Pages

Saturday, February 19, 2011

மனம்போன போக்கிலே..

தேடல்களில் சிக்கித்தவிக்கும்
மனம்
மனம்போன வாழ்க்கையில்
வாழும் நான்
நான் என்பதை அறியுமுன்
நீ யார்
யார் நீ என்று ஏக்கமுற
நான் என்பது மறந்துபோகிறது

ஸ்பரிசங்களை நேசிக்கிறேன்
புன்னகை தவழும் இலைகள்
இலைகளில் பூக்கும் பனித்துளிகள்
பூமிசுற்றிய அலைகள்
வானம் மூடும் மேகம்
மேகம் தீண்டும் விரல்கள்
நான்
ஸ்பரிசங்களை நேசிக்கிறேன்

இதயம் வருடும் இசை
இசைந்து போகும் வாழ்க்கை
வாழ்க்கையில் கரையும் கண்ணீர்
கண்ணீரில் கரையவிடும் கண்கள்
தவாளிப்புக்களும் தேய்வுகளும்
செருப்புகளில்

வெயிலின் வெப்பதுகள்கள்
வரண்ட பூமி நாக்கு
பட்டமரம் கூறும் செய்தி
வெட்டும் மரங்களின் தேவை

மனம்போன வாழ்க்கையில்
வாழும் நான்
நான் என்பதை அறியுமுன்
ஏன் என்பது மறந்துபோகிறது
வாழுகிறேனா வாழ்வேனா
எனக்காகவும் உனக்காகவும்

(Manivarma Ko அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து படம் -  நன்றி அண்ண)

Wednesday, February 16, 2011

மீண்டும் வருவேன்.......

கடற்கரை, கிரிக்கட்திடல்
உங்கவீட்டு முற்றம்
பக்கத்துல நீ
பஸ்வண்டி நீள் பயணம்,
அந்த நீலச் சைக்கிள்
கலாசாலை நெடும் சாலை
நான் எழுதிய கவிதை
உன் பெயரில்
அவள் பார்க்கும் சுவர்களில்
ஞாபகச்சிதறல்கள்

எத்தனை கனவுகளை தின்றிருப்பாய்
காயங்களில் காய்ந்துகொண்டிருக்கும்

நேர்கோட்டுச் சூரியரிப் பகல்களும்
பனிவிழும் இரவுகளும்
நீ தரும் அவஸ்தைகளும்

தேவைகளை கேட்டுக்கிறங்கி
உனது ஆசைகளின் தடைதாண்டல்
'நான்' அன்பானவன்

உன்பேச்சுக்கு கட்டணம் அறவிடுகிறார்களோ
தெரியவில்லை
நிச்சயம் உதடுகளை விசாலித்து
கன்னத்தை சுருக்கிவிட காசுதேவையில்லை

ஆயிரம் அன்புகளை அடிக்கிக்கொள்கிறேன்
உண்டியல்களில்
தலையசைத்துவிடு பார்த்து

உன் கண்ணீரின் காயங்களை துடைத்துக்கொள்ள
மீண்டும் மீண்டு வருவேன்
உள்மன ஆழம் கண்டவன் நான் என்பதால்

Tuesday, February 15, 2011

இது ஸ்டேடஸ் - 11

"வாழ்க்கையின் ஒரு பாதி நான் ஆனால் மறுபாதி ?? - என் ரசனைகளின் ஓரத்தில் தெரியும் அன்பு உணர்வுகள் தான்.
நுனி நாக்கில் ஈரப்படுத்துவதை விட இதயத்தின் ஒரு சொட்டு இரத்தம் இனிக்கும்"

"எதிர்கால கனவுகளை விட நிகழ்கால நிஜங்களே மேல்
அதை வெல்வோம் வாருங்கள்"

"அடைமழை
அனுபவிக்கிறோம்.....""

"நாடுபூராக மழையும் வெள்ளமும் மண்சரிவும் ஆனாலும் சுதந்திர தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டதாம்..
ஆமா சுதந்திரம் யாருக்கு?யார் கொண்டாடினவர்கள்"

""நான் விழக்கூடாதென்று ஏணியை பிடித்துதுக்கொண்டு இருக்கிறாள் அம்மா.
எப்போதும் இவனை ஏற்றவேண்டும் என்றும், கையில் விளக்கும் கொண்டுபோ என்கிறாள்"
----தாய்மை படும் பாடு தாய் படும் பாடு----""""

"என்னை உனக்க பிடிக்காமல் போகலாம்..
உனது கண்களின் ஓரத்தில் நான் இருப்பேன் என்று எனக்கு தெரியும்.
கண்ணீர் உப்பு நுனிநாக்கில் கரைகிறது.."

"உன்பேச்சிலும் எழுத்திலும் நீயிருப்பாய் உன்பதவியும் பொருளும் உன்னை அடயாளப்படுத்தாது"

"நானெடுக்கும் முடிவுக்கு சொந்தக்காரன் என்பதால் அதனை மனதார விரும்பி ஏற்றுக்கொள்வேன். பிறரின் போலியாய் இருப்பதிலும் நானாக இருப்பதில் மகிழ்ச்சியடைவேன். எப்போதும் எனது நான் என்பதில் நாங்கள் இருக்கும்"

"ஒரு துளி தேனெடுக்க தேன்கூடை ஏன் கலைக்கிறாய்??"

"எனக்காகவும் சிலவேலைகளை செய்துமுடிக்கவேணும் தொலைபேசியில் அழைப்பெடுக்க வேண்டாம் இன்று"

""கருப்புக்களில்தான் வெள்ளைப்புள்ளிகள் தெரியும் நான் வெள்ளைப்புள்ளியா இல்லை கருப்பு படலமா என்பதே உனக்குள்ள கேள்வி,
இப்பொழுதும் ஆர்ப்பரிக்கிறேன் நீ கருப்பானால் நான் வெள்ளைப்புள்ளி. நான் கருப்பாக இருப்பேன் நீ வெள்ளைப்புள்ளியாக"""

"உன்னை உன்னால் எழுதமுடிந்தால் தான் என்னால் வாசிக்கமுடியும் உன்னை. எழுது வாசிக்கிறேன்"

இனி படித்துப் பிடித்தவை சில

"வாழ்வது எளிது
அன்பு செய்வது எளிது
புன்னகைப்பது எளிது
வெற்றி பெறுவதும் எளிது
ஆனால் எளிமையாய் இருப்பதில் தான் இருக்கிறது கடினம்""

காதல் ஒரு 'விசிட்டிங் கார்ட்'(Visiting Card)
வாழ்க்கை என்பதோ ஒரு 'கிரெடிட் காட்" (Credit debit Card)
மனைவி என்பவள் ஒரு 'விசா காட்'( Visa Card)
காதலரோ ஒரு 'ஏ ரி ம் காட்' (ATM Card)
நட்பு என்பது ஒரு 'லைஃப் காட்' (Life Guard) அதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்..


(Manivarma Ko அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து அழகிய அற்புத படம் நன்றி அண்ணா)



Saturday, February 12, 2011

சிதறும் சில்லறைகள் - 12 (நினைவுகள்)


இன்றையநாள்
சார்ல்ஸ் டார்வின் தினம் (Charles Darwin Day)
இயற்கைத் தேர்வு மூலம் கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டு மனிதனுக்கு உணர்த்தப்பட்ட உயிரிகளின் அடிச்சுவடுகளுக்கு காரணம் கற்பித்த அறிஞர் சார்ல்ஸ் றொபேட் டார்வின் (CHARLES ROBERT DARWIN)அவர்கள் பிறந்த இந்நாளை சார்ல்ஸ் டார்வின் தினம் அல்லது டார்வின் தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.
விக்கிபீடியாவில் இருந்து
டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூருகிறார்கள்.

இத்தினத்துக்காக சர்வதேச டார்வின் தின நிதியம் (The International Darwin Day Foundation) உருவாக்கப்பட்டு தனது இணையத்தளத்தில் உலகளாவிய ரீதியில் இத்தினத்தை விஞ்ஞான மற்றும் மனிதநேய வளத்திற்காக கொண்டாடுகிறது. உலகில் இத்தினக் கொண்டாட்டம் தொடர்பான விடயங்களை வெளியிடுகிறது. இத்தளத்தை இங்கு காண்க

ஒரு ஸ்டேடஸ்

பல நாட்களுக்குப்பிறகு எங்கட ஊர் கடற்கரைக்கு சென்று திரும்பினேன். இதன் பின்னர் எனது டுவீட்டரில் இட்ட இஸ்டேடஸ்
##நீண்ட நாளைகளுக்குப் பிறகு கடற்கரையில் கால்தடங்களை பதிவு செய்தேன்.
அலைகள் வந்தது நினைவுகளுடன்.
அடித்துநொருக்கிச்சென்றது தடங்களை,
இன்பநிலை##

சில காட்சிகள்

ஊரின் இன்றைய கடற்கரை பின்னேரப் பொழுதில் சில காட்சிகளை பிடித்துக்கொண்டேன்






ஒரு புத்தகம்
காதலர்களுக்காக ஒரு புத்தக அறிமுகம். முன்னைய கவிஞர்களில் மு.மேதா மற்றும் வைரமுத்து காதல் கவிதைகளுக்காக புதுக்கவிதைகளை (காதலர்களுக்கும்) தந்து பல கவிஞர்களுக்கு ரோல் மொடலாக இருந்தனர். பின்னர் காதல் மொழிபேசிய தபு சங்கர் வழிமொழிந்த கையோடு அனேக புத்தகங்கள் ஒரு காதலுக்குள் மூழ்கிய நிலைதந்துகொண்டிருக்கின்றன. இங்கு "காதல் கேளாய் தோழி" என்று கவிஞர் தமிழ் சத்தியனின் புத்தகத்தை படியுங்கள். இங்கு

"உன்னைப் பற்றி
நான் எப்படி சொல்ல
என்தோழியிடம்
சொல்ல சொல்ல
தீர்ந்துவிடும் சொல்"

அவரின் இந்தக்கவிதையே அந்தப்புத்தகத்துக்கு நான் சொல்லிக்கொள்ளுவதும். கிடைத்தால் படியுங்கள்.



முன்னைய காதல்
காதலர் தினத்துக்கு முன்னதாக சிதறல்களில் சிதறிய சில காதல்களைப் பாருங்கள் காதல் என்றால் என்ன என்பதை சொல்லியிருக்கிறேன். வாசிக்கத்தவறியவர்களுக்காக

காதல் சாதல்

ஒரு ஆணாய்:
பதின்மவயது அந்தா இந்தா என்று ஆணாய் இருந்து அர்த்தம் தேடும் பருவம். காதல் என்றால் என்ன என்று விழுந்து புரள எண்ணும் மனது. காதல் பாடல்கள் பிடிக்கும் ஐட்டம் அல்லது பிகருகள் என்று எதிர்ப்பால் தேடும் பருவம்.

"பருவம் படர்ந்து
பார்வைகளில் சிதைந்து
காதல் மொழி
எதுவென தேடும் மனது"

மரண ஊர்வலம்

Wednesday, February 9, 2011

ஆதலினால் நான்.....

எத்தனையோ சப்பதங்களை
நுகர்ந்த உன்னால் தான்
நிசப்தங்களின் அலைவரிசைகளை
மொழிபெயர்க்க முடியும்

சப்தங்களாலே பேசப்பட்ட
நானும் நீயும்
கடைசியில் 'அதுவும்'
சில மெளனங்களை கொணர்ந்து
உயிருக்கும் உயிரற்றவைக்கும்
அர்த்தங்களை சூடிச்சென்றது

ஒரு துளி தேனுக்கு
ஆசைப்பட்டு
தேன்கூட்டைக் கலைக்க
நானொன்றும் வேடனல்லன்

காதலைவிட காதலிக்கப்பட வேண்டும்
உன்னை நான்

Tuesday, February 8, 2011

கருவாடும் வாழ்க்கையும்

மழைக்காலம் எண்டாலே ஒவ்வொருவருக்கும் கஸ்டங்கள் நிறைந்தாககத்தான் அமைகிறது. ஆனால் இம்மழையில்லையேல் உயிர்கள் வாழமுடியாது என்பதை நாம் மறந்துகொண்டுதான் இருக்கிறோம். மழைவேண்டிப் பிராத்தனைகள் நடைபெறுவதன் காரணம் என்ன என்பதை தெரியும்கால் விளங்கும் நமக்கு.

ஆனால் எதுவும் அளவுக்கு இருத்தல் வேண்டுமில்லையா. மழைக்காலம் போதும் இது வெள்ளக்காலமாய் இருக்கிறது. இதற்குக்காரணமாய் லா-நினோவின் தோற்றப்பாடாக கருதும் காலநிலைமாற்றம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆயினும் இக்காலநிலைமாற்றத்துக்கு நாம் தானே காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறோம். ஓசோன் படை வறிதாக்கம், பச்சைவீட்டு வாயு விளைவு, காடுகள் அழிப்பு, காபனீரொட்சைட்டுப் பெருக்கம் என்றெல்லாம் அடிக்கிக்கொண்டு போகிறோம். நமது வளர்ச்சியில் ஒரு தேய்வு இருக்கத்தானே வேண்டும்.

மழைக்காலம் என்று சொல்வது எங்களுக்கு வடகீழ்பருவப்பெயர்ச்சி மழை தரும் காலமே. வழமையில் இந்த மழைக்காலத்துக்காக நாம் எப்போதும் எங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது இயல்பு. பாரம்பரியமாக வழமையான உணவுகளை விட இக்காலத்து உணவுகள் சற்று வேறுபட்டதாக இருக்கும். மரவள்ளிக்கிழங்குகளும் மாங்காய்ச் சம்பலும், உப்புக் கருவாடும் தண்ணிச்சோறும், கருவாட்டுக்குழம்பும் சுடுசோறும், கூனிச்சுண்டல், புட்டும்(பிட்டு) இடியப்பம் சம்பலும், தேங்காய்ப்பூரொட்டி.. என்று அடிக்கிக்கிட்டு போகலாம். இதற்குக் காரணம் உண்மையில் இக்காலத்தில் உணவுப்பொருள்களுக்குரிய தட்டுப்பாடும் விறகுகள் ஈரப்படுவதுமாகும். இதனால் குறைந்தளவு எரிபொருள்களில் சேமிக்கப்பட்ட உணவுகளை சமைத்து உண்ணப்படுதலேயாகும்.

இதற்காக அம்மா கருவாடு வாங்கிட்டுவா என்று சொன்னதுமே எனக்கு பிடித்த உப்புக்கருவாடுகளை வாங்கிக்கொண்டு கொடுக்கக்கூடியதாக இருந்தது முன்னைய வெள்ளத்துக்கு. ஆனால் தற்பொழுது நீண்டுகொண்டிருக்கும் இந்த வெள்ளமழைக் காலத்தில் மக்களுக்கு பெரும் அவஸ்தையை ஏற்படுத்தியிருக்கிறது. மீன்களுக்கு ஏற்பட்ட ஒருவகை நோய் போன்ற தன்மை(காயப்பட்ட மீன்கள்), மற்றும் மரக்கறிவகைகளுக்கும் தட்டுப்பாட்டு நிலைதோன்றியிருக்கிறது. மரக்கறிகள் உற்பத்தி செய்யும் நம்ம ஊருக்கே இந்த நிலைமை என்றால் நினைத்துப்பார்க்க முடியாத வேதனையைத் தருகிறது இந்த வெள்ள அனர்த்தம். மரக்கறிச்செய்கைகளை மூடிய வெள்ளம்.


மீன்பிடிக்கமுடியாத அளவுக்கு கடலும் கொந்தளிப்புடனும் வாவிமீன்பிடித்தொழிலும் மேற்கொள்முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாவி மீன்களில் காயங்கள் காணப்படுவதால் சிலவேளை இவை நோயுற்றதன்மையைக் காட்டலாம் என்ற அச்சத்தில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதனால் கருவாடுகளை நம்பிக் கடைக்குப்போனால் அதன் விலைகள் அதிகரித்தவண்ணமுள்ளன. இது ஒரு நடுத்தர அல்லது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மிக முடியாதவிடயம். பட்டினி என்பது ஆங்காங்கே எட்டிப்பார்க்கக்கும் என்பது திண்ணம். பொருளாதார மூலங்கள் அழிக்கப்படுவதனால் அல்லது வருமானம் தரும் தொழில்முறைகளை மேற்கொள்முடியாததால் மக்கள் நிலமைமோசமடையும். இதனால் வெள்ளஅனர்தத்துக்கு பின்னான விளைவுள் பாதகமாக அமையக்கூடியதாக இருக்கும்.

ஆனாலும் இந்த மழை விடுவதாய் இல்லை. இந்த மழைக்காலம் உடுதுணிகளை காயவைக்க முடியாததால் பெரும் அசெளகரியத்துக்குள்ளாகின்றோம்.
இதைத்தவிர குடிநீரில் சுத்தமான தன்மை குறைவு. நிலக்கீழ் நீரை நம்பி வாழும் நமக்கு கிணற்றுநீரை பருகுவது கேள்விக்குறியாக இருக்கிறது. சுட்டாறிய தண்ணியைக்குடிச்சித்தான் தேறவேண்டி இருக்கிறது. ஆனால் இது எல்லோராலும் இயலாத காரியம்.


இதனைவிட இந்த மழைக்காலங்களில் நீர் தேக்கிவைப்பதற்காகவே குளங்கள் கட்டப்பட்டன. இவற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இல்லாவிடில் அணைக்கட்டுகள் உடையும் அபாயம் இதனை தவிர்ப்பதற்காக வான்கதவுகள் திறக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வெள்ள அபாயத்திலிருந்து நீங்கிகொள்ள வெள்ளத்தை வடியவைக்க முகத்துவாரம்( ஆற்று/களப்பு நீர் கடலை சென்றடையுமிடம்) புதிதாக எல்லாம் வெட்டப்பட்ட வாவி நீர் கடலோடு சங்கமித்துக்கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கிழமை மழைவெள்ளம் கூட ஓரிரு நாட்களில் வடியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இதன் பிரதிவிளைவும் இருக்கிறது. இதன் அதீத நீரோட்டம் காரணமாக குடிநீர் தேக்கிவைத்திருக்கும் கிணற்று நீர் வற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சிறுவரட்சியிலேயே வழமையில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் படுவான்கரை மக்களுக்கு பின்னர் ஏற்படப்போகும் பாரிய வரட்சியைத் தாங்கொணா கஸ்டநிலமையைத் தோற்றுவிக்கும் என்பது தவிர்க்கமுடியாதாக இருக்கும்.

ஆக கருவாடு வாழ்க்கை வாழ்கிறோம் கருவாடாகிறோம்......

Monday, February 7, 2011

காதலிக்கப்படும்போது....



(படம்:Manivarma Ko's Photos முகப்புத்தகத்திலிருந்து)

இரு கண்களில்
ஓர் அழுகை

உள்ளங்களிரண்டில்
ஒரு புன்னகை

உதடுகளிரண்டில்
ஒரு உச்சரிப்பு

இரண்டு என்றவைகளுக்கெல்லாம்
ஒன்று என்ற பொருள்

காதுமடல்களில்
செல்லப்பெயர்களின்
தேடல்

மறந்துவிட்டு
வாழும் வாழ்க்கை

வாழ்கையில் சிக்கிய
தேவை

சிக்கலில் சிக்கி
அவிழ்க்கும் முடிச்சுகள்

காதலிக்கப்படும் போது......

Friday, February 4, 2011

துண்டிக்கப்பட்ட வெல்லாவளி

தற்போது ஏற்பட்டுள்ள அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பின் தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்று (வெல்லாவளி) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் முற்றாக தரைவழிப்பாதை தொடர்பறுந்த நிலையில் வள்ளங்களினூடான தொடர்புகளுடன் இருக்கிறார்கள்.

இப்பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு பெற்ற தகவல்களின் அடிப்படையில் 04-02-2011 பிற்பகல் 6 மணிவரை இதுவரை 1128 குடும்பங்களைச் சேர்ந்த 4275 மக்கள் இடம்பெயர்ந்து 18 நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 1592 சிறுவர்களும் அடங்குவதாகவும் குறிப்பிட்டார். வேத்துச்சேனை, ஆனைகட்டியவெளி, சின்னவத்தை, மலைக்கட்டு, இராணமடு, முனைத்தீவு,பழுகாமம், பட்டாபுரம் போன்ற அனேக கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனால் கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதால் மக்கள் மிகவும் கஸ்டப்படுவதாகவும் அவர்களுக்கு உலர்உணவுகள் மற்றும் படுக்கைவிரிப்புகள்(பாய்), உடுதுணிகள் போன்றன அவசரமாகத் தேவைப்படுகின்றன.
முடிந்தளவு உதவி நல்குபவர்கள் உதவிக்கொள்க. உறவுகளே அனர்த்தத்தின் தாக்கங்கள் அறிவீர்கள். முடிந்தளவு உதவுங்கள்.

இங்கு சென்று பட்டிருப்பு பாலத்தின் நிலமையைக்காட்டும் படங்கள் பார்க்க நன்றி ஹரி



கடந்த மாதம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு.
பட்டிருப்பு பாலத்தின் போக்குவரத்து நிலைமை - 13.01.2011

இதனைவிட இப்பொழுது மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

லா -நினாவும் மாற்றங்களும் (La - Nina)

அண்மைக்காலங்களில் இலங்கை உட்பட அவுஸ்ரேலியா பிரேசில் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட வானிலைக் குழப்ப நிலைக்கு காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுக்கொண்டடிருக்கிறார்கள்.
இதற்கு முழுக்காரணம் காலநிலைமாற்றம் (Climate Change) என்பதை ஒத்துக்கொண்டும் இதனோடு இயற்கையான வளிமண்டலத் தோற்றப்பாடும் அதாவது எல்- நினோ (தெற்கத்திய அலைவு)வும் லா - நினோவும் காரணமாகும் என தெரிவிக்கின்றனர்.

எல் நீனோ-தெற்கத்திய அலைவு (El Niño-Southern Oscillation) என்பது ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் - நினோ, லா - நினா எனப்படும் இவை கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள்.
"எல் நினோ" (El Niño is Spanish for "the boy" and refers to the Christ child) என்பது இஸ்பானிய மொழியில் "சிறு பையன்" என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் பாலன் யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

எல் நீனோ-தெற்கத்திய அலைவு, ஆனது சமுத்திர வளிமண்டலத்தில் தளம்பல்கள் ஏற்பட்டு பூகோள வளியோட்டங்களில் மாறுதல்கள் ஏற்படுவதால் உலகம் முழுவதற்குமான வானிலை பாதிக்கப்படும் தோற்றப்பாடாகும். உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வரட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை எதிர்வு கூறுவது தொடர்பில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனைஎதிர்வு கூறுவது தொடர்பில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.
(விக்கிபீடியா)

இதேபோல "லா நினா" (La Niña - from Spanish as "the girl-child")என்னும் சொல் "சிறிய பெண்பிள்ளை" என்னும் பொருளுடையது. 1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.

"லா நினா" தோற்றப்பாடு பொதுவாக அதிகரிக்கும் குளிர்நிலையாக கருதப்படுகிறது. இதனால் பின்வரும் மாற்றங்கள் வளிமண்டலத்திலும் சமுத்திர சுற்றுவட்டத்திலும் ஏற்படுகிறது.
* மத்திய மற்றும் கிழக்கு வெப்பப்பசுபிக் சமுத்திரத்தில் கடல்மேற்பரப்பு வெப்பநிலையில் வழமையானதை விட அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் மேற்குநோக்கி வளிமண்டல காற்றோட்டம் மேற்குநோக்கி தள்ளப்படும்.
* வெப்ப ஓட்டம் அல்லது மழைக்காலநிலை அவுஸ்ரேலியா, பப்புவா குனியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்படும்
* வழமையைவிட கடுமையான காற்றோட்டம் கிழக்குப்பக்கமாக பசுபிக் சமுத்திரத்தைக் குறுக்கறுக்கும்.ஆனாலும் இது அவுஸ்ரேலியாவை எட்டவேண்டிய அவசியமில்லை.

இதனால் லா-நினாவானது சிலநேரங்களிர் தெற்கத்தைய எதிர் அலைவாக (anti-ENSO: anti-El Niño-Southern Oscillation)கருதப்படுகிறது.

பசுபிக் சமுத்திரத்தில் லா -நினா தோற்றப்பாடு மற்றும் அதன் வளிமண்டல சுற்றோட்டத்தில் அதன் விளைவு வரைபடம்


சாதாரண சுற்றோட்ட நிலைமை


லா -நினாவினால் ஏற்படும் உலகளாவிய சில தெளிவான விளைவுகளைப் பின்வரும் வரைபடம் காட்டுகின்றன. நிறந்தீட்டப்பட்ட பரப்புகளில் வெப்ப அல்லது குளிரான காலநிலைலைக் காட்டுகின்றன.

ஆயினும் இப்பொழுது அவுஸ்ரெலியா, பிரேசில் மற்றும் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள நிலமைக்கு காரணமான லா -நினோ தோற்றப்பாடுகளைப்பற்றி காலநிலை விஞ்ஞானி டாக்டர் அடெம் ஸ்கைவ் (Dr Adam Scaife)கருத்துத்தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான வெள்ளப்பெருக்கு ஒரு வரலாற்றுச்சாதனையாக லா -நினாவினால் ஏற்பட்டதெனவும்,1984 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட காலநிலைமாற்றத்திற்கு் பிறகு வரலாற்றில் பதியப்படவேண்டிய இந்த வெள்ளப்பெருக்கு லா -நினாவினால தான் ஏற்பட்டதென்பதை குறிப்பிடுவதென்பது கடினமாக இருக்கிறது. காரணம் இலங்கை இந்த லா நினா குளிர்ச்சியான வளியோட்டத்தின் விளிம்பில் காணப்படுவதால் குறிப்பிட்டுச்சொல்வது கஸ்டமாக அமைந்தாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியும் காரணம் எல்-நினோதோற்றப்பாடு இலங்கையில் ஏற்படுவதால் லா -நினா ஏற்படலாம்.
ஆயினும் காலநிலை மாற்றங்களின் விளைவும் இந்ததோற்றப்பாடுகளுக்கு காரணம் என்பதையும் கூறுகிறார்.


மூலம்: இங்கு காண்க metoffice

மீண்டும் வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு

மழை..
வெள்ளம்..
காற்று.. வான் கதவுகள் திறப்பு
இந்த சொற்களால் மனம் எவ்வளவு அவதிப்படுகிறது என்பதை அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். கடந்த மாதம் அதிகளவு மழைவீழ்ச்சியும் குளிர் காலநிலையும் என்றும் பின்னர் வெள்ளம் வழிந்தோடும் நிலையும் இருந்தது. அப்பொழுது அடைந்த வரலாறு காணாத வேதனைகளும் கண்ணீரைத்துடைக்க ஓடி வந்து உதவிய கரங்களும் கண்முன்னே நிக்கும். அவ்வெள்ளமே அனர்த்தம் என்று இருந்த எமக்கு இன்னும் இருக்குது என்பதை சொல்லும்பொழுதாக இப்பொழுதும் மீண்டும் அடைமழை, அதே வெள்ளம், இல்லை அதனை மீறிய வெள்ளம். மீண்டும் இடம்பெயரும் மக்கள். ஒரு குறிப்பிட்ட மழையையே தாங்கிப்பழகிய மக்கள் இந்த அதீத வெள்ளத்தின் காரணமாக அதிக இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர்.

நீரேந்து குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பால் அவற்றின் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட மீண்டும் கிராமங்களின் நீர்மட்டம் அதிகரிக்க மக்களின் வீடுகளில் வாழமுடியா நிலைதோற்றுவிக்கப்பட்டதால் மக்கள் உயர்ந்த கட்டடங்களில் அனேகமாக பாடசாலைகளில் இடம்பெயருகின்றனர்.மெதுவான சாரல் தூறல் மழையும் தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதானால் மழைவீழ்ச்சியினளவு அதிகரித்த வேளையிலும் குளங்களிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் கனவளவு அதிகரிப்பதால் தொடர்ந்து இயல்புவாழ்க்கையில் நிலைகுலைவு ஏற்பட்டவண்ணமிருக்கின்றன. மக்களின் தொகைகளுக்கு ஏற்றளவு போதிய இடவசதி காணப்படவில்லை பாடசாலைகளில். இது மற்றொரு பிரச்சனையாகக் காணப்படுகிறது.
மட்டகளப்பு மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிக்கபட்டுள்ளது. ஆயினும் முன்னைய மழைவெள்ள அனர்த்தத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களால் ஓரளவு இயைபாக்கமடைந்த தன்மையினால் வாழமுடிந்தாலும் மட்டகளப்பு செங்கலடி வந்தாறுமூலை முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து மக்கள் கஸ்டப்படும் தன்மையை நண்பர்கள்(*அமல் மற்றும் ஹரி) தங்களது முகப்புத்தகத்தில் (Facebook)பகிர்ந்துள்ளனர்

இங்குபோய்க் காண்க

இங்கும் போய்க்காண்க









நமது மக்கள் கஸ்டப்படும்போது இயன்றளவு உதவிகள் நல்குதல்வேண்டுமல்லவா. முடிந்தளவு யாருக்காவது எப்படியாவது உதவுங்கள் நண்பர்களே.
இது வேண்டுகொள் என்பதை விட மனதநேயத்தின் கடமையல்லவா.

முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் அளவைவிட இப்பொழுது மக்கள் அதிகளவு பாதிப்புள்ளாக்கபட்டுள்ளனர். மட்டக்களப்பில் எழுவான் கரைக்கும் படுவான்கரைக்கும் இடையிலான தரைவழிப்பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீண்டும் படுவான்கரை மக்களின் தொடர்பாடல் மிகக்கஸ்டமாக இருக்கும்.

இப்பொழுது சுதந்திரதினக் கொண்டாட்டங்களால் இவ்வெள்ள அனர்த்தம் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னரும் அரசு உரியமுறையில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்கமுடியாது. வெறும் ஊடகங்களுக்கு படம்காட்டுவதற்காக மட்டும் இவர்கள் நிவாரணம் வழங்குகிறார்களாக மக்கள் கருதுவதில் தவறில்லை என்பது உள்ளாந்த எண்ணம்.

ஆனாலும் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கெல்லாம் இருந்து பல உதவும் கரங்கள் உதவியதை மறக்கமுடியாது.அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் அனவரினதும் ஆசிர்வாதங்கள் நிச்சயம் கிடைக்கும்.

உண்மையில் மக்களின் பொருளாதாரம் அதாவது வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொருளாதார ரீதாக கஸ்டப்படுகிறார்கள். மக்கள் அனேகமாக நடுத்தர மற்றும் மிகக்குறைந்த வருமாத்தைக்கொண்ட குடும்பத்தவர்களாக இருப்பதால் இவர்களின் வாழ்க்கையில் இந்த வெள்ள அனர்த்தம் பெரும் பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை. நாளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்கள், விறகுவிற்று வாழும் மக்கள், செங்கல் உற்பத்தி செய்யும் மக்கள், என்று நாளாந்த வருமானமீட்டி வாழ்க்கையைக் கொண்டு செல்லுகின்ற மக்களின் மனநிலையை பொருளாதார ரீதியாக பின்னடைவுக்குதள்ளும் நிலை காணப்படுகிறது.
ஆயினும் தற்பொழுது உணவுக்கும் இருப்பதற்கும் போதுமான நிலைகாணப்பட்டாலே போதும். இதனால் எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ அங்கெல்லாம் பூக்கட்டும் உணர்வின் உதவிக் கரங்கள்.


Wednesday, February 2, 2011

சிதறும் சில்லறைகள் - 11

இன்றைய நாள்

உலக சதுர்ப்புநில தினம்

வருடம் தோறும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுர்ப்புநில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுர்ப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் சிநேகிதன் என்று தனது வலைப்பதிவில் jayasrimahi பதிவிட்டிருக்கிறார். பாருங்கள்
உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

மழைவீழ்ச்சியும் நாங்களும்

மழை நாள் மீண்டும் துளிர்க்கிறது. உண்மையில் இது வெறுப்புணர்வைத்தான் தருகிறது. இன்றைய மழைவீழ்ச்சியின் அளவு மட்டக்களப்பு வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (பி.ப 5.30 மணியளவில்)09.1 mm ஆனால் இது மட்டக்களப்பு நகரில் பதிவாகியது. ஆயினும் இவ்வளவு மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி மழைவீழ்ச்சியைத் தராது. காரணம் ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறாக அதிளவும் குறைந்தளவாகவும் மழை தொடர்கிறது. இதுபற்றி வானிலை தகவல் நிலையத்து கடமைதரு பொறுப்பாளரிடம் உரையாடியபோது அவர் இதுபற்றி தமது திணைக்களத்துக்கு அறிவுறித்தியிருப்பதாகவும் ஓரளவு சராசரியான மழைவீழ்ச்சியின் அளவைப்பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் ஒரு கிளை அலுவலகம் மாதிரி ஒரு ஒழுங்கமைத்து அதிலிருந்து பெறப்படும் மழைவீழ்ச்சியைக்கொணர்ந்து சராசரி கணித்தல் நல்லது என்று இவர் கூறியிருக்கிறார். ஆயினும் இது உழைப்பு சார்ந்த துறையாக இது அமையாததால் அரசு இதற்காக இம்முயற்சியை செவ்வனே செய்யுமா என்பது கேள்விக்குறியே! காரணம் இலங்கையில் அனர்த்த முன்னாயத்தங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக வானொலிகளே (தனியார்) இதற்காக நம்பிக்கைக்குரிய தகவல்களைப் பெற்று பொறுப்பான செய்திகளை வழங்கிவருகிறது கொஞ்சம் மனசுக்கு திருப்தியைத்தருகிறது.
ஆயினும் ஒவ்வொரு அனர்த்தத்தைப்பயன்படுத்தி வயிறுவளர்ப்பவர்களும் அரசியலில் இல்லாமல் இல்லை. இவ்வனர்த்தங்களை அரசியலாக்குவது தான் வருத்தமளிக்கிறது. மாறாக மக்களின் வாழ்வை வயிற்றுப்பசியை வாழ்வாதாரத்தைப்பற்றி சிந்திக்கத் தவறுகின்றனர்.

வெள்ளமும் திட்டமிடாத திட்டங்களும்

மழைவீழ்ச்சி அதிகரித்த போதும் வெள்ள நிலைமை தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது எங்களது கிராமம் போன்று அனேக இடங்களில் முறையாகத் திட்டமிடப்படாத கொங்கிறீட் வீதித்திட்டங்களும் பிரதான வீதியின் காப்பெற்(carpet)வீதித்திட்டமுமேயாகும். இவ்வீதிகளில் கொங்கிறீட் வீதிகள் அமைக்கம் போது இங்கு மதகுகள் அல்லது நீர்வழிந்து செல்லக்கூடிய முறையில் அல்லது நீர் இடமாற்றப்படக்கூடியதாக அமைக்கப்படவில்லை. மாறாக திட்டத்தை செலவுச்சுருக்கமாக செய்துமுடிக்கும் எண்ணமே இருந்திருக்கிறது. மக்கள் நலன் சூழலியல் தாக்கங்கள் அனர்த்த முன்னாயத்த விபரங்கள் பற்றிய விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை.
இதேபோல் காப்பெற் வீதியமைக்கும்போது இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்கள் மூடப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் இம்மதகுகள் கல்வெட்க்கள் (culvert) அமைக்கப்பட்டன. இவ்வீதிகள் அமைக்கும்போது மக்களின் கருத்துக்கள் கூட அனர்த்தவிடயங்கள் பற்றிக்கலந்துரையாடப்படவில்லையென மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களில அமைந்துள்ள வாகரைப்பிரதேச மக்கள் மற்றும் வெருகல் பிரதேச சபைக்கூட்டத்தில் தெளிவாக்கியை நினைத்துப்பார்க்ககூடியதாக அமைந்தது இந்த அனர்த்தத்தின்போது. அவர்கள் அப்போதே கூறினார்கள் எங்களுக்கு இந்த வீதியினால் மழைகாலங்களில் போக்குவரத்து செய்ய இயலாமப்போகும் என்று. அதுஅப்படியே உண்மையாகி இருக்கிறது. இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சியாயினும் இது அதிகூடிய அனர்த்தமாக இருப்பதாலும் இப்பாதிப்பு அதிகரித்தது தவிர்க்கமுடியாதாகியது.

எந்தவொரு திட்டங்களும் மக்களுக்காக செய்யுமிடத்து மக்கள் கருத்து மிகமுக்கியம் அதுவும் அனர்த்தங்கள் பற்றிய விடயங்கள் மிக அவசியம்.

ஒருவீடியோ
நமது நண்பரொருவர் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்த காணொளி

நாமும் செய்கை பண்ணுகிறோம் ஆனால் இவ்வீடியோவைப் பார்த்ததும் நாம்???? முன்னேறவேண்டும் அபிவிருத்தியில் தொழிநுட்பத்திறனில்


வாழ்க்கை
அண்மையில் வாசித்துக்கொண்ட விடயம்
வாழ்க்கை பற்றிய ஆங்கிலச்சுருக்கம் "X X X" ஆகும்
*நேற்று என்பது ஓர் அனுபவம் - Xperience
*இன்று என்பது ஒரு சோதனை - Xperiment
*நாளை என்பது ஓர் எதிர்பார்ப்பு - Xpectation
இதனால் உங்கள் எதிர்பார்ப்பை உங்கள் பரிசோதனையில் அனுபவத்தைப் பயன்படுத்துங்கள்.


ஒரு கவிதை
நான் கஸ்டப்படும் பொழுதுகளில் புத்தகங்களே ஆறுதலாக எனது கண்ணீரைத்துடைக்கும் விரல்களாக..
கவிஞர் மு.மேதாவின் இதயத்தில் நாற்காலி எனும் நூலிலிருந்து
தந்தைக்கு ஒரு தாலாட்டு
துருதுருத்த கவலைகளில்
தூக்கமில்லா இரவுகளில்
தவிதவிக்கும் தந்தையே!
நான் தாலாட்டுப் பாடட்டுமா,?

ஓய்வெடுக்க மனமின்றி
உழைப்பதற்கும் வழியின்றி
பாய்வெறுத்த தந்தையே
நான்
பாட்டொன்று பாடட்டுமா,,

நீதியின் பாதையிலே
நெடும் பயணம் நடத்தியதால்
பாதியாய் ஆனவரே
நான்
பாராட்டுக் கூறட்டுமா??

தேரோடும் கனவுகளைத்
தெருவொடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே
நான் புகழ்மாலை போடட்டுமா?

ஒன்பதாம் வயது
உருகியதை அறியாத
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான் மேடைகட்டிப் பேசட்டுமா,?

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் - உன்னைத்
தட்டிக்கொடுப்பதற்கு
நான் சந்திரனை அனுப்புகிறேன்!

உன் கண்ணை மூடி நீ
ஓய்வெடுப்பாய் சிறுநேரம் - நீ
தூங்கி விழித்தவுடன்
நான் சூரியனை அனுப்புகிறேன்!

பூமி உனக்களித்த புழுக்கத்தை
நீ மறந்து
கண்துயில்வாய் சிறுநேரம்
நான் காற்றை அனுப்புகிறேன்!

வாழ்க்கை உனக்குச் செய்த
வஞ்சகத்தை நீ மறந்து
சிறுபொழுது கண்ணயர்வாய்
நான்
தென்றலை அனுப்புகிறேன்!

விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்!
வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான் அப்படியே அனுப்புகிறேன்!

ஒரு ஸ்டேடஸ்
வாசித்த விடயம் ஒன்றுதான்
"யாரோ ஒருவரின் மகிழ்ச்சியை எழுதுகின்ற ஒரு பென்சிலாக நீங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எல்லோருடைய வருத்தங்களையும் அழிக்கக்கூடிய அழிப்பானாகவாவது (Rubber)உங்களால் இருக்கமுடியுமே முயன்று பாருங்கள்."

Tuesday, February 1, 2011

நினைக்கப்படுதல் வி. நல்லையா மாஸ்டர்

இன்றைய தினம்
நான் ஆசிரியனாக கடமையாற்றும் மட்/ இந்துக்கல்லூரியின் பிறந்த தினம் இதனை "கல்லூரிதினம்" (college day) என்று சொல்லுவோம். இந்துக்கல்லூரி 1946 - 02 - 01 ஆம் திகதி நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர் அமரர். வி. நல்லையா மாஸ்டர் (1909-07-01 - 1976 - 12- 27, 67 ஆண்டுகள்) அவர்களின் அயராத உன்னத முயற்சியாக உருவானது. அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டு.. அவரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து இன்றைய தினம் கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது மகிழ்ச்சி.


அவருக்காக சென்றவருடம் எழுதிய கவிதை
" நூற்றாண்டு கடந்து ஊற்றானவன் நல்லையா மாஸ்டர்"

நூற்றாண்டு கடந்து தமிழ்
ஊற்றானவன்
நல்லையா என்நு மட்டு
நல்லையாவானான்

இவன் பிறப்பு வளர்ப்பு
புளியந்தீவில் படிப்பு
புனித மிக்கேல் கல்லூரியில்

ஆங்கிலத்தில் துறைபோந்தனன்
லண்டன் மெற்றிக்குலேஷன்
கலைப்பட்டதாரியானான்

குடும்பவழியின் சீர்
ஆசிரியர் ஆசைகொண்டு
சென்றான் மகரகம கலாசாலை
வந்தான் பயிற்றப்பட்ட
ஆங்கில ஆசிரியனாய்

வைத்தான் முதல் காலடி
சிவாநந்தா வித்தியாலயத்தில்
ஆசிரியனாய்
உற்றான் நல்லுறவு முத்தமிழ்
வித்தகனிடம் பெற்றான்
கல்வி துறவு உறவு
உருவானான் சமூக
நல் சேவையாய்

கிழக்கின் முதல் ஆசிரியர்
கலாசாலையின் முந்திய
முதலதிபரானான்
அட்டாளச்சேனையில்

சட்டசபைத்தேர்தலில்
பெற்றான் வெற்றி
இருதடவை நின்றான்
தலைநிமிர்ந்து

தேசிய கல்வி நிருவாக
உறுப்பினனான் இலவச
கல்விக்கு ஆலோசனைகள்
ஆக்கியளித்தான்

ஆண்களுக்காய் அரசினர்
ஆசிரியர் பயிற்சி கலாசாலை
மட்டக்களப்பில் உருவாக்கினான்
பெண்களுக்கும் ஆனைப்பந்தி
பாடசாலையில் ஆரம்பித்தான்

சுதந்திர இலங்கையின்
முதல் மட்டக்களப்பு
பாராளுமன்ற உறுப்பினன்
தபால் தகவல் ஒலிபரப்பு
அமைச்சரானான் அப்போதே

தமிழுக்கு இவன்
தலைகுனிந்ததுமில்லை
தேனாட்டுக்கு சேவையில்
பிந்தியதில்லை

கட்டினான் அரசினர் கல்லூரி
அது
இந்துக்கல்லூரியானது

கட்டுவித்தான் வந்தாறுலையில்
மத்திய மகாவித்தியாலயம்
அது
கிழக்குப்பல்கலைக்கழகமானது

கதிரவெளியில் பல பாடசாலைகள்
வாழைச்சேனையில் கடதாசி
தொழிற்சாலை
நாற்புறமும் தபால் கந்தோர்
இவன் தயவால் எழுந்தன
மட்டக்களப்பில்

குளங்கள் புனரமைப்பு
பாதைகள் விஸ்தரிப்பு என
விவசாயத்துக்கு விருத்திகள் பல
போக்குவரத்து வசதிகள்
பாலங்கள் பல கட்டினான்
பாதைகள் அமைத்தான்
மொத்தத்தில்
மட்டக்களப்பை உருவாக்கினான்

நீ நூற்றாண்டு கடந்து
தமிழ் ஊற்றானவன்
வாழீ என்றும்
........

இப்பொழுதாவது மார்புதட்டும் பெருமையானவர்களே பாருங்கள் சேவையின் விருத்தியை இனியாவது படங்களுக்காக மட்டும் முகம் நகைக்காதீர்கள். இறங்குங்கள் களத்தில் சேவைக்காக.....
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு