Pages

Saturday, December 31, 2011

ஒன்று கழிய இரண்டு வருகிறது

இறுதிப்பொழுதுகளில்
மீதமிருக்கும்
மணித்தியால எண்ணங்கள்

நாசித்துடிப்பில்
சோகத்தளிம்புகளை மட்டும்
பார்க்குது
பாவப்பட்ட மனம்.

அத்தனை வேதனைகளை
விரட்டியடிக்குது
வெளிச்சப்படுத்திய
சில சந்தோசங்கள்
சில்லறைகளால் நான்..

ஒவ்வொரு புதிசும்
இருக்கை பற்றி நீளச்செய்கிறது
பழசு
வாழ்க்கையின் நிலையாமையாய்

தீர்ந்துபோனது என்ற
நினைப்பில் இருக்க
காராம்பசுவாய்
வருகிறது வாழ்க்கை
ஓ...
நாளை புதிதாய்
பிறக்கிறது புத்தாண்டு...

மாற்றங்கள் கொண்டு
மாற்றங்களால் வாழ்கை
மனக்குதிரை ஓட்டப்பட
இருக்கிறது
லாடங்களுடன் நான்..

ஒன்று கழிய
இரண்டு வருகிறது..
இன்னும் வரும்
இதயம் சுமக்கும் இனிமையும்
சுமையும் சுமையிறக்கும்
தனிமையும் வருகவே..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Saturday, December 24, 2011

இது ஸ்டேடஸ் - 22

26 Nov
"நீ இருந்தால் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இல்லை என்றால் உனது நேரான தலைமைத்துவ நினைவுகளுடன் நான்."

27 Nov
"உறுமி (தமிழ்) பாடல்கள் என்னமோ செய்யுதே.."

28 Nov
"இந்த சில் என்ற காற்று. குளிருது மனசு..."

28 Nov
"இதயப்பூக்கள் பூக்கும் இனிய நேரம்
இன்பம் கலந்த வாழ்க்கைக் காலம்
புன்னகைத்தோம்
கலாசாலை
விழித்துக் கொண்டது
இந்தப்பூக்கள் இன்னும் வேண்டும் என்று"

29 Nov
"ஒற்றைத் தலையிடியும்
ஒரு தலைக்காதலும்
தனக்குத் தனக்கு வந்தால்தான் தெரியும்.."

1 Dec
"தூரதேசத்தில் இருந்தால்தான் உறவை நீளவேண்டுமென்கிற எண்ணம் முளைக்குது. ஆனா நாங்க பக்கத்துவீட்டில இருக்கிறவனுக்கே SMS, FB Mes அனுப்புவோம்ல.."
"ஒவ்வொரு எதிர்மறையான அனுபவங்களே எங்களை வழிப்படுத்தும் நேரான சிந்தனையுடைய அனுபவங்கள் எங்களை ஊக்கப்படுத்தும்."

1 Dec
"மெல்லினம் வழுக்கினாலும் வல்லினம் வாழும்"

"இந்த இரவு நீண்டுகொள்க
முடிக்கப்படாத வேலைகள் குறைந்துகொள்க
கண்களே எனக்காக விழித்திருங்கள்
நெஞ்சமே என்னை துடிப்புடன் வைத்துக்கொள்"

2 Dece
"ஒவ்வொரு கூலியாளும் கவனமான படிப்பினைகள் மூலம் என்றோ ஒரு நாள் முதலாளியாகணும். மாற்றங்கள் எப்பொழுதும் தேவை"

"சில கனவுகள் கலைப்பதற்கு என்றும் சில கலைந்துபோவதற்கு என்றுமாய் போனாலும் எல்லாம் கனவுகள் என்பற்குள் அடக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனது.."

6 Dece
"இருக்கும் போது கேக்க மாட்டானுகள் இல்லாதநேரம் கேட்டால் நான் என்ன பண்ணுவேன் ##Feeling##""

7 Dec
"சிலநேரம் சிலபேரிடம் கோவிக்கணும் போல இருக்கும். அவர்களும் இவர்கள் போலே என்று எண்ணி..."

"எங்களால் செயல்படுத்தப்படும் எந்தவொரு வேலையிலிருந்தும் மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.
கற்றுக்கொண்டு அதைவிட சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுங்கள்."

8 Dec
"உன்பேர் சொல்லும் பிள்ளை போராடி வெல்லும்பிள்ளை
அம்மா நீயே நீயே நானே நீயே.... ##உயிர்ப்பாட்டு கவி வாலி ##"

"அழுவதில்கூட ஆறுதல் இருக்குது. ஏனோ என்னவென்று தெரியாமல் அழவேண்டும் என்ற உணர்வு எகுறுது"

"கண்களில் ஒழுகும் ஓரிரு கண்ணீர் துளிகளே ஆயிரமாயிரம் அன்புகளை முடுக்கிவிடும் ஆறுதலைக்கொடுத்து"

9 Dec
"சிலநேரம் சிலபேரைப் பார்த்தால் பாவப்படவேணும்போல இருக்கும். ஏதோ சில விளம்பரமானவர்களிடம் ஒட்டிக்கொண்டு தூசு தட்டும்போதும் இவர்களாலும் தன்னம்பிக்கையுடன் முன்னேறும் எண்ணம் முடிச்சவிழ்க்கப்பட மாட்டாதா என."

"ஆகாயம் நிறமாறிப்போகட்டும்
ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாது...
##நெஞ்சே நெஞ்சே நீ எங்க பாடல்##"

10 Dec
"நான் சில நேரம் காணமல் போகலாம். ஆனாலும் அழிக்கப்பட்ட உணர்வு இல்லை. அத்தனை தேடல்களிலும் பேச்சின் நுனிநாக்கில் நுகரப்படுவேன். எவ்வாறெனினும் எனக்குள்ளே நீங்களும் உங்களுக்குள்ளே நானும்"

"சர்வதேச மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10,
துஷ்பிரயோக மற்றும் மனித மதிப்புகள் மீறல்களுக்கு எதிராக 'மனித உரிமைகள் கொண்டாட' மற்றும் மனித உரிமைகள் பிரகடனம் பற்றிய விளக்ககாட்சியை உலகம் முழுவதும் (இன்று) சனிக்கிழமை அனுசரிக்கும்படியாக வேண்டும்."

"காத்திருக்கிறேன் அம்மா ஊட்டிவிடும் கார்த்திகை விளக்கு நிலாச்சோறுக்கு."

"சந்திரகிரணமும் போயிற்று. ரசிக்கவேண்டிய நேரத்தில் இருந்த நிலாவும் போயிற்று. இப்ப முழுசா இருந்து என்ன பயன் என்நித்திரைக்கு இல்லையா வழி,,"

11 Dec
"இடி இடிக்குது.
இருண்டுபோகுது காலைப் பொழுது.
காற்றுச் சீரமைப்பி திறக்கப்பட்டிருக்கிறதா - இல்லை
குளிரூட்டியாக்கப்பட்டிருக்கிறதா வானம்.
இன்னும் சில நேரத்தில் ஒடுங்கல் நிலைமாற்றம்""

"வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடத்தை புரியவைக்கும் .
அது உனக்குள் உள்ள உனது பலத்தை புரியவைக்கும்.
உனது பலவீனத்தை உனக்கு தெரியவைக்கும்.
நல்ல அனுபவம் கிடைக்கும் போது மகிழ்ச்சியும்,
மோசமான அனுபவம் கிடைத்து துன்பம் அடையும் போது
அதையும் ஏற்றுக்கொண்டு மனப்பக்குவமும் அடைய வேண்டும்."

11 December
"ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா... மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று."

12 Dec
"எனதருமை செல்வங்களே. எழுதுங்கள். இன்று உங்கள் முதலாவது தடைதாண்டல். கவனமாகவும் தெளிவாகவும் எழுதுங்கள். உங்களால் முடியும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஆசிர்வாதங்களுடன் வாழ்த்துக்கள். ##All de best my dear students ##GCE O/L Examination"

14 Dec
"கண்ணீர் சிந்தியபோதும் இரத்தமாய் சிவந்தது தாய்ப்பூமி
கண்ணீர் சிந்தும்போதும் தண்ணீர் தரமறுக்குது விடுதிப்பூமி ##வீடல்ல விடுதியடா தமிழா##
**ஏக்கம்**"

"இரண்டுபேரும் மனசுவச்சு பேசிட்டீங்கண்ணா இருவருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு வரும் கண்டிப்பா## நண்பனுடன் சொல்லுங்கள்# வெற்றி வானொலி#"

17 Dec
"நீ இல்லை என்பதை விட நினைவுகளே போதும்.
நிஜங்களைவிட கனவுகளில் காயங்கள் இல்லை."

18 Dec
"மேற்கே காத்திரு. கிழக்கிலிருந்து சூரியன் கிளம்புகிறது. நாளைய விடியலில் சந்திக்கிறேன்.

21 Dec
"கண்ணில் ஒரு தீ.
கருத்தரித்த
காட்சிகளையும் பிரசவிக்க
ஏங்கும்
விரல்நுனி.."

21 Dec
"எனக்காக வாங்கின பொருளொன்றை வீட்ல காட்டுறத்துக்கே பயப்படவேண்டிக்கிடக்கு... வீடு கிடக்கிற கிடையில இம்புட்டுகஸ்டப்பட்டு ஆசைப்படவேண்டி நான்...##வீட்டுப்புள்ளயாய் இன்னும்##"

22 Dec
"நானும் சில புத்தகங்களும்.."

23 Dec
"நேற்றிரவு முதலாய் தொடரும் அடைமழையும் குளிரும் இன்னும் படிக்கவும் பாடசாலைவேலைகளைச் செய்யவும் உதவிற்று..##Hot raining##"

"தாய்நிலம், தாய்த்தமிழ், தமிழன் என்ற சொல்லடையாளங்களால் அனேகம் பேர் அனேகம் பேரை மொக்கைபோட்டுக்கொண்டும் ஒருவர் (பலர்) இன்னொருவர் மீது (இன்னும்சிலமேல்) ஆதிக்கம் செலுத்துவது அடக்குமுறைகுள்ளாக்குவதாக உணரப்படுவது, உண்மையில் புத்திசாதுர்யமற்ற செயலே.. வெறுமையாக அரசியல் என்றதுக்குள் வட்டங்களும் சதுரங்களும் கொண்டு சதுரங்கமேசையில் தமிழ் கொலை செய்யப்படுதலே !!##சில கருத்தாடல்களை பார்க்கும்போது##"

"அஸ்க் ஹஸ்க்.. ஏனோ தன்னாலே ...## நண்பன் படப்பாடல்## பிடிச்சிருக்கு."

24 Dec
"பகைப்பதற்காய் புகை வைத்துவிட்டு பகைமை பற்றிய நலன்விரும்பிகளின் ஏக்கம் என்ன? #சூடு#"இன்றைய படம் : நாளைய தினத்துக்காக
இனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
Friday, December 23, 2011

அடைமழையும் அவியலும்

எங்களுக்கு வடகீழ்ப்பருவப் பெயர்ச்சிக்காலம் என்றாலே மாரிகாலம் தான். மாரிகாலம் வரும் என்று பலர் முன்னாயத்தங்களை மேற்கொள்ளுவது மாரிகாலத்தைப்பற்றி பயம் அதற்காக எவ்வாறு செலவு செய்வது, எப்படி வருமானமற்ற நிலையில் வாழ்வது என்ற எண்ணப்பெருங்கடல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

வறுமை என்ற நிலமை, வருமானம் குறைந்த வாழ்வாதார தன்மை, உலர்காலங்களில் அன்றாடத் தொழில் செய்து தினம்வருமானம் ஈட்டும் தன்மை போன்றவற்றில் இருப்பவர்களாலே தான் இம்மாரிகாலத்தின் வேதனைகளை முற்றாக அனுபவிக்கமுடிகின்றதாக இருக்கின்றது. ஆயினும் ஏனையவர்ளாலும் கஸ்டப்பட்டே கடந்து செல்லவேண்டிய காலம் இது.

சாப்பாடு என்பது மூன்றுவேளையும் சோறும் கறிகளுமாய் ஆன கிராமத்து நரகத்து வழக்கம். ஆனால் கிராமத்திலே எரிபொருள் தட்டுப்பாடான நிலமை தொடரும் காலம் இது. விறகு (கொள்ளி என்றும் அழைப்பர்) அடுப்பிலே எரிப்பதற்கு எடுத்துக்கொள்ள முடியாத தொடர்மழைக்காலம். ஆதலால் மூன்றுவேளைக்குரிய சாப்பாடுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டிய நிலமை.
இக்காலத்திலே தான் அந்த வட்டமேசைகளும் பக்கத்துவீட்டு உறவுகளும் சேர்ந்த ஒரு பானை "அவியல்". என்னடா இது என்று வியக்காதீங்க. சோளன் Zea mays, மற்றும் கச்சான் (நிலக்கடலை)Arachis hypogaea போன்றவைகளின் காலமும் இதுதான். இவற்றினை அவித்து அனைவரும் சுவைத்து பசிபோக்குவது வழமை.அத்தோடு மட்டுமில்லாமல் மாரிகாலத்திலே தான் உப்புக்கருவாடும் பழஞ்சோறும் (தண்ணிச்சோறும்) தின்னும் அருமைவிளங்கும். அதைவிட மத்தியானப்பசியை கோதுமைமாப் பிட்டு, கோதுமைமா ரொட்டித்துண்டுகள் மிளகாய் தேங்காய்ப்பூ சேர்த்து குழைத்து உண்ணல் அற்புதமான சுவையும் சுமைஇறக்கிய வாழ்வுமாய் மாரிகாலப்பொழுது வீட்டுக்குள்ளே கரைந்தோடும்....

என்னதான் ஆனாலும் பஞ்சம் என்பது தளைகட்டும் காலம் இதுதான் என்பதால் பிடிக்காமையும் தான்.
மாரி வந்தாலே கூட பஞ்சம் வரும்.

Thursday, December 15, 2011

காதல் கடந்துசெல்கிறது

காற்று நுரைக்கும்
ஈரப்பொழுதுகள்
காதல் தடவும்
பார்வைவீச்சுகள்

உயரக்குடை பிடித்த
நீ
தேகம் நனைத்த
சாரல்

நேர்கோட்டு வீதியில்
பயணித்தேன்
குறுக்கு கோடுகளில்
நிறுத்திவிட்டாய்

கரடுமுரடான தார்வீதியை
கார்பட் விரித்த
தளமாக்கிவிட்டாய்

நீ சாலையைக் கடக்கும்
பாதசாரி
நான் நிறுத்திய
சைக்கிளோட்டி

பச்சைவிளக்கு
எரிகிறது

காதல்
கடந்துசெல்கிறது
Monday, December 12, 2011

சிதறும் சில்லறைகள் - 20 (பாரதியும் ரஜனியும்)


டிசெம்பர் 11
எட்டயபுர விற்பன்னன். தமிழ்மொழியின் சிற்பி. பெண்விடுதலைக் கவி என்றெல்லாம் ஆன மகாகவி சுப்பிரமணியபாரதியாரின் ஜனன தினம். எட்டயபுரத்திலே  1882 ஆம் ஆண்டு பிறந்து எத்தனையோ தமிழிலக்கியத்தின் இலேசுத்தன்மையையும் தமிழ்வீரத்தின் திறனையும் ஒரு முழுமையான மொழியில் இருக்கவேண்டிய பண்புகளையும் சொல்லிச்சென்றார் சுப்பிரமணியபாரதியார்.
"ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா."
என்ற பாப்பா பாட்டே நான் கற்றுக்கொண்ட முதல் பாடல் என நினைக்கிறேன். அதற்குப்பிறகு "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்றும் பிறகு "நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலை எனது நண்பனின் அண்ணன் புனிதன் அண்ணா(போர்களவீரனானான்) பாடிய பின்னர் உதடுகள் உச்சரிப்பில் எழுந்தது.
சில பாடல்கள் கேட்கும்போது பிடித்துவிடும் பின்னர் யார் எழுதியது என்று பார்க்க பாரதியார் என்றதும் இன்னுமின்னும் உள்ளுர இனிக்கும். ஆனாலும் கடந்தவருடமே சொந்தமாக 13-12-2010 அன்றுதான் சொந்தமாக பாரதியார் கவிதைகள் என்ற புத்தகம் வாங்க என்னால் முடிஞ்சது. அதற்குமுன் இரவலாய் பெற்று வாசித்திருக்கிறேன். ஆயினும் சொந்தமாக வந்தபின்பு வாசிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. இவரது புதுமையும் எழுத்து வன்மையும் தன்மையும் ஈர்த்துக்கொண்டே இருக்கும்.
பாரதியார் பற்றி விக்கிப்பீடியாவில் இங்கு காண்க.

கார்த்திகைவிளக்கீடும் சந்திரகிரகணமும்
இவ்வருடத்தின் இறுதிசந்திரகிரணம் கார்த்திகை விளக்கீடு அன்று சேர்ந்து வந்தது. நான் எப்போதும் இந்நிகழ்வைக் கொண்டாட மறுப்பதில்லை. காரணம் அம்மா தயிர்,வாழைப்பழம், பால் என்பன சேர்த்து ஒன்றாக வெண்பொங்கலில் கலந்து பிசைந்துதரும் பாற்சோறு. அதனை அம்மாவே ஊட்டிவிடுவதும் எங்கவீட்டின் சிறப்பு. சின்னப்பருவத்தில் மெழுகுதிரி கொழுத்திக்கொண்டு வீதிகளில் குறிப்பிட்ட தூரங்கள் இரவுப்பொழுதை "கார்த்திகைக்காரோ பாலுஞ் சோறும் தின்னவாடோ" என்று கத்திக்கொண்டு திரிந்து கார்த்திகைக்காரனைக் கூப்பிடும் நிகழ்வு தித்திக்கும் உணர்வு.
இவ்வருட கார்த்திகை மற்றும் சந்திரகிரகணப்படங்கள் சில.

அம்மாவின் கார்த்திகை நிலாச்சோறு தின்ற திமிரில் மருகள்

நிலவைமறைத்த பூமி

வீட்டு சுற்றுமதில் சுவரில் கார்த்திகைத்தீபங்கள்.


டிசெம்பர் 12
தனது வித்தியாசமான சுப்பரான நடிப்பு. உதவும் நோக்குடன் செயல்படும் தன்மை என்றெல்லாம் தமிழ்சினிமாத்துறையில் என்றும் பதினாறாக "சுப்பர் ஸ்டார்" ரஜினிக்காந்தின் பிறந்தநாள். வாழ்த்துக்கள் தலைவா. ரஜினிகாந்தின் இணையத்தளம் இங்குகாண்க இவர்பற்றி விக்கிப்பீடியாவில் இங்கு செல்க

அண்மையில் வந்ததில் பிடித்த பாட்டு


ஆனாலும் இன்று இன்னொரு நண்பனின் ஸ்டேடஸ் முகநூலில் பாருங்க.


டிசெம்பர் 12 இல் ஓவியம்

"நாம் எமது வீட்டுச்சுவரில் தொங்குவதற்காக இயற்கையின் புகைப்படங்களை விட அழகான படங்கள் வண்ணப்பூச்சு ஓவியங்கள் வரையாமல் குறைந்தபட்சம் ஒரு கலையின் அடித்தளங்களை அமைத்து,நாம் உருவாக்க வேண்டும் ஒரு கலை மனிதநேயத்தையும் சொல்லும். ஓர் இதயத்தின் உட்புறத்தில் கலை உருவாக்கப்படும்."
இவ்வாறு சொன்னவர் தான் நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் எட்வர்ட் மண்ச்.(Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) இவரது படைப்புகள் அற்புதமானவை. இவருக்கான இணையத்தளத்தை உருவாக்கியவர் றோம் ஜெஷ்டர் (Roman Jaster)இங்குசென்று எட்வர்ட் மண்ச்சின் கைவணங்களைக் காண்க.

பிடித்த ஒரு ஸ்டேடஸ்
அண்மையில் முகநூலில் பிடித்தது.

டிசெம்பர் 13
நாளைய தினமும் 13-12-11 என வரும் ஒரு தினமே.

Thursday, December 8, 2011

பின் இருக்கையில் நான்


அழகிய புகைப்படங்கள்
நழுவி நழுவி
அழகிய ஓவியங்கள்
விலகி விலகி

பேருந்தில் நீ
யன்னல் ஓரம்
முன்னிருக்கையில்

எத்தனை அவஸ்தையிலும்
சிறதறடிக்கும்
அழகிய கூந்தல்

சிக்கிய தலைமுடி
கண்ணுக்குள்

அத்தனை வேகங்களை
விசிறியடிக்கும்
நான்
துள்ளி எழுந்து
இருந்துகொண்டுஅவளா நீ
அவளாய்த்தான் இருக்கணும்
நீ

உரசி உரசிக்கொள்ளும்
உதிரம் கொதித்துக்கொள்ளும்

ஒரு திரும்பல் வேண்டும்
தவநிலையின்
ஒற்றைக்காலில்
நான்
பின்னிருக்கையில்


Sunday, December 4, 2011

வெட்டப்படுகிறது.


நானாய் உருவிவந்து
உரமிட்டதில்லை
நீயாய் கேட்டு
உயரமிட
மறுத்ததுமில்லை

ஏதோ ஒரு பறவையின்
எச்சில் துப்பி
தப்பித்தவறி
வந்து விழுந்து
விட்ட அந்த பழமும்
விதையும்

இன்று
நீ
விருட்சம்

நீ வெறும் சப்பையாக
இருந்திருந்தால்
இவ்வளவுகாலம்
இருந்திக்கமாட்டாய்
எப்பவோ
குப்பையாகியிருப்பாய்

உன்னை வெட்டியே நாம்
வாழணும் என்று உணரவேண்டி

அங்கே காகங்கூட கூடு கட்டிவாழுது
அதற்கும் உலைவைச்சி
வீட்டின் கூரையைப் பிய்துவிடுமென்று
பாவம்
வேம்பு வெட்டப்படுகிறது


இனி எங்கே அந்தப்பட்டை
எங்கே அந்த கொட்டைகள்
மருந்துக்கு அரைத்தெடுக்க

அந்த துளிர்கொண்ட பசுமை எங்கே
இலை உரசி வருடும் காற்று எங்கே

கூடுகட்டிய காகங்கள் எங்கே
சல்லாரி இசை இசைக்கும்
இலைகள் எங்கே


Thursday, December 1, 2011

வேலைத்தளங்களும் மாற்றங்களும்

ஒவ்வொரு மாற்றம் எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும். இருக்கவேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளும் கற்றுத்தரும் இந்த மாற்றங்கள் வாழ்வில் மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்தும்.

மாற்றங்கள் சிலவேளை சந்தோசச் சாரல்களைத் தூவிச்செல்லும். சிலநேரம் கண்ணீர்ப்பூக்களால் அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஒரு ஸ்டேடஸ்,
"ஒவ்வொரு கூலியாளும் கவனமான படிப்பினைகள் மூலம் என்றோ ஒரு நாள் முதலாளியாகணும். மாற்றங்கள் எப்பொழுதும் தேவை."
ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு வேலைத்தளத்தில் வேலைசெய்யும்போது ஒரு முதலாளி அல்லது முகாமையாளர் போன்ற ஒருவர் மூலமே அதிக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு பலவேலையாட்களால் அந்நிறுவனம் அல்லது வேலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கும். பல்வேறானவர்களின் மனிதஉழைப்பு அதாவது அடிமட்ட வேலையாட்களாலே உயர்மட்ட முகாமைத்துவம் சிறக்க நிறுவனம் திறனாக இயங்கும்.
இங்கு மூளையைச் சலைவை செய்து தொழில்வாண்மைமிகு அனுபவமுள்ள முகாமையாளராலேயே நிறுவனத்தை மிகச்சிறப்பாக கொண்டுசெல்ல முற்படமுடிகிறது. ஆனால் பல்வேறு அடிமட்டங்களில் சிந்தும் வியர்வை உண்மையில் சிவப்பு இரத்தங்களாலே இயங்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டும் ஏற்றுக்கொள்ளாததன்மையால் நகர்கிறது.

இதற்காகவேண்டி மாறங்கள் அவசியம். அந்த வேலைத்தளத்தின் அடிமட்டத்தில் வேலைசெய்பவன் அல்லது அவனது பிள்ளை உயர்மட்டம்வரை செல்லவேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. இங்கே மாற்றங்கள் ஒரு வஞ்சனையோடு அல்லது வாஞ்சியோடு வளரவேண்டியதில்லை. மாற்றங்கள் உணர்ந்து சிறப்பான சேவையாற்றி பல்வேறு திறமைகளை வெளிக்காட்டுவதன் மூலம் கொண்டுவரப்படவேண்டியதே.

ஏனெனில்,
'அரசசேவையில் 20 வருட சேர்விஸ் 30 வருட சேர்விஸ் என்றெல்லாம் பலர் சொல்லுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இஙகு அவர்சொல்லிய அந்த வருடங்களில் உழைத்த உழைப்பு வினைத்திறனாய் அமைந்திருக்காது. திறனாக இருக்கலாம். அதற்காக அதற்காக முழுமையானவர்களாக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் மிகத்திறமைசாலிகள் என்றும் தம்பட்டமடிக்க முடியாது.


எந்தவொரு வேலையிலும் மாற்றங்கள் தேவை. ஆக அந்த மாற்றம் தான்வேலைசெய்யும் தளத்தில் உயர்வடையச் செய்யும் மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டிதும், அவர்களை அதே வேலைத்தளத்தில் சிறப்பான முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் சிறப்பாக மேற்கொள்ளத்தூண்டும்.

ஆனாலும் ஏறத்தாழ 5 - 8 வருடங்கள் வரையே ஏதாவது ஒரு துறையில் இருத்தல் சிறப்பாக, நமது வேலைகளையும் நமது திறமைளையும் வினைத்திறனாகவும் (Efficiency), விளைதிறனாகவும் (Productivity) வெளிக்காட்டமுடியும்.

இதன்பின்னர் வேறுதுறையில் அல்லது முன்னேற்றகரமான நிலையில் வேலையைச் செய்வோமானால் இதோ வினைத்திறனையும் விளைதிறனையும் பெற்றுக்கொள்ள முடியும் நல்ல படிப்பினைகள் (Lesson Learning) மூலம்,
இதனால் எந்நவொரு வேலையிலும் கூடியகாலம் இருந்து அலுப்பறைகளைக் நமக்கும் மற்றவர்களுக்கும் கூட்டிக்கொள்ளாமல் நாங்கள் களைப்படையாமல் மகிழ்ச்சியான சிந்தனையுடன் மிகச்சிறப்பாக பணியாற்றலாம் இல்லையா? ஒரே வேலைத்தளத்தில் தொடர்ந்திருக்கும் போது பல்வேறு மனஉழைச்சலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியேற்படும். இதனைத்தவிர்ப்தற்கு மிகச்சிறந்த மருந்தே "மாற்றங்கள் உணரப்படவேண்டும்"(Feel the change) என்பதாகும்.


இதற்காக 'இத்தின வருச சேர்விர்ஸ்' என்று மொக்கை போடாம இந்தக்காலம் என்னுடைய காலம் என்று சொல்லக்கூடியவாறு செயலாற்றல் சாலச்சிறந்தது எனக்கருதுகிறேன்.
மாற்றங்கள் அவசியம் தேவையல்லவா,??
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு