Pages

Friday, October 29, 2010

தெருநாடகம்

"நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா...." பாடலை பக்கத்துவீட்டு வானொலிப்பெட்டி பாடிக்கொண்டிருக்க. அவன் கண்களைக் கசக்கி உசுப்பி விட்ட இந்த பாடலுடன் ஆரம்பித்த அந்த நாள் மகேஷ்க்கு அர்த்தப்படாத நாளென்றே தோன்றி எழுந்தான். இவன் பிறந்து வளர்ந்து படிச்சிக்கொண்ட காலங்களில் மகிழ்ச்சி என்பது தொலைதூர நிலாவாகவே அவன் நினைவுகளுடன் விதியானது.

அவன் எவ்வளவு கஸ்டப்பட்டு முன்னுக்கு வர நினைத்தாலும் அவனை ஏதோ ஒன்று பின்னுக்குத் தள்ளுவதாய் உணரலானான். படிச்ச காலங்கள் அதிகம். வாழ்க்கையைப் படிக்க முடியல என்ற ஏக்கம். யாரையும் பார்த்தா அவங்களா இல்ல இவங்க நம்மளப்போலயா.. என்று ஏதோ ஒன்று அவனா அவன் கேட்டுக்கொண்டு. வாழ்க்கையை வாழ முடியாம வரம்புகளைப்பற்றியே யோசிக்கலானான்.

இருந்தாலும் மூங்கில் காட்டையே மூழ்கடித்துவிடும் அந்த புல்லாங்குழழகி அவனுக்குள் வராமல் இருக்க அவன் என்ன காவிநிறத்திலா மனசை உடுத்தி வைத்திருந்தான். அதே அந்த பதின்ம வயது கீறல்கள் மகேஷின் மனதில் அந்த அவள். ஒரு சொட்டுக்குறைவும் இல்லாமல் நனைத்துவிடும் மழையைப் போல அவள் பார்வை அவனை ஒவ்வொருநாளும் உசுப்பிவிட்டுப்போகும்.
அவளுக்கு இந்த வரிகளைச் சொல்லணும் போல இருக்கும் மகேஷ்க்கு

"உன்னோடு பழகும் வருஷங்கள்
பழம் நழுவி விழுந்த
'பால்'ய பருவங்கள்

உன்னைப் பிரித்துப்பார்க்க முடியவில்லை
உனக்கு மட்டும் எப்படி முடிகிறது
என்னை விட்டுவிட்டு போக"


என்னை எடுத்துக்கொண்டு போவதாய் உணர்கிறேன் என்றவளை எப்படியோ இல்ல, காதல் காதலாகணும் அது ஜெய்க்கணும் என்ற ஏக்கம் கொண்டவனாய்.

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்
தின்னப்படுகிறது
கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை


அவன் அடிக்கடி வரிகள் விதைக்கும் கவிதைக்கும் தாயாகினான் அந்தப்பொழுதுகளில்.
ஆனால் சனா இதைக் கண்டுக்கவில்லை. அவள் நண்பியிடம் சொல்லி அனுப்பிவிடுகிறான்.
"காதல் கிறுக்கிறான் மகேஷ், சனா காதலித்துவிடு" என்று விண்ணப்பிக்கிறான்.

அப்போதும் வழமையைப்போல் அவனுக்குள் அந்த எதிர்மறைச்சின்னங்கள் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டு. "அவள் கிடைக்காமல்போனால் நான் என்னாவேன். அவள் கிடைக்கமாட்டாள். நான் யாரென்பதை அறிந்தால் சனா விட்டுவிடுவாள் என்னை. என்னை யாரென்று சொல்லியே ஆகணுமா இல்லை சொல்லாமல் போனால் பிறகு ஒடிந்து போவாளா?? நான் ஏன் பொறந்தேன்? இன்னும் நான் வாழவேணுமா,,?"
பாவம் வரம்புகள் வளர்ந்த மனிதர்களிடையே இவன் ஒரு வளர்ந்த நெல்லினம். பூசைக்குபோகாத பூவாய் கோயிலுக்கு வெளியில் வாழுகிறான். ரோசாச் செடிகளுக்குள் ஒரு அரளிப் பூ தான் தானென்று யோசிக்கலானான். தொடர்ந்து வேதனை ஏன் பொறந்தேன் என்று வாழ்க்கையை வெறுப்போடு பார்க்கலானான்.

சனா அவனை அவன் குடும்பத்தையும் அவன் வாழிடத்தையும் அறிந்துகொள்கிறாள்.
"மகேஷ் நீ நண்பனாகவே இரு. அதுக்கு மேல யோசிக்காத உனக்கு இது பற்றிச்சொல்லத்தேவையில்ல. தெரியும் தானே" என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறாள். காதல் முற்றுப்புள்ளியானது. இல்ல சூனியமானது வாழ்க்கை நரகமானது. மகேஷ் மனதில் பாரம். இதயத்தில் ஓட்டைகள். கண்களில் ஈரம்.

ஆனாலும் அவன் வெற்றிகரமாக கடினப்பட்டுப் படிச்சதால பல்கலைக்கழகம் செல்கிறான். அங்கே வாழ்க்கையின் கோலத்தை மாற்றலாம். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன். நான் என்ன மனிதன் தானே என்று மனக்குமுறல்களை கொட்டிக்கொண்டு சனாவுக்கு விடைபகருகிறான். அவள், வீட்டிலே அடுத்தமுறை கெம்பஸ் (பல்கலைக்கழகம்) போவேன் என்று மறுபடியும் உயர்தர பரீட்சைக்காக படிக்கத் தொடங்குகிறாள்.

மகேஷ் பல்கலைக்கழகத்தில் மிக ஆவலாகவும் அறிவானவனாகவும் சதம் சதமாய் முன்னேறுகிறான். அங்கேயும் தனது படிப்பை மட்டும் நம்பி வாழ்க்கையின் தனது அடுத்த இருப்பைப் பற்றி சிந்திக்கலானான். அங்கே ஒரு சாலையில் தனியே அவன் உலா வருகையில் அந்த வரிகள் கண்ணில் பட்டது.

நீ வீசிய பந்து நோபோல் என்றால்
உன்னுடைய ஓவர் ஒவரா
மறுமுறை பந்து வீசு
விக்கட்டை வீழ்த்தலாம்
இக்கடடைத் தீர்க்கலாம்
.......கவிஞர் வாலி..........

இந்த கவிதைவரிகள் அவனுக்குள் இன்னொரு பரிணாமத்தைக் காட்டிவிட்டது. ஆனாலும் அவன் தனிமையை அடிக்கடி அசைபோடும் ஒரு உளறல்காரன். இது அவன் விரும்பிக்கொண்டதல்ல அவனது குடும்பம், குடும்ப வர்க்கத்தில் பிறந்ததால் ஏற்பட்ட ஒன்று. அவன் அவற்றிலிருந்து விடுபடவேணும். மாற்றம் வேண்டும் உலகில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சாணுக்கும் முழத்துக்குமாய் மனசில எண்ணிக்கொண்டு....
பல்கலைக்கழகத்தில் மூணு வருசம் ஒன்றாகப்படித்து பழகிய மீராவின் மீது தனது ஈர்ப்பை இனங்காணுகிறான். நரகம் கொண்ட வாழ்வு சொர்க்கம் என்ற மாறுதல் கிடைக்கும் என்ற அசயாத நம்பிக்கையில் கால்கோள் இடுகிறான் கல்யாணத்தில் வாழ்க்கை ஆரம்பிக்க வேலையும் கிடைச்சது கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியும் அவனை மீண்டும் அவனாக்கிய அந்த வாழ்க்கை இன்பநுகர்ச்சியையும் தந்தது மகேசுக்கு. ஆனாலும் அந்த வேலை அவனுக்கு தேவையா என்று பிறகு மீண்டும் எதிர்மறையான சிந்தனைகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன...
இப்ப கூட அவன் பிழையாக நினைப்பது அவனது வேலையல்ல அவன் வேலைசெய்த இடம் அவன் குடும்பத்தை பிரிந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். அங்கே அவனுக்கு கிடைத்த மாறுதலான உணர்வுகள். மீண்டும் தனிமை என்ற நிலைமை. வாழ்க்கை வெறுத்த அவன். கடவுளை காணவேணும் அல்லது. கடவுளைக்கொல்லவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் உருப்பெற்று வழிப்பெற்றுக்கொண்டிருக்க. அவனறியாமல் அவன் யாரையும் சந்திக்க முடியாமல் சந்திக்க விரும்பாமல் உலகின் எவ்வளவோ இன்பங்களையும் சந்தோசங்களையும் புதைக்கலானான். தனிமை என்ற நிலைமையில் அவனைத் தள்ளினான் அவன்.
அவனுக்கு ஏதோ பேய் பிசாசு சூனியம் பிடிச்சிருக்கு எண்டு பூசாரிக்கிட்ட பரிகாரம் தேடிச்சென்றனர் மீராவின் குடும்பத்தினர். இருந்தபோதும் மீரா இதையெல்லாம் ஒரு நம்பாமல் தனது கணவனக்கு என்ன ஆச்சு என்பதை அறிந்தால் கணவனின் பிரச்சனையை தான் அல்லாமல் வேறொருவர் மூலமாக அறிந்தால் அதற்கான தீர்வை எட்டமுடியும் என்று நம்பினாள். ஆனால் அவளுக்கு யாரைப் இதற்கு உதவிக்கு கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள். உண்மையில் மகேஷைவிட மீரா இப்போது அதிக மன உழைச்சலுக்கு உள்ளாகினாள். பாவம் அவள் என்னசெய்வது என்று தடுமாறும் போதேதான் அந்த தெருநாடகம் மட்டக்களப்பு நகருக்கு அவள் அன்று செல்லும்போது அரங்கேற. அங்கே ஒரு துண்டுப்பிரசுரம் அவளுக்கும் கொடுத்தார்கள் கிழக்குப்பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்கள். அவளுக்காகவே அந்த நாடகம் அரங்கேறியதாக மீரா உணர்ந்தாள்.
அந்த துண்டுப்பிரசுரம்பூசாரிய நம்புறத்த விட சாமிய கும்பிடலாம் என்பது சரியாய் பட்டது மீராவுக்கு. அவள் மகேஷ ஒருவாறு சம்மதிக்கச் செய்து உளவள நிலையத்துக்கு கூட்டிக்கிட்டு போனாள். அங்க ஆலோசனையும் வழிகாட்டலும் மகேஷ்க்கும் அவருக்கு உரிய மருத்துவசிகிச்சைகளும் முறையே வழங்க மகேஷ் நல்ல நிலையடைந்தான்.
மீரா இப்பதான் யோசித்தாள் மகேஷ் தற்கொலைசெய்ய முயற்சித்தபோது தடுக்காதிருந்தால் தனது வாழ்வும் மகேஷின் வாழ்வோடு முடிந்திருக்கும் எண்டு கண்ணீர்சொரிய மகேஷ் அவளை ஆரத்தழுவி நான் நானாகிட்டேன் நாம் ஏன் கலங்கணும் என்று சொல்ல அந்த தெருநாடகத்தை பார்க்கணும் போல ஒரு ஆர்வம் மகேஷ் மனதில்.....

Sunday, October 24, 2010

இரங்கற்பா

தேற்றாத்தீவைப் பிறப்படமாக்கி வாழ்வாக்கிய
அமரர்.கிருஷ்ணப்பிள்ளை அற்புதநாதன்
அவர்களின் மறைவுக்கு
இரங்கற்பா


இந்து இளைஞர் மன்றமதில்
முன்னாள் உறுப்பினன் நீ
சைவத்துக்காய் எந்நாளும் ஆன நீ
விட்டுபோனாயே... அற்புதா
பரிதவிக்கிறோம் பாருமையா..

இனிவருங்காலம் பாதயாத்திரையில்
ஒரு இடைவெளி – அங்கு
உன் இழப்பு எப்போதும் பேசப்படும்

எத்தனை படைப்புக்கள்
கட்டடச்சிற்பங்கள்
கொம்புச்சந்தியான் சந்நிதியில்
அத்தனை சப்தங்களையும்
உயிர்ப்புள்ள தூணாய்
மொழிபெயர்க்க ஆனாய்
இன்று
உன் கடைசி நிசப்தத்தால்
மரணிக்கச்செய்துவிட்டாய் எம்மை

காலை மதியம் மாலை
பிள்ளையார் கோயிலடி 'அற்புதம்'
உன் திடுக்கிட்ட பேச்சு
தித்திக்கும் நேர்மை
முன்னிற்கும் ஆளுமை
நெஞ்சில் நிலைக்கும்
விட்டுப்போனாயே அற்புதா!!!

அற்புதா இன்று நீ இல்லை
ஊமையாகிறது தவிலும் மணியும்
சங்கு மட்டும் சப்திக்கிறது
நெஞ்சம் நெகிழ்கிறது
கண்கள் பொழிகிறது

அனேகமாக மரணம் வந்துதான்
வாங்கிக்கொள்ளும் - நீதான்
மரணத்தை வாங்கியவன்

ஊரின் எந்த மூலையில்
மரணம் பேசப்பட்டாலும்
உன்பாதங்கள் பயணிக்கும்
நீ போகாத மரணவீடுகள் ஏது?
அதுதான் அதிக கால்தடங்கள்
உன் மரணத்தில்......

கோயில் கோயிலடி ஆகினயே
கோயிலான் வான்வாசல் சேர்ந்தாயோ!!
கண்ணுக்குள் கருத்தாய் ஆயினயே
கண்ணீரில் மிதக்க விட்டாயே!!

கண்களை உதிர்த்துவிட்டுப்
போகிறாயே
நெஞ்சில் நினைவுகளை
சுமக்கிறோம் நாம்

வியர்வைகள் விதைத்து
பிள்ளைகள் வளர்த்தாய்
விளைநிலம் தரிசு நிலமாகிறது
நீ எம்மை விட்டுப் பிரிகையிலே..

உன் ஆத்மா சாந்தியடையட்டும்
திருச்சிற்றம்பலம் ஓதிய நீ
கொம்புச்சந்தியான் பாதம்
சேர பிராத்திக்கிறோம்...
அஞ்சலிக்கிறோம்...

Wednesday, October 20, 2010

ஈரத்தை உடுத்திக்கொள்கிறேன்

உன் பருவ மாறுதல்களில்
அதிகம் ரசிப்பது
என் மேல் படரும்
உன் கால்தடங்களை

என்னை நனைக்கும்
நீ
உன் முழுவல்*
நான் யாசகன்

உனது வருகையை
உறுதிப்படுத்தும்
ஆயிரம் வாற்று
மின்
இலத்திரன் பாய்ச்சலின்
சப்தங்கள்
கண்கள் நிசப்தத்தில்
உன் வருகை பார்த்து

உலர்த்தி வைத்திருக்கிறேன்
உடலையும் உள்ளத்தையும்
வா வந்து
ஈரப்படுத்து
ஒவ்வொரு முத்தத்தால்

உனது கண்ணீரில் மட்டும்தான்
நான் காணாமல் போவேன்

எங்கள் விளைநிலம்
விதையாகும் உயிர்
பயிராகும்
பயிர் உயிராகும்

ஒரு சொட்டுக் குறைவில்லாமல்
என்னைக் கழுவி விடு
மனது இலேசாகும்

உன் பருவ மாறுதல்களில்
உன் கால்கள்
என்மேல் படரணும்
எங்கள் விளைநிலத்தில்
நீ வேரூன்றவேண்டும்(*முழுவல் - தொர்ந்துகிடைக்கும் அன்பு)

Tuesday, October 19, 2010

தாய்மையின் தாகம்


தலைவலி
அழுகின்ற நான்
தேசிக்காய்த் தேனீர்
சுடுசோற்று ஒத்தடம்

மடியினில்
முகம்புதைக்க
உன் கரங்களில்
என் கண்ணீர் துளிகள்

உச்சிமோந்துவிடும்
உன்முகம்

இல்லை என்று
நான் வெளியில்
தனிமையில்

உன் இடைவெளி
எனக்கு
தலைவலி

ஐந்து நாட்கள் பிரிவு
வாசல் கதவு திறக்க
வீடு சிரிப்பை
வர்க்கித்துக்கொண்டது

கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
அர்ச்சனை
என் நட்சத்திரத்தில்

காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை
வெறும் தேனீர் கோப்பையுடன்

Sunday, October 17, 2010

காவி நிறக்காதல் கொடிமர வேர்களில்

மீண்டும் காதல் என்ற சங்கீதத்தில் சில சுருதிகளை மீட்டுப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு. வாழ்க்கையை வாசித்த யாசித்த பண்பாட்டு மாற்றங்களை தன்பாட்டுக்குள் கொண்டுவந்த அந்த சாமி. காதலை மறப்பதற்காக ஒரு கோழைத்தனமாய் தன் காதலி பிரிகிறாள் என்ற எண்ணத்தில் காவியுடுத்திய காதலன் அந்த சாமி.

தன் கண்முன்னமே தன் காதலி யாருக்கோ மனைவியாகிவிடுவாள் என்று எண்ணி தாங்கொணா துயரம்தலையில் அழுத்த சாமி தேடி சாமியாகிறான். ஆனால் அங்கே யாரை மறக்கவேண்டும் மனதில் பதிந்த அந்த முகத்தை அழிக்க அழிக்கவேண்டும் என்று எண்ணி காவியுடை தரித்தானோ அதே அவளைத் தவிர அவள் முகத்தைத் தவிர அவன் பிரார்த்தனையும் மறக்க முடியாத தன்மையும் நின்று அவனை உலுக்கி எடுத்தது. முடியாமல் மீண்டும் மலையிலிருந்து காட்டிலிருந்து அந்த காவி இறங்குகிறது. கொடுமை என்னவென்றால் அதே உடையில் சில சில்லிடும் சிலிர்ப்புக்கு அந்த பழைய நினைவுகள் மட்டும் நிலைத்து நிற்க அந்த பழைய இடமும் புளிக்காத காதல் என்ற உணர்வும் மட்டும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் 18 வருசங்கள் கடந்த பின்னும் இன்னும்.......

பாவம் காதல் காதலிக்கவிடவில்லை இல்லை காதலித்த காதல் வாழவைக்கவில்லை அந்த சாமியை. பச்சைக் காடுகளில் பச்சையானவர் இங்கு பழைய இச்சைக்கான காதலை கச்சையில்(காவியில்) தேக்கிக்கொண்டு அலையலையாய் புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு நிகழ்கால நிகழ்வுகளையும் கடந்தகால அவரது நிஜங்களையும் ஒப்பிட்டு காதலிக்கிறார் இப்போதும் அந்த பழங்காதலை.

இடம் மாறி தடம் மாறி இந்த சமூக மாற்றங்களின் வாசனை நுகரும் இந்த சாமியின் மனதில் இன்னும் மாறாத அந்த "மதுபாலா" என்ற அழகிய காதல் மட்டும் மாறாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.
"காணாமல் போயிருப்பாளா
நான்
காணாமல் போனதால்
ஆகாமல் போயிருப்பாளா"
ஏங்கிக்கொண்டு அவளைத் தேடித்தேடி அலைகிறது இந்த காவி. பவ்வேறு மாற்றங்கள் ஆனாலும் தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தன் காதலின் அடிச்சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கிறது இந்த சாமிக்கு.
அப்படியே தானும் தன் பள்ளித்தோழனும் மாட்டிக்கொண்ட ஒரு காட்டுக்குள்ளே மீண்டும் அந்த காதல் நதி விளையாடிக்கொண்டிருக்குது.
"சந்தித்த சில நொடிகள்
சங்கடமான பொழுதுகள்" இருவருக்கும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரானவர்கள் இப்போ இருவரானவர்களாக நினைத்துக்கொண்டு அந்த சாமி கதறியழும் காதலில் தெரிந்தது.
அப்போது அந்த நிசப்த அலைவரிசையில் சில நிஜங்கள் வெளிக்கொணரப்பட்டது
"... என் வாழ்க்கையில் காதலங்கிறது இறந்த காலம். உங்களை நான் காதலிச்சது நிஜம்; ஆசைப்பட்டது நிஜம்; அழுதது நிஜம்; பிரிஞ்சது நிஜம்; கரைஞ்சது நிஜம்; எல்லாம் இறந்த கால நிஜங்கள். வாழ்க்கையை உணர்ச்சிமயமாப் பார்க்கிற காலம் முடிஞ்சு போச்சு. இது அறிவுமயமாய் பார்க்குற பருவம்" என்று அழுத்தமாக்கிய அவள் குரல்
........"நீங்க திரும்பி வரலேன்னா எனக்கு வாழ்க்கை இல்லேன்னு நெனச்சன்" ... "நீங்க திரும்ப வந்தாலும் உங்களுக்கு வாழ்க்கை இல்லேன்னு நெனச்சன்" என்று முற்றுப்புள்ளி வைக்காமல் வைத்த அவளை கண்களால் கழுவிய கண்ணீரை உதிர்த்திய சாமிக்கு அவள்
" காதல்ங்கிறது காதலிக்கிறது மட்டுமில்ல இளங்கோ! காதலை நிறைவேத்துறது. உங்களுக்கு காதலிக்க மட்டும்தான் தெரிஞ்சது. காதலிக்க மட்டும்தான் முடிஞ்சது; நீங்க பாதிக்காதலன்."
என்று அறிவுரை வழங்கிய அங்க ஒரு யுத்தமே நடந்தேறியது.
கடைசியில் சாமியாரின் தோள்களில் தொக்கியுள்ள குழந்தைக்கு அவள் தாய்மையின் தவிப்பில் "போய் வருகிறேன் கண்ணே! இல்லை ஜென்மங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்யை. போகிறேன் கண்ணே! என்னைச்சுமந்த மண்ணே!......என் இளமையின் பெரும் பகுதியை மயக்கத்தில் வைத்திருந்த மாஜி காதலரே! என்னை நோக்கி மரணம் அல்லது மரணத்தை நோக்கி நான்..." சில வினாடிகள் மெளனம் சாமியாரின் உள்ளத்தில் ரணம் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

இவ்வாறு அற்புதமாக காதலும் சமூகமும் என்ற கட்டமைப்புக்குள் கற்பனைச் சாமியையும் காதலையும் கதையாக்கிய கவபேரரசு வைரமுத்து அவர்களின்
காவி நிறத்தில் ஒரு காதல் என்ற புத்தகத்தைப் படித்தேன். பகிர்ந்துள்ளேன்.
இது 1991 இல் அவர் பதிப்பித்த புத்தகம்


இப்போ வைரமுத்து அவர்கள் 1983 காலப்பகுதியில் எழுதிய கவிதை இரண்டும் என்னை ஏதோ செய்தது. கவிதையில் காதல் கதையில் காதல் அற்புதப்படைப்பு கட்டாயம் வாசியுங்கள் இரண்டு புத்தகங்களையும்.


துப்பாக்கி எப்போது பூப்பூப்பது


அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை கொடிமரத்து வேர்கள் என்ற புத்தகத்தொகுப்பிலிருந்து.

அக்டோபர் மாதம் வாசிப்பு மாதம் ஆகையால் வாசியுங்கள் கதையும் கவிதையும் உங்களுக்குள்ளும் உணர்வு பீறிட்டு இதயச்சுவர்களின் சில கிறல்களில் காதல் தெரியும். காவியம் தெரியும்.
கனக்கும் இதயம் கொண்டு விடைபெறுகிறேன் சில் திருப்திகளுடனும் திருத்தப்படவேண்டிய தீர்ப்புக்களுடனும் தமிழனாய்

Saturday, October 16, 2010

சிதறும் சில்லறைகள் - 06 (வழியும் வலியும்)

இன்றைய தினம்

நவராத்திரி விழாவின் இறுதிப்பொழுதுகள் அன்னை சரஸ்வதிக்கு பூஜை பண்ணும் கடைசிப்பொழுது.
நான் வீட்டுக்கு வெளியில் ஒரு பயிற்சிப்பட்டறைக்காக இருப்பதால் இந்த உல்லாச விடுதியில் எப்படி இத்தினதைக் கடப்பது. ஆயினும் வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த முறைமையின் படி மனதை ஒருமித்து ஒரு சிலநிமிடங்கள் செலவழிக்க முடிந்தது மகிழ்ச்சி.

நாளை விஜய தசமி தினம். இந்து மக்கள் யாவரும் அறிந்த வித்தியாரம்பிக்கும் தினம். இதுபற்றி சில மனசுக்குள் தொக்கும் வரிகளை விதைக்கிறேன்
"எழுத்தறிவித்தல் இறைவனின் செயல்" என்று சொல்லுவர். எமது பிள்ளைகளுக்கு இத்தினத்திலே அனேகமாக நாம் எழுதப்பழக்கிக் கொடுக்கிறோம். ஆனால் இத்தினத்துக்கு முன்னமே நமது பிள்ளைகள் எழுத ஆரம்பித்துவிடுவர். ஆனால் சமய சம்பிரதாயம் என்ற ஒரு சடங்கு முறைகளுக்காகவே நாம் இச்செயலை செய்கிறோம்.

இதை தவிர்க்க என்ன செய்யலாம். நமது பிள்ளை இரண்டு அல்லது இரண்டரை வயதுகளிலே எழுத ஆரம்பிக்கும் நாம் ஏதாவது படிக்கும் பொழுது எழுதும் பொழுது அந்தப்பிள்ளையும் வந்து படிக்க எழுத ஆரம்பிக்கும் ஆனால் அவர்களை அந்த செயலுக்கு விடாமல் சில பெற்றோர் "உனக்கு ஏடு தொடங்கல நீ இப்ப எழுதாத" என்று அவர்கள் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டாம். அவர்கள் இரண்டு வயது ஆகினால் என்ன இரண்டு வயதுக்கு முன்னமே எழுத்தறிவிக்கலாம் இல்லையா. அப்பிள்ளைக்கு நான்கு ஐந்து வயது வரை காத்திருக்க வைக்காமல் எழுத ஆரம்பிக்க ஏடு தொடங்கணும் என்று முழங்குகிறேன்.
விஜயதசமி என்றால் ஏடு தொடங்கும் நாள் மட்டுமா. இது வித்தியாரம்பிக்கும் நாளும்மல்லவா.
இயல் இசை வாத்தியம் என்று எந்த நற்செயலானாலும் அவற்றை ஆரம்பித்தவிடுங்கள். விதைகளைப் பார்க்கும் போது தெரியாது அதன் விருட்சம். வளர்த்துவிட பிள்ளைக்கு வித்தியாரம்பித்துவிடுங்கள்.

நவராத்திரி விரதம் எனது பழைய பதிவு இங்கு காண்க

ஒரு கவிதை

'அன்னையே உன்னை
ஆராதிக்கிறேன்
அரிசியில் அகரம்
எழுதிய நாள்
முதலாய் தமிழாகி
தலையாயினன்
கற்றுக்கொண்டனன்
வழிகாட்டி நீ என்பதால்
மொழியானேன்
இன்பத் தமிழானேன்

சொல்லிவிடு எழுதிவிடு
எழுதாமல் இருக்கும் எல்லோருக்கும்
இயல் இசை எழுத்து என்று
ஏடு தொடங்கிவிடு
யாவருக்குமாய்
உணர்கிறேன்

என் குரல்வழியை விடசொல்லில்
விரல் வழியாய் விளைந்தவன்
ஆதலால்
அன்னையே வணங்குகிறேன்"

எமது மண்ணின் படைப்பு
இதுவும் எனது ஊரின் அண்ணா தணிகசீலன் அவர்களால் ஆகுகின்ற படைப்புக்கள். இங்கே சமயம் கிராமம் பாட்டு என்று பலவற்றை தரவேற்றம் செய்கிறார். நவராத்திரிப்படைப்பு இங்கே வெள்ளிச்சரம்


ஒரு பாடல்

எங்கே செல்லும் இந்தப்பாதை
பாருங்க சேது படத்திலிருந்து ஒரு பாடல். என் மனதை உருக்கி பல தடவைகள் கேட்டுக்கேட்டு கிறங்கி அழுத பாடல் இப்போதும்கேட்கும் போது மனதை என் பழைய சில நிகழ்வுகளை நெருக்கிவிடும் உணர்வு உயிரின் ஆழத்திலிருந்து சென்று மேலெழந்து கண்ணீரைச் சொரிந்துவிடும்.
என்பாதையின் வழியில் பிதற்றிய சில பொழுதுகள். நண்பன் ஒருவனுடன் கொண்ட மாறுதல்களின் விளைவினால் நான் பட்ட கஸ்டம். ஆனால் இங்க இந்தப்பாடல் காதல் என்று விதைக்கிறது. நான் இதை நட்பு என்று சொல்மாற்றிப்படித்தேன்.
எங்கிருந்தாலும் அவன் நல்லா வாழவேண்டும். அவனால் தான் எனது முன்னேற்றங்கள் வர்க்கங்களாயின. அவனை யாருக்கும் பிடிக்காமல் போகும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

"நட்பின் நீளங்கள் புரியாவிட்டாலும் அதன் தாகம் உணர்வாய் ஒருநாள் "

Friday, October 15, 2010

இது ஸ்டேடஸ் - 08

"இன்று ஐந்து பேரின் கண்ணீரின் காயத்துக்கு மருந்துகொடுக்க முடிந்தது.
ஆத்ம திருப்தி.
அம்மாவோடு என் கண்ணீர் ஆற்றுப்படுத்தப்பட்டது"

"தேசிய வாசிப்பு மாதம் "அக்டோபர் மாதம்".#
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்# "

"நான் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறேனோ அப்படிப்பட்டவர்கள் தான் அதிகமாய் என்னுள் என்னோடு ஆகிறார்கள்.
இன்றும் ஒரு உறவு ஒட்டிக்கொண்டது."


"முடிவெடுக்கும் போது யோசிச்சு சரியாக முடிவெடுக்க. முடிவு எடுத்த பிறகு மாறக்கூடா. வெற்றி இலக்கோடு செயல்படவேணும். தடுமாற்றம் வேண்டாம் "

"மற்றவர்களுக்கு கடமை செய்யவேண்டிய தருணங்களில் செய்துவிடுங்கள்.
இல்லையேல் கடமை செய்வதற்கு நீங்கள் நினைக்கும் நேரம் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும்"

"கஸ்டம் வருங்கால் கடவுளை நாடுகிறோம்(கோயிலுக்கு போகிறோம்) என்றால் ஒவ்வொரு கஸ்டங்களே எம்மை வழிப்படுத்திறது என்று தானே அர்த்தம்"

'தன் பெற்றோருக்கு கடமை செய்யத் தவறி, நல்லா வாழ்ந்ததா எந்தப்பிள்ளைகளையும் இவ்வுலகில் நானறியேன்.
தந்தைதாயின் சிரிப்புலே நாம் வாழமுடியும்"

"தேவையினால் வாழ்க்கையின் ஒரு சில வரிகளில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாது. மானுடத்தில் இதுவும் இயல்பு. தவறு திருத்திக்கொள்ளவேண்டுமே ஒழிய அதை நிருபிக்காதே"

"அம்மா நீ யார் யாருக்கெல்லாம் பசிபோக்கும் போதெல்லாம் உணரவில்லை
நீ சொன்ன மற்றவர்களின் பசி தீர்க்கும் போதுதான் உன் பசியை யாரோ போக்குவாங்க எண்டு"

தாயும் பழமொழியும்

"என் தாயே
தாய்மை
நுகர்கிறேன்
தன்மை அறிகிறேன்.
நீ ஊட்டிய
பாசம் பண்பு
மற்றவர்களை நேசிக்கும்
உணர்வு
மீண்டும் எங்கெல்லாம்
எனக்கு உதவுது என்பதை
அறிவாயா தாயே.
இதுதானா முன்கை
நீண்டால் முழங்கை நீளும் என்பது"

சில படங்கள் எங்கள் ஊரின் மாலைப் பொழுதுகளில்Wednesday, October 13, 2010

செல்போன் சிணுங்கல்கள்


நாம் அதிகமாய்
பேசிய வார்த்தை
'அன்பே'(ஹாய்)
தொண்டை வரை வந்து
விழுங்கிக்கொண்டது
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
(ஐ லவ் யூ)

யார் யாரோ உனக்கு
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)
அனுப்பலாம்
அழைப்பெடுக்கலாம்

ஈரத்தை உறுஞ்சி
சிறகுகளை உலர்த்தும்
அத்தனை சிலிர்ப்புக்களையும்
சங்கீரணமாக்கும்
சல்லடை
என் புன்சிரிப்பும்
தமிழும்

அன்று
என் அழைப்பை
நீ தவறியதால்
உனக்கு
'தவறிய அழைப்பு' (மிஸ்ட் கோல்)
எனக்கு
தவறிய வாழ்க்கை

இப்போதும் என்
'அழைப்பின் ஒலி' (ரிங் இன் டோன்)
என்றொ பதிவுசெய்த
உன் குரல்

Tuesday, October 12, 2010

வெட்டாதீர் விதையுங்கள்

வீழ்ந்தாலும்
தாவரமாகவே முளைக்க
விரும்புகிறேன்
ஈர விழுதுகள் கொண்டு
உங்களை வாழவைக்கிறேன்

மரம் வெட்டும்
மனிதர்களே!
மரத்துப்போனவர்களே!!
மரமின்றி
மரணித்துபோகிறவர்கள்
நீங்களே!!!

மரம் வெட்டி
விருத்தி காணவேண்டுமெனில்
மனிதம் கொன்று
கல்லறை கட்டுங்கள்

மரம் வெட்டி
கட்டடம் கட்டுவதை விட
மனிதம் கொன்று
கல்லறை கட்டுங்கள்

இறந்தபின் என்னை
தென்னை
மரத்தடியில் புதையுங்கள்
அத்தனை உறுப்புக்களாலும்
உங்களுக்கு உதவுகிறேன் மனிதர்களே!

ஒளிச்சேர்க்கையின்
இலைவாய் வாயுப்பரிமாற்றம் கொண்டு
உயிர்வாழவைக்கிறேன் உங்களை

வெயிலின் வெப்பத்தை
மழையில்லா வரட்சியை
'ஏசி' அறையில், வாகனத்தில்
கனவு காணலாம்
நீங்கள் அனுபவித்த
'வாழ்க்கையை' மறந்துவிட்டீர்கள்
மற்றவர்கள் வாழ்க்கைக்கு
உலைபோடாதீர்கள்
இருக்கைகளுக்காக
மரங்களின் மனிதர்களின்
இருப்பை விலைகொடுக்காதீர்கள்

இப்போதும் சொல்கிறேன்
அபிவிருத்தி எனும் பேரில்
தாவரங்களை வெட்டாதீர்
உங்களைப்போல் அது
'தாமரைகள்' அல்ல

தாவரங்கள்
நிலையாய் நின்று
உலகை (நிலை)நிறுத்தும்
உயிர்ச்சின்னங்கள்

மனதை அகலமாக்குங்கள்
உள்ளம் விருத்தியாகட்டும்

நான் வீழ்ந்தாலும்
ஒரு
தாவரமாகவே
முளைக்க வேண்டும்
இலைகள் கொண்டு
விழுதுகள் கொண்டு
வேர்கள் கொண்டு
உங்களை வாழவைக்கிறேன்மேலுள்ள படங்கள் மட்டக்களப்பு வாவிக்கரை வீதி இல 1 இன் ஓரங்களில் இருக்கும் மட்டக்களப்பு வாவியின் ஓரங்களில் இருக்கும் மரங்கள். இவற்றை வெட்டி வீதி அபிவிருத்தி செய்யப்படப்போகிறதாம். (இதில் முதலமைச்சர் வாசஸ்தலமும் இருக்கிறது) இவ்வீதிகளை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்குப்பதிலாக, இவ்வீதியை இருபக்க வீதியாக்கப்படுவதை விட ஒரு பக்கவீதியாக (one way)பயன்படுத்தலாம் இம்மரங்களை வெட்டும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து வெட்டாதீர்கள். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

Sunday, October 10, 2010

வழிகின்ற அது சுமக்கின்ற நான்

இன்னமும்
இழுத்துக்கொண்டு
இறக்கிவிட முடியாமல்

தள்ளிக்கொண்டும்
இழுத்துக்கொண்டும்
இன்னமும் நடந்துகொண்டு

சிரிக்கவேண்டிய தருணங்களில்
மெளனமாகவும்
கதைத்துவிடவேண்டிய பொழுதுகளில்
மெல்லிய உதட்டுச்சாயத்தை
உதிர்த்துக்கொண்டு

அடிமனதில்
சிவப்புப் படர்ந்திருந்த
கீறல்கள்
அந்திமாலையா
அதிகாலையா
கேட்டுக்கொண்டு

வெறும் கால்களோடு
பலதூரம் நடந்தபின்
பின்னால் ஒருவன்
வலதுகைப் பக்கமாக
முந்திக்கொண்டு
'உங்கள் கால்களில்
பலமாய் முட்கள்
தைத்திருக்கு
இரத்தத் தடங்கள்"
என்றவனை ஏறெடுக்க
ஒற்றைக்காலோடு
'தடி' ஏந்திக்கொண்டு
அவன்

அவனுக்கு
'என் இரத்தத்தை
தொட்டு நுகராதே
உன் விரல்களுக்கிடையில்
பிசுபிசுக்கும்
குடும்ப சுமையின்
வெப்பக்கண்ணீர்
வாழாமல் வழியும்
வாழ்க்கை'

Friday, October 8, 2010

வேயப்படும் கனவு

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்

தின்னப்படுகிறது

கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை

மொய்க்கும்
ஈக்களாய்
பச்சக்காயம்
காயம்
காயப்பட்ட வடு

வலிக்கப்படுகிறது

ஒட்டிக்கொண்டது
ஒடிந்துகொள்ளவில்லை

பூமிக்குள் பூகம்பம்
கனவுகள்
வேயப்படுகிறது

எரிமலைக்குழம்பு
கண்ணீர்
குமுறிக்கொள்கிறது

கூரையில்
ஓட்டைகள்
ஒட்டடைகள்
நிலவின் வெளிச்சம்
வட்டமாய்
கண்ணுக்குள்

Thursday, October 7, 2010

நன்றி வணக்கம்

எழுத்தறிவிக்கும் இறையோன்களே!
உங்கள் பழுத்தறிவிலே
பகுத்தறிவு வாழ்க்கை வாழ்கிறோம்

பாடக்கல்வி எழுத்துக்களின்
கட்டாயக் கல்வி

அனுபவப் பகிர்வும் - உங்கள்
அரவணைப்புக்களும்
காலத்தின் நின்று கட்டியெழுப்பும்
உணர்வுத்தூண்கள்

வெற்றிகள் உயர்வுகள் எம்மைச்
சுற்றிவரும் பொழுது
கடவுள் எம்மை
ஆசிர்வதிக்க மறந்தாலும்
எங்கோ ஒரு மூலையில் -உங்கள்
அருளும் ஆசிகளும்
விளக்கேற்றிக்கொண்டிருக்கும்

தவறு செய்யும் கணங்களில்
தண்டனை கொடுங்கள்
மன்னிப்பு என்னை வழிப்படுத்தாது
கற்றுத் தந்தது நீங்களே!!

கரும்பலகை மனதில்
வெள்ளையடித்து
வெளிச்சப்படுத்தும் உங்கள்
'வெண்கட்டி' எழுத்துக்கள்
அழித்துவிட்டுப்போனாலும்
அழியா இடம் பிடித்துக்கொள்ளும்

தடுமாறும் கணங்களிலும் நான்
தடம்மாறக் கூடாதென்று
எப்போதும் அரணவணைத்து
ஆசிர்வதிக்கும் ஆசான்களே!!

வெளிச்சம் ஏற்றிய
வெற்றித்தீபங்களே!!

எனது வெற்றிகளையும்
இன்ப நுகர்வுகளையும்
அர்ப்பணிக்கிறேன் உங்களுக்கு.

Wednesday, October 6, 2010

விளக்கேற்றிய வல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்

என்னை வளர்த்து ஆளாக்கிய எனது அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய ஆசிரியத் தெய்வங்களுக்கு இன்று வாழ்த்துக்கூறும் நன்நாள் "சர்வதேச ஆசிரியர் தினம்" இன்று அக்டோபர் 6.
ஆசிரியர்களை கெளரவித்து அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லும் இந்நாள் மாணவரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் சொல்லும் பொன்னாள்.
எனக்கு பாடக்கல்வியையும் மற்றும் அனுபவப் பகிர்வுகளையும் தலைமைத்துவ பண்புகளையும் வழங்கி ஆசிர்வதித்த ஆசிரியர்கள் அனைவரையும் மனதில் நினைவுகொண்டு இன்று அவர்களை நன்றிகளோடு வாழ்த்துகிறேன்.

"என்னருமை ஆசான்களே எனது வெற்றிகளையும் இன்ப நுகர்வுகளையும் உங்களுக்கு அர்பணிக்கிறேன்."


"மணிஅக்கா ரீச்சர்" என்று செல்லமாக அழைக்கப்படும் என்னருமை திருமதி.தம்பிப்பிள்ளை ஆசிரியை அரிவரி பாடம் (ஆரம்பக்கல்வியை) வழங்கிய எனது ஆசிரியை


(ஒரு நிகழ்வுக்கு எனது பாடசாலைக்கு சென்றபோது அவர் உரையாற்றியபோது)

ஆரம்பத்திலிருந்து ஆங்கிலக் கல்வியைப் புகட்டிய "சம்பந்தன் சேர்" என்று நாம் கூறும் என்னருமை திரு.திருஞானசம்பந்தர் ஆசிரியர் அவர் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற முன்தினம் அவரைச்சந்தித்தபோது,
My Dear Sir "Happy Teacher's Day"

எனக்கு கணக்குப் பாடம்(கணிதம்) புகட்டிய என்னருமை திரு.அ.சுந்தரலிங்கம் சேர் ஆசிரியர் உங்களுக்கும் எனது வணக்கங்கள்.

அண்மையில் வாசித்த ஒரு கதையையும் பகிர்கிறேன்.
படங்களை சொடுக்கிப் பாருங்கள்.


Tuesday, October 5, 2010

இது ஸ்டேடஸ் - 07

"மழை நனைக்கும் இரவு
நானும் போர்வையும்
அவஸ்தைகளில் மனம்
வெறுமனே திறந்துள்ளது
புத்தகம்"

"காந்தி ஜெயந்தி தினம் இன்று.
இன்றாவது அகிம்சையை உள்ளெடுத்து வன்முறையை வெளிவிட்டு உலகை சுவாசிப்போம்"

"ஓய்வான தருணங்களில் வாசித்துவிடுங்கள்
இல்லையேல்
வாசிக்கவேண்டிய தருணங்களில் ஓய்வு வந்து சேராமல் போய்விடும்."

"அலுப்பான பின்னேரம்; நண்பன் விபத்து, வைத்தியசாலை,காக்க காக்க போலீசு, பேரூந்துக் ஓட்டுனர் அப்பாவி, நடிப்பு, உரிமையாளர் கஞ்சன், இலஞ்சம்"

"நான் வருவேன் மீண்டு(ம்) வருவேன்..."'

"பாணின் விலை ரூ.3 ஆல் உயர்ச்சி ## புகைப்படக்கருவிகளும் ஒலிவாங்கிகளும் அடிவாங்கிக்கொண்டன##"

"நாங்கள் மற்றவர்கள் நலனைப்பற்றி சிந்திக்கும் போதுதான்
மற்றவர்களால் நமது நலன் யோசிக்கப்டும் பரிசீலிக்ப்படும்"

"ஒவ்வொரு இழப்புக்களின் பின்னர் தான்
அந்த இருக்கைகளைப் பற்றி மனம் சிந்திக்கிறது.
இழக்கும் முன்னர் இருந்துவிடுங்கள் இனிதாக."

"யாருக்காது வாழ்த்துக்கள் சொல்லவேண்டிய பொழுது உள்ளன்புடனும் புன்சிரிப்புடனும் வாழ்த்திவிடுங்கள்"


மேலுள்ள படம் மட்டக்களப்பு செட்டிபாளையம் துறையடி என்று சொல்லப்படும் மட்டக்களப்பு வாவியின் நன்னீர் மீன்பிடிபாளர்களுக்கும் பயனாளர்களுக்குமான பழைய ஓடத்துறையின் தங்குமிடக்கட்டடத்தின் தோற்றம். பல வருடங்களாக இல்லை தசாப்தங்களாக இப்படி இருக்கிறது என்றே சொல்லப்டுகிறது. திருத்தப்டுமா இல்லை புதிதாக அமைக்கப்படுமா?? ஒரு ஏக்கம். யார் கண்ணில் பட்டாலும் செயல்படுங்கள். செயல்படக்கூடியவர்களிடம் சொல்லிவிடுங்கள்.

Sunday, October 3, 2010

கனவும் டாக்டர் அப்துல் கலாமும்

"கனவு காணுங்கள்" என்ற மந்திரச் சொல்லின் ஆத்ம புருஷர் என்றே அழைக்கலாம் நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்களை. எப்போதும் புத்துணர்ச்சியையும் சிந்திக்க வைக்கும், செயல்படத்தூண்டுகிற கருத்துக்களை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிந்தனைகளில் எழுந்தவைகளை (படித்தவற்றில்)பகிர்ந்துகொள்கிறேன். வாசியுங்கள் செயல்படுங்கள். செயல்படுவோம்.
இளையதலைமுறையினருக்காக அவர் சொன்ன விடயங்கள் எனக்குப் பிடித்தவைகளில் சில

தேடல்

உங்கள் மனதில் உள்ள ஆர்வத்தீயை வளர்த்துக்கொள்ளுகள். பெரியவர்களைப் போல் நீங்களும் தொலைநோக்குடையவராய் இருங்கள். அவர்கள் காட்டும் வழியில் நடக்கவேண்டும். நேர்மை என்பது மக்களின் உயரிய குறிக்கோளாக இருக்கவேண்டும்.

உயர்வு

உங்கள் எண்ணம் உயர்ந்ததாயிருந்தால்தான் நீங்கள் வாழ்வில் உயரமுடியும். கடுமையான உழைப்பு, உறுதியான இலட்சியம், அஞ்சாமை மூன்றும் உங்களிடம் இருந்தாக வேண்டும்.
ஒரு பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ தான் நீங்கள் வரவேண்டுமா? ஏன் ஒரு தொழிலதிபராகக்கூடாதா? எல்லோருக்கும் வேலை தருவது அரசால் இயலாது. எல்லாருக்கும் அரசு வேலை கிடைத்துவிடாது. நாம் ஒரு தொழிலதிபராக வர வேண்டும் என்று கனவு காணுங்கள் பலருக்கு உங்களால் வேலை கிடைக்கும். எதையும் சமாளிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக்கொண்டால் அத உங்களால் முடியக்கூடியதுதான்.

போராடுங்கள்

பிரச்சனை வரும்போது எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். கடுமையாய் எதிர்த்துப் போராடுங்கள். பிரச்சனையின் பிடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அது உங்கள் பிடியில் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பிரச்சனையை வெல்ல இதுவே சிறந்தது.


புனிதப்பணி

நான் ஆசிரியர்ப் பணியைப் பெரிதும் நேசிக்கிறேன். ஆசிரியர்கள் தாம் இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுபவர்கள். ஆயிரமாயிரம் பேரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கிறார்கள்.

வெளிநாட்டில் வேலை

நம் நாட்டிலிருந்து பல பொறியிலாளாகள், மருத்துவர்கள், இன்னும் பல அறிவியல் நிபுணர்களும் வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்கிறார்கள். இந்நிலை மாறவேண்டுமானால் இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புக்களை நம் நாட்டில் நாம் உருவாக்க வேண்டும்.

கடமை

நன்கு படிப்பது மட்டும் மாணவர்களின் கடமையாகிவிடாது. தங்களுடைய சுற்றுப்புறத்தைப் பசுமையாக வைத்துக்கொள்கிற, சுற்றியிருப்பவர்களின் அறிவை மேம்படுத்துகிற கடமையும் அவர்களுக்கிருக்கிறது. ஒவ்வொரு மாணவனும் இரண்டு மரக்கன்றுகளை நடவேண்டும். படிப்பறிவில்லாத இரண்டுபேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும்.மேலுள்ள விடயங்கள் நமக்கு அவசியம் ஒரு உந்துசக்தியைத் தரும் என்பது திண்ணம். கொஞ்சம் நான் இதையும் சொல்லலாம் என்று தோன்றுது.
போர் என்ற சூழ்நிலையால் எதை எதை இழந்தோம் என்று எண்ணிப்பார்க்க முடியாத வடுக்களின் காயத்தை ஆற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் வளர வேண்டிய தருணம் இது. நமது பிள்ளைகள் வளர்ச்சியுற்றால் நமது சமூகம் வளரும். ஆக நாம் சுற்றியிருக்கும் எங்காவது ஒவ்வொரு பிள்ளையிலும் கவனத்தை முடிந்தளவு செலுத்தி அவர்களின் கல்விக்கு வழிகாட்டி கல்வித்தேவையில் கஸ்டப்படும் பிள்ளைகளுக்கு முடிந்தளவு உதவி செய்து அவர்களை வளர்க்கவேண்டும். இதை ஒரு கடமை என்றும் கட்டாயம் செய்யவேண்டிய தேவை என்றும் கருதுவோம்.

"ஒரு பெண் கல்விபெற்றால் ஒரு குடும்பமே கல்வி பெற்றதாகும்" என்று ஒரு இடத்தில் டாக்டர் அப்துல் கலாம் சொல்கிறார். வாழ்க்கையின் நீடித்த தன்மைக்கு பெண் கல்வி அவசியம். நமது நாட்டில் பல நூற்றாண்டுகள் கல்வியில் நாம் பின்னுக்கும் பொருளாதார வளர்ச்சியிலும் குறைவாக இருக்கிறோம். மற்றைய சமூகத்தின் வளர்ச்சியிலும் நாம் பின்னிலையிருக்கிறோம் என்று நினைத்தால் நாம் நமது சமூகத்தின் சில பிள்ளைகளையாவது வளர்ச்சி பெறச்செய்தாலே போதும்.

ஒரு தனி மனிதன் ஒருவனின் சாதனையைக் கண்டு நாம் பெருமிதம் கொள்வதை விட ஒரு சமூகம் சாதனைகாணவேண்டும்.
வீட்டுக்கு வீடு வாசல் படி இருப்பது போல் கல்வியின் படி(வழி) பெருகவேண்டும் ஒவ்வொரு வாசல்களிலும்.

Friday, October 1, 2010

சிதறும் சில்லறைகள் - 05 (சிறுவர் முதியோர் தினம் 2010)

இன்றைய தினம்:

இன்று 2010 ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் (Children's Day)மற்றும் முதியோர் தினம் (Elder's Day).
இவ்வருட சிறுவர் தினத் தொனிப்பொருள் "சிறுவர்களின் உலகைச் சுபீட்சமாக்க அனைவரும் உதவுவோம்'
இவ்வருட முதியோர் தினத் தொனிப்பொருள் "மகிழ்ச்சி நிறைந்த ஆரோக்கியமான முதியோர் பருவம்"

கடந்தவருட சிறுவர் தினம் தொடர்பான என் இடுகை "சர்வதேச சிறுவர் தினம்"

சிறுவர்களுக்குரிய சரியான பராமரிப்பு இல்லாமை, அவர்களுக்கான சரியான வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படாமை,சிறுவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமை அவா்கள் எதிர்நோக்கும் சவால்களாகும்.
நமது மனித வளர்ச்சி என்று சொல்லப்படுவதன் ஆரம்பமே சிறுவர் பருவம் என்பதை நாம் வளர்ந்த பின் மறந்துவிடுவதுதான் வேதனையான விடயம்.
நாம் நமது வீட்டுப்பிள்ளைகள் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையோடு இருப்போமானால் போதாது. மற்றவர் பிள்ளை என்ற உணர்வை விடுத்து நமது பிள்ளை என்ற உயர்வான சிந்தனையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
சிலநேரம் இந்த சிந்தனையில் நாம் இருந்து பிறர் பிள்ளைகளுக்கு உதவும்போது அந்தப்பிள்ளைகள் அதை பிரயோசனமாக ஏற்காமல் உதாசீனம் செய்யும் போதுதான் நமக்கு இருந்த அந்த நல்லெண்ணமும் விட்டுவிலகும் சந்தர்ப்பம் வருவது என்பது கவலையானதுதான். ஏனெனில் அந்தப்பிள்ளை பக்குவப்படாமல் அல்லது தனது போக்கு, நிலைமை என்று விழிப்புணர்வு அந்தப்பிள்ளைக்கு விளங்கப்படுத்தப்படாமல் இருப்பதே காரணமாக இருக்கலாம். அதனை அப்பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தி பிறகு அந்தப்பிள்ளை வளர்ந்த பின் தான் தவறிழைத்த சந்தர்ப்பத்தை உணர்ந்துகொள்ளும் போது நன்றி சொல்லும் நமக்கு.
இதற்காக நான் எழுதிய ஒரு ஸ்டேடஸ் இது 'கானா காணும் காலம்' என்ற தொடரில் சொல்லப்பட்டது.கொஞ்சம் மெருகேற்றலுடன்
""என்னால் செய்யப்பட்ட உதவிக்காக அதே உதவியை எனக்கு உடனே செய்யவதை விட
கைமாறாக உதவி தேவைப்படும் வேறொருவருக்கு தருணத்தில் செய்துவிடுங்கள். உதவுதல் சங்கிலியாய் தொடரட்டும். தேவைப்படும் போது நானே கேட்பேன்""

ஒரு கவிதை:
சிறுவனாக இருந்தபோது (பதின்மூன்று வயதுகளில்) எழுதிய கவிதை இன்றைய சிறுவர்களுக்காக அப்படியே

அவனியில் வாழவேண்டில்..
பெற்றோர் குரு தெய்வம் போற்றவேண்டும் - சுற்றம்
ஏற்றமாய் வாழ்ந்திட முயலவேண்டும்
அகத்தினிலே அகிம்சை அரும்பவேண்டும் - அது
அன்பின் சொருபமாய் மலரவேண்டும்
அனாதையை ஆர்வமாய் அணைக்கவேண்டும் - அவர்க்கு
அருளாளனாக நீ ஆகவேண்டும்
அன்பனாய் எல்லோரும் ஏற்கவேண்டும் - உன்னை
அறம் நிறைகலமெனப் போற்றவேண்டும்
பாவத்தைப் பகைவனாய் எதிர்க்கவேண்டும் - உயர்
நீதியைத் தெய்வமாய் ஏற்கவேண்டும்
அகிலத்தில் அறவொளி பரப்பவேண்டும் - அதில்
அனேகரின் அகஇருள் அகலவேண்டும்
உயிரிலும் மேலது மானமென்று - உன்
ஒவ்வொரு செயலிலும் நிலவவேண்டும்
வள்ளுவன் வழியிலே வாழவேண்டும் - கலங்கரை
விளக்காக எல்லோருக்கும் உதவவேண்டும்.

முதியோருக்கு
"காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்" ஒரு பழமொழி. இதுவே முதியோரின் நிலைமையை உணராத முதிராதவர்களின் தன்மை.
வாழ்க்கைவட்டத்தில் பருவமாற்றம் இருப்பதை நாம் உணரவேண்டும். இளமை ஒரு நிலா காலம் என்றால் அது முதுமையில் கனா காலம். ஆக இளமையில் நாம் பெரியவர்களுக்கு பெற்றோருக்கு முதியவர்க்கு செய்யும் சேவை அவர்கள் மனம் புண்ணாகாத வண்ணம் அவர்களை பராமரிப்பதும் அவர்கள் கஸ்டங்களை பொறுத்துக்கொள்வதுமே.
இந்த காணொளியை நீங்கள் ஏற்கனவே பார்த்தாலும் இப்போதும் பாருங்கள் மொழி விளங்காவிட்டாலும் விடயம் எதுவென உள்ளத்துள் உறையும் குறும் படம்.பிறந்தநாளின் போது

கடந்த சில வருடங்களாக எனது பிறந்தநாளை சிறுவர்களோடு கொண்டாடுகிறேன். அவர்கள் விரும்பிய தீன் பண்டங்களை வாங்கி கொடுத்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். கடந்த ஆகஸ்ட் 7 எங்க ஊர் கடற்கரையில் நாம்

பதிவுலக போக்கு
இன்று ஒரு நண்பருடன் அரட்டையில் பகிர்ந்தது உங்களுக்காக

"காதலுக்கு கடலை மாதிரி பதிவர்க்கு புதிய படம்"

'சினிமா ரசனைக்கு மனத்திருப்திக்கு ஆக இருக்கணும் கொஞ்சம் பெரிசா உங்க பிள்ள வளர்ந்ததும் நீங்களே யோசிக்கத்தோன்றும் இல்லையா?'

'அத விட பதிவு எழுதி நீங்க எதை விரும்புறீங்க. பின்னூட்டம் (Comment) வாக்கு(Vote)??
அதை விட அந்தப்பதிவு எல்லோரையும் சென்றடையணும் அந்த செய்தி (message)யாருக்காவது போய்சேரணும்'

'இல்லையேல் பதிவும் சினிமா மாதிரியாகிவிடும் மொக்கையா'
'ரசிப்போம் பாடல்கள் காட்சிகள் கதை வசனம் நடிப்பு அங்கங்கே சிலிர்ப்பு போதும்'
என்னோட பார்வை இது உங்க பதிவு தவறாமல் பார்ப்பேன்
தப்பாக சொல்லியிருந்தால் மனதை காயப்படுத்தினால் ஆறிக்கொள்க'

'பின்னூட்டங்கள் அவசியம் நல்ல பதிவுக்கும் இருக்கணும் இருந்தால் இன்னுமின்னும் பதிவரை வளர்க்கும். இதை யாருக்கும் யாரும் செய்யத்தோன்றணும். நாம தெரிஞ்சவங்களுக்கு மட்டும் காமண்டு அடிப்பது போதாது பதிவுலகம் நல்லதாக வளரமாட்டாது."
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு