Pages

Saturday, January 30, 2010

மீன்பிடித்தொழிலும் நம்ம பாரம்பரியமும் மாறுமா???

சமையலறையிலிருந்து
அம்மா: "தம்பி கடக்கரையில்(கடற்கரை)மீன் படுதாம் எழும்புடா மீன் வாங்கிட்டு வாடா... "
"என்னம்மா சும்மா நித்திரை கொள்ளவிட மாட்டியா??"... என்று முணுமுணுத்து... "ம்ம்ம்ம்மா ... அப்பா " எண்டு எழும்பி காலைக்கடனையெல்லாம் முடித்துக்கிட்டு கடற்கரைக்கு போனேன். "ஓடியா ஒரு கை பிடி.. ஏலோ...ஏலோ..."என்ற ஆர்ப்பரிப்புடன் வலை இழுக்க ஆரம்பித்தார்கள் நானும் பிடித்து இழுத்தேன்...

ஆமா.. எப்படி இது .........?
நம்ம ஊருல கடல் மீன்பிடித்தொழில் ஆத்து(நன்னீர்) மீன்பிடித்தொழில் என இருவகை தொழில்களிலும் பாரம்பரிய தன்மையே இன்னும் காணப்படுகிறது.
பாருங்க கரைவலை என்று அழைக்கப்படும் நம்ம ஊரு(தேற்றாத்தீவு) மீனபிடித்தல் முறை எப்படி என்று..

முதல்ல தோணியில்(canoe) கரைவலை ஏற்றப்படும் இது தான் கரைவலைத்தோணி அதன்மேல் கரைவலை உள்ளது.

பின்னர் மீன்கூட்டத்தைக் கண்டவுடன் "தோணி" தள்ளப்பட்டு வளைத்து கரைவலை போடப்படும்.(அதாவது தோணியின் மூலம் வலை கடலுக்குள் இடப்படும்) மீன்கூட்டத்தை (Schooling of fish) "சிகப்பு " எண்டு சொல்லுவர். "டேய் அங்கபாரு சிவப்பு தெரியுது ...." இப்படி சொல்லுவர்.
பின்னர் இழுக்கும் கயிறு இதனை "கம்பான்" கயிறு என்றழைப்பர். இது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தோணியிலிருந்து கொடுக்கப்படும். பின்னர் இருபக்கமும் கயிறு இழுக்கப்படும் இதனையே வலையிழுத்தல் என்று சொல்லப்படும். கயிறு இழுக்க பெரிய கண் வலை இழுக்க பின்னர் சிறிய கண் வலை இழுக்கப்படும் அதன்பின் மிகச்சிறிய கண் உள்ள வலை அதாவது மடி என்றழைக்கப்படும் வலை கரையேறும். இதிலே தான் சிறைப்படுத்தப்பட்ட மீன்கள் இருக்கும். பின்னர் தோணி கரைக்குத் தள்ளப்படும்.
பாருங்க கரைவலை மீன்பிடிக் காட்சிகளை...

இதுதான் கரைவலையின் முழுத்தோற்றம்

கடலுக்குள் வலை போடப்படுகிறது

Monday, January 25, 2010

வெற்றிப்பதிவு என்னோட பதிவுலகம்

அப்பாடா எப்படியோ சதம் அடிச்சாச்சு ( "ம்ம்ம் எங்கடா ... எண்டு யாரங்கே!)
இந்தப்பதிவுதான் நம்மட 100 வது பதிவு அதான் வெற்றிப்பதிவு...
சிதறலின் கதை.....
பதிவு பற்றி எப்பவோ ஒரு PC Times புத்தகத்துல படிச்சிருக்கன் அப்போ அதுபற்றி பெரிதா அலட்டிக்கவில்லை. இணையம் என்பது நமக்கு இடைஞ்சலாக இருந்ததால். ஆனாலும் ஊர் விடயங்கள் நிகழ்வுகள் என்பன இணயத்தரவேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற அவா மனசுக்குள்ள எப்போதும் இருந்தது. பிறகு இதுபற்றி நம்மட நண்பி தானும் தனது அண்ணாவும் பதிவெழுதுவதாகவும் தனது அண்ணா பல பதிவெழுதுவதாகவும் சொல்லி தனது "ஜே பக்கங்கள்" என்ற பதிவின் சுட்டியை எனக்கு அனுப்பிருந்தாள். பிறகு தான் தெரிந்தது இந்தப்பதிவுலகம் உடனேயே யூ ரியுப்பில எவ்வாறு ஆரம்பிப்பது என்று பார்த்திட்டு ஆரம்பித்தேன் முதல் பதிவு என்வீட்டு முகப்பு படம் பின் எனது கவிதை
"தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய்"
பத்து திங்கள் உன் கருவில்
ஊன்றியதால்தான் இந்த
பிள்ளைத்தாவரம் பூமியில்
காலூன்றியது - இருந்தாலும்
உன் அன்புச்
சூரியகதிர்களால் தான்
இன்னமும்
"வாழ்க்கைச் சேர்க்கை " செய்கிறது
அம்மா ........


என்று முதல்பதிவு கவிதையில் அம்மாவுக்கு சமர்ப்பணமாக.. தொடர்ந்து டெம்பலேட்டுக்களை மாற்றுவது பற்றியும் நண்பியே சொல்ல எனது வலைப்பதிவை அழகுபடுத்தக்(...?) கற்றுக்கொண்டு அதன் அழகு பற்றி எனது மற்றொரு நண்பன் "Wall papers" என்று அழகிய படங்களுக்காக தனது பதிவை வெளியிடும் ஜெயதீபனை அடிக்கடி தொல்லைகொடுத்து எப்படி இருக்குடா கொமண்ட் பண்ணு எண்டு மிகவும் கஸ்ட்ப்பட்டு தொல்லையிலும் இந்தப்பதிவு வளர ஆரம்பத்தில் நம்ம தம்பியானவர் சுரேனும் "இப்படி மாத்துங்க அப்படி எழுதுங்க.." எண்டு சொல்லச்சொல்ல ஒருமாதிரியா உருப்பெற்றது இந்தச் சிதறல்கள்... ஆனா சில மாதங்கள் கடந்த பிற்பாடுதான் தெரிந்தது இன்னுமொரு சிதறல்கள் இருப்பது. ஆனாலும் எனுது பதிவின் பெயரை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை ஏனெனில் தற்செயலாகவும் அவசரமாகவும் பதிவொன்று ஆரம்பிக்கணும் என்ற முனைப்போடும் வந்த சிதறல்கள்... என்ற காரணத்தினால்..

சிதறலின் வெற்றி

சிதறல்களின் நோக்கமே நம்ம கிராமத்து விடயங்கள் இணையவலம் வரவேண்டும் என்பது இப்படி இருக்க கவிதையும் வெளியிடவேண்டும் ஏனெனில் பதிவு தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்பதால் நம்மளால முடிந்தளவு கவிதை மாதிரியாவது எழுதுகிறேன். இப்படி இருக்க நம்மட ஆரம்பப் பாடசாலையின் வேதனை கலந்த சாதனையை வறுமையும் திறமையும் + எனது பாடசாலை என்ற தலைப்பில் எழுதியதும் நம்மட ஊரைச்சேர்ந்த புலம்பெயர் நம்மவர்கள் ஒன்றுசேர்ந்து எமது பாடசாலைக்கு உதவுவதற்கு முன்வந்தமை எனது வலைப்பதிவின் முதல் வெற்றி. நன்றி நம்மவர்களே விரைவில் உங்களுக்காக கலைவிழா வந்து சேரும்.

கால்கோள் கவியரங்கில் "களரி"யின் பொங்கல் படையல்
பின்னர் எனது பதிவை பார்த்து கவியரங்குக்கு என்னும் அழைத்து அழுவதா சொல்.. என்ற தலைப்பில் தைப்பொங்கல் விழாவில் கவியரங்கில் போராசிரியர் சி.மெளனகுரு அவர்களின் பார்வையில் பட்டது சிதறலின் கவிதை வெற்றியே..

இதைவிட எனது பக்கத்து ஊர் சந்ரு போல் பல பதிவர்களை கடல்கடந்தும் பல பதிவர்களை நண்பர்களாக்க முடிந்ததும் அவர்களோடு அடிக்கடி அரட்டை அடிப்பதும்... (ஹிஹிஹி.. பங்குச்சந்தையும் கரவையின் ஓசையும்மனசுக்குள் சிரிக்குமே...ஹிஹிஹி....)
இதுவரை பல பதிவெழுதியதும் நம்ம ஊரு நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்தும் எழுத்து வடிவில் கொடுக்கும் போதும் நிம்மதியடைகிறேன் ( கொஞ்ச நாளைக்கு புகைப்படம் எடுக்கமுடியாது நம்ம கமெரா உடைஞ்சுட்டு ம்ம்்்ம்ம்்்ம்்்)
பயனுறப்பதிவெழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு சில மொக்கைப்பதிவெழுதினாலும் மன்னிப்பீர்களாக.....
தொடர்ந்து எழுதுவதற்கு பின்னூட்டமிட்டு வரும் என் உறவுகளுக்கும் வோட்டுப்போட்டு உற்சாகப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்திருங்கள்.
எனது பதிவுகளை பார்த்துவிட்டு நம்ம நண்பர் ஒருவர் அனுப்பிய மடலின் சில பகுதி கீழே.... ஆனால் தமிழுக்காக தவறுவிட்டுவிட்டேனோ என்ற உணர்வும் எனக்குள்ளே... எமது தமிழர் தமது காலாசார விழுமியங்களை எத்தனை இடர்கள் தடைகள் வந்தாலும் செய்வார்கள் என்பதை அறிவீர்கள் தானே.. இது வாழ்க்கையின் நிலையாமையே...
நன்றி ஜெயமார்த்தாண்டன்

வெற்றிப்பதிவு என்னோட பதிவுலகம் அடுத்த வெற்றிக்காக காத்திருப்பு அதான் "தேனலை" இணையவானொலி விரைவில்....
பதிவு பற்றி வைரமுத்துவின் காதலித்துப்பார் பாணியில் 2ஆம் மைல்கல்லும் பதிவெழுதிப்பாரும்....

பதிவெழுதிப்பார்....

உன்னைச் சுற்றி
ரசிகர் வட்டம் தோன்றும்

உன் எழுத்துக்களால்
உலகம் எழுதப்படும்

Thursday, January 21, 2010

"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 03

புதியவர்களுக்காக
"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 01
"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 02

அடுத்து
கிராமத்து "நீர்"

ஏறுகெழுத்தி உன் வலையில்
சிக்கவில்லையா?
ஏலோ ஏலோ
கரை வலை உன்கை
இழுக்கவில்லையா?
கடற்கரையில் நண்டு
அடிக்கவில்லையா?
தோணியில் தண்டு
வலிக்கவில்லையா?
வங்கக்கடலில் நீ
குளிக்கவில்லையா?
குளத்தில் கட்டுவலை நீ
கட்டவில்லையா?
குட்டையில் தூண்டல்
போடவில்லையா?
மட்டக்களப்பு நன்னீரில்
உன்கால் கழுவவில்லையா?
பாடுமீன் சத்தம் நீ
கேட்கவில்லையா??

நாட்டுவசந்தன் கூத்து
பார்க்கவில்லையா?
வடமோடி தென்மோடி
களரி காணவில்லையா?

மரணப்படுக்கையிலும்
மறக்காது தித்திக்கும்
மண்வாசனை நுகரவில்லையா??

இல்லையெனில்
அழுதுவிடு அழுதுவிடு
செத்துவிடு
உண்டு எனில்
நீ
அழுவதா சொல் !!!

Wednesday, January 20, 2010

"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 02

பூமி
புரட்டிப் புரட்டி மனம்
உழுதுவிடு
'நல்' விதைத்து விதைத்து
விளைந்து விடு
மகிழ்ச்சிப் பொங்கல்
இது தான்

கண்டுகொள் நீ
உழுதால் தான்
பூமிப்பெண்
தாயாகிறாள்
இல்லையேல்
தரிசு ஆகிறாள்

போர் முடிந்த பூமி - அங்கு
புதைந்தது மனிதங்கள்
புதையல் தேடு இனி
விதைத்து விடு
வியர்வை விதைகள்
உழைப்பு பயிர்கள்
பூத்துக் குலுங்கி
மனித எச்சங்களை
வாழவைக்கட்டும்

உன்னைப் பெற்றுத்தந்தது
தாய்ப்பூமி
நீ பெற்றெடுக்க வேண்டியது
தமிழ்ப்பூமி

அழுது அழுது காலம் கரைத்து
வாழ்க்கை நரைத்துவிடும்
வெறுமையாய்

நரை
வலிந்த வாழ்க்கையின்
முதிர்ந்த திவலை

ஞாலம் நீயாக
வாழ்க்கை வாழ்ந்துவிடு
கண்ணீர் விட்டுவிலகு

ஆக
மண்ணில் உன்
பிறப்பு
வளர்ப்பு
இருப்பு
இறப்பு
கண்ணீர்ப்பூ
எதற்கு???

நீ
கற்றாய்ந் தொழுகி
புத்தி பெற்று வாழ
அழுவதா சொல்!


காற்று

காற்றை நேசி
கவிதை கொண்டு வரும்
காற்று உன்
கவிதை மூச்சு

தென்றல் காதல் தூண்டல்
கொண்டல் பொங்கல்
மழைக்காற்று

"அழுவதா சொல்..." கவியரங்கில் நான் - 01

கவியரங்கில் அழுவதா சொல் முதல் வரிகள் வலிக்கும் குரல்

இன்று உன் வீட்டு
எறும்புகளின்
வயிறு நிறைய
வாசலில் அரிசிமாக் கோலம்
இல்லையா?
மூட்டிய அடுப்பில்
வெற்றுப்பானை
ஏற்றப்படுகிறதா??

இதற்காகவா அழுகிறாய்

உன் நரம்புகளில்
வாழ்வை உசிப்பிவிடு

வாழ்க்கைச் சூரியன் - வழுக்கி
உன் தலையில் விழ
நீ ஏன் தடக்கி
கவலையில் துவள்கிறாய்!

ஐம்பூதங்கள் உனக்காக
நீயாக -நீ
அழுவதா சொல்....

வானம்


கைவிரித்து நீ
அண்ணாந்து பார்க்க
கடவுள் காட்டும்
வானம்

உன்னைச் சூடேற்றி சூடேற்றி
உள்மனதை வெளிச்சப்படுத்தி
சூரியப்பொங்கல் கொண்டுவரும்
சூரியன் - நீ
செத்துவிடலாகாது
உன்னால் தான்
உன் குடும்பத்தாமரைகள்
முகம் மலருகிறது
ஓ...
மலர்ச்சிப் பொங்கல்

கால்கோள் கவியரங்கில் "களரி"யின் பொங்கல் படையல்

பொங்கல் அன்று பிற்பகல் பொங்கலின் இரண்டாம் பாதி (ஹிஹி..) மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய கலை கலாசார மேம்பாட்டுக்கழகம் "களரி" நடாத்திய "தைப்பொங்கல் விழா 2010" நிகழ்வுக்கு சென்று முதன் முதலாய் கவியரங்கிலே பங்குபற்றக்கூடிய வாய்ப்பு கிட்டியது.
"தைப்பொங்கல் விழா 2010"
தலைமை: திரு மு.சதாகரன் (தலைவர்,களரி மேம்பாட்டுக்கழகம்)
இடம்: மட் / களுதாவளை மகா வித்தியாலய பிரதான மண்டபம்

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் சி்.மெளனகுரு அவர்களும் கெளரவ அதிதிகளாக இ.வை.எஸ். காந்தன்குருக்கள் (ஏரூரான்),  மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி மங்கள விளக்கேற்றலுடனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடனும் களரி கீதமுடனும் ஆரம்பிக்கப்பட, வரவேற்புரை எமது பிரதேச கலாச்சார உத்தியோகர்த்தர் திரு.த.பிரபாகரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்து நிகழ்ச்சிகள்.
எமது பிரதேச பாடசாலை மாணவர்களின் பல வெற்றி நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. இதில் தேற்றாத்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் சிறுவர் நடனம் முதல் நிகழ்ச்சியாக தொடர்ந்து களுதாவளை மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்களின் கிராமிய நடனம் சிறப்பாக அரங்கேறியது. கிராமத்தின் பண்பாடு வெளிச்சம் போட்டுக்காட்டிய நிகழ்வாக இந்நடனங்கள் விளங்கியது, ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொடர்ந்தது கவியரங்கு "அழுவதா சொல்..." என்ற தலைப்பில். கவிஞர் "ஏரூரான்" தலைமையில் இது நடைபெற்றது. கட்டியம் கவிஞர் தேனூரான் சொல்ல மரபுக்கவிதையில் கவிஞர் தணிகாசலம்(தணி) அழுவதா சொல் கவிதை இயம்ப நான் புதுக்கவிதையில் கவியரங்கில் கால்கோள் இட்டேன். தொடர்ந்தார் திரு.திருநாவுக்கரசு அவர்கள்.
பின்னர் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களின் உரையில்,
"பின்வரும் மூன்று விடயங்களில் களரி களைகட்டியது மனசுக்கு பிடித்தது மாணவர்களின் மண் சார்ந்த காடசிகளின் வெளிப்பாடு சிறுவர் நாடகம் நடனம் என்பன கண்ணுக்கு ரசனை என்பதை விட அவர்களின் மணவாசனை தான் பாராட்டப்படவேண்டியது.
அடுத்து வெகுசன ஊடகங்களில் புதைந்துள்ள மாயையில் விழுந்துள்ள மாணவர்களுக்கு "களரி" ஒரு முன்மாதிரியாக களம் அமைத்துக்கொடுத்துள்ளது.
மற்றையது நீண்ட காலத்துக்குப்பிறகு ஒரு வித்தியாசமான தலைப்பில் நிழ்ந்த கவியரங்கு கண்டது மனதுக்கு மகிழ்ச்சி. அதுவும் மரபில் மாறாமல் புதியதுக்கும் களம் அமைத்து இக்கவியரங்கு பழையதுக்கும் புதியதுக்கும் பாலமாக அமைந்தது பிடிச்சிருக்கு....
களரி இன்னும் பல மாணவர்களை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு உளவியல் சிகிச்சையளிக்கக் கூடிய நிகழ்வு இது போன்ற பண்பாட்டு கலை கலாசார நிகழ்ச்சிகளே.. சினிமா மாயையிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மாணவர்ளைக் கொண்டே மாணவர்களை உருவாக்க வேண்டும்...." என்று சொல்லி முடிக்க..

Tuesday, January 19, 2010

சிதறலின் தைப்பொங்கல் 2010

நம்ம ஊரில் பொங்கல் என்றாலே பொங்கல் கோயில் என்று அன்றைய பொங்கல் நாள் கழியும். பொங்கல விடியற்காலையில் நம்ம அம்மா எழும்பி பொங்கலுக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யத்தொடங்க நம்மளயும் எழுப்பிவிட்டா, பிறகென்ன அப்பா, அக்கா தேங்காய் துருவி பொங்கல் பானை ஏற்றினார்கள் அப்போ "உன்னை எதுக்கு எழுப்பினா" எண்டு யாரும் கேக்கணுமே.... பொங்கல் படைப்பது நான்தான் கடவுளுக்கு ஆனா அம்மாதான் நமக்கு ஊட்டிவிட்டாங்க.
பிறகு கோயில் தரிசனம். பொங்கல் தினம் நம்ம ஊரின் படபத்திரகாளி கோயிலில் புதிய கிணறு திறப்புவிழாவும் சுற்றுமதிலுக்குரிய அடிக்கல் நடும் வைபவமும் நடைபெற்றது. சரி பொங்கல் காலைப் பொழுதுகள் காட்சிகள்

இது எனது அம்மாவின் பொங்கல் படையல்
 
 

என்வீட்டு வாசல்
 

முற்றத்து மல்லிகை
 

Tuesday, January 12, 2010

வலிக்கும் குரல்அம்மா....!

பாலுக்காக
உன் பிள்ளை
வற்றிய தாய்மடி
உன்னிடம்

வீட்டில்
பிச்சைக்காரன்
நீயா?
அவனா??

உன்
உள்மன ரணங்களின்
வலியா..

பாடையில் யாரும்
ஏற்றப்படுகிறார்களா??

Saturday, January 9, 2010

தீ வளர்த்த தோழர்களே .....

என் பழைய தோழர்களே!
உங்களுக்குள் மரணித்த
மனிதங்கள்
எனக்குள் மட்டும் தான்
இருக்கிறதா?
உங்களுக்குள்
ஜனனிக்கவில்லையா??


நட்பு நமக்கு
கற்பு
மறவாதீர்கள்
அது நம்
மனதை வளர்க்கும்
அன்பின்
உலோக வார்ப்புக்கள்

வாழ்க்கையின்
உண்மைப்புத்தகத்தை
ஒவ்வொருநாளும்
புரட்டிப்பார்க்கிறேன்
என் வாழ்க்கையில்
'பொருட்பிழை'
ஏதும் இருக்கிறதா
என்று!

தோழர்களே!
எனக்குள் மனிதம் கொன்று
மிருகம் வளர்க்காதீர்கள்

உள்ளுறை கொண்டு
முகம் நகைக்கும்
உன்னத நட்பின்
உறவுப்பிழை
உங்கள்
உயிர்ப்பிழை

நட்புத் 'தீ' வளருங்கள்
நட்புக்குத்
தீ வைக்காதீர்கள்

நட்பிளக்கம்
நட்புழக்கமாகட்டும்
இளக்காரம் இல்லாதிருக்கட்டும்

அன்பு - நம்மனதில்
அடகு வைக்கப்பட வேண்டியது
நட்பில்
அவமானப்படக்கூடாது

இப்போதும்
என் வாழ்க்கையின்
ஏட்டுச்சுவடுகளைப் பார்க்கிறேன்
நட்பில்
எங்காவது எழுத்துப்பிழை
இருக்கிறதா என்று
வாழ்க்கை பிசகு
விடவில்லை


அங்கு
ஓட்டை விழுந்திருக்கிறது
உங்களால்
காயம் காயப்பட்டிருக்கிறது
நட்பில்

இனியாவது திடமாக
இருக்கப்பார்க்கிறேன்
இதுவரை
நலிந்து நலிந்து
விழுந்து விழுந்து
வலிந்து வலிந்து...

ஓ..!
முற்றிப்போகிறேன்
முற்றிப்போயிருக்கேன்

இனி
என் வாழ்க்கையை
கவனமாக
வைத்திருக்கிறேன்
நழுவலும் தழுவலும்
வழுக்கியும் விழாமலும்
ஒட்டி ஒட்டாமலும்
விழுந்தாலும் எழுந்திருக்கப்
பார்க்கிறேன்
கவனமாக.....

Wednesday, January 6, 2010

இசைப்புயலுக்கு வாழ்த்தும் இந்தப்புயல்

நீ தான்
இசைப்புயல்
உனக்கு வாழ்த்து சொல்லுது
இந்தப்புயல்

நீ இளவயதிலே
இசையில் முற்றியவன்
நான் வயசு பத்திலே
உன்னைப்பற்றியவன்

சின்னச்சின்ன ஆசைகளில்
உன் இசை ரோஜாக்களை
பறித்தோம் முதலில்

மெல்லிசை ஞானியர்
கொடிகட்டிபறந்த
தமிழ் திரை இசையில்
நீ தானே
கொம்புயூட்டர்
இசைக்கொடி ஏற்றியவன்

இன்று உனக்கு 44 ஆ??
யார் சொன்னது?
ஒரு வீர தீரனின்
இளமையும் துடிப்பும்
உன்னிசைப்புயலில் இருக்க
உனக்கு வயது
கணிப்பில் இல்லை
இசையால்

உன்னை உலகுக்கு காட்டியது
தமிழ்சினிமா - அதுதான்
நான்கில் மூன்று முறை
தேசியவிருதுகள்
உன் தமிழுக்கு

இசை உனக்கு கிடைத்த
வரம்
நீ சினிமாவுக்கு கிடைத்த
இசைஉரம்

விருதுகள்
நீ வாங்கும் போது
உண்மையில்
விருதுகள் தான்
விருதுவாங்கிக் கொண்டன

ஒஸ்கார் விருது கூட
உனக்கு சாதாரணம்
அன்று
அந்தமேடையில்
உன்தாய்மொழியில்
வார்த்தை சிதறியதே இது
ஒஸ்காருக்குப் பெருமை
ஓ...
நீயும்
தமிழ்தாய் பிள்ளையல்லவா!

நீ தான் பல
புதிய புதிய
பாடகர்களை மேடையேற்றும்
அறிவிப்பாளன்

இசைகளையும் புதிய
இசைக் கலைஞர்களையும்
புதுப்பிக்கும் இசைப்
புத்தகம் நீதான்

இசையால் உலகை
இயக்கும் விற்பன்னன்
இப்போது நீதான்

உன் இசைப்பயணத்தில்
நான் பல தடவைகள்
பயணித்திருக்கிறேன்
வெறும் இசை ரசிகனாய்
ஆனால்
ஒருமுறை ஏறிய
இசை வண்டியில்
இன்னொருமுறை ஏறவில்லை
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பயணங்கள்

நீ யார் பக்கம் என்று
வாதிடும்
கோயில்களே
மசூதிகளே
கேளுங்கள்
இசையில் கடவுளைக்காண
கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளுக்காக பிளவுபட்டு
இசையைக் கலைக்காதீர்கள்

இசை மனதில் நின்று
உயிர் வளர்க்கும்
மறந்துவிடாதீர்கள்

நான் கண்மூடினாலும்
காதோரம் விழும்
உன் மெல்லிசையில் தான்
என் நித்திரை
ஒரு சொட்டுக்கண்ணீரும்
ஓரவிழியில் கசியும்
உன்னிசை மனதில்
குளிரும்போது....
இசைப்புயலே
வாழ்க
நீ


">

வெற்றிக்கொடிகட்டு
">

Monday, January 4, 2010

பூமி நோகுது... காலநிலை மாறுது

நான்
உயர உயர வளர்ந்து
முட்டி மோதி - என்
பருவம் புடைத்து
புனல் பெருக்கி
பூமி நனைத்திட
அந்த மழைக்காடுகள்
எங்கே!
என்றது பெண் மேகம்நான்
வரண்டு வரண்டு
என் தேகம்
பிளந்து வெடித்து
காய்ந்து இருக்கிறேன்
என் மேனி குளிர
மோகம் கொண்டு
மன்மதத் தாரைகள்
பொழியும்
மேகங்கள் எங்கே!
கேட்டுக்கொண்டது பூமிஎன் வெள்ளை மனது
கொள்ளை அழகால்
குளிர்ந்து நிமிந்து
கல் மலையானேன்
அந்த சூரிய ஒளியால்
கருகிக் கருகி - இன்று
உருகி உருகி
கடலாகிறேன்
கண்ணீர் சொரிந்தது
துருவப்பனிக்கட்டிகள்கரும்புகை - கடும்
பார வாயுக்கள்
பச்சை வீட்டு வாயுக்கள்
பெருக்கம் இவற்றால்
சூரியஒளி வெளியேற்றத்
தடுக்கம்
என் தேகம்
வெப்பத்தால் புழுக்கம் என்று
புழுங்கியது பூமி

முடியவில்லை - புற
ஊதாக் கதிர்கள்
என்னை ஊடுருவுகின்றன
தடுக்க முடியவில்லை
நான்
நலிவுறுகின்றேன் என்னைக்
காப்பாற்றுங்கள்
கதறியது
ஓசோன் படை

ஓ.....!
இதுதான்
கைத்தொழில் புரட்சியின்
கால வெளியீடுகளா..??
உலகமயமாதலின்
உன்னத விளைவுகளா....???

மனம் கொண்ட
மனிதனே!
உலக உருண்டையில்
உன் உயிர்ச்சுவடுகள்
எச்சப்படுமுன்
உலகில் உன்னை
நிச்சயப்படுத்திக்கொள்
உலகைக்காப்பாற்று
உன்னைத் தேக்கிக்கொள்ளலாம்...

Sunday, January 3, 2010

கடந்த வருட சந்தோசச் சாரல்

கடந்த ஆண்டு எனக்கு பல விடயங்களை கற்றுத்தந்தது. சந்தோசச் சாரல்களும் சில வேதனைச் சுவடுகளும் என் மனதில்.. நன்றி சொல்வோம்.
நான் கடந்த வருடத்துக்கு முந்தைய வருட இறுதிப்பகுதியில் ஒரு நண்பனொருவனைச் சந்திக்க நேர்ந்தது. அவன் இப்ப நம்ம தம்பியாய் நமக்கு இருக்கான். கஸ்டம், உறுதி, உழைப்பு என்பவற்றை அறியலாம் பாருங்க...

ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிட்டன் இதை ஒழுங்காக சேர்விஸ் பண்ணணும் இல்லாவிட்டால் பெருஞ்செலவு வரும் என்று என் அண்ணன் ஒருவன் சொன்னான். எனக்கு சேர்விஸ எங்க பண்ணுறது என்று தெரியாமல் பயந்து கொண்டிருந்தேன். மட்டக்களப்பு கல்லடியில் ஒரு நல்ல கறாஜ் இருக்குன்னு சொல்ல அங்க என்ட மோட்டார் சைக்கிளைக் கொண்டுபோனன். எனக்கு அந்த சேர்விஸ் அப்போ பிடிக்கல்ல. கடந்த வருடம் தை மாதம் என நினைக்கிறேன் அடுத்த முறையும் அதே கராஜ்சுக்கே போனேன். அப்போது கறுத்த மெல்லிய ஒழுங்காக தலை சீவிய (அவனும் இன்னொருவனும்தான் அங்கு ஒழுங்கா தலைமுடியை ஒட்டவெடடியிருந்தார்கள்) ஒரு மோகனமான பொடியன் மிகவும் சுறுசுறுப்பாக வேலைசெய்து கொண்டிருந்தான். ஆனால் எனது சைக்கிளை வேறொருவன் தான் சேவிஸ் பண்ணினான். இந்த சுறுப்பான பொடியன் தனது வேலையை முடித்துவிட்டு அடுத்த சைக்கிளுக்காக காத்திருந்தபோது வழக்கம் போல (ஹிஹி...) நம்ம அரட்டையை ஆரம்பித்தேன். அப்போதுதான் எனக்கு அந்த ஆச்சரியம் அமானுசமான (வெற்றி எப் எம்மின் வெள்ளிஇரவு நிகழ்ச்சி) தகவல்கள் கிடைத்தது.

இவன் தனது 14 வயதில் இவ்வேலைக்கு தனது குடும்ப நிலைமை காரணமாக தந்தையின் உதவியால் வந்து சேர்ந்தான். அப்போது கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது பிரதான வேலையாட்கள் (வாஸ் என்று சொல்லுவர்) இருந்தார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவி வேலையாளாய் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பின்னர் இதில் மாற்றம். ஒரு பிரதான வேலையாளுக்கு ஒரு நிரந்தர உதவியாளர் என மாற்றம் கொண்டுவரப்பட்டது. என்று தனது வேலை வாழ்க்கையை சொல்ல ஆரம்பித்தான். நான் குறுக்கிட்டு ஏன் நீ இவ்வேலைக்கு வந்தாய் என்று கேட்டன். தனது சகோதர சகோதரிகளையும் படிக்க வைக்க வேண்டும் அதற்கு தனது தந்தையின் வருமானம் போதாமையினாலும் தனக்கு படிப்பு ஓடவில்லை இதன் காரணமாகவே வந்தேன் என்றுரைத்தான்.
பல கஸ்டங்களின் மத்தியில் இத்தொழிலைக் ஒருவாறு கற்று முன்னேற்றம் அடைந்து கடந்த இரண்டரை வருடங்களாக பிரதான வேலையாளாய்(வாஸ்) ஆக இருக்கிறான்.இவனுக்கு ஒரு கூலியாளும் இருக்கிறான்.

இங்கு வேலை செய்பவர்களுக்கு எத்தனை மோட்டார் சைக்கிளை சேர்விஸ் பண்ணுறார்களோ அதனைப் பொறுத்தே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். அதனால் இவர்கள் தங்களுக்கு வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டிய நிலைமையும் இருக்கிறது. வாடிக்காயாளர்கள் இல்லாதவிடத்தும் புதிதாக வருவபர்களை ஒழுங்கு முறையில் வேலையை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதனால் சில வேளைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டு ஒருவரும் வரவில்லையே என்று வீடு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படுவதுண்டு. இத்ற்காகவே கஸ்டமர்களைப் பிடிக்க வேண்டியுள்ளது.

இவன் கஸ்டப்பட்டு உழைத்தால் தான் இவன் வீட்டு அடுப்பு ஒவ்வொரு நாளும் எரியும். ஏனெனில் இப்போது இவன் தந்தைக்கும் கூலி வேலை கிடைப்பதில்லை வயதும் போயிற்று. அப்போதுதான் இவன் தம்பி, தங்கச்சுமார் படிக்கக்கூட முடியும் என்றதும் நம்ம கண்களின் ஓரத்தில் ஈரம். மனசுல பாரம்.

இதற்குப்பிறகு இவனின் தொழில்த் திறமை காரணமாகவும் மனசுல இவன் குடும்ப நிலைமை காரணமாகவும் நான் கடந்த ஒரு வருடமாக இவனிடம் தான் எனதும் எனது உறவினர்களினதும் மோட்டார் சைக்கிள்களை கொண்டு செல்வதோடு இவன் வாடிக்கையாளனானேன்.

இவனின் குடும்பப் பொறுப்புணர்ச்சி, மற்றவர்களுக்கு நல்லா உதவும் தன்மை (இது இவனின் பலமா பலவீனமா என்பது இன்னும் விளங்கல்ல எனக்கு) பெற்றோருக்குப் ஒரு நல்ல பிள்ளை, அன்பான நல்லவன் என்பன இவனின் இவனோடும் இவன் குடும்பத்தாரோடும் பழகும் போதுதான் அறியமுடிந்தது. இதனை விட இவன் எந்தவித குடிப்பழக்கத்துக்கோ ஏனைய எந்தக் கெட்டபழக்கத்துக்கோ இதுவரை ஆளாகவில்லை என்பது மனதுக்கு பிடிச்சிருக்கு. ஏனெனில் இவனைப்போன்ற 21 வயது வாலிபர்கள் இப்போது நம்ம ஊரில குடிப்போதைகளுக்கு இணைங்கிப்போதல் பார்க்க சகிக்க முடியல்ல (சீரழியும் வாழ்க்கை தேவைதானா??? இதில் பார்க்கலாம்)

எது எப்படியோ,கடந்த ஆண்டு இவன் எனக்குக் கிடைத்த நல்ல நண்பன் இதை விட நல்லதொரு தம்பி என்றே சொல்வேன் (எனக்கு தம்பியோ தங்கச்சியோ இல்லை நான் கடைக்குட்டியானபடியால்).

ஆக, இநத வருடத்தின் முதல்நாள் எனது சைக்கிளைத் திருத்தும்போது.. (உண்மையில் அதுல பிழை இல்ல சும்மா இவன் சங்கிலி ஒயில் காணாதென்று பில்டப் பண்ணும்போது....)

 

கடந்த வருடம் இவன் இதுவரை போகாத பாசிக்குடா சுற்றுலாத்தளத்திற்கு கூட்டிட்டுப் போன போது மிகவும் சந்தோசமடைந்தான். தன்னுடைய வாழ்கையில் தான் சென்ற முதலாவது சுற்றுலாப்பயணமாம் என்று.

 

இவன் போன்றவர்களை நினைக்கையில் நம்ம ஊரில எவ்வளவோ படிக்க வசதிகள் இருந்தும் பல பிள்ளைகள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கெட்டுபோவது மிக மனவேதனைக்குரியது.

Saturday, January 2, 2010

2010 ஆம் ஆண்டின் திருவாசக முற்றோதல்

இவ்வாண்டுக்கான எனது முதல் பதிவு... இது நம்ம ஊரின் நிகழ்வுப்பதிவு. புது வருடத்தின் முதல்நாள் கோயிலிலே கழிந்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

எம்பெருமான் சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே நம்ம சமய குரவர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம். பன்னிரு சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது (எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் இருக்கின்றன).
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பது ஆன்றோர் வாக்கு.மனதை உருக்கும் பக்திச் சுவை தனைக்கொண்ட திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.

இச்சிறப்புப் பொருந்திய திருவாசகத்தினை எமது கிராமத்தின் இந்து இளைஞர் மன்றத்தினர் தேற்றாத்தீவு ஸ்ரீமத் தந்திரதேவா தபோவனத்துடன் இணைந்து "திருவாசக முற்றோதல்" நிகழ்வை தேற்றாத்தீவு ஸ்ரீ படபத்திர காளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடத்தினர்.
காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு மாலை 6.00 மணியளவில் நிறைவுற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நம்ம ஊரின் மைந்தன் பல பிரதேசங்களில் சைவத்தொண்டுகளை ஆற்றும் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த சைவப்பழம் திருமதி. மாரிமுத்து தியாகராசா அம்மையார் வரவேற்கப்படும் போது...பூசையுடன் திருவாசக முற்றோதல் ஆரம்பம்


திருவாசகம் முற்றோதல்....தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வரவேற்பும் கருத்துரை நிகழ்வுகளும்....

ஆசியுரை தேற்றாத்தீவு ஸ்ரீ படபத்திர காளி அம்மன் ஆலயத்தின் பிரதமகுரு ஸ்ரீ ரவிஜி ஐயா அவர்கள் வழங்கினார். அவர் தமது கருத்துரையில் "தேற்றாத்தீவு கிராம மக்களின் குழந்தைகள் கருவுற்றிருக்கும் போதே இசைஞானமும் சமயப்பற்றும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்பது தெட்டத்தெளிவாக அவர்களின் சமய பஜனை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன" என்று சொன்னது நம் மனதை நெகிழ்வுபடுத்தியது.

தொடந்து நம்மவர்கள் கருத்துரை வழங்கிய பின் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் எமது மூத்த சமயப்பற்றாளர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.

 
 

எமது பிரதம வருந்தினரான திரு.பரதன் கந்தசாமி அவர்கள் கருத்துரை வழங்கினார்.


அதில் அவர் "எத்தனையோ இடங்கள் சென்று பாராட்டுக்களை பெற்றதைவிட எனது ஊரில் இப்படியான சிறப்பான நிகழ்வொன்றில் கிடைத்த இந்தப்பாராட்டும் வைபவம் எனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சி எனவும் தனது சேவை எங்குற்றாலும் எமது ஊரின் சைவச்சிறப்பை எடுத்துரைப்பதில் பின்னிற்பதில்லை" என்றபோது ஒவ்வொருவர் மனதிலும் நன்றி சொல்லத் தோன்றியது. தொடர்ந்து அவர் தான் சைவப்பணிக்காக தனது சேவையை கொண்டுசெல்ல கல்முனை நகரில் "நால்வர் கோட்டம்" என்று ஆரம்பித்திருப்பதாகவும் அங்கு பல சைவ சமய நிகழ்வுகளும் இடம்பெறுவாதாகவும் இங்கு கட்டாயம் நமது கிராமமக்கள் வரவேண்டும் என்றும் சைவசமயத்துக்காக தன்னை அர்ப்பணிப்தாகவும் சொன்ன இவர், திருவாசகம் பற்றியோ சமயத்தின் சிறப்பு பற்றியோ சொல்வது தேற்றாத்தீவு மக்களுக்கு திரும்பத்திரும்பச் சொல்வது போலாகும் என்று எமது சமயச்சிறப்பை சில வரிகளிலே சிறப்பாகச் சொல்லி முடிக்க, நன்றியுரையை காயத்திரி சோதிடர் திரு.கு.தவராசா அவர்கள் வழங்கினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட மதிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தொடர்ந்து திருவாசகம் முற்றாக ஓதப்பட்டு மாலை 6.00 மணியளவில் சிறப்புப் பூசையுடன் திருவாசகம் முற்றோதல் நிறைவுற்றது.

நிகழ்வுகளின் நிழல்படங்கள்
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு