னால் இவர்கள் இவ்வாறு கேட்கக்கூடும் "எல்லோரும் தம்மை விட்டுவிட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயல்கிறார்கள்" என்ற தாகூரின் வாக்கியத்தை...
இருந்தாலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவது பிள்ளைகளாகிய நீங்களே.....

Sunday, December 27, 2009

யாருக்கோ , ஏதோ எழுதுகிறேன்ஏதேதோ எழுதுகிறேன்
ஏதாவது அகப்படுமா
என்று

உனக்குத் தான்
என்று
உனக்கு மட்டும் தான்
புரியும் என்பது
உனக்கும் எனக்கும்
தான் தெரியும்தமிழ்கொன்று
தமிழ் வளர்ப்பதாய்
நம்பச் சொல்கிறார்கள்
மீண்டும் போர்க்களத்தில்
மனிதம் குடிக்கும்
கதிரைக்காக
அவர்கள்
வளர வேண்டும் என்று
நினைத்தேன்
தலை
நரைத்த பின்
வளர்ந்திட்டேன் என்று
நினைத்தேன்
இன்னும்
வாழ்க்கைத் தேங்காயில்
வழுக்கையாய்
நான்

Saturday, December 26, 2009

சுனாமியின் சுவடு நண்பனுக்காக நான்


2004-12-26 அன்று ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். நாங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அடுத்த நாள் எமது அரையாண்டு இறுதிப்பரீட்சைக்காக காத்திருந்த தருணம். அவசர அவசரமாக காலைச்சாப்பாட்டுக்கு அக்கா கடை(கூழ் பார்)க்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்.
அப்போது நமது நண்பர்கள் ஓடோடி தொலைபேசி அழைப்பெடுக்க வந்துகொண்டிருந்தார்கள். "என்னடா புதினம் ஓடிவாரேல் எண்டு கேட்டன்" அதிர்ச்சியாயும் ஆனால் நம்ப முடியாமலும் இருந்த அந்தச்செய்தி காதை அடைத்தது. "கடல்பெருகுது மச்சான் கரையோரத்தை அழிக்குதாம்டா" என்றான் ஒருவன்.
கண்களில் கண்ணீர் கனக்க நானும் தொலைபேசி அழைப்பெடுக்க முண்டியடித்த நேரம் அது... இலக்கத்தை சுழற்றினேன்.. " ராங் ராங்..." அழைப்பை யாரும் எடுக்கவில்லை நெஞ்சு உடைஞ்சது. வீட்டில் யாராவது இருக்கிறார்களா....? யாருமே இனி எனக்கில்லையா...??? அழிந்துபோய்விடார்களா..??? எங்காவதும் தப்பி ஓடிவிட்டார்களா.....? நெஞ்சுக்குள் படபடப்பு... சற்று நேரம் அமைதியில் அழுகை இல்லை ஆனாலும் கண்ணீர்த்துளிகள் தொப்பென என் மேல்சட்டையில் விழுந்தபோதுதான் உணர்ந்தேன் மனது அழுகிறது.. நான் நானாக இல்லை என..

அப்போது என் நண்பர்களும் ஓடி வந்தார்கள்.... மனதுக்கு தெம்புகொடுத்து மீண்டும் என் வீட்டு இலக்கங்களை சுழற்றிய போதுதான் மூச்சு வந்தது. எனது அக்கா.."தம்பி .. " என் கண்கள் கண்ணீரைச் சொரிந்து ....' அக்கா.. அம்மா அப்பா..சின்ன அக்கா...அன்ரி மாமா..' என்று குடும்பத்தவர்களை தடுமாறி ஒருமாதிரியாக சொல்லி முடிக்க .. "பயப்படாத எல்லாரும் பாதுக்காப்பாக இருக்கிறார்கள்.. நாங்களும் பக்கத்தவர்களும் வீட்டுக்கு மேலுள்ள கொங்கிறீட்டு தட்டில் இருக்கிறோம் என்ற போது நிம்மதி வந்தது.

தொலைபேசியைத் துண்டித்து நான் வர.. என் நண்பன் அவன் வீடு கடலுக்கு மிகக் கிட்ட இருந்தது.. அவன் தம்பட்டை எனும், கடலுக்கு மிக அண்மைய கிராமத்தைச் சேர்ந்தவன்.

இதற்கு இரண்டு வாரங்கள் முன் என நினைக்கிறேன் பல்கலைக்கழக நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி(இப்போ இல்லப்பா)போட்ட போது இவனுடன் வாதங்களில் ஏற்பட்டபோது சொன்ன விடயம் உன்ர வீடும் ஊரும் அந்த அத்திப்பெட்டி போல அழியும்டா பாரு.. என்று கேலி செய்தோம்.. ஆனா அது அவ்வளவு விரைவா நடக்குமென்று நினைக்கவேயில்லை..
நல்லாதெரிந்தது அவன் கண்கள் குளமாக என்மனது நெகிழ்ந்தது. மீண்டும் என்மனம் நிலையாக இல்லை ஏனெனில் இவன் என் ரூமெட் (விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தோம்).. அவனுக்கு ஏதும் என்றால் நாம தானே உதவவேண்டும். ம்ம்ம்.. அடுத்த கவலை அவன் வீட்டாரைப்பற்றி நெஞ்சுக்குள் ...மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுத்தேன்அவன் வீட்டு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.. இதயத்தின் துடிப்பு உயர்வானது. கடவுள் மீது நம்பிக்கை அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று. அதுமட்டுமே நாசிக்குள் இருந்தது எனக்குள்ளும் என் நண்பனுக்குள்ளும். அவன் மனம் வீழ்ந்தது முகம் துடித்தது இப்போதும் என் கண்ணுக்குள்.
மீண்டும் தொலைபேசி இலக்கங்களைச் சுழற்றினேன் எனது மற்றுமொரு நண்பன் ஒருவனுக்கு (இவன் அக்கரைப்பற்று, கோளாவிலைச் சேர்ந்தவன்). லைன் கிடைச்சுட்டு சற்று நிம்மதி அப்போது நண்பகல் கடந்து விட்டது. உடனே விடயத்தை சொன்னேன். அவனை தம்பட்டைக்கிராமத்துக்கு சென்று பார்த்து வரும்படி சொல்ல அவனும் சைக்கிளில் பயந்து பாய்ந்து ஓடி சென்றான்.. வீடு உடைந்து தெரிந்தது... ஆனால் ஆளரவம் வீட்டில் இல்லை.. சுற்றுப்பார்க்கையில் பக்கத்துவீட்டுப்பக்கத்தில யாரோ ஒருவர்..அவரிடம் அவன் தளுதழுத்த குரலில்" இந்த வீட்டுக்காரர்கள் தப்பிவிட்டார்களா???" அவர் " ஓம் தம்பி அவர்கள் அனேகமாக தம்பிலுவில் உறவினர்களிடம் தங்கியிருக்க வேண்டும்" என்றார்.. நிம்மதிப் பெருமூச்சொடு அவன் இதை அப்படியே என்னிடம் ஒப்புவிக்க. நான் பாதிப்புற்ற நண்பனிடம் சொல்ல இதய துடிப்புவேகம் சற்று குறைந்தது ஆனாலும் நம்பிக்கை மட்டுமே.. ஏனெனில் என் நண்பன் அவனைச் சமாதானப்படுத்தவே சொல்கிறேன் என்று நினைத்தான்.
இதற்கிடையில் நானும் நண்பனும் (பாதிக்கப்பட்ட) பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு சிறிய வாகனமொன்றில் அவன் அண்ணாவிடம் போவதற்கு வந்தோம். அண்ணாவுக்கும் மனசுல தெம்பில்லை ஆறுதல் சொல்ல முடியவில்லை. இருந்தபோதும் கோளாவில் நண்பன் சொன்ன வார்த்தைகளை மட்டும் நெனச்சுக்கிட்டு இருக்க.


மீண்டும் என் கோளாவில் நண்பன் " டேய் அவன் அப்பா அம்மா எல்லோரும் ஆலையடிவேம்பு முருகன் கோவிலில் இருப்பதாக சொல்ல" அவன் விசாரித்து அதை முருகன் கோவில் ஐயர் வீடு என்று உறுதிப்படுத்தினான். அதை என் நண்பனிடமும் அவன் அண்ணாவிடமும் சொல்லி அன்று பின்னேரம் ஒரு சிவப்பு நிற சைக்கிளில் 24 KM தூரம் ஓடி எனது வீட்டுக்கு சென்றேன். எனது வீட்டுக்காரர்களைச் சந்தித்ததும் சற்று மகிழ்ச்சியடைந்தாலும், எங்கட வீட்டு வருமான தோட்டம் எல்லாம் முற்றாக அழி்க்கப்பட்டுவிட்டது என்று சொல்லக்கேட்க இடி விழுந்தது.

அடுத்தநாள் அதே சைக்கிளில் என் நண்பனின் அம்மா,அப்பா இருந்த ஊர் நோக்கி என் பணயம் ஆரம்பித்தது. ஆனால் கல்முனை வரையும் தான் அந்த சைக்களில் போக முடிந்தது. பின்னர் சைக்கிளை வேறொரு நண்பனிடம் வைத்துவிட்டு அவர் இவர்களில் மோட்டார் சைக்கிளில் தொங்கிக்கொண்டு செனறேன். அங்கு கோளாவில் நண்பனுடன் சேர்ந்து அந்த முருகன் கோவிலைச்சென்றடைந்தேன்.


நிம்மதி அவர்களைக்கண்டு நடந்ததை எல்லாம் விபரிக்கமுடியவில்லை அன்று இருந்தாலும் அவர்கள் பட்ட கஸ்டத்தை மட்டுமே கேட்டுக்கொள்ள முடிந்தது. அதை அப்படியே மட்டக்களப்பிலுள்ள எனது நண்பனிடம் சொல்லி சந்தோசப்பட்டேன்.அன்றிரவு அங்கே தங்கிவிட்டு அடுத்தநாள் எனது விட்டுக்கு வந்தேன். பின்னர் நான் மட்டக்களப்புக்கு சென்று எனது பல்கலைக்கழகத்து நண்பர்கள் சேர்ந்து சேகரித்த நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு என் நண்பனையும் சேர்த்துக்கொண்டு செங்கலடி - அம்பாறை வழியாக அக்கரைப்பற்று நகரத்தை வந்தடைந்தோம். அப்போது நண்பர்களிடம் சொல்லி நானும் எனது நண்பனும் அங்கே இறங்கி அவன் அம்மா அப்பாவிடம் சென்றடைந்தோம்.

பி்கு: பல வருடங்கள் கடந்தும் இப்போது என் நண்பன் என்னுடன் எவ்வித தொடர்புமில்லை. ஆனாலும் நான் அவனுக்கு ஒரு நண்பன்.

அவனுக்காக சில வருடங்கள் முன் எழுதிய கவிதை:

என் உணர்வுகளை சுவீகரித்து
உரமாக்கியவனே !

இழப்புக்களை ஏற்று
எடுப்புக்களை விடுத்து
விருப்புக்களைப் பகிர்ந்து
நட்புக்கு வழிவகுத்தவனே!

அன்பு மை கொண்டு
நட்புக்கவி வரைந்தவனே !

உன்வெட்டிப்பேச்சு
உயிர் உண்மை மூச்சு
கட்டிக்கொள்ள கொட்டிக்கிடக்கு
ஆயிரம் ஆசைகள்
நெஞ்சினில்....

உன்நினைவுகள்
விழுங்கவும் முடியாத
வெளியேற்றவும் முடியாத
எச்சிலைப்போல்
எனக்குள்ளே
புதைந்துகிடக்கின்றன

உந்தன் நினைவுவிரல்கள்
உணர்வின் கதவுகளை
தட்டத்தொடங்க
இறந்தகாலத்தின் ஆழத்தில்
உறங்கும் நம் நினைவுகள்
மேற்பரப்புக்கு வந்துவிடுகின்றன

உன்னோடிருந்த காலங்கள்
சந்தோசச் சாரல்கள்
உற்ற சோகங்கள்
வேதனைகள்
துயரங்கள்
கலக்கம், கண்ணீர்
உனக்கு மட்டும் சொந்தமல்ல
எனக்கும் உரியதுடா
மறந்துவிடாதே..

உனக்காக எழுதப்படும்
இக்கவிதை- என்
உருக்கும் உணர்வுகளை
கண்ணீரின் ஊர்வலத்தை
மனக்காயத்தின் சுவடுகளை
காட்டவில்லையடா

மறந்துவிடாதே
கையேந்தி காற்றை
ஊதாவிட்டால்
புல்லாங்குழல் கூட
வெட்டப்பட்ட வெறும்
மூங்கில்தான்

உன்தன் நினைவுகள்
நீங்கமறுத்து
இறுகப்பிணைந்து கொள்கின்றன
இதனால்
இறுகப்பிணைந்த நட்புடன்
என்றும் இணைய
நினைக்கும்
இதயத்துடன்
காத்திருக்கிறேன்
மீள இணைந்துகொள்.....

Friday, December 25, 2009

வைக்கோலில் ஓர் ஒளிப்பிளம்பு


இரண்டாயிரம் ஆண்டுகள் முன்

வைக்கோலில் ஓர்
ஒளிப்பிளம்பு
ஏழ்மையின் விளக்கு
தாழ்மையில் எழுந்தது
மானுடம் பிறந்தது
உலகம் உய்த்தது

உலகம் மீட்க பிறந்த
உத்தமரின்
இத்தினம் முதல்
மனமெங்கணும்
மகிழ்ச்சி மலர்கள்
பூக்கட்டும்...

உன்னொளி எமக்கு
புதுத்தெம்பு தரவேண்டும்
மனஇருள் போக்க
மரணித்தெழுந்த பிதாவே
உன்னருளாலே நம்
உள்ளம் வளரட்டும்
இல்லம் இனிக்கட்டும்

பரிசுத்த ஆவியின்
அற்புத ஒளியினில்
நள்ளிரவுச் சூரியன்
எளிமையாய் பிறந்ததே
உள்ளிருக்கும் மனச்சுமை
இனிக்குறையுமே...

உனது பிறப்பு
உன்னத சேவை
நம் நல்லுறவு
பாசம்
அன்புத்தோழமை
நட்புறவு வளர
இன்னுமின்னும்
நாம் பாடுவோம்
உனக்காக கரோல் கீதங்கள்...
எம்மனம் இப்போது
தூய்மை...
வல்லமை கீதங்கள்
உனக்காக...
என்றும்
நாம் உன்னில்...


 


அனைவருக்கும் எமது கிறிஸ்த்தவ தின நல்வாழ்த்துக்கள்

Thursday, December 24, 2009

Wednesday, December 23, 2009

மின்னல் + அடைமழைஅந்த ஒழுகும் குடையில்
போர்வையை நனைத்திய போதும்
ஒற்றையடிப் பாதையில் போன
என்மனது
நின்று சட்டெனத்
திரும்பியது
அவள்
உசுப்பிவிட்ட
அந்தப்பார்வையில்...

இன்னும்
என்மனதுக்குள்
அந்த அடைமழைதான்....அவள் துப்பட்டாவை
தூக்கி வீசிய பொழுதுகளில்
தொலைதூர என்மனது
தொப்பென விழுந்தது
அந்தஅடைமழைச்
சேற்றுக்குள்....

Monday, December 21, 2009

தவறிய காதலும் எழுதும் கவிதைகளும்

நாம்
காதலைப் பேசிக்கொள்ளாத
அந்தக்கணங்கள்
இப்போது
கவலைப்படுகின்றன
கலைந்துபோன
கருக்கொண்ட மேகங்கள்
உருக்குலைய
மறந்துவிட்டன என்று

அன்றைய
காதல் தவறி
இப்போது
காகிதத்தில்
விழுந்துவிட்டதுஅப்போது
நமது கண்கள்
முட்டிக்கொண்ட போது
எனது கவிதைகளை
உன்னிடம் நான்
கொட்டியிருந்தால்
சிலவேளை
இப்போது
என்னோடு பந்தத்தில்
இணைந்திருப்பாய்

நீ விட்டுப்போனதால்
என் மனக்காகிதத்தில்
பல கவிதைகள்
பிரசவம்

நன்றி சொல்லுது
என் மனது
இப்போது
காதல் கொண்டு
தமிழ் வளர்க்கிறேன்
காதலை தமிழுக்கு
காணிக்கையாக்குகிறேன்அன்று
நீ என்
காதல் கதாநாயகி
உன்னால் இன்று
எழுத்து, இயக்கம்,
தயாரிப்பு என்று
காதல் திரைப்படம்
என் கவிதைகளில்.....

அவனும் அவர்களும்....

புல்லாங்குழல், வயலின்
இவற்றை இவனிடம்
கொடுக்கத்தேவையில்லை
எஸ்.எம்.எஸ், தொலைபேசி போதும்
மனம் விரும்பும்
கானம் வரும்

இவன் ஒரு
அறிவிப்பாளன்
தமிழ்
வலைப்பதிவாளன்
தமிழ் சொல்லி
தமிழ் வளர்ப்பவன்

இவன் அடிக்கடி
அங்கிருந்தால்தான்
நமக்கு நல்ல
பாட்டுவரும்
காது குளிரும்

தொண்டு செய்பவன்
அனானிகள் கண்டு
தமிழ் முண்டி வருபவன்

ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்
சொல்லியடிக்கும் தமிழ்
'கில்லி'க்காரன்

ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....

நீங்கள்
கத்திகொண்டு கீறலாம்
இவன்
புத்தி மாறப்போதில்லை
வீரம் விளைந்த மண்ணில்
ஈரம் கொண்டு முளைத்தவன்
காரம் நிறைந்தவன்

ஆதலால்
இவன்
அவனேயாக
ஆனதால்
அனானிகளே!
சற்று அமரலாம்

பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்
நிச்சயம்

Saturday, December 19, 2009

இது ஒரு நண்பனின் காதல்..

அவனும் அவளும்
அந்த நெடுஞ்சாலையில்

அவசர நெருக்கடியில்
அற்புத சந்திப்பு அவர்களுக்கு

அவன் :
"மனசில தித்திப்பு
மறுபடி பார்க்கத் துடிக்குது"

அவள் :
"பேசிக்கொள்ளலாமே
இந்தா
என் தொலைபேசி
இலக்கம்"

சுவீப் ரிக்கட்டுப்
பரிசு விழுந்தவனாய்
அவன்
அசடுவழிய
பேசிப்பேசி
எஸ்.எம்.எஸ், ரீலோட்
என்று
காசு கரைத்தான்
கடிகாரம் மறந்த
அந்த நாட்கள் அவனுக்கு
அவசியமில்லாமல்
அற்புதமாக


அவளை
அன்புத்தோழியாக
ஏற்றுக்கொண்டான்...

அவள் மனசுல சந்தேகம்
அன்றொருநாள் திடீரென்று

அவள்:
"நீ
என்னைக்
காதல் செய்கிறாயா..?"
என்றாள் மெளனமாக

மழைவெள்ளத்தில்
அகப்பட்ட குழந்தை போல
அவன்பட்ட கஸ்டம்
அவளுக்குத்தெரியுமா?
இருந்தாலும் மனசு
நந்தவனமாக...

அவன்:
"ஆம்
ஆனா
இல்லை"

என்று
இரண்டும் சேர்த்து
இரண்டுமில்லாமல்
அவன்
சனியன் பிடித்த
சகபாடியானான்

அப்போது அவள்:
"காதல் தவறி
நம்
வாழ்க்கையில்
விழுந்துவிட்டது
காதல் கொண்டு
வாழ்க்கை செய்வோம்
என்றாள்"


மறுக்க முடியாமல்
அவன்
நாடகள்
சதம் சதமாய் கழிய
இன்பச் சில்லறைகளைச்
சேமித்துக்கொள்ள முடியாமல்
தடுமாறினான்

அவளிடம் அவன்:
"ஐஸ்கிறீம் குடிக்கலாமே"

அவள்:
"சூடாக தேனீர்
வேண்டுமென்றாள்"

இப்படி
விவாத மேடை
அடிக்கடி
அரங்கேறியது
முடிவு எட்டப்படாமல்
காதல் தடுமாறியது.

அவனது
விட்டுக்கொடுப்புகள்
எல்லாம்
அவளுக்கு
ஒத்துழைப்புகளாயின

திட்டுக்கள் எல்லாம்
வாதிகளின்
வாதங்களாகின

இப்போது
காதல் தவறி
அவன்
வாழ்க்கை
விழுந்துவிட்டது.

யாகூ ஸ்க்கைப்
ஐடி மாத்தி
இன்னும் நீளும்
அவள்....
வேறொருத்தியாய்
அவளே...
அவனுக்கு
தொல்லை கொடுக்க

அவன்
வாழ்க்கை வெறுத்த
சக்கையாகிறான்...

இப்போது
அவன்
பேசா இளந்தை

இது என் நண்பன் ஒருவன் படும் அவஸ்த்தை அவனுக்காக அவன் கேட்டதற்காக..

Friday, December 18, 2009

ஒரு அஞ்சலியுடன் மறுமலர்ச்சிகாக இந்தத் தபோவனம்

சகோதரர்களே!
வேக நடைபோடும் இந்த உலகத்தின் மனதுக்கு அமைதி வேண்டி எத்தனை எத்தனை பிராத்தனைகள். கஸ்டம் வரும்போதே மனிதன் கடவுளை நாடுவான். இதற்கு மாறாக சில பிதற்றல்களுடன் நடைபெறும் மதமாற்றங்களும் பொருளாதார இன்னல்களுக்கு உள்ளாகும் வறிய குடும்பங்களின் உரிமை மீறல்களும் வழக்கிலுள்ளது. இம்மதமாற்றங்கள் ஒரு மனிதனது தற்றுணிவின்மையை எடுத்துகாட்டுகிறது அதேபோல் தம்மைத் தாமே விற்றுக்கொள்வதாகிறது.ஆனாலும் இங்கு ஒரு மகானின் ஆத்ம திருப்பதியின் அஞ்சலிகாக ஒரு தபோவனம் உருவாகுகிறது.
நிற்க.
சொல்ல வந்த விடயம் மறந்துபோகும்...

பாரம்பரிய இந்து - தமிழ் சமய கலாச்சார விழுமியங்களைக் கட்டிக்காக்கும் நம்ம ஊரில் மற்றொரு மலர்ச்சி இது, வேறொன்றுமில்லை. ஆனால் இதுவே இக்காலத்தில் எவ்லோருக்கும் வேண்டியதொன்றாகிறது.. இதுதான் "ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம்".ஆம், தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தின் முழு முயற்சியில் அழகிய தேற்றாத்தீவுக் கடற்கரையோரத்தில் வீற்றறிருக்கும் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தினருகாமையில் இத்தபோவனம் தோற்றம் பெற்றுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தேற்றாத்தீவு தெற்கு - 02 பல்தேவைக்கட்டடத்தில் நேற்று 17-12-2009 ஆந்திகதி வியாழக்கிழமை இந்து இளைஞர் மன்ற செயலாளர் திரு.த.விமலானந்தராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நாள்கோள் நற்பலனுக்கேற்ப தென்னை மரநடுகை செயற்றிட்டம் கால்கோளிட அதற்குரிய நிலப்பகுதி இயந்திரங்கள் கொண்டு மண் சமப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறத்தில் சம்பிரதாய நிகழ்வு ஒன்றுகூடலானது.

மரநடுகையில் சில காட்சிகள்

 
 

ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்களின் நல்லாசியுடனும், தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடனும் திரு.ச.இன்பராஜன் அவர்களின் இனிய பஞ்சதோத்திர கடவுள் வணக்கத்துடனும் திரு.விமலானந்தராஜா அவர்களின் தலைமையுரையுடனும் இவ்வொன்றுகூடல் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்து.

விபுலாநந்தா இந்து கலாச்சார பொதுப்பணிமன்றத் தலைவர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள் மங்களவிளக்கேற்றும்போது


திரு.ச.இன்பராஜன் அவர்கள் தேவாரப்பாராயணம் செய்யும்போது
 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் கிராமத்தின் நாற்புறமும் அமைந்துள்ள நான்கு கோயில்களில் பஜனைகள் நடைபெற்றுவருவதும் அதில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குகொள்ளுதலும் இந்தத் தேற்றாத்தீவு கிராமம் இதனால்தான் ஆழிப்பேரலைகளின் தாக்கத்துக்குட்பட்டபோதும் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இப்போது ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம் மன நிறைவை அளிக்கும் தியானம்,யோகாசனம்,இந்து மதப்போதனைகள் சிறப்பான வழிகாட்டல்களுக்கான ஒரு நிலையமாக அமைய எல்லாம் வல்ல நம்மிறைவனின் துணை எப்போதும் கிடைக்கும் என்று தமது நல்லாசியை வழங்கினார் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ.

ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்கள் நல்லாசி வழங்கும்போது


தொடர்ந்து இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்துப்பேரவைத் தலைவர் திரு.சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்கள் சிறப்புரையை வழங்கினார்.

இவரின் சில சில்லறைகளில்.........


ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம் ஆனது சமாதி நிலையடைந்த சுவாமி தந்திரதேவா அவர்கள் தாம் உயிரோடு இருந்தபோது அவர்களின் எண்ணத்தில் உதிர்த்த சிந்தனைனையே. இதற்கு தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினால் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்படுவது வரவேற்கப்படவேண்டியதொன்றே. அவரோடு இறுதிக்காலம் வரை பழகிய நானே இவரின் இறுதிக்கிரியைக் கூட செய்யும் பாக்கியம் பெற்றேன். ஒரு அமெரிக்க நாட்டு பிரஜை இந்து மதச்சிந்தனை நூல்களையும் ஆத்மீக வழிகாட்டல்களையும் செவ்வனே கற்று தமிழிலும் சிறப்புற்று இலங்கை நாடெங்கிலும் பல எண்ணிலடங்கா இந்துமத சேவைகளை செய்த உத்தமர். ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்துமத சேவையாளர்கள் தத்தமது பிரதேசங்களை மட்டுமே மையப்படுத்தி இந்துமதப்போதனைகள் சமயஇல்லங்கள் என்பவற்றை நடாத்திக்கொண்டிருப்பது வழமை. உதாரணத்திற்கு யாழில் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரைச் சொல்லலாம். இவ்வம்மையாரின் சேவை யாழ்ப்பாணத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதே சற்றுவேதனை. காரணம் ஒரு இந்துப் பெரியம்மையாரின் சேவை இலங்கை நாடெங்கெணும் கிடைக்கவி்ல்லை என்ற மனக்குறை மட்டுமே.
ஆனால் இலங்கையின் பல பாகங்களில் இந்துமதச் சேவைகளை செய்த சுவாமி தந்திரதேவா
அவர்களுக்கு உரிய ஆதரவு மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் பெரிதளவில் செய்யப்படாமை வருந்தத்தக்கது. அவருடைய மாபெரும் நற்பணிகள் அதிகமாக இடம்பெற்ற திருகோணமலையில் கூட அவரின் சுவடுகள் தெரியாமல் மறைந்துவிட்டமை மனதுக்கு கஸ்டமாக உள்ளது. இந்து அபிவிருத்தி சபைக்குச் சேரவேண்டிய அவரின் பல சொத்துக்கள் இன்றும் ஒரு சிலபேரினால் முறைகேடாக முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் விருப்பப்படி தந்திரதேவா சுவாமி அவர்களின் அஸ்தி தேற்றாத்தீவிலும் கரைக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தேற்றாத்தீவு இந்துமக்கள் ஒன்றுசேர்ந்து இத்தபோவனத்தினை அவரினது பெயர் கொண்டு அமைப்பதன் மூலம் அவருக்கு அஞ்சலியுடன் மாபெரும் கடமையைச் செய்கிறார்கள்.
இதற்குமேலாக இக்கிராமத்திலுள்ள எத்தனையோ பெரிய சேவையாளர்கள் இந்துமதப் பெரியவர்கள் அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆவணப்படுத்துமாறு இக்கிராம மக்களிடம் நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்று தனது உரையை முடித்தார்.

அந்த சிறப்புரையைத் தொடர்ந்து எமது கிராமத்தின் பல பெரியவர்கள் தத்தமது கருத்துரைகளை வழங்கிக்கொண்டு இருக்க இடைவேளைக்காக குளிர்பானமும் பரிமாறப்பட்டுக்கொண்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

நிகழ்வுகளின் சில படங்கள்

போய் வா.....

மீண்டும் ஒருநாள் ஒருகவிதை இணையத்தில் எனது கவிதை போய்வா

போய்வா...

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்

உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்லை
ஆறுதல் சொல்ல எனக்கு

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை
சேர்த்துக்கொண்டு

சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே
புன்னகைத்துக்கொள்
சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம்
என்னிடம் இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்

உன் திருமுகம்
என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை
என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....

Thursday, December 17, 2009

விடையில்லா விடைபெறும் வேளை...

எந்தப் பிரிவில்
இந்த உறவைச் சேர்ப்பது
அடிக்கடி கேட்டுகொண்டன
நம் மனசுகள்
நாமிருவரும்
வாய்விட்டுக் கேட்காமல்

உனக்கும் எனக்கும்
தெரியும்
இது
அதுவல்ல என்று
இருந்தாலும்
நமக்குள்ளே
விடைகாணா கேள்வி
இது மட்டும் தான்..

நான் கேட்ப்பேன்
நீ தருவாய்
ஒரு கோப்பையில்
உன்வீட்டுச் சமையல்
பசியாறும் நம்
இரு உள்ளங்கள்வா என்பாய்
நண்பர்கள் அடர்ந்த
அந்தப்பகுதியில்
கைபிடித்து
நடைப்பயணம்
ஓ..
அது நிஜங்களில்
நம் நினைவுப்பயணங்கள்

தண்டனைகள் சில
குறும் பிரிவுகளுக்காக...
அடைமழையிலும்
ஐஸ்கிரீம் தந்து
அன்பு பரிசுகள்
ஆயிரம் ஆயிரம்

நீ
விடைபெறும் நேரம்
மனசில் பாரம்
கண்ணில் ஈரம்

இப்போது
புன்னகை உனக்கு..
துணைக்கு
என்நினைவுகள்

எப்போதும்
வாழ்த்துக்கள்
சொன்னபோதும்...
............
கடைசியில்..

இந்த உறவைச்
எந்த வகுப்பில்
சேர்ப்பது?

சில அழகிய காட்சிகள்....

இது தேனூற்றிலிருந்து......
உங்களுக்கும் பிடிக்கும் இல்லையா..

இதுவும் பிடிக்குமே........நம்ம ஊருதாங்க

Wednesday, December 16, 2009

பதிவர் சந்திப்பு தித்திப்பு

அறிமுகம் தந்தது
கீர்த்தி
நேரம் தவறாமை
திருப்தி
பசு போய் தந்தது
ஆரம்பம்

முதல் தலைப்பு
பயனுறப்பதிவெழுதல்
பயனுள்ளதானது
புல்லட்டுக்கு வாழ்த்து
'டுமீல்'
மலேசியப் புன்னகை அவர்
மனதில் பட்டாம்பூச்சிகள்

பெண்களும் பதிவுலகமும்
பதிவுலகில் பெண்களுக்கானது
ஆரம்பம் அலட்டல்
அவசியக்கருத்துக்களால்
சிறப்பானது கருத்துக்களம்

அடுத்த நிமிடங்கள்
அனானிகளின் இம்சைகளுக்காக
சந்திராயன் கருத்துக்கள்
சந்திப்பில் எகுறியது??

ஆச்சி சுட்ட வடைகள்
பயற்றம் பணியாரத்துடன்
பரிமாற்றம்
வாயுறியது நமக்கு
வயிறு குழப்பியிருக்கும்
அவர்களுக்கு (ஹிஹிஹி..)

தொப்பை நிரப்பிய
பதிவுச் சிற்பிகள்
ஆற அமர

இலங்கைப் பதிவர் குழும
விளக்கம்
அழகு தமிழில்
தொழிநுட்ப முழக்கம்

அங்கேயும்
இருகுழுக்கள்
சுவாரஸ்ய போட்டி
நிகழ்வு
இன்ப நிறைவு
மகிழ்ச்சிப் பொங்கல்...

(வேறு)

என் வங்கிகணக்குகளிலிருந்து
ATM கூட காசு தர மறுத்ததால்
வருகைதர முடியவில்லை

இடையறா இணையத்தில்
இருந்தபோது - சந்திப்பில்
இருந்த முழுத்திருப்தி

பதினாறுக்கு மேற்பட்ட
பதிவாளர்களுடன்
இணைய இணைப்பிலிருந்தமை
மகிழ்ச்சி

அடிக்கடி தொ(ல்)லைபேசி
அழைப்பால் -அன்பு
வெற்றியாளனுக்கும் பக்கத்து
ஊரானாக்கும் என்குறுக்கீடுகள்
அது இணைய
துலக்கத்துக்காய் பட்டபாடு

கமராக்காரர்களையும்
கவனம்கலைப்பாய் ஆனவர்களையும்
பார்த்தோம்,ரசித்தோம்

இதனைவிட பல நாட்களுக்குப் பிறகு
என் பெளதிகவியல் ஆசிரியை
திருமதி.நடராஜா மற்றும் அங்கிள்
திரு. நடராஜா அவர்களை பார்த்தது
மகிழ்ச்சி வெள்ளத்தில்
என் உள்ளம்

 


நன்றிகள் ஏற்பாட்டாளர்களுக்கும்
இணைய வழி நேரலை
தந்தவர்களுக்கும்
இணையத்தோடு
தொடர்பிலிருந்தவர்களுக்கும்

அடுத்த சந்திப்பு????
கலக்குவோம்

Monday, December 14, 2009

இன்பத்தூறல்.........விழிகள் உயர்த்தி
மனதில் பொழியும்
உதடுகளின்
இன்பத்தூறல்

விழிகளால் மொழிய முடியாத
கவிதைக்கு வழியான
அழகு வரிகள்

மனம் விதைத்த
கவிதையில் தித்திக்கும்
வழுக்கிய நினைவு

வேதனையை விலக்கி
அவள்
நினைவுகளைக் கூட்டும்
இன்பக்கதவின்
திறவுகோல்


மலர்கொண்ட
பெண்மையின்
உள்ளத்தின் வழு
மனம் கொண்ட
உண்மையின்
புன்னகை

இதயத்தில்
மலரும் நினைவுகளை
வெளிச்சம் போடும்
தூரிகை உதடுகளால்
தீட்டிய ஓவியம்

Friday, December 11, 2009

2ஆம் மைல்கல்லும் பதிவெழுதிப்பாரும்....

ஆமாம்.... அடுத்த மைல்கல் தாண்ட இணைவோம் ஞாயிற்றுக்கிழமை... வாருங்கள் பதிவர்களே... காத்திரமான கனமான பதிவுலகர் சந்திப்பு. அதான் இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு .....


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


வரும் ஞாயிறு மாலை பி்ப. 2 மணிக்கு.. தேசிய கலை இலக்கியப்பேரவை வெள்ளவத்தையில்..


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


இதையும் பாருங்க..... (வைரமுத்துவின் காதலித்துப்பார் பார்வையில் பதிவெழுதிப்பார்)


பதிவெழுதிப்பார்....

உன்னைச் சுற்றி
ரசிகர் வட்டம் தோன்றும்

உன் எழுத்துக்களால்
உலகம் எழுதப்படும்

நடுநிசி கடந்து
ராத்திரி சிவராத்திரியாகும்

தட்டெழுத்து வேகமாகும்

பின்னூட்டல்காரன்
தெய்வமாவான்..

தட்டித் தட்டிக் கீபோட்
உடைந்துபோகும்

கணணித்திரை பார்த்து
கண்ணிரண்டும்
பிதுங்கிக்கொள்ளும்

கதிரையை சூடாக்குவாய்

நல்ல பின்னூட்டங்கள்
வந்தால்
நன்றி சொல்வாய்
வராவிட்டால்
அடிக்கடி மின்னஞசலை
அவதானிப்பாய்

யாரும் உன்னைக்
காணமாட்டார்கள்
ஆனாலும்
இணைய உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்...

அனானிகளின் இம்சையை
அடைந்ததுண்டா..?

உன்னையே அறிந்த
அனுபவம் உண்டா????

பலதூர இடைவெளிகளில் இருந்து
பின்னூட்டல் வந்ததும்
சிலிக்க முடியுமே??

அதற்காக
பதிவெழுதிப்பார்

தமிழ் என்ற சொல்லுக்கு
அர்த்தம்
ஆயிரமாக
பதிவெழுதிப்பார்....
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு