Pages

Thursday, July 29, 2010

மூஞ்சிப்புத்தக படக்கலவையிலிருந்து

நண்பர் மணிவர்மா.கோ அவர்களின் முகப்புத்தக படக்கலவையில் சிதறல்களின் சில சிதறல்கள் நன்றி நண்பா

கிராமம் எழுதிய
இசைகளின்
இறுவட்டு

இசைராஜா

நீ எழுதியதால்
'இசை' ராஜாவானது
நீ
இமயமாகியதால்
மனம்
இதமாகியது


வன்முறை
ஆர்ப்பாட்டம்
அடக்குமுறை
காவல்துறை
ஜனநாயகம் சிறைக்குள்
காந்தியம் சிரிக்கிறது
அகிம்சை
எழுதப்பட்டிருக்கிறது....


வான் மழை தூறல்கள்
வான் வண்டியில்
என்கண் கைப்பற்றியதால்
மனதுக்குள் அடைமழை


ஈரழிந்து ஓராய்
காமம் வழிகிறது
காதல் எரிகிறது
அணைக்காதீர்கள்
பரிணாமத்தேடல்
இது

Thursday, July 22, 2010

தொக்கிய நிஜங்கள்

இப்போதும்
தொக்கிக்கொண்டே இருக்கிறது

அவள் ஓரவிழியில் கசிந்த
காதல் சாயம்
சிவப்பு பச்சை
காட்டாத தெருவிளக்கு
பழுதடைந்தது போல்..

பசிக் குழந்தையின்
அழுகையும்
கண்களைக் கசக்கிய
தாயின் முந்தானையும்
இதயத்தைத் தொடடுப்பார்க்கிறேன்
உயிருடன் நானா???

பாளம்வெடித்த பயிர் நிலம்
பார்த்து
வற்றிய கிணற்றில் நீர் எடுக்க
வளைந்த அந்த ஐயா.....

அடிக்கடி மனதின்
மூலைகளில் உரசிக்கொண்டு....

Sunday, July 18, 2010

சிதறும் சில்லறைகள் - 01

இன்று தொடக்கம் இந்த சிதறும் சில்லறைகள் இடுக்கையை இடையிடையே எழுத எண்ணியுள்ளேன் முழுமையாக எழுதமுடியாமல் போனவைகளுக்காகவும் சேர்த்து....

இன்று பிடித்த நாள்
ஆபிரிக்காவின் தங்கம் சின்னம் என்று போற்றப்படும் முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி, திரு. நெல்சன் மண்டேலா பிறந்ததினம்.
இவரைக் கெளரவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் இன்றைய தினம் ஜூலை 18ஆந்திகதி "சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்" ஆக 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு இன ஒற்றுமைக்காக, மனித உரிமைகளுக்காக, போர் முரண்பாடுகளுக்குத் தீர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.
அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு நெல்சன் மண்டேலா செய்த பங்களிப்புக்கு மரியாதை செய்யும் விதமாக ஐ.நா உத்தியோக தகவலை இங்கு காண்க
சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

கவலை

மட்டக்களப்பு ஏ-4 வீதி செப்பனிட்டு வீதி அகலப்படுத்தப்பட்டு திருத்தவேலைகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக வீதியோர மரங்கள் தவிர்க்கப்பட முடியாமல் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது மட்டக்களப்பு கல்லடியின் வீதியோரத்தில் கடந்தவாரம் வெட்டப்பட்டு கிடக்கும் புளியமரங்கள்.. நான் அடிக்கடி உந்துருளியில் செல்லும்போது அலைபேசியில் யாரோடும் அவசரதொடர்புகொள்ள நான் நிற்பாட்டி கதைக்கும் அந்த மரங்களின் நிழல் இனி இல்லை. நல்ல பழங்கள் (அனேகமாக மாம்மழம்) வாங்கும் அந்த இடம் இல்லை... வேறுவழியில்லாமல் வெட்டப்படுகின்றன. ஆனால் வெட்டப்பட்டவைகளுக்காக ஒருமரமாவது நடப்படுமா வேறெங்கிலும்... இதுக்குத்தான் எதையும் திட்டமிட்டு செய்திருந்தால் இந்தக் கொடுமை இருந்திருக்காது இல்லையா..

திருந்துவார்களா??
இந்தப்படத்தைப்பாருங்கள் என்னொட ஒரு நண்பன் சிகரெட் புகைக்கும் போது அவன் உறவுக்காரன் ஒருவனைக் கண்டதும் அவன் ஆறாம் விரல் இருந்த இடம்.
எதற்கு இந்தப் பொழைப்பு

அனுபவம் சொல்லுது:
"பிரச்சனைகள் வருவதில்லை என்றால் நீங்கள் வாழ்க்கை வாழவில்லை என்று அர்த்தம். எல்லாம் கிடைக்கிறது நீங்கள் நினைத்தபடி நடக்குது என்றால் வாழ்க்கை வேலைக்காவாது"

இன்று முதல்

ஏதேதோ எழுதத்துடித்த போதும்
உள்மன ஆறுதலின் நீட்சியாய்
கருக்கொண்டது ஒரு
புது நட்பு

நீண்டதொரு
தொலைபேசி
அழைப்பினால்..
நான் இன்னொரு
நானானதா
எனக்குள் இது
அதுவானதா...

மாற்றங்களின் உலகில்
இதுவும் ஒரு மாறுதலா
தூரத்து உறவு
எங்கிருந்தோ
இங்கானதா..

இங்கும் அங்கும்
ஆன இடைவெளி
குறுகிக் குறுகி
வானம் காட்டியது
நட்பு

(படம்:நண்பர் மணிவர்மா கோ.வின் முகப்புத்தகத்தில் இருந்து)

Sunday, July 11, 2010

வாழ்த்துகிறோம்.....

வாழ்த்துச் செய்தி
எமது மண்ணின் மகிழ்ச்சியில் விழைந்த உறவு, கனடாவில் வசிக்கும் திரு. இரா.இராஜேந்திரா அவர்களின்
திருநிறைச் செல்வன் இராஜேந்திரா நிதர்சன் அவர்களின்
மிருதங்க அரங்கேற்றம்
திருநிறைச் செல்வி. நிலக்ஷனா இராஜேந்திரா அவர்களின்
பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகிய அரங்கேற்ற நிகழ்வுகள் கனடா 'றிச்சமண்ட கலையரங்கத்தில் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற எமது வாழ்த்துக்களையும் நல் ஆசிகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
புலம் பெயர் உறவுகள் நமது கலாசாரத்தின் நெறியின்பால் நிற்பதற்கு இவ்வாறான அரங்கேற்றங்களைச் சிறப்பாக நிகழ்த்துவது தமிழர்களாகிய எமக்கும் எமது மண்ணின் சிறப்புக்கும் பெருமையான விடயம்.
'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.'
என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப எமது மண்ணின் பிள்ளைகளுக்காக அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பெருமளவில் உதவிசெய்கின்ற திரு.இரா.இராஜேந்திரா அவர்கள் தமது பிள்ளைகளுக்கு உரிய கடமையை செய்திருக்கிறார்.
அதேபோல் இந்த மாபெரும் அரங்கேற்ற நிகழ்வில் 'இவன் தந்தை என்னோற்றான் கொல்' என்று புகழுமாறு இப்பிள்ளைகள் தங்களது திறமைகளை செவ்வனே செய்வார்கள் என்று நம்புகிறோம். அத்தோடு எமது பிள்ளைகளின் கல்விதேவைகளுக்காக சேவைகளை திறம்பட செய்வதற்கு அரும்பாடுபடும் செல்வன் இரா.நிதர்சன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி. இவர்களுக்கு எல்லாம்வல்ல கடவுளின் ஆசிர்வாதமும் அருளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
'சிறுவர்களே எதிர்கால தலைவர்கள்'

Saturday, July 3, 2010

எரியும் தாகம் தொடர் 03 (இறுதி அங்கம்)

எதிர்பார்த்த எதுவும் நடப்பதில்லை என்று அவனுக்கும் தெரியும் ஆனால் அவன் இப்படியெல்லாம் இருக்குமெண்டு கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அன்றிரவு அதே ஹோட்டலில் களியாட்ட நிகழ்வுக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.அவனும் அங்கு ஒரு ரிலக்ஸா இருக்குமென்று கலந்துகொள்ளப் போனான். அங்கே அதே காட்டுச்சிறுக்கியும் வந்தாள். இவன் அடல் பாடல்களில் கலந்து மது அருந்திக்கொண்டு இருந்தவேளையில் தனது நாசுக்கான லீலையை ஆரம்பித்தாள். மயக்கமருந்து கலந்த ஒரு வைன்கிண்ணத்தை எடுத்து
"ஹேய் மதுரசம் அருந்தல்லையா?.. ஹெய் கோவிக்காதீங்க நான் மறந்துட்டேன். இவ் யூ டோன் மைண்ட் இந்த வைனைக் குடிக்கலாம்.... "
என்று ஒரு மாதிரியான புன்னகையை உதிர்த்துக்கொண்டு இவனிடம் நீட்ட இவனும் அதை அப்படியே வாங்கி ஒரே மூச்சில் குடித்தான். கொஞ்சம் கொஞ்சமாய் இவனுக்கு தலைவலியும் ஏதோ தனக்கு வித்தியாசம் ஏற்படுவதையும் உணர்ந்த இவன் தனது அறையை நோக்கி தட்டுத்தடுமாறி வந்து கட்டிலில் படுத்தான் மயக்கமுற்றுக்கொண்டிருக்கும் போது யாரோ தனது அறைக் கதவை திறப்பதை உணரக்கூடியிதாய் இருந்த இவனுக்கு அது யாரெண்டு கண்டுபிக்க முன் வாய் சத்தமில்லாமல் உளறிக்கொண்டிருக்க அதே காட்டுச்சிறுக்கி நுழைந்து இவனை ஆரக்கட்டிக்கொண்டு....
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள." என்று வள்ளுவர் குறளுக்கு அர்த்தம் புகட்டினாள் அஃறிணையான அவனுக்கு. முற்றிய மது மயக்கத்தில் அடுத்தநாள் நேரம் கடந்துதான் எழுந்தான்.அவசரமாய் வெளிக்கிட்டு பயிற்சிவகுப்புக்குச் செல்ல இடைமறித்த அவள் "நேற்றிரவு நல்லதாக இருந்ததா" என்று கேட்டு ஏதுமறியா அவனைக்குழப்பினாள். அவன் அதைக்காதில் வாங்கியும் வாங்காமலும் சென்றுகொண்டிருக்க ஆத்திரமுற்ற அவள் "இண்டைக்கு உணர்வாய் ".... என்று அவனிடம் சொல்லிக்கொண்டுபோனாள். பயிற்சி வகுப்பு முடிவடைந்து அறைக்கு வந்ததும் இவள் தனது கட்டிலில் குப்பற நித்திரையில் இருப்பதைக்கண்டு "ஹேய் எழும்பு எழும்பு இங்க வந்து ஏன் கொல்லுகிறாய்" என்று எழுப்ப முயன்ற போது அவள் கையில் இருந்த நஞ்சுக்குப்பியைப்பார்த்ததும் தான் தெரிந்தது அவள் நஞ்சருந்தி மயக்கநிலையில் இருப்பதை. உடனடியாக ஹோட்டல் அவசர தொலைபேசிக்கு அழைப்பெடுத்து வைத்தியசாலைக்குச் சேர்த்தான்.
இந்த பயிற்சிப்பட்டறைக்கு வந்து இன்னும் தனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்காததால் மதுவின் மனைவி பயத்தின் மிகுதியால் மதுவின் நண்பனுக்கு அழைப்பெடுத்து விசாரித்தாள். அவனும் காடடுச்சிறுக்கியை வைத்தியசாலையில் அனுமதித்த விடயத்தை சொல்ல, மதுவின் மனைவி திடுக்கிட்டு அவசரஅவசரமாய் அந்த வைத்தியசாலைக்கு ஓடிவந்து மதுவைச்சந்திக்கும் நேரமும் உயிர்தப்பிய அவளின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கிடையில் போலீஸ் இவனை விசாரிக்கும் நேரமும் சரியாய் இருந்தது.
விசாரிக்கும் போது தனது கணவர் ஏதோ தப்புச்செய்திருப்பதாக தனது அவசரப்புத்திக்கு உணர்த்தியதும் இவனைவிட்டு விலகிச்சென்றாள். அவன் எத்தனைதடவை அவளிடம் சொல்லியும் அவள் கேட்க மறுத்து "இனிமேல் என்வீட்டுக்கு வரவேண்டாம் "என்று நெருப்பைக் கொட்டிச்சென்றாள். தன்மனைவிக்காக தனது பிள்ளைக்காக தனது மனிதத்துவத்துக்காகத் தான் எந்தவித தப்புச்செய்யாமலும் தன்னைப்புரிந்துகொண்ட தன் அன்புமனைவி நம்பாமல் போறாளே என்பது மதுவுக்கு பலத்த வேதனையைதத் தந்தது. அப்போதும் அவன் "என்னை நம்பமாட்டாயா நான் எந்த தப்பும் செய்யல்ல சகி"என்று மனதுக்குள் சொன்னது உதட்டின் வழியே சற்று சத்தமாகவே ஒலித்தது.
போலீஸ் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்க... இவன் பயிற்சிப்பட்டறையை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்குப்போனான்
வீட்டுக்கு வந்த இவனை வரவேண்டாம் என்று சொன்ன மனைவி வீட்டுக்கதவைப் பூட்டி திறக்காமல் இருப்பதும் வேதனைக்கு மேல் வலியைத்தந்தது மதுவுக்கு.அப்படியே யன்னல் வழியே "என் குழந்தையை மட்டும் கொடு இந்த புல்வெளி முற்றத்தில் விளையாடிவிட்டு உன்னிடம் தந்திட்டுப் போகிறேன்" என்று கெஞ்ச மனைவியும் தன் கணவன் பிழைசெய்திருக்கமாட்டான் இருந்தாலும் சிறுசந்தேகம் வந்ததால் பொறுக்கமுடியாததால் பிள்ளையைக் கொடுத்தாள்.
அவன் அடுத்துவந்த நாட்களில் தன்கணவன் முற்றத்தில் பிள்ளையோடு விளையாடிய தருணங்களை யன்னல்வழியே பார்த்து ரசித்து மனதுக்குள் மகிழ்ந்துகொள்ள மறுக்கவில்ல. மறைவிலிருந்து அவனையும் மகனயும் ரசித்த மனது அவனை எப்படியோ வீட்டுக்குள் அழைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தது அவளுக்கு.

அன்று பிள்ளையிடம் விளையாடிவிட்டு மனைவியிடம் கொடுக்கப்போக அவன்"இன்னுமா என்னை நம்பவில்லை. நான் உனக்காகவும் பிள்ளைக்காகவும் வாழ்வதை இன்னுமா ஏற்கவில்லை" என்று கண்ணீர் வீழிகளில் வரைந்து விழாமல் கனத்திருந்து அவளிடம் கேட்டதும்... அவள் "நாளை உங்க பிறந்தநாள் சந்திப்போம். வீட்டிலில் இல்ல ஹோட்டலில் பார்ட்டி தாறன்". என்று சொன்னதும் எப்படா நாளை வருகிறது என்று மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டு இன்னும் விடியவில்லையே என்று நேரத்தைகடத்திக்கொண்டிருந்தான்.
அவளை அடுத்தநாள் தனது காரில் ஏற்றிக்கொண்டு பார்ட்டிக்கு கூட்டிச்செல்ல தன்பிள்ளையை பக்கத்துவீட்டு உறவினரை அழைத்து தனதுவீட்டில் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு புறப்பட்டான்.
இவர்கள் இல்லாத தருணம் பார்த்து காட்டுச்சிறுக்கி இவன் வீட்டுக்கு வந்து தான் நண்பி என்றும் பிறந்ததாள் பரிசுகொடுக்கணும் என்றும் சொல்லி "எங்க மது" என்று கேட்டு உள்நுழைந்தாள். பிள்ளையைப்பார்த்ததும் எரிச்சலுற்ற இவள் பிள்ளையை ஒழித்துபோக முற்படுகையில் மதுவின் கார் சத்தம் கேட்டதும் பின்வாசல் வழியாக ஓடிவிட்டாள். அவசரமாய் ஓடிவந்த மதுவும் மனைவியும் பிள்ளை எங்க என்று பக்கத்துவீட்டு உறவினருடன் கேட்கத்தான் மதுவுக்குப்பட்டது. காட்டுச்சிறுக்கி வந்திருக்காள் என்று.....
ஓடி ஓடி எல்லா இடமும் தேட பிள்ளை புல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான்.

தனது படுக்கை அறைக்குள் சென்ற மதுவின் மனைவி தானும் கணவரும் பிள்ளையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் தனது தலையை மட்டும் கடித்து இருப்பதை பார்த்ததும் தான் உணர்ந்தாள். தன் கணவன் பிழையானவன் இல்லை இவள்தான் தன் கணவனைத்துரத்துறாள் என்று....போலீசுக்கு விசயத்தை அறிவித்து மது நடந்த முழுவிடயத்தையும் சொல்லும்போதுதான் தன்கணவன் நிரபராதி என்பதை மனப்பூவமாக ஏற்றுக்கொண்டாள்.
இருந்தாலும் அந்தக்காட்டுச்சிறுக்கி விடுவதாய் இல்லை. அடுத்தநாள் மது வேலைக்குப்போன பிறகு. பவ்வியமாய் வீட்டுக்குள்ளே நுழைந்தாள். பிள்ளைக்குப் பால்கொடுத்து தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது ஏதோ சத்தம் மேல்மாடியிலிருந்த படுக்கையறையினுள் கேட்டதும் பிள்ளையை தூங்க விட்டுட்டு மேலே ஏறிப்போக அந்த காட்டுச்சிறுக்கியைக் கண்டதும் ஆத்திரமடைந்த சகியை கொல்ல முற்படவே சகியும் தடுத்து அவளோடு சண்டையிட்டுக்கொண்ருந்தாள். அப்போது மது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுத்தான். சண்டை பிடித்துக்கொண்டிருந்த சகி அவன் அழைப்பை காலால் தொலைபேசி ஒலிபெருக்கியை தட்ட ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்த மது போலீசுக்கு அறிவித்து வீட்டுக்கு ஓடி வந்துகொண்டிருந்தான்.
காடடுச்சிறுக்கி கடுமையாக தாக்கினாள்

சகியும் இவளை பலமுறை தடுத்து கடைசியில் சகி அவளை அடிக்க ஓங்க மேல்மாடியிலிருந்து தவறிவிழுந்தாள் காட்டுச்சிறுக்கி அப்போது அவளைக் காப்பாத்த முற்பட்டாள் சகி, ஆனால் காட்டுச்சிறுக்கி கீழே விழ போலீசும் வீட்டுக்கு வர சரியாய் இருந்தது.
இறுதியில் போலீஸ் விசாரணையில் மது நிரபராதி என்று அறிவிக்க மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட சகி மதுவைக் கட்டிப்பித்து முத்தமிட்டாள்.

-----------------சுபம்.

இதுவரை கதை எழுத்துவடிவம் முடிந்துவிட்டது .இந்தக்கதை அண்மையில் நான் பார்த்த திரைப்படத்தை அப்படியே முடிந்தளவு தந்திருக்கிறேன்.
இந்தப்படம் Obsessed இதுபற்றி இங்க பாருங்க
கதை எழுதணும் என்ற என் அவா எழுத்துருவாக்கியிருக்கன் அவ்வளவுதான்
இதுபற்றி கதை எழுத்துவடிவம் பற்றி தெளிவுபடுத்துக.

Friday, July 2, 2010

எரியும் தாகம் தொடர் 02

லிப்ட்ல இறங்கிய அவன் மீண்டும் தனது வேலை அறைக்குள் போக அவன் நண்பனும் அறைக்குள் வர நேரம் சரியாக இருந்தது. நண்பனிடம் இரகசியமாக தட்டுத்தடுமாறி நடந்ததை சொல்ல. ஆச்சரியமும் ஆமானுசமும் கலந்த பார்வையை உசுப்பிய நண்பன் "டேய்! இவளை இதுக்கு மேல விட்டுவைச்சா. சரிவராது குடும்பத்துக்கே கொள்ளி(விறகு)வைத்துடுவாள். கவனமா, சீரியசா கையாளணும் இந்தப்பிரச்சனைக்கு சரியான முடிவெடுக்கணும்" என்று என்ன முடிவெடுப்பதென்று மட்டும் சொல்லாமல் அட்வைஸ் பண்ணிணான்.
எத்தனையோபேருக்கு அட்வைஸ் பண்ணிய இவனுக்கு இப்போது அந்த அட்வைஸ ஏதோ சொன்னமாதிரி இருந்ததே தவிர. என்ன பண்ணுறது என்று மேலும் குழப்பம் அவனுக்கு.

அந்த வாரத்தின் கடைசிக்கு முதல் வேலைநாள் வியாழக்கிழமை. மதுவின் நண்பன் "டேய் மது நேரம் பார்க்கல ஐந்து மணியாயிட்டு இன்னும் போகல"
"வேலை கிடக்குடா. நீ போ நான் கொஞ்சம் பிந்திவாறன்"
"ஓகே நான் கிளம்புறன் பாய்" என்று அவன் கிளம்ப.
மதுவும் வேலையை முடித்து அலுவலகத்தை விட்டு வெளியேற நேரம் ஆறுமுப்பதைத் தாண்டியது.. அவசரமாய் லிப்ட்ல இறங்கி கார் பார்க் பக்கம் போய் காரின் பின்பக்க கதவைத்திறந்து உடமைகளைப் போட்டுவிட்ட முன் சீட்டுக் வந்து இருக்க
மற்றொரு பாறாங்கல் தலையில் விழுந்தது...

"ஹேய்" என்று அவள் உடம்பை வளைத்து உள்நுழைந்து,
"மாமன் பார்ப்பாரோ
மன்மதக்கண்ணாலே
காமன் கணைகள் சேர்ப்பாரோ
கட்டவிழ்ந்த
இந்தப்பெண்ணாலே
மதுரசம் நானிருக்க
திராட்சை ரசம்
உனக்கெதற்கு?
வா
ஸ்பரிசங்களாலே
காதல்
செய்""
என்று சொல்ல.
அவன் அடுக்கிவைத்த கோபங்களை கொட்டிவிடும் நேரம் இது என்று....

"போ வெளியேறு. வெளியேறு. என் காரின் முன்னிருக்கை என் மனைவிக்கு மட்டுமே சொந்தம்"
"போ போ தீண்டாதே"
"நான் அடிச்சா தாங்கமாட்ட" என்று அவளை உதறிவெளியேற்றினான் இன்னும் சில வார்த்தைகளால். அப்படியே கிபீர் வேகமாய் பறந்து போனான் ........


அடுத்தவாரம் வேலை நிமித்தம் பயிற்சிப்பட்டறைக்காக(Training workshop) அவன் கொஞ்சம் தூரமாய் வெளியூர் செல்லவேண்டியதாக இருந்தது. இருந்தாலும் இந்த நிலையில் தடுமாறிய மனது போவதா... விடுவதா என்று பல முறை கேட்டுக்கொண்டு.....
செய்யும் தொழிலை தெய்வமாய் போற்றி கடமையுணர்வு மிக்கதாக செய்யவல்ல இவன் மறுப்பானா போவதற்கு?

இவனுக்கான உடைகளையும் ஐந்து நாட்களுக்குத் தேவையான பொருட்களையும் கொண்டுபோக வேண்டிய பெட்டியில் பவ்வியமாக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் சகி.. அந்த பாச உணர்வைப் புசித்துக்கொண்டு அவள் இடையில் நழுவிய இடைவெளியையும் அவன் கவனிக்கத்தவறவில்லை. பெருமூச்செறிந்து 'எப்போதும் என்னுடன் இருக்கணும் நான் உன்னுடன்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன் பிள்ளை அழும் குரல் கேட்க பிள்ளைத்தூக்கிக் கொள்ள விரைந்தான் அந்த பொறுப்புள்ள தந்தை.

பயிற்சிப்பட்டறையும் ஆரம்பித்துவிட்டது. சுமூகமாய் போய்க்கொண்டிருந்தது முதல்நாள். ஆனால் இது நடக்குமென்று அவன் எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை. அவன் எதை வெறுத்து கொஞ்சநாள் நிம்மதியாக இருக்கலாம் என்று முடிவெடுத்து வந்தானோ அது அவனை விடுவதாய் இல்லை.

பயிற்சிப்பட்டறையின் இடைநடுவே ஹொட்டல் வேலையாளி "சேர் உங்களைத் தேடி ஒருவர் காத்திருக்கிறார் அவசரமாக சந்திக்கணுமாம்"
"ஓகே வாரன்" "மன்னிக்க வெளியில் ஒருவர் காத்திருக்கிறார் சந்தித்துவருகிறேன்". என்று சொல்லிக்கொண்டு விரைந்தான். அறைக்கதவைத் திறந்து வெளியே தேடிக்கொண்டிருக்க....
அதே காட்டுச்சிறுக்கி "ஹேய்"
கண்ட ஒரு நிமிடம் அசந்து போய் இவன் "இவள் ஏன்டா துரத்துறாள்... சனியன் பெனியனுக்குள் புகுந்து புகுந்து விளையாடுதே." "சீ!" என்று பார்வை வெறுத்து திரும்பி அறைக்குள் போக எத்தனிக்க,
அவள் "இப்போதாவது உணருகிறாயா என்காதல் தூரம் பார்க்காது உன்னைத்தேடி இத்தனை கிலோமீட்டர் கடந்து........'என்று சொல்லி முடிப்பதற்கு முன் குறுக்கிட்ட அவன் "ஹேய் ஹேய் மிஸ் தயவு செய்து என்னை அணுகாத உன்னிட்ட இருக்கிறது காதல் இல்ல.நீ பொய் சொல்லுகிறாய். இருந்தாலும் அதை ஏத்துக்கிற எண்ணம் எனக்கில்ல. நீ ஒரு பிசாசு. நான் உன்ன வெறுக்கிறேன் . தயவுசெய்து போய்விடு" என்று மூச்செடுக்கச் சொல்லிவிட்டு அறைக்கதவைத் திறப்பதற்குள் அவள் "உன்ன அடைஞ்சே தீருவேன் எனக்காக நீதான் பாரு" என்று விரகதாகத்தின் உச்சியில் வந்த அந்த சூடான வார்த்தைகள் கேட்டும் கேளாததுமாய் அவன் பயிற்சிப்பட்டறைக்கு உள்ளே போனான்.
போன அவன் விரிவுரைகளை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாமல் தவித்தான். அவள் வந்து உதிர்த்த அந்த அவசியமற்ற அநாதைவார்த்தைகள் திரும்பத்திரும்ப வந்து உலுக்கிக்கொண்டு அவனை முள்ளாய் குத்திக்கொண்டு........
தொடரும்..

எரியும் தாகம் தொடர் 01


(இந்த கதை எழுத்து வடிவம் எனது முதல் முயற்சி ஆனால் கதை பற்றி முடிவில் சொல்கிறேன். உங்கள் கருத்துக்களை வேண்டி நிற்கிறேன். ) 
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு