Pages

Monday, November 21, 2022

❤️❤️தரம் 6 முதல் 9 வரை மாணவர்களுக்கு ❤️❤️

 

❤ பாடசாலை மட்டுமில்லை. பிரத்தியேக நடவடிக்கைகள்
பின்வருவனவற்றில் கவனம் செலுத்தினால் சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளில் பெறுபேறுகளை அதிகரிக்க முடியும்.
❤️ஆங்கிலப் புலமையை வளர்க்க பிரத்தியேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆங்கில மொழித் தேர்ச்சி மற்றும் அதன் அவசியம் பற்றி தெளிவுபடுத்தி, இலகுபடுத்தப்பட வேண்டும். எமது மாணவர்களுக்கு ஆங்கிலச்சுமை உள்ளது.
❤️உலக விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சி பற்றியும் அதன் தேவை பற்றியும் விழிப்புணர்வூட்டல் வேண்டும். விஞ்ஞான கண்காட்சி, செயற்பாடுகள் மாணவர்ளை ஊக்கப்படுத்தலும் செயற்படுத்தலும் அவசியம். குழுவாக, ஒவ்வொரு வகுப்புக்களாக செயற்படுத்தல் வேண்டும். உதாரமாண Robotic, Automobile, Electrical and Energy, கண்காட்சி.
❤️கணணித் துறை சார் நுட்பமுறைமைக் கையாளும் திறன் அவற்றைக் கொண்டு கற்றல் வளங்களை விரிவுபடுத்தல் வேண்டும். கணணி வளங்களை அதிகரிக்க வேண்டும். மாணவர்களைக் கையாளுவதற்கு இடமளிக்க வேண்டும். காட்சிப்படுத்தலே அனேகமாக நடைபெறுகின்றது.
❤️இலகுவாக கணிதம் கற்பிக்கப்பட்டு கணிதத்தில் அனைவரதும் அடைவுமட்டங்களை அதிகரிக்க மாணவர்களை தூண்டுதல் வேண்டும். (கணிதத்தில் விருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.) கணிதம் ஒரு மொழியாக வேண்டும்.
❤️வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, தமிழில் எழுத்துப்பிழை இல்லாத தன்மையும் பேச்சாற்றலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
மாணவர்களை சோம்பேறித்தனத்தை நீக்கலாக தொடர்ச்சியான செயற்பாடுகளுடன் இற்றைப்படுத்த வேண்டும்.
❤️ஆளுமை வளர்ச்சி, ஆன்மீக மன ஒருமைப்பாடு பயிற்சி, தன்னடக்கம், தலைமைத்துவ பயிற்சி, அதிகரிக்கப்பட வேண்டும்.
❤️இயற்கை மற்றும் சூழலியல் பற்றிய விளக்கங்களும் இவற்றை பாதுகாக்க மாணவர்களால் செயற்றிட்டங்களை செயற்படுத்தல் வேண்டும்.
❤️மாணவர்களின் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மட்டும் விமர்சிப்பதை விட வாய்ப்புகளை வளங்களை அதிகரிக்கவேண்டும்.
❤️உயர்தர வகுப்பு துறைகளைப் பற்றி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தல் வேண்டும். துறை சார் நிபுணத்துவமானவர்களை அறிமுகம் செய்து மாணவர்களது ஆசை, ஆற்றல், தேடல் விழிப்புணர்வு அவசியம் வழங்கல் வேண்டும்.
❤️ மாணவர்களது உடல்நலம் சீராகப் பேணப்பட வேண்டும். இதற்கு உடற்பயிற்சி விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவை மாணவர்களுடன் பெற்றோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.
றமேஸ்

Wednesday, November 2, 2022

வலி

 நீண்டு விரிந்து பரந்த

இருண்ட வானம்
நட்சத்திரத்தை உமிழ்ந்து விட்டு
இராப்பொழுதை தருகிறது
பட்டப்பகலில்!
நீங்கள் இப்போது இல்லை!
நீள இரவின் நினைவுகள்
பகல் பொழுதின் ஒளிக்கீற்றுகள்
சுட்டெரிப்பா இது..
சுடர்விளக்கே!
நீங்கள் இல்லாமல்
கண்களுக்கு தெரிவதில்லை
ஏனென்று எப்படியென்று
ஓட்டை விழுந்த போத்தல போலே
ஒழுகிக்கொண்டே...

சாப்பாடும் மரணவீடும்



காலைச் சாப்பாடுகள் பால் அப்பம், சீனிபோட்ட பால் அப்பம், இடியப்பமும் சொதியும் சம்பலும்....
மதிய்ச்சாப்பாடு ஒரு தொகை...
ஓடர்பண்ணி "நாங்க இன்று நாங்க நாளை"...என்ன எங்கள் சாப்பாடை யும் ஏற்றுக்கொள்ளுங்கள்...
இரவுச்சாப்பாடுகள் இடியப்ப மழை...
ஆயிரமாயிரம் அன்பு வெள்ளம் கொட்டிக் தீருமோ அப்பாவின் இடைவெளி.
கடதாசி கூட்டம் விளையாட ஒரு பால்..
கலாம் முலாமென வந்து கதைச்சு போகிறார்கள் பலர்
என்னே பண்பு...வாழ்தல் காண்கிறோம்
இப்போது எமக்கு அம்மாவின் உடல்தேற வேண்டும். ஆற்றாவேதனையின் வடிவம் என்னென்ன சொல்லி தந்தாலும் கடந்துதான் ஆக வேண்டும்.
ஊர் பாரம்பரியம்
எழுதா மரபுகள்
சொல்லாமல் சொல்லும் வழக்கு
கிராமத்து பாணி
படம்:
ஒவ்வொரு நாளும் அப்பாவின் விருப்பங்கள் சாப்பாடு, தண்ணீர் செம்பு

கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

அன்பு, இரக்கம், எல்லோரையும் நம்பும் சிறப்பு, மென்சொல், ஒரு புன்னகை என்று எத்தனையப்பா நீங்கள்....

கண்டசாலா பாடல்கள், தேசிய சேவை செய்திகள், வீரகேசரி பத்திரிகை அறிமுகம் செய்தீர்கள்....
எம்.எஸ்.வி பாடல்களிலும் மிகவும் ரசனை. கண்ணதாசன் கவிதைகள் புத்தகங்களை வாசிக்க பழக்கினீர்கள்.
உண்மையில்
பாசமலர் நீங்கள் தானே.....
கர்ணன் படத்தில் எங்கள் கண்ணீரை துடைத்து அது சினிமா என்பதை சொல்லி தந்தீர்கள்...
P.B சிறினிவாஸ் என்றால் எவ்வளவு ரசிப்பீர்கள்.....
"கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ"...

இறந்தும் இறாவா நிலை!


அப்பாவுக்காக எத்தனை அனுதாபங்கள், எத்தனை துயர்பகிர்வுகள், அம்மாவைப் பற்றி எத்தனை நலன் விசாாிப்புக்கள்.... உண்மையில் இறந்துபோதல் இயற்கைதான். ஆனாலும் இறவா நிலை கொண்டுள்ளார் எமது தந்தை.!!
”அன்னமிட்ட கை....... ” என்று எங்கள் அம்மாவின் கரம் பற்றி அழுகின்றனர் வந்து அன்பை சொாிகின்றனர்.
அம்மா ஆயிரமாயிரம் பேருக்கு அன்னமிட அப்பா எந்தச் சலனமும் மனங்கோணலும் இல்லாமல் ”வாங்க இாியுங்கோ” என்று சொல்லும் பண்பையும் சொல்லியழத்தான் நாங்கள் வாழ்ந்தது வீடு அல்ல ”இல்லம்” என்பதை உணர முடிகிறது.
”ஒரே ஒரு பொிய கல்வீடாம் அப்பொழுது எல்லாரும் வருவாங்களாம், ஒரே ஒரு கலர் டிவியாம் ஊரெல்லாம் வந்து நிகழ்ச்சி பார்ப்பாங்களாம் ஒருவரையும் முகங்கடிக்காமல் அனுமதிப்பாராம்” தந்தையின் உணர்வு பொிது.
அம்மாவின் குடும்பப்பொறுப்பு பொிது. அனைத்தையும் அம்மாவிடம் ஒப்படைத்து உழைப்பின் மகத்துவத்தை சொல்லித்தந்து தந்தையே!!
தலைமைதாங்க மாட்டார். ஏழளனப்பார்வையில் ஓராயிரம் அன்பை தருவார். எனக்கு ஏற்றாற்போலே நகைச்சுவை. இருவரும் மனம் விட்டு பேசுவதை எப்போதும் விரும்புவார். எதையும் மறைக்காமல் சொல்லவேண்டும். எல்லாம் பேசுவோம். இப்பதான் அந்த இடைவெளி பற்றிய எண்ணம் வருகிறது.
மரம் நடணும், விதைப்பந்துகள் இப்படி செய்கிறோம்... என்றால் சந்தோசப்படுவார். ” உங்கட சேர் வரலையா...... அவர் அக்சிடன்ட் பட்டதாமே உனக்கு தொியாதா மகன் போகலையா அவர பார்க்க ” எப்படியப்பா தொியும் உங்களுக்கு” இவனுகள் தான் கதைச்சானுகள்.”...
நானோ என்சார்ந்தவர்களோ அவருக்கு எல்லாம் தொிந்து இருக்கும் அதை அறிதலில் ஓர் ஆனந்தம் அவருக்கு.
”யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்”
உண்மையில் அப்பா நீங்களே!!
எனது கையெழுத்தே உங்களது பாணி!
90 ஆம் ஆண்டு பிரச்சனையில் உங்களோடு வேலைசெய்தவர்கள் ஓடி வர அவர்களை வீட்டில் தங்க வைத்து அனைத்தும் வழங்கி எங்கள் குடும்ப உறவினர்களாக்கினீர்கள். யாரென்று அறியாதவர்களின் கண்ணீர் துடைக்கும் விரல்கள் உங்கள் கரங்கள்.
ஆதலால் என்னவோ எந்தவொரு இராணுவமோ... யாரோ உங்களை பிடிச்சு விசாாிக்கவும் இல்லை, பிடிக்கவும் இல்லை ஒரு புன்சிாிப்போடு கடந்தீர்கள் அந்த இக்கட்டான சூழலையும். இன்றும் கண்ணுக்குள் உள்ளது.
"விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே "
----- மாணிக்கவாசகர்
மருமக்களை தன்மகன்களாகவே பார்ப்பார். அவர்களை நேசிக்கவும் மதிக்கவும் சொல்லித் தந்தார். கடைசிவரையும் அவர்களை கைவிட்டுவிடாமல் பார்த்துக்கொள் என்றார்..
"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன்னடியின் கீழ்இருக்க என்றார்.
- (பெரியபுராணம், காரைக்கால் அம்மையார் புராணம்-60"
படம் மூத்த அத்தானுக்கு மருத்துநீர் வைத்தபொழுதொன்று

வலிதினும் போதினிலே... 8ஆம் நாள் கடமைகள்

 


”அப்பா” சென்றனன் தான்.
ஜனனமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை” .. கவிஞா் வைரமுத்து அவர்களின் ஜென்மம் நிறைந்தவர் கவிதை அழகாக சித்தரிக்கும்.
ஆன்ம ஈடேற்றம் வேண்டி இன்று எட்டாம் நாள் கடமைகள்.
காலையில் மீண்டும் சுடலையில் அவர் வித்துடல் மண்ணுக்கு பாலாபிஸேகம். கண்ணீர் காணிக்கை.
”அவன் அருளால் அவன் தாழ் பணிந்து” பாடல்கள்
மதியம் சாப்பாடு- மச்ச சாப்பாடுதான்.
இறுதிக் கடமைகளில் பங்கேற்றவர்களுக்கும் அவருக்கான குழி வெட்டியவர்கள் பிரதானமாக அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கான சந்தோச பானங்கள், சாப்பாடு இதர மகிழ்ச்சி நன்றிக்கடன் நிமித்தம் செய்யப்பட்டது.
பின்நேரம் மீண்டும் ஏழு மரக்கறிகள் கொண்டு ஒரு சமையல், பலகாரம், கூழ், வாரப்பம்... என்று சில தின்பண்டங்கள்.
உண்மையில் கூழ் என்றால் எங்கள் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். வாரப்பம் ருசிச்சி உண்பார்.
பழமைவாதியான அவருக்கு பண்பாட்டு கலாசாரம் பேணுவது பிடிக்கும்.
அன்பானவர் இரக்கம் நிறைந்தவர் இழந்துவிட்டோம்....
ஒவ்வொரு உறவினர், தொிந்தவர்கள், பழகியவர்கள், என்று பலபேர் இந்த இக்கட்டான சூழலிலும் வருகை தருவது சந்தோசப்படுவதா வேதனைப்படுவதா.... பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அப்பாவின் ஆத்மா சாந்திபெறும். நிச்சயம் அவரோடு வாழ்தல் பிடிக்கும் என்போம். கடந்துவிடலாம், காலங்களில் அவர் வாழ்வதால் நினைவுப்படுக்கைளின் ஆழத்திலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது ” தம்பி தம்பி ”... என்று எனது தந்தை அழைப்பது. இது வலி! பேரன்பின் வலி!!
நிச்சயமாகச் சொல்லப்போனால் வாழ்தல் அறம் என்பேன்.
தந்தையின் பிரிவுத்துயாில் ஆயிரமாயிரம் வயற்றுப்பசி போக்குகின்றோம். யாா் யாரோ யாரோ என்று சாப்பாடு மழை என்பதா இதை எந்த காலத்தில் அல்லது வகுதிக்குள் சேர்ப்பது என்றே விளங்களவில்லை.. தொடர்ந்து கொண்டு வருகிறாா்கள்.
அக்காமாாின் வேலைத்தள நண்பர்கள், சகோதர்கள், அத்தான்மாாின் உறவுகள், வேலைத்தள அன்பர்கள்.. எனது அத்தனை அன்புகள் பெரிது..
ஓ.. அப்பா நீங்கள் வாழ்கிறீர்கள்...
இன்றிரவு மடைவைத்து அவருக்கு விருப்பமான தின்பண்டங்கள் மற்றும் பண்பாட்டு தின்பண்டங்கள் என்று படைக்கின்றோம்.
எட்டாம் நாளின் பின்னரே எமது அம்மா தலைவாாிக் கட்ட முடியும். இதன் பின்னரே நாங்கள் இயல்பு நிலைக்கு மீள ஆரம்பிக்கவேண்டும்....
மரபுகளில் வாழ்கிறோம்
மதிக்கின்றோம். இயல்பை கொணர எத்தனை அன்புகளில் புதைகின்றோம்.. மரணத்தினால் சில வலிகள் போகும்.



வாழி பாடுதலும் 10 ஆம் நாள் நினைவேந்தலும்.


கொண்டைக்டர் சிவஞானம் என்று தான் அப்பாவை அழைப்பர். அதனால் எனக்கும் ”கொண்டைக்டர்” பட்டம் கிடைத்தது.
சாவீடு என்றாலே எங்களது வீடுகளில் வைகுந்த அம்மானை பாடுவோம். இது எட்டுநாட்களுக்குள் முடிக்கப்படும் சிலவேளை பத்தாம் நாள் பாடி முடிக்கப்படும்.
ஆனால் எனது மாமன் மறைந்துவிட்டார் மணியம் மாமா சொன்னார் அதற்கு வரையறை இல்லை பாடி முடிக்கும் நாள் பொங்கல் படையல் வைத்து வழிபடல் வேண்டும் என்று.
அவ்வாறே இன்று பத்தாம் நாள் நினைவேந்தலில் பாடி முடித்தோம். அம்மம்மாவின் தங்கை எங்கள் ஆசம்மா தான் பாடி முடித்தார். அவரோடு இணைந்து கோபாலபிள்ளை அண்ணன், பாபு மாமா, தேவி சித்தி எல்லாரும் பாடித்தான் அம்மானை முற்றுப்பெற்றது.
அண்மையில் நினைவேந்தலுக்கு அரசு தடுத்தமை மிகவும் கண்டனத்துக்குாியது.
இறப்பின் வலி கொடியது. அதற்கு கட்டாயம் நினைவேந்தல் வேண்டும். அப்பா இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளக்கூட முடியவில்லை.
இன்று எங்கள் மருமகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளது தோழ தோழிகளது பெற்றோர் காலைச்சாப்பாடு கொண்டு வர மனதை ஏதோ ஒரு ஜென் நிலையா,?? என்னவென்னபது?
அன்பின் ஒரு வகையை உணர்ந்து தான் ஆகவேண்டும்.
என்னே ஊர் பண்பாட்டு வழக்கம்..
இந்த கொவிட் காலத்திலும் அச்சம் இல்லாமல் சுகாதார வழிவகையில் ஒவ்வொருநாளும் கிடைக்கும் உபசாரங்களும் அனுதாபங்களும் எத்தனை கடன் பட்டுள்ளோம் அனைவருக்கும். ஏக்கமும் கலக்கமும் கொண்ட இந்நேரம் வாழ்தலின் இனிமையை சொல்லிச் செல்லுகின்றது.
அப்பா நீங்கள் வாழ்கிறீர்கள் என்றே சொல்லுவோம்...
கொண்டக்டராக இருந்து சேவையும் செய்தமை என்ன புண்ணியம் செய்தமோ!!!...
உண்மையில் அப்பா 2010 ஆம் ஆண்டுதான் இறந்திருக்கவேண்டும். அந்த நிமோனியாவால் அவதிப்பட்டதை என்னவென்று சொல்ல.. தாதியான அக்காவின் துணையினால் சேவை என்பதை செவ்வனே செய்யும் அக்காவின் பாிகாரங்கள், வைத்திய ஆலோசனைகள், வைத்தியர்களின் அர்ப்பணிப்பினால் இந்த பத்துவருடங்கள் எங்களோடு வாழ கிடைத்தது.
கடைசி இரண்டு மாதங்கள் சிறுநீர் செல்லும் பிரச்சனை, அதற்கு முதல் சில வருடங்களாக பார்க்கின்சன் நரம்புப் பிரச்சனை, கடைசியாக மீண்டும் நிமோனியா, இளைப்பு வந்து இறக்கும் உச்சம் சென்று மீண்டு நலமாகி இரு நாட்களின் பின்னர் இயற்கை எய்தினார்..
”அம்மா அப்பா போயிடுவார்” என்று அம்மாவிடம் சொன்னால் அம்மா ஏசுவா. சும்மா இரு அப்பா இருப்பார் என்று உறுதியாக சொல்லி வந்த அம்மா 13 ஆந்திகதி பின்னேரம் தான் அதிக அழுகையும் என்தோள் மீது சாய்ந்து அப்பா வேணும்டா என்று அழுகை வரத்தான் எனக்கு சந்தேகம் வந்தது. என்மகன் ஆரணன் எப்போதும் ” அப்பா” அம்மா” இரண்டு வார்த்தைகள் தான் சொல்லி வந்தவன் அன்றுதான் ”அப்பா, அப்பப்பபா”.. அப்பப்பா” என்று சொன்னான். பிறகு அப்பாவிடம் கூட்டிச் செல்ல தம்பி என்று அவாின் இரு கைகளும் தூக்க எத்தனித்ததையும் ஆரணன் கைசையினால் விடைபெறுதலையும் சொல்ல, எனக்கு அப்பா எங்களை விட்டுச் செல்லப்போகிறார் என்பதை எதிர்வுகூறியது போலாகியது.
14 ஆம் திகதி அதிகாலை 12.10 - 12. 30 இடைவெளிகளில் அப்பா நீள் நித்திரையிலானார்.
கண்கள் நீயே
காற்றும் நீயே
ஊனும் நீ
உயிரும் நீ....
தாமரையின் வாிகள் கொல்லாமல் கொல்லும்.... பாடல் தான்
இப்போதும் ”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் பின்னே” எவ்வளவு அழகாக நா.முத்துக்குமார் சொல்லிச் சென்றுள்ளான்...
திருவாசகத்தின் பல பக்கங்களை வாசிக்க வேண்டிய தருணத்தை தந்து சென்றுள்ளார் எனது தந்தை....
அவன் தாழ் பணி செய்ய புறப்பட்ட எனது தந்தையின் கண்கள் திறந்து பார்ப்பது போலயே இருக்கிறது. இறுதிக் கடமைகள் செய்துகொண்டே இருக்கிறோம்...
இன்னும் வாழ்க்கையை சொல்லித் தருகிறார்...
படம்
வைகுந்த அம்மானை நிறைவுநாள் பதிவு.




இழப்பின் வலி

வாழ்க்கையின் வனப்புகளை இழக்கக்கூடாது. அன்பு, அரவணைப்பு, சின்னச்சின்ன சலசலப்புகள், கொஞ்சம் கோவம், சாப்பாடுகள், வந்தாரை வரவேற்று வாழுதல் என பல அம்சங்களில் வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு அணுவணுவாக வாழ்தல்வேண்டும்..

அவசரப் பொழுதுகள் என்று வேலை வேலை என்றோ.. மற்றவர்களோடு கதைக்ககூட நேரம் இல்லை என்று பம்மாத்தோகாட்டி வாழ்தலை விட இறத்தல் மேல். பணம் உழைப்பு என்று ஒரே அலைதலோ! நிம்மதி தொலைத்து நித்திரை குறுகி சிறிய வட்டத்துள் வாழ்க்கையை அமைத்தல் பொய்யானது.
பணம் வாழ்க்கையின் முக்கிய அம்சம் தான் ஆனால் இந்த கொவிட் பல இலட்சங்களை சேமிக்க கஸ்டப்பட்டவர்கள் உடல்கூட உறவினர் பார்க்கமுடியாமல் புதைத்தலும் எாித்தலிலும் ”வாழ்க்கை” எது? எதற்காக வாழவேண்டும் என்பதன் அர்த்தங்களை சொல்லிச் செல்கிறது.
ஓர் இறப்பு ”தற்காலத்தில்” நிகழ்ந்தால் முதல் கேள்வி ”எப்படியாம் செத்தாரு” என்பதன் அர்த்தம் கோவிட் இறப்பா இல்லையா என்பதை கேட்டு இறுதிகிாியை, மற்றும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளலாமா இல்லையா என ஏங்கும் உள்ளங்கள் அதிகம்.
அப்பாவின் இறப்பிலும் முதல் கேள்விக்கு முதலே ” இயற்கை எய்தினார்” என்று சொல்ல வேண்டிய தருணம் கடந்தோம்.
அனேக சாவீடுகளில் மக்கள் செல்ல அச்சப்படுதல் கண்கூடு.
எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் தொற்றுநீக்கிக் கொள்கின்றோம். மாஸ்க் போட்டுக் கொள்கிறோம். பல்வேறு அன்பர்கள் வருவதால், பாதுகாப்பை மாஸ்க்குகளும் சனிடைசர்களுக்கும் தான் முக்கிய இடம்.
பொதுவாக மனநெருடல்களில் கைகொடுப்பது இதமான பாடல்கள் தான். ஆனால் உற்ற சோகம் தந்தையின் இழப்பு. இயற்கையின் அம்சங்களில் இதுவும் கடந்துவிடும். ஆனாலும் வாழ்தலின் அருமைகளை சொல்லித்தருகின்றது.
குடும்பப்பொறுப்பின் அத்தனை அம்சங்களை பட்டியல் படுத்துகின்றது.
ஆயிரமாயிரம் அனுதாப தொலைபேசி அழைப்புகளும் இணையவழித்தொடர்புகளும் பெருமையாக இருக்கிறது நாம் சமூகத்தில் வாழுகிறோம் என்று....
குடும்பத்தோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ”அம்மா” அப்பா” என அழைக்கும் ஒவ்வொரு கணமும் வாழ்தல்வேண்டும். ஆயிரமாயிரம் அன்பு இருக்க எதுக்கு கூடுதலை விட்டு பிாிதல் பற்றியோ கதைக்காமல், கூடாமலோ வாழவேண்டும்..
இடறி விழ தூக்கிவிடும் கைகள்
இதயம் கனக்க இளகிப் பேசும் இதயங்கள்
தன்மையாக குறுஞ்செய்திகள், குறிப்பொலிகள், குறிப்புகள் என அன்புவருடல்கள்.. ஆகா அன்பு ஒன்றே நிரந்தரம். நன்றி.
நிற்பதுவே,நடப்பதுவே,
பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,
நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
கால மென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே
நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்
காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்
இந்தக் காட்சி நித்தியமாம்.
------ பாரதியார்.

ரணம்

நீள இரவின் கருப்பு வானில்

இப்பொழுது சுடர்விடும்

நட்சத்திரம்
பந்தத்தின் சில்லறைகளை
பாசத்தின் கதிரொளியாக்கி
ஒளியின் நிழலாய்
ஒளிக்குள் ஒளியாய்
இருக்கும் வரை இதயத்துடிப்பாய்
இனித்திடும் புன்னகை
இல்லாதபோது தான்
தொலைதலின் வெறுமைகளை
இடைவெளிகளில் நுகரவேண்டி...!

அவரும் நானும்

உண்மையில் அப்பாவின் ஆயிரம் சந்தோசங்களில் 40 வருடங்கள் பயணம் பெரும் சவால் தான். நீ பொிதா நான் பொிதா என்று நாங்கள் அன்பபைப் பகிர்ந்துகொள்ளுவோம். எனது எழுதுத்துக்களின் முதல் ரசிகன் தந்தையே!!
கண்ணதாசன் அழகாக சொல்லி இருக்கும் பாடல் அப்பாவுக்கு பிடித்த சிறினிவாஸ் பாடிய பாடல்!
”மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்” எவ்வளவு அற்புதமாகவும் எளிமையாகவும் வாிகளில் சொல்லி சென்றிருக்கிறார் கண்ணதாசன். பாடல் லிங் கீழே கேட்டுப்பாருங்கள் என்ன குறை இருக்கு இந்தபாடலில்.
ஆரம்பகாலத்தில் கோயில் குளம் என்பதற்கு சில வரையறைகளை வைத்திருந்தார் அப்பா. பகிடி கூட பண்ணுவார். பின்னர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் எனது வற்புறுத்தலில் ஆத்ம திருப்திக்காக கோயிலுக்கு சென்றார். கோயிலடியில் குழாமாக இவர் கதைச்சு சிாிப்பதை பார்க்க மனசு சந்தோசப்படும். இரவில் வந்து அந்தக் கதைகளின் நீட்சிகளைச் சொல்லுவார். ரசனையாக இருக்கும்..
காலையில் தண்ணீர் செம்பொன்றை கொளகொளவெனக் குடிப்பார். காலைச்சாப்பாடு அப்பாக்கும் அம்மாவுக்கும் எனக்கும் எப்போதும் தண்ணீச்சோறுதான். அதுவும் தயிர் குழைத்து தேங்காயப்பாலோடு பழஞ்சோறு தேவமிர்தமாக இருக்கும்.
சிலவேளைகளில் தயிர் இல்லாத போது புளியம்பழம் தான் எங்களுக்கு இருக்கும். அற்புத சுவை. மாம்பழங்களில் கறுத்தக்கொழும்பான் தான் எங்கள் இருவாின் விருப்பம். அம்மாவுக்கு மட்டுமே இந்த ரகசியம் புாியும். மூத்த மருமகன் வந்ததும் எங்கள் அத்தான் இந்தச்சாப்பாட்டைத்தான் விரும்பி இப்போது வரைக்கும் தொடர்கிறார்.
இலங்கை போக்குவரத்தில் பணியாற்றியதால் தனக்கு பென்சன் சம்பளம் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை என்ற குறை எப்போதும் அப்பாவுக்கு இருந்தது. நான் தன்னார்வ தொண்டு நிறுவனம், மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும்போது தான் என்னிடம் சும்மா கொஞ்சமாவது பணம் தன்னுடைய கையில் இருக்கவேண்டும் என்று கேட்பார். ஆனால் மூத்த அக்கா தான் அப்பாவுக்கு பின்னர் எங்கள் குடுபம்பத்தை கொண்டு சென்றவர்.
முன்னர் பயிர்ச்செய்கைதான். கத்தாி, வெண்டி, பயற்றை என தொடர்ந்து செய்கை பண்ணினோம். பின்னர் வெற்றிலைத் தோட்டத்தை ஆரம்பித்தோம். அப்பா தான் எப்போதும் முதலில் நடுதலை செய்வார். அவர் நட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எங்கள் அம்மாவின் நம்பிக்கை.
வெற்றிலைச் செய்கையில் அனைத்து தொழில்முறைகளையும் செய்வார், கொழுந்து இறக்குதல், பதித்தல், வெற்றிலை பறித்தல், கொழுந்து கட்டுதல், மண்போடுதல்.. என்று எல்லாவகையறாக்களிலும் தேர்ந்தவர். என்னைத்தான் அத செய்தாத இத செய்யாத என்று சொல்லுவார். நான் தான் பிடிவாதமாக வெற்றிலைச் செய்கையில் ஈடுபடுவேன்.
வெற்றிலைச் செய்கை பற்றிய எனது பழைய பதிவு
தனியார் நிறுவனத்திலிருந்து விடுபடு. அரச உத்தியோகம் எடு எடு என்று பலமுறை என்னை வற்புறுத்தினார். நான் அவரை பலதடவைகள் சமாதனப்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் 2010 இல் இவா் இறப்பின்நுனி வரை சென்று திரும்பியதால் கட்டாயம் ஆசிாியர் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை. மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் கிடைத்தது போட்டிப் பரீட்சையில். ஆக இவருக்கு பெருத்த சந்தோசம் பின்னர் அப்பாவை நான் இழக்கக்கூடா என்று அவர் ஆசைப்படியே ஆசிாியராக வேண்டி இப்போதும் தொடர்கிறேன்.
மாணவர்களிடம் சொல்லியிருக்கிறேன், அப்பா சாகும் வரையும் தான் நான் ஆசிாியராக இருப்பேன் என்று. எப்படியோ வேறு தொழில்முயற்சியை ஆரம்பிக்கவேண்டும் என்று இருந்தேன். ஆனாலும் இப்போது அவர் ஆசைப்படியே இருந்திடவேண்டும் என்று இருக்கு.
கண்மூடினாலும், அவரை பார்ப்பது, கதைப்பது போன்றே தோன்றுகிறது.
உண்மையில் என்னுயிர் தோழன் தான். இழந்துவிட்டேன் அப்பா.
ஒவ்வொருநாளும் எனது வருகைக்காக காத்திருப்பார். நடுநிசி கடந்தாலும் ”தம்பி” என்று குரழெப்பித்தான் நித்திரை கொள்ளுவார். எப்படித்தான் நான் அவர் நித்திரையை குழப்பக்கூடா என்று மெதுவாக வந்து கதவைத் திறந்தாலும் அவர் கண்விளித்து கூப்பிடுவார்.
அதேபோல் நான் காலையில் வெளிக்கிட்டால் ஓடி வந்து எனக்கு முன்னால் நின்று என்னை பார்க்க நானும் அவரைப் பார்த்து சிாித்த பின்னரே செல்லவேண்டும் என்பது எழுதாமறை. வழியனுப்புதல் என்பது இதுதான் என்று சொல்லித் தந்தார். நான்ஏதும் அவரை பார்க்காமல் சென்றால் , நான் வீடு வந்ததும் முதல் கேள்வியாக இது இருக்கும் என்ன பிரச்சனை என்று. இதை சமாளிக்க நாம் ஆயிரம் பொய்களாவது தேவைப்படும்.
அப்பாக்கள் வாழ்தல் இப்படியாக இருக்கவேண்டும். அப்பாக்கள் மாிப்பதில்லை. மனதோடு!!
அவரும் நானும்
அன்பும் நட்பும்
அவரும் நானும்
அருளும் தவமும்
அவரும் நானும்
ஒளியும் நிழலும்
அவரும் நானும்
குழலும் இசையும்
அவரும் நானும்
ஊணும் உறக்கமும்
May be an image of one or more people and outdoors

வாழும் அப்பா

அடுக்கிவைத்த
நினைவுப் பரண்களில் 
ஆழப்பதிந்த நீங்கள்.. 
துருப்பட்டு போகாத 
உலோகவார்ப்புகளாய் 
உங்கள் நிஜங்கள் 
நெஞ்சே நீ 
அத்தனையையும் மேலே மேலே 
ஐதரசன் பலூன்கள் போலே 
நரம்பியல் நிபுணரே வாரும்
உற்றவனின் நிகழ்வுகளை 
உணர்த்தும் நரம்பை
நீக்கிவிடுங்கள் 

உளவள நிபுணனே வாரும் 
என்னவனின் நினைவுகளை
அழித்துவிட 
மருந்தொன்று தாரும் 
 #அப்பா #ரணம்

சாவீடும் சாமி அறையும்

இறப்பு ஒன்று நிகழ்ந்தால், முதலில் அவ்வீட்டு சாமிஅறையில் உள்ள படங்கள் சிலைகள் அனைத்தும் புறமுதுகுகாட்டப்படும். சாமி படங்கள் மட்டுமல்ல கொழுவப்பட்டு காட்சிப்படுத்தப்படும் எந்தப்படமானாலும் இதே முறைதான். சாவீட்டு முன்றலில் ஒரு பந்தல் கூரை, வெளியே வெள்ளைக் கொடி, சிலநேரங்களில் பதாதைகள். முதல் மூன்று நாட்களும் மாலைவேளையில், இளநீர் குரும்பை வெட்டப்பட்டு திறந்த நிலையில் மடையில் குத்துவிளக்குக்கு அருகில் வைக்கப்பட்டு பின்னர் வீட்டு வெளிவாசலருகில் வைத்து வணக்கம் செலுத்தப்படும். இறந்தவர்கள் ஆத்மா எங்களோடு இருப்பதாகவும் , மீண்டு வருதல், பார்த்தல், பருகுதல் என்பது ஐதீகம். கடமை என்பது இவ்வாறு ஆரம்பிக்கும். பின்னர் எட்டாம் நாள் நினைவேந்தலின் பின்னரே அம்மா தலைவாாி கட்ட முடியும். நாங்களும் முடி திருத்தம் தேவைப்படின் மழிக்கவும் முடியும். முப்பது நாட்களில் இயல்பு நிலையில் ஒரு மாற்றம். சந்தோச நிகழ்வுகளோ, கோயிலுக்கோ ஏன் மரண வீடுகளுக்கும் செல்லமுடியாத எழுதா மறைச்சட்டம். அம்மா சொன்னா நீ விரும்பினால் செல், ஆனால் இது நடைமுறை அப்பாவுக்கு உனது கடமை என்பதை அழுத்தி சொல்லியிருப்பதால், பக்கத்துவீட்டு ”மாளையம்” (இறந்தவர்களுக்காக புரட்டாதி மாத்தில் வருடா வருடம் நடைபெறும் நினைவேந்தல் அமுதுக்கு பெயர் மாளையம்) கூட என்னால் செல்லமுடியவில்லை. அப்பாவின் இறுதிக் கிாியை கடமைகளில் பங்கேற்க முடியாமல் போனவர்கள், ஒவ்வொருவராக, சிலராக வருகை தந்து அப்பா பற்றிய நினைவுப்பதிவுகளை உரையாடிச் செல்லும்போதுதான் ஏன் அந்த பழையைகாலத்திலேயே இன்னும் வாழ்ந்திருக்கலாம் என்று மனம் நினைக்கிறது. இன்று ஒரு அன்பர், ”ஒரு நாள் ஒரு சிறுபாதையில் பேரூந்து சென்றபோது படுவான்கரைப்பக்கம் ஒரு வயல் வெளியில் பேரூந்து தடம்மாறிட்டாம். ஒருவருக்கும் ஆபத்து இல்லையாம். அவ்வழியே அந்த அன்பர் செல்லும்போது அப்பாவைக் கண்டதும் உடனே போய் அவருக்கு உதவ உழவு இயந்திரத்தை தேடிக்கொடுத்து பேரூந்தை மீட்டனராம். அன்றிலிருந்து அந்த ஓட்டுனர் அவருக்கு பழக்கமானாராம். இத்தனைக்கும் அப்பா என்பதால் உதவிடவேண்டும் என்று மனம் இருந்ததாம். நல்லவர், மென்மையானவர்” என்று பகிரும்போது இன்னும் அப்பா வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எத்தனை இழப்பு இது. இதே போல் தான் எத்தனைபேர் அப்பாக்கள் வாழ்கிறார்கள். வாழுவோம். அண்மையில் அன்பு Jeyakumar Paramsothy சேர் அப்பாவின் இழப்பின் ஆறுதலைத் தந்த பதிவு https://www.facebook.com/jeya.jeyakumar.1/posts/5040339592648510 திருப்பொற்சுண்ணம் பற்றி தொியாத விடயங்களை அறியத்தந்தார். நன்றி அவருக்கு. அதன்பின்னர் திருவாசகத்தின் பல பக்கங்களை வாசிக்க கிடைத்தது. திருவாசகம்-யாத்திரைப் பத்தில் மணிவாசகர் ”தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. ” ஆம் நமக்கென்ன எல்லாமே பரம்பொருள் சிவபெருமானே என்பதை எனது தந்தை பல தடவைகள் கூறியதன் அர்த்தத்தை திறம்பட மணிவாசகர் கூறிய யாத்திரைப் பத்து வெளிச்சம். பாடலுக்கும் பொருளுக்கும் இங்கு காண்க. http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8... அப்பாவை எல்லோரும் ”அத்தான்” என்று அழைப்பார்கள். காரணம் அனேகருக்கு அப்பா மச்சான் முறையினன். எள்ளிநகையாடும் அப்பா கள்ளம் கபடமற்றவர். ஆதலால் எல்லோரோடும் பழகுவார். எல்லாரையும் மதிப்பார். சுகமாக இருக்கும் அவரும் நானும் எங்கு சென்று வந்தாலும். ஒருக்காலும் மது அருந்தவில்லை. ஒரு கொண்டைக்டர் மது அருந்தவில்லை என்றால் யாரும் நம்ம மாட்டார்கள். ஆனால் என்னை சில பார்ட்டிகளில் நீ விரும்பினால் அருந்தலாம் என்று அனுமதித்தவர். சூது, மது, மாது இந்த மூன்றையும் நீ தவிர். நானும் தவிர்த்தேன். நீயும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று சொல்லித்தந்தவர். மது மட்டும் பழகினேன் ஆனால் தொடரவில்லை. ஓர் அன்பான அண்ணனோடு Sanjayan Selvamanickam அப்பாவின் இறுதி மூச்சு நிற்க முதல் மெசேஞ்சாில் அப்பா பற்றிய அன்பை பாிமாறிக்கொண்டிருந்தேன் ஆறுதலாக இருந்தது. ”கஷ்டமாக இருக்கிறது அண்ணா.. யாருக்கு கோல் பண்ணினாலும் அப்பா பற்றி அழ வருகிறது. . விளங்குது அண்ணா. என்ன வலி இது. சே... இந்த அன்பு என்றால் பெரிது தான்.” ”அனுபவித்து ஆக வேண்டும்.” ”கடந்து விடுவேன் என்று உறுதி.. ஆனாலும் மண்டை வெடிக்குது” ”கண்ணீர் வரக்கூடா சாப்பாடு உடல் வலிமையாக இருக்கணும் அவருக்காக” என்று கண்ணை பிதுக்கி வைக்க.... ஒரு லூசன் போல பொழிந்து தள்ளு என்ன டிசைன் அப்பா” ”வாய்ச் சொல் வீரரடி நாங்கள்” அன்பு வலிமையானது, ஒரு வஸ்துதான், உற்றவர்கள் இறப்பு வதைக்கும். எனது மகனைக்கூட வலிமையானவனாக்க வேண்டும். அப்பாக்கள் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.. படம் அக்காவீட்டு சாமி அறை
எந்தப்பாட்டுகேட்டாலும் அப்பா ஞாபகம் பாடலாசிாியர் -பா. விஜய் எழுதிய பாடலொன்று. பொம்பே ஜெயசிறி பாடிய ஹாீஸ் ஜெயராஜின் இசையில் அழகிய பாடலொன்றின் வாிகள். மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான் மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான் கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா -பா. விஜய் ஆனாலும் இந்த கடினமான நாட்களில் நேற்று, பல்கலைக்கழக விாிவுரையாளர் கலாநிதி ஒருவர் அழைப்பெடுத்து துயாில் பங்கெடுத்து கதைத்து. எனது முதலாவது தொழிநுட்ப பிாிவு மாணவன் ஒருவன் 1st Class உம் மற்றயவர் 2nd upper கிடைக்கவிருப்பதாகவும், இன்னும் உத்தியோகபுர்வ அறிவிப்பு வழங்கவில்லையாம். எனக்கு நன்றி கூறி, இவர்களை US scholarship இற்கு வழிசமைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டு ஒரு அரை மணிநேரம் ஒதுக்கி மாணவர்களது நடவடிக்கைள் எவ்வாறு முன்னேற்றலாம் என்றெல்லாம் கதைத்தது பெருமையாய் இருந்தது. நன்றி சேர் என்றேன். அப்பாவின் வழியே நாம் இருக்கிறோம். #அப்பா
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு