Pages

Showing posts with label ஆவணம். Show all posts
Showing posts with label ஆவணம். Show all posts

Friday, November 5, 2010

தேனூரானும் நாட்டாரியலும் (சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்)

தேனூர் எனும் பெயர் எங்கட ஊர் தேற்றாத்தீவுக்கு வரக்காரணமே கவிஞர் தேனூரான் தான். தருமரெத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஊர் மேல்கொண்ட இலக்கியப் பாசத்தால் இப்புனைபெயரை தனதாக்கிக்கொண்டார். இவரை தேனூரான் மாமா என்று சிறுவயதுகளிலிருந்து அழைத்து வருகிறோம்.இலக்கியத்தில் மிகுந்த வல்லமைவாய்ந்த இவரைப்பற்றிய பதிவு இது.

இவருக்காக நான் எழுதிய கவிதை கலாபூசணம் விருதுபடைத்தபோது; இங்கு காண்க.

கிழக்கிலங்கை தமிழ்பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள் (ஆய்வரங்கக் கட்டுரைகள்) என்ற புத்தகம் அண்மையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக அமையப்பெற்றதை ஒர் ஆவணப்படுத்தலாகவே உணரலாம். இதில் நாட்டாரியல் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளில், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் தொன்மையையும் நாட்டுவழக்காறுகளையும் தெளிவாக எழுச்சிபெறச் செய்திருப்பது மகிழ்ச்சி.


கிராமத்து மண்ணின் மகிமையை அதன் நாட்டுவழக்கை தொன்றுதொட்டு வரும் பண்பை தமிழின் தொடர்ச்சித்தன்மையை அதிகளவில் படம் போட்டுக்காட்டும் புத்தகம் அது. அதைவிட ஆவணம் என்றே சொல்லலாம். ஆனாலும் அங்கே குறை (சொல்ல வேண்டியது ).
இப்புத்தகம் பல்வேறு சமூகத்தையும் மக்களையும் சென்றடையும் நோக்கு குறைவாக இருக்கிறது.பல்கலைக்கழக அல்லது இன்னொரு ஆய்வாளர்களுக்காக மட்டும் இருப்பதாக உணர்கிறேன். காரணம் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்குமா என்பது சந்தேகப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் அறிஞர்களால் உணர்த்தப்பட்ட ஆய்வரங்கக்கட்டுரைகளையே இப்புத்தகம் கொணர்ந்திருக்கிறது. ஆனாலும் பல்வேறு ஆய்வுகள் கருத்தரித்தும் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் கர்ப்பிணிகளாய் இன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
இப்புத்தகத்தினூடு எமது ஊரின் பெருமைசேர்க்கும் கவிஞர் தேனூரான் நாட்டார் அறிவியல் என்ற ஆய்வுக்கட்டுரையைத் தொகுத்துத்தந்துள்ளார்.

"ஒரு நாட்டான் நாட்டார் அறிவியில் பற்றி கூறுவது சிறப்பு, தான் உண்டவற்றை, உண்டு ரசித்தவற்றை அதனால் ஏற்பட்ட மகிழ்வை, பிறருக்குக் கொடுப்பது சொல்வது பொருத்தம், ஆண்டவனின் செல்வப்புதல்வர்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஏழையாயினும் சந்தோசச் செல்வம் பெரிதும் படைத்தவர்கள். அறிவியல் மேதைகள் தாம் பட்டினிகிடந்தும் தமது வீட்டுவாயிலில் வரும் விருந்தினர்களை இதயபூர்வமாக வரவேற்பார்கள். அழகிளராக இருந்தும் தமது அழகைப்பற்றி அகந்தை சிறிதும் அற்றவர்கள்......"
என்று முன்னுரைக்கும் போது நாட்டாரியலின் மேன்மை விளங்கும்.

வழமையான ஆய்வாக இல்லாமல் ஒரு வித்தியாசமான ஆனாலும் நாட்டாரியல் தொடர்பாக பல்வேறு அணுகுமுறைகளை சிந்தனைகளை கவிஞரின் எளிமைத்தன்மையைப் போலவே நுண்ணிய முறையில் தெளிவாக்கியிருப்பது அவருக்குரிய அந்த எழுத்தாற்றலை எல்லாருக்குமாக கொண்டுவந்திருப்பது தெளிவு.

நாட்டாரியலின் தொன்மையை எழுத்துலகில் தடம்புரளச்செய்வதில் இவருக்கு எப்போதும் பெருமையான விடயமும் இவருக்குரிய திறமையையும் வெளிக்காட்டுகிறது. பல்வேறு ஆய்வுகளுக்காக இவரின் துணையை நாடும் பல்கலைக்கழக பேராசியரியர்களும் மாணவர்களும் அவரிடமிருந்து தேனைப் பெற்று வெறும் கூடாக இவரைப் பார்ப்பது நமது மனதுக்கு கவலையாகவும் வெட்கப் படவேண்டிதொன்றாகவும் காணப்படுகிறது.
தமிழ் இலக்கிய விழா - 2010 சிறப்பு மலர் கிழக்குமாகாண கல்வி பண்பாட்டல்வல்கள் அமைச்சின் வெளியீட்டுநூலிலும் நமது மண்ணின் சிறப்புப் பேணும் மட்டக்களப்பு பிரதேச சடங்குசார் கூட்டுக்கலை வசந்தன் - கொம்புமுறி என்ற தலைப்பில் வசந்தன் கூத்து மற்றும் கொம்புமுறி விளையாட்டு என்பற்றை கலைநுட்பத்தின் வெளிப்பாட்டாக அற்புதமாக எவ்வாறு இக்கலைகள் நடைபெறுகிறது என பல்வேறாக ஆய்வெடுத்து எடுத்துரைக்கிறார். கொம்புமுறி விளையாட்டு எமது ஊரின் பெருமைசேர்க்கும் பழைமையான விளையாட்டு ஆதலால் தான் எமது கிராமத்தின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் பெயரானது கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் என்று. அத்தோடு மட்டுமில்லாது வசந்தன் கூத்து என்ற எமது மற்றுமொரு பாரம்பரிய ஆடல்வகையைபற்றிய எழுத்தாடலும் அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.
(அண்மையில் எமது கிராமத்தின் பாலமுருகன் கோயிலுக்கு பால்குடபவனி விழா நடைபெற்றபோது கவி தேனூரானும் வசந்தன் குழுவின் சில பாலகர்களும் பவனிவரும் போது)

ஆனாலும் வறுமையும் புலமையும் சேர்ந்திருப்பது இவரது வாழ்க்கைக்கும் பொருத்தம் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வசந்தன் கூத்துப்பற்றிய அச்சேற்றப்படாத பல்வேறு ஆய்வுகள் கட்டுரைகள் இன்னமும் கையெழுத்துப்பிரதியாக்கி வைத்திருப்பது மகத்தானது.

அவற்றுள் ஆய்வுப்பார்வையில்.....
  • வசந்தன் பாடல்கள் - என்ற கையெழுத்துப்பிரதியில் வசந்தன் எனும் பெயர் வரக்காரணம், தோற்றப்பின்னணிச் சுருக்கம், கண்ணகி இலக்கியங்கள், வசந்தன் பாடல்களின் அமைப்பும் கண்ணகி வழிபாடுகளும், வேளாண்மைச் செய்கையில் வசந்தன் என்று பல்வேறு அங்க இலக்கணங்களை வசந்தன் பாடல்கள் தாங்கி நிற்கின்றன.
  • வசந்தன் கூத்தின் தோற்றமும் வரவாற்றுப்பின்னணியும். - இதில் வசந்தன் கூத்தின் தோற்றம் மற்றும் சமூகப்பின்னணி, கொம்புமுறிச் சடங்கு, வசந்தன் கூத்தின் தற்கால நிலை என்று கூத்தின் தொன்மையும் தன்மையும் தற்கால நிலைமையும் என்று எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்தின் அளிக்கை முறை - இங்கு தேற்றாத்தீவு மற்றும் வந்தாறுமூலைக் கிராமங்களில் வசந்தன் கூத்தின் அளிக்கை முறைபற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்துப்பற்றிய ஓர் நோக்கு - இதில் களுதாவளைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு ஆய்வாக்கப்பட்டுள்ளது.
  • வசந்தன் கவிகள் - என்ற நூலாக்க்படவேண்டியதில் பராக்கே, ஊஞ்சல், தானானாப் பள்ளி, பிள்ளையார் வசந்தன், கள்ளியங்கூத்து, கூவாகுயில் வசந்தன், செவல்வாட்டு வசந்தன், அனுமான் வசந்தன், நாடக வசந்தன் என அத்தனை வசந்தன் பாடல்களும் கையெழுத்தாக்கப்பட்டுள்ளது


தேனூரான் பல்வேறு இலக்கியத்துறைகளில் துறைபோந்தனனாக இருக்கிறார். இயல், இசை , நாடக, மாந்திரிக, நாட்டு வைத்தியம் என்று பலவாறு திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகள் பெற்றாலும் பெருமை என்பது சிறிதுமின்றி பேரெடுக்கப் பிறந்தாலும் இலக்கியம் என்பது ஒவ்வொரு கலைஞனாலும் பயணிக்கக் கூடிதாக இருந்தாலும் அவனது ஆக்கங்கள் நூலுருப்பெறுவதில் பெருதுவைக்கும் இன்பம் அந்தந்த கலைஞனுக்கே சிறப்பு மட்டுமல்லாமல் இலக்கியத்தின் தொடர்ச்சித் தன்மைக்கும் தமிழின் நீடித்து நிலைபெறுதலுக்கும் அவசியம்.

செம்மொழித் தமிழினிச் சாகாது என்றால் ஒவ்வொரு கலைஞனின் படைப்புக்களும் வெளிப்படுத்த வேண்டும். நூலுருவாக்கம் என்பது ஆவணப்படுத்தலின் உச்சம். எனவே இந்தப் பண்படுத்தப்பட்ட தமிழ் நிலத்தை நூலுவாக்க முயற்சிக்கும் போது தமிழ் தாய் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள் என்பது திண்ணம்.

இவரின் படைப்புக்களில் சில அச்சேற்றப்படாமலும் அச்சேற்றி சில மீள்பதிப்புக்கு ஆளாகமலும் என..

  • "மட்டக்களப்பின் கிராமியக் கலைகள்"
  • "நாட்டார் கலையில் காவடியாட்டமும் இந்துகலாச்சாரமும்"
  • "மட்டக்களப்பின் மாந்திரிகைக்கலையும் ஒரு கிராமியக் கலையே"
  • "தேற்றாத்தீவு பாலமுருகன் பாமாலை"
  • "களுதாவளைப்பிள்ளையார் அற்புதப் பொன்னூஞ்சல்"
  • வடமோடி தென்மோடி கலந்த பரிசோதனையாக "அகலிகை" என்ற நாட்டுக்கூத்து

என்று இன்னும் பல எனக்குத் தெரிந்தவை பற்றி சொல்லுகிறேன். 2003 இல் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவை வெளியிட்ட "தேனகம்" என்ற நூலில் கூட "மட்டக்களப்பில் பறையர் சமூகம்" என்ற ஆய்வுக்கட்டுரை அவரின் சமூகவெளிப்பாட்டின் எழுச்சியை எடுத்தியம்புகிறது.

பல்கலைக்கழக மட்டத்தில் நோக்கும்கால் இவருக்கு எத்தனையோ பட்டங்கள் வழங்கலாம். ஏன் கிழக்குப்பல்கலைக்கழகம் இவரின் பல கட்டுரைகள் உட்பட பல்வேறு ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறதை மறுக்க முடியாது. ஆனாலும் பல்வேறு நூல்கள் படைக்க எத்தனிக்கும் இந்தக் கிராமத்துக்காரனினால் நூலுருவாக்கம் செய்யமுடியாமல் போவது கிராமத்துக்கலைகள் பண்பாடுகளின் வெளிச்சம் என்பவறை இழந்து இருப்பது மனவேதனை தரும் விடயம்.
இதுவே தான் சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்.

இவர் பற்றிய இன்னும் பல சிறப்புக்களை பிறிதொரு பதிவில் எழுதுவதற்கு ஆவலாக இருக்கிறேன். நான் இவர் பற்றிய வீடியோ மற்றும் ஆவணப்படுத்தலாக ஆரம்பித்திருக்கிறேன். இவர் போன்று இன்னும் பல இலைமறைகனிகளான பழம்பெரு இலக்கிய சமய கலாசார மூத்தவர்களைப்பறிய ஆய்வு எழுத ஆவலாக உள்ளேன். காரணம் இருக்கும் போது வாழ்த்தவேண்டும் அவர்களுக்கு புகழ்சேர்க்க வேண்டும் அவர்கள் திறமைகளை மெச்சவேண்டும். இறந்தபின் இவர்கள் பேசப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்ற முனைப்போடு....

யாராகினும் நூலுருவேற்ற விரும்பினால் கிராமத்துக்காரனின் படைப்பை ஆவணப்படுத்த முனைந்தால் தமிழுக்குச் செய்யும் ஒரு தொண்டாக இருக்கும் என்பது உண்மை.

Tuesday, March 2, 2010

படம் பார்க்கலாம் மனம் சலிக்குமா

பல நாட்களாக தோட்ட வேலைகள் காரணமாக பதிவெழுதுவதற்கு கடினமாக இருந்தது. அதால நம்ம ஊரின் சில காட்சிகள் ரசனையாக இருக்குதா எண்டு பாருங்க..... வாங்க பார்க்கலாம் ரசிக்கலாம்

இது கரைவலை மீன் பிடிக்கும் அழகு
 
 கோயில் வாசலில் அரட்டையில் ...................................
 
தண்ணீரில் தவித்த வெள்ளாமை வெயிலில் காயுது நமக்கு நெல்மணிகள் தருவதற்கு

 
இது மனித வலுவுக்கு பதிலாக அருவி வெட்டும் இயந்திம் (சிறியது )
  
அழகாக  கதிர் எடுத்து புதிர் உண்ணவிருக்கும் இவர் .....
 


அந்தி மாலைப்பொழுதின் சில வினாடிகள்
 

   

  
குளத்தில் தூண்டில் போடும் சிறுவன்
  
 இந்தப்பூவின் பெயர் தெரியவில்லை பிடிச்சிருக்கு
  
 நெற்குருவியின் அழகிய கூடு இரு முட்டைகள் (மன்னிக்க குருவியே.... )
  

வேலைப்பளு காரணத்தால் சிந்தனை சிறைவைக்கப்பட்டுள்ளது .................

Wednesday, February 10, 2010

சீதேவித் தொழில் வெற்றிலைச் செய்கை

ஹாஹாஹா... என்ன தலைப்பு எண்டு குமுற வேண்டாம். இது நம்ம பிரதேச மக்களின் ஆண்டாண்டு காலமாக செய்கை பண்ணப்பட்டு வரும் பிரதான வாழ்வாதார தொழில் இந்த வெற்றிலை (வெத்தில எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்)செய்கை.
மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. வெற்றிலைத்தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.
வெற்றிலை பல மருத்துவத்துக்கு உதவக்கூடியது ஆனாலும் இது பெரும்பாலும் மெல்லப்படுதலுக்கே (chewing betel) பயன்படுகிறது. ஆனாலும் திருமண வைபவங்கள் கோயில் நிகழ்வுகளில் பிரதான இடம் வகிக்கிறது.
இதன் மருத்துவ பயன்கள் பற்றி நம்ம சங்கவி தனது பதிவிட்டிருக்கிறார். பாருங்க வெற்றிலையின் மகத்துவம்

இந்த வெற்றிலை நம்ம ஊரில் எப்படி செய்கை பண்ணப்டுவது என்று பாருங்க.
இவ்வாறு கொடி படருவதற்கு கம்புகள் வரிசைக்கிரமமாக நடப்படும் இக்கம்புகளினருகில் வெற்றிலைக்கொடி(வெற்றிலைக் கொழுந்து) வரிசைக்கிரமமாக நடப்படும் . நிரல் வரிசை "சீத்து" என்று அழைக்கப்படும். இரண்டு கம்பு வரிசைகளுக்கிடையில் "புருவம்"  என்று சொல்லுவர். இரண்டு சீத்துக்களுக்கிடைப்பட்ட வாய்க்கால் இதனை "மூட்டான்" என்றழைப்பர். 
 சற்று வளர்ச்சியுற்ற கொடி நாற்றுப்பருவம் பாருங்க...
பின்னர் வளர்ச்சியுறும் போது ஆரிக்கை கொண்டு கம்போடு சேர்த்து வெற்றிலைக்கொழுந்து  (வெற்றிலைக் கொடி) கட்டப்படும்.இதன்போது வெற்றிலையின் பற்றுவேர்கள் கம்பினைப் பற்றிக்கொண்டு வளரும். வளர்ந்த வெற்றிலை தோட்டம் பாருங்க..( ஆரிக்கை என்பது தென்னங்குருத்து என்று சொல்லப்படும் இளம் ஓலையினைக் வெயிலில் காயவைத்து நார்நாராக கிழித்து எடுக்கப்படும் நார்) ஒரு இசைப்பட்டதாரி நீர் பாச்சுகிறார் பாருங்க நம்ம நண்பன்தான்
இதன் குறிப்பிட்ட 12-20 நாட்களின் இடைவெளியில் அறுவடை அதாவது வெற்றிலை பறிக்கப்படும். இது கீழிருந்து மேல்நோக்கி மூன்று அல்லது நான்கு வெற்றிலைகள் கைகளினால் பறிக்கப்படும். பின்னர் இது வளர்ச்சியுற்று கொழுந்து கம்புகளின் உச்சியை அடையும் போது இதனை "அலம்பல்" என்று கூறப்படும் அதாவது கிளைவிட்ட மேலுள்ள கம்புகளில் கொழுந்து படர்வதைக் குறிப்பர். இதன் பின்னர் இக்கொழுந்து கீழ் இறக்கப்பட்டு பதிக்கப்படும். அதாவது மண்ணினுள் வெற்றிலைக்கொடி சுருட்டப்பட்டு மண் போடப்பட்டு மீண்டும் சிறிய உயரத்துக்கு கொழுந்து கம்போடு கட்டப்பட்டு மீண்டும் வளர்க்கப்படும். காட்சிகள்............
ஆரிக்கை
அலம்பலில் கொழுந்து
அலம்பலில் இருந்து கொழுந்து இறக்கப்படுகிறது....
இறக்கப்பட்ட கொழுந்து மீள கம்புடன் கட்டப்படுதலும் கொடி மண்ணுக்குள் மறைக்கப்படலும்


நீர் ஊற்றி வளர்க்கப்படும் வெற்றிலைக் கொழுந்து இரசாயனப் பசளைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் மாட்டெரு மூலம் இயற்கைப்பசளையையே இடப்படுவதால் வெற்றிலைத்தோட்டச் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் மாட்டுக்கொட்டில்களில் மாடுகள் வளர்த்து இதிலிருந்து மாட்டெருவும் மண்ணடன் சேர்த்து தோட்டத்துக்கு இட்டு கொழுந்து வளர்க்கப்படும். இது நீர் வெற்றிலை என்பதால் தினமும் தோட்டத்துக்கு நீர் ஊற்றப்பட வேண்டும்.

மாட்டுக்டுகொட்டில் மாட்டெரு உற்பத்தி
ம்ம்ம்..........
இதுதான் நம்ம வெற்றிலைச்செய்கை. எமது கிராமத்தவர்களின் பிரதான தொழில்களில் இதுவும் ஒன்று. இத்தொழிலாலே எனது குடும்பப் பொருளாதாரப்பாரம் தாங்கப்படுகிறது. பாருங்க நம்ம அப்பாவும் மாமாவும் தோட்டத்தில் சாப்பிடுறாங்க
வேலைகளுக்கிடையில் இளைப்பாறும் உறவுகள்........

Saturday, January 30, 2010

மீன்பிடித்தொழிலும் நம்ம பாரம்பரியமும் மாறுமா???

சமையலறையிலிருந்து
அம்மா: "தம்பி கடக்கரையில்(கடற்கரை)மீன் படுதாம் எழும்புடா மீன் வாங்கிட்டு வாடா... "
"என்னம்மா சும்மா நித்திரை கொள்ளவிட மாட்டியா??"... என்று முணுமுணுத்து... "ம்ம்ம்ம்மா ... அப்பா " எண்டு எழும்பி காலைக்கடனையெல்லாம் முடித்துக்கிட்டு கடற்கரைக்கு போனேன். "ஓடியா ஒரு கை பிடி.. ஏலோ...ஏலோ..."என்ற ஆர்ப்பரிப்புடன் வலை இழுக்க ஆரம்பித்தார்கள் நானும் பிடித்து இழுத்தேன்...

ஆமா.. எப்படி இது .........?
நம்ம ஊருல கடல் மீன்பிடித்தொழில் ஆத்து(நன்னீர்) மீன்பிடித்தொழில் என இருவகை தொழில்களிலும் பாரம்பரிய தன்மையே இன்னும் காணப்படுகிறது.
பாருங்க கரைவலை என்று அழைக்கப்படும் நம்ம ஊரு(தேற்றாத்தீவு) மீனபிடித்தல் முறை எப்படி என்று..

முதல்ல தோணியில்(canoe) கரைவலை ஏற்றப்படும் இது தான் கரைவலைத்தோணி அதன்மேல் கரைவலை உள்ளது.

பின்னர் மீன்கூட்டத்தைக் கண்டவுடன் "தோணி" தள்ளப்பட்டு வளைத்து கரைவலை போடப்படும்.(அதாவது தோணியின் மூலம் வலை கடலுக்குள் இடப்படும்) மீன்கூட்டத்தை (Schooling of fish) "சிகப்பு " எண்டு சொல்லுவர். "டேய் அங்கபாரு சிவப்பு தெரியுது ...." இப்படி சொல்லுவர்.
பின்னர் இழுக்கும் கயிறு இதனை "கம்பான்" கயிறு என்றழைப்பர். இது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தோணியிலிருந்து கொடுக்கப்படும். பின்னர் இருபக்கமும் கயிறு இழுக்கப்படும் இதனையே வலையிழுத்தல் என்று சொல்லப்படும். கயிறு இழுக்க பெரிய கண் வலை இழுக்க பின்னர் சிறிய கண் வலை இழுக்கப்படும் அதன்பின் மிகச்சிறிய கண் உள்ள வலை அதாவது மடி என்றழைக்கப்படும் வலை கரையேறும். இதிலே தான் சிறைப்படுத்தப்பட்ட மீன்கள் இருக்கும். பின்னர் தோணி கரைக்குத் தள்ளப்படும்.
பாருங்க கரைவலை மீன்பிடிக் காட்சிகளை...

இதுதான் கரைவலையின் முழுத்தோற்றம்

கடலுக்குள் வலை போடப்படுகிறது

Friday, November 6, 2009

வறுமையும் திறமையும் + எனது பாடசாலை

ஒரு திறமையின் கண்ணீர்
எனது ஆரம்பமே இங்குதான் (என்ன பிழையா ஆரமிச்சுட்டனே என்று நினைக்காதீங்க)
நான் தரம் எட்டு (அப்போ ஆண்டு எட்டு) வரும் வரைக்கும் எனது பாடசாலை மட் / றோ.க.த.கலவன் பாடசாலை என்றிருந்தது. பின்னர் தேத்தாத்தீவு மகா வித்தியாலயமாக மாற்றப்பட்டது. அப்போதிருந்தே என் பாடசாலை வறுமையின் பாதையில் பயணம். அது வேற ஒன்றும் இல்ல நம்ம ஊரு பொருளாதாரம் வறுமைக் கோட்டத்தாண்ட பயந்துகொண்டே இருந்தது இருக்குது. இப்பதான் கொஞ்சம் எகுறுது..
இருந்தாலும் மீண்டும் வறுமையின் கொடி பறக்குது ...(அப்போதிருந்தே இப்போ வரைக்கும் இதே எழுத்து இன்னும் புதுப்பிக்க முடியாமல்)



வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய இந்த பதிவு வாழ்க்கை சொல்லுது எண்டு நினைக்காதீங்க.கண்களில் கண்ணீர் பீறிட்டு வருகுதுப்பா அதுதான் ......
இப்போதுதான் வெற்றிகரமாக மாகாணத் தமிழ்த் தினப் போட்டிகள் வெற்றி வாகை சூடிய வாகரையில் நடந்தேறிச்சு.


 

நம்ம பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் மூன்று முதலிடங்களை மாகாண மட்டப் போட்டிக்கு கொண்டு செல்ல பட்ட வேதனையை எப்படிச்சொல்லுவது ......சற்று கேளுங்கள்
ஒன்று - கட்டுரையாக்கம்
அடுத்தது நாடகம்
மற்றையது வில்லுப்பாட்டு
(தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்குது)

அதிக மாணவர்கள் கூலித்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை விவசாயம் செய்யும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள்.... மூன்று நிகழ்வுகளுக்கும் பங்குபற்றும் மாணவர்களை கூட்டிக் கொண்டு செல்ல போக்குவரத்து சாப்பாட்டு வசதிகளுக்கு எமது பாடசாலையில் அவ்வளவு நிதி இல்லை .... தனி வாகனம் கூட பிடிக்க வசதி இல்லாத நிலைமை...
பாவம் ஆசிரியர்களுடன் அதிபர் அதை விட நமது மாணவர்கள் ...

இருந்தாலும் அங்க இஞ்ச அடகு வைத்தாவது கூட்டிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆசிரியர்களுக்கும் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆதங்கம் நமது மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும்.
ஒரு வாகனம் வாடகைக்கு பிடிச்சாச்சு ...


காசு அதிகம் தேவை... இனி என்ன போட்டியில் பங்குபற்றாத சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களையும் (ஆட்பலத்துக்கு இல்ல காசுப்பகிர்வுக்கு) கூட்டிப் போயாச்சு


கடும் மழை.... கடை இல்ல சாப்பாட்டுக்கு கறி சமைக்கணும் மீன் பிடிக்க கடலுக்கும் ஆத்துக்கும் அன்று யாரும் போகல மரக்கறிகளும் இல்ல .... புத்திசாலியா சில மரக்கறிகளை கொண்டு போனதால தப்பிட்டங்க ..... சமைக்கப் பட்ட பாடு


ஒரு மாதிரியா நிகழ்ச்சிக்கு தயாராயிட்டாங்க நம்ம பிள்ளைகள் ......
ஆரம்பமே அசத்தலாய் கட்டுரை முதலிடம் தங்கப் பதக்கம் ... தொடர்ந்து வில்லுப்பாட்டு தந்தது அடுத்த தங்கம்
இதுதான் இந்தவருட வில்லுப்பாடு குழு



(எமது மாணவ செல்வங்களின் வில்லுப்பாட்டு ஒளிப்பதிவை பிறகு தாரன்)

வில்லுப்பாட்டப் பத்தி சொல்லணும் சென்ற முறை ஆண்கள் பிரிவில் நம்ம பாடசாலைக்கு முதலிடம் கிடைத்தது .....நன்றிகள் தேநூரானுக்கே ...
சரி முதல் நாள் பெற்ற வெற்றிகளோடு களத்தில் அடுத்த நாள் நாடகத்துடன் நம்ம பிள்ளைகள் ...... மிக அழகாய் திறமையை வெளிக்காட்டினர்.... பங்கு பற்றிய மற்றைய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஏன் நடுவர்களுக்கே பிடிச்சுட்டு....
ஆயினும் கிடைத்தது இரண்டாமிடம் என்றதுமே நம்ம பிள்ளைகளோடு ஆசிரியர்களும் அழுது ஆர்ப்பரித்தனர்.........

ஏனெனில் வழமைக்கு மாறாக இம்முறை ஐந்து நடுவர்கள் (வழமையில் மூன்று)....
திரு,தண்டா என்பவரே தலைமை வகித்தவர் அனைத்து நிகழ்வுகளுக்கும் ...
அவரே வாய்விட்டு சொல்லிவிட்டாரு உண்மையில் தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்துக்கே முதலிடம் ஆனா சேனையூற்று (சரியா பெயர் ஞாபக மில்ல) மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருக்கிறார்கள் அவர்களையும் தட்டி எழுப்பவே அவர்களுக்கு கொடுத்தோம்... தயவு செய்து மன்னியுங்கள் மனித உரிமை அமைப்புகளுக்கு போக வேண்டாம் ...என்று ஆறுதல் சொல்லி நம்ம பிள்ளைகளின் திறமைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டம் தீட்டிட்டாரு .....

இப்போ நம்ம பிள்ளைகள் வெறுப்புணர்வுகளுடன் ..... அடுத்த போட்டிக்கு போகக் கூட தெம்பில்லாமல் ...... இப்போ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினூடாக முறைப்பாட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் ....பார்ப்போம் நல்லது நடக்குதா என்று.

ஏனெனில் தேசிய மட்டப் போட்டிகள் வழமையாக தலைநகரில் நடந்தால் அதற்கு கூட பணச் செலவைப் பற்றி யோசித்து இருக்கையில் இப்படி அநீதி அங்கேயும் நிகழ்ந்தால்(மற்றப் போட்டிகளுக்கும்) என்ற கிலேசத்துடன் எனது பாடசாலை ....
ஏதோ திறமைக்கு பரிசு கொடுங்கள். நமது மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமூட்டுங்கள்.
ஏழையின் சிரிப்பில் திறமையைக் காணுங்கள். அங்கே அவர்கள் வாழ்வுக்கு வித்திடுங்கள். எங்கு பிழை நடந்தாலும் சரியான பாதையைக் காட்டுங்கள். பெரியவர்களே!!! எமது பிள்ளைகளின் மனதில் காயங்களுக்கு இடம் கொடுக்காமல் ரணங்களுக்கு மருந்து கொடுங்கள். நாளைய தலைவர்கள் அவர்கள் முளையிலே கிள்ளி விடாதீர்கள்.
நீதி சொல்லும் நடுவர்களே ...!
நக்கீரர்களாகுங்கள் !!!
இருந்தாலும்
எமது மண்ணின் சொத்தான மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்
முன்னேறுங்கள் தடைகளை உடைத்து

Monday, November 2, 2009

ஏறு கெளுத்தி ....

நம்மட ஊருல (தேற்றாத்தீவில்) இப்ப ஏறு கெளுத்தி சீசன். என்னடா இது புதுசா இருக்கு எண்டு நினைபவர்களுக்கும் அந்த அழகிய மழைக் கால நாட்களை மீட்டிப் பார்க்கும் நம்மவர்களுக்காகவும் இந்த பதிவு..
பருவ கால முதல் மழை ஆரம்பித்தாலே ஊரெல்லாம் "ஏறு கெளுத்தி" என்ற பேச்சு.
மிக ருசியானது ஏறு கெளுத்தி நம்ம அம்மாட சமையலில் வந்தா....இந்த மீன் கறியில் விசேசம் என்னண்டா அதன் சினை தான் (பாவம் அதன் இனப் பெருக்கத்தின் முட்டைகள் தான் இந்த சினைகள்). அதனை வேறாக எடுத்து குழம்பு சமைக்க (உண்மையில் ஆணம் பேச்சு வழக்கில் குழம்ப்புக் கறி) ச்சோ .... வாய் ஊறும் நாக்கில் அதாவது எச்சில் ஊறும்.....

கெளுத்தி என்பதன் ஆங்கில பெயர் Cat fish.

ஆம் நமக்கு பக்கத்தில தான் நமது மட்டக்களப்பு வாவி இதுவே மட்டக்களப்பின் பெரிய நன்னீர் ஏரி. இதுலதான் பாடுமீன்களும் (நீரர மகளீர்) கச்சேரி நடத்துவதும் நீங்கள் அறிந்ததே.

நிற்க, நம்மட மக்களுக்கு நல்ல மீன் இனங்களை வாரி வழங்கும் இங்கு தான் இந்த கெளுத்தி இனங்களின் படைஎடுப்பு.
மழைக் காலங்களில் ஊர்களில் இருந்து வாய்க்கால் வழியே பெருக்கு நீர் வாவியை சென்றடைய, அந்த ஓடும் நீரில் இந்த கெளுத்தி மீன்கள் வாவியிலிருந்து வரம்புகளுக்கு எதிர் நீச்சல் போடும் அப்போது தான் அவை ஏறும் கெளுத்தி "ஏறு கெளுத்தி" என்று பொருள்படும். அப்படி ஏறும் பொழுது அவற்றை ஒரு வலையில் பிடித்து எடுப்பர்.(அந்த வலையை "அத்தாங்கு" என்று சொல்லுவர்)

அத்தாங்கில் சிக்கும் கெளுத்திகள்












பிடித்த மீன்கள் ஒரு பார்வைக்கு






ஆனா நம்ம பிள்ளைகள் இப்போ சற்று வித்தியாசமாக அவற்றை எப்படி பிடிக்கிறாங்க எண்டு பாருங்க.







இப்படி வாவி நீரை வயல் வரம்புகளில் கட்டி வைத்து அத இரவுப் பொழுதுகளில் திறக்க விடும் போது இந்த கெளுத்தி மீன்கள் வரம்புகளுக்கு ஏறும் போது அவற்றை பிடித்துக் கொள்ளுவார்கள்.

சரி இப்ப பாப்போம், நம்ம மட்டக்களப்பு வாவி + கண்டல் தாவரங்கள் + மீன் பிடித்தல் + அழகு


















வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு