Pages

Showing posts with label தொன்மை. Show all posts
Showing posts with label தொன்மை. Show all posts

Friday, November 5, 2010

தேனூரானும் நாட்டாரியலும் (சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்)

தேனூர் எனும் பெயர் எங்கட ஊர் தேற்றாத்தீவுக்கு வரக்காரணமே கவிஞர் தேனூரான் தான். தருமரெத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஊர் மேல்கொண்ட இலக்கியப் பாசத்தால் இப்புனைபெயரை தனதாக்கிக்கொண்டார். இவரை தேனூரான் மாமா என்று சிறுவயதுகளிலிருந்து அழைத்து வருகிறோம்.இலக்கியத்தில் மிகுந்த வல்லமைவாய்ந்த இவரைப்பற்றிய பதிவு இது.

இவருக்காக நான் எழுதிய கவிதை கலாபூசணம் விருதுபடைத்தபோது; இங்கு காண்க.

கிழக்கிலங்கை தமிழ்பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள் (ஆய்வரங்கக் கட்டுரைகள்) என்ற புத்தகம் அண்மையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக அமையப்பெற்றதை ஒர் ஆவணப்படுத்தலாகவே உணரலாம். இதில் நாட்டாரியல் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளில், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் தொன்மையையும் நாட்டுவழக்காறுகளையும் தெளிவாக எழுச்சிபெறச் செய்திருப்பது மகிழ்ச்சி.


கிராமத்து மண்ணின் மகிமையை அதன் நாட்டுவழக்கை தொன்றுதொட்டு வரும் பண்பை தமிழின் தொடர்ச்சித்தன்மையை அதிகளவில் படம் போட்டுக்காட்டும் புத்தகம் அது. அதைவிட ஆவணம் என்றே சொல்லலாம். ஆனாலும் அங்கே குறை (சொல்ல வேண்டியது ).
இப்புத்தகம் பல்வேறு சமூகத்தையும் மக்களையும் சென்றடையும் நோக்கு குறைவாக இருக்கிறது.பல்கலைக்கழக அல்லது இன்னொரு ஆய்வாளர்களுக்காக மட்டும் இருப்பதாக உணர்கிறேன். காரணம் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்குமா என்பது சந்தேகப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் அறிஞர்களால் உணர்த்தப்பட்ட ஆய்வரங்கக்கட்டுரைகளையே இப்புத்தகம் கொணர்ந்திருக்கிறது. ஆனாலும் பல்வேறு ஆய்வுகள் கருத்தரித்தும் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் கர்ப்பிணிகளாய் இன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
இப்புத்தகத்தினூடு எமது ஊரின் பெருமைசேர்க்கும் கவிஞர் தேனூரான் நாட்டார் அறிவியல் என்ற ஆய்வுக்கட்டுரையைத் தொகுத்துத்தந்துள்ளார்.

"ஒரு நாட்டான் நாட்டார் அறிவியில் பற்றி கூறுவது சிறப்பு, தான் உண்டவற்றை, உண்டு ரசித்தவற்றை அதனால் ஏற்பட்ட மகிழ்வை, பிறருக்குக் கொடுப்பது சொல்வது பொருத்தம், ஆண்டவனின் செல்வப்புதல்வர்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஏழையாயினும் சந்தோசச் செல்வம் பெரிதும் படைத்தவர்கள். அறிவியல் மேதைகள் தாம் பட்டினிகிடந்தும் தமது வீட்டுவாயிலில் வரும் விருந்தினர்களை இதயபூர்வமாக வரவேற்பார்கள். அழகிளராக இருந்தும் தமது அழகைப்பற்றி அகந்தை சிறிதும் அற்றவர்கள்......"
என்று முன்னுரைக்கும் போது நாட்டாரியலின் மேன்மை விளங்கும்.

வழமையான ஆய்வாக இல்லாமல் ஒரு வித்தியாசமான ஆனாலும் நாட்டாரியல் தொடர்பாக பல்வேறு அணுகுமுறைகளை சிந்தனைகளை கவிஞரின் எளிமைத்தன்மையைப் போலவே நுண்ணிய முறையில் தெளிவாக்கியிருப்பது அவருக்குரிய அந்த எழுத்தாற்றலை எல்லாருக்குமாக கொண்டுவந்திருப்பது தெளிவு.

நாட்டாரியலின் தொன்மையை எழுத்துலகில் தடம்புரளச்செய்வதில் இவருக்கு எப்போதும் பெருமையான விடயமும் இவருக்குரிய திறமையையும் வெளிக்காட்டுகிறது. பல்வேறு ஆய்வுகளுக்காக இவரின் துணையை நாடும் பல்கலைக்கழக பேராசியரியர்களும் மாணவர்களும் அவரிடமிருந்து தேனைப் பெற்று வெறும் கூடாக இவரைப் பார்ப்பது நமது மனதுக்கு கவலையாகவும் வெட்கப் படவேண்டிதொன்றாகவும் காணப்படுகிறது.
தமிழ் இலக்கிய விழா - 2010 சிறப்பு மலர் கிழக்குமாகாண கல்வி பண்பாட்டல்வல்கள் அமைச்சின் வெளியீட்டுநூலிலும் நமது மண்ணின் சிறப்புப் பேணும் மட்டக்களப்பு பிரதேச சடங்குசார் கூட்டுக்கலை வசந்தன் - கொம்புமுறி என்ற தலைப்பில் வசந்தன் கூத்து மற்றும் கொம்புமுறி விளையாட்டு என்பற்றை கலைநுட்பத்தின் வெளிப்பாட்டாக அற்புதமாக எவ்வாறு இக்கலைகள் நடைபெறுகிறது என பல்வேறாக ஆய்வெடுத்து எடுத்துரைக்கிறார். கொம்புமுறி விளையாட்டு எமது ஊரின் பெருமைசேர்க்கும் பழைமையான விளையாட்டு ஆதலால் தான் எமது கிராமத்தின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் பெயரானது கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் என்று. அத்தோடு மட்டுமில்லாது வசந்தன் கூத்து என்ற எமது மற்றுமொரு பாரம்பரிய ஆடல்வகையைபற்றிய எழுத்தாடலும் அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.
(அண்மையில் எமது கிராமத்தின் பாலமுருகன் கோயிலுக்கு பால்குடபவனி விழா நடைபெற்றபோது கவி தேனூரானும் வசந்தன் குழுவின் சில பாலகர்களும் பவனிவரும் போது)

ஆனாலும் வறுமையும் புலமையும் சேர்ந்திருப்பது இவரது வாழ்க்கைக்கும் பொருத்தம் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வசந்தன் கூத்துப்பற்றிய அச்சேற்றப்படாத பல்வேறு ஆய்வுகள் கட்டுரைகள் இன்னமும் கையெழுத்துப்பிரதியாக்கி வைத்திருப்பது மகத்தானது.

அவற்றுள் ஆய்வுப்பார்வையில்.....
  • வசந்தன் பாடல்கள் - என்ற கையெழுத்துப்பிரதியில் வசந்தன் எனும் பெயர் வரக்காரணம், தோற்றப்பின்னணிச் சுருக்கம், கண்ணகி இலக்கியங்கள், வசந்தன் பாடல்களின் அமைப்பும் கண்ணகி வழிபாடுகளும், வேளாண்மைச் செய்கையில் வசந்தன் என்று பல்வேறு அங்க இலக்கணங்களை வசந்தன் பாடல்கள் தாங்கி நிற்கின்றன.
  • வசந்தன் கூத்தின் தோற்றமும் வரவாற்றுப்பின்னணியும். - இதில் வசந்தன் கூத்தின் தோற்றம் மற்றும் சமூகப்பின்னணி, கொம்புமுறிச் சடங்கு, வசந்தன் கூத்தின் தற்கால நிலை என்று கூத்தின் தொன்மையும் தன்மையும் தற்கால நிலைமையும் என்று எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்தின் அளிக்கை முறை - இங்கு தேற்றாத்தீவு மற்றும் வந்தாறுமூலைக் கிராமங்களில் வசந்தன் கூத்தின் அளிக்கை முறைபற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்துப்பற்றிய ஓர் நோக்கு - இதில் களுதாவளைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு ஆய்வாக்கப்பட்டுள்ளது.
  • வசந்தன் கவிகள் - என்ற நூலாக்க்படவேண்டியதில் பராக்கே, ஊஞ்சல், தானானாப் பள்ளி, பிள்ளையார் வசந்தன், கள்ளியங்கூத்து, கூவாகுயில் வசந்தன், செவல்வாட்டு வசந்தன், அனுமான் வசந்தன், நாடக வசந்தன் என அத்தனை வசந்தன் பாடல்களும் கையெழுத்தாக்கப்பட்டுள்ளது


தேனூரான் பல்வேறு இலக்கியத்துறைகளில் துறைபோந்தனனாக இருக்கிறார். இயல், இசை , நாடக, மாந்திரிக, நாட்டு வைத்தியம் என்று பலவாறு திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகள் பெற்றாலும் பெருமை என்பது சிறிதுமின்றி பேரெடுக்கப் பிறந்தாலும் இலக்கியம் என்பது ஒவ்வொரு கலைஞனாலும் பயணிக்கக் கூடிதாக இருந்தாலும் அவனது ஆக்கங்கள் நூலுருப்பெறுவதில் பெருதுவைக்கும் இன்பம் அந்தந்த கலைஞனுக்கே சிறப்பு மட்டுமல்லாமல் இலக்கியத்தின் தொடர்ச்சித் தன்மைக்கும் தமிழின் நீடித்து நிலைபெறுதலுக்கும் அவசியம்.

செம்மொழித் தமிழினிச் சாகாது என்றால் ஒவ்வொரு கலைஞனின் படைப்புக்களும் வெளிப்படுத்த வேண்டும். நூலுருவாக்கம் என்பது ஆவணப்படுத்தலின் உச்சம். எனவே இந்தப் பண்படுத்தப்பட்ட தமிழ் நிலத்தை நூலுவாக்க முயற்சிக்கும் போது தமிழ் தாய் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள் என்பது திண்ணம்.

இவரின் படைப்புக்களில் சில அச்சேற்றப்படாமலும் அச்சேற்றி சில மீள்பதிப்புக்கு ஆளாகமலும் என..

  • "மட்டக்களப்பின் கிராமியக் கலைகள்"
  • "நாட்டார் கலையில் காவடியாட்டமும் இந்துகலாச்சாரமும்"
  • "மட்டக்களப்பின் மாந்திரிகைக்கலையும் ஒரு கிராமியக் கலையே"
  • "தேற்றாத்தீவு பாலமுருகன் பாமாலை"
  • "களுதாவளைப்பிள்ளையார் அற்புதப் பொன்னூஞ்சல்"
  • வடமோடி தென்மோடி கலந்த பரிசோதனையாக "அகலிகை" என்ற நாட்டுக்கூத்து

என்று இன்னும் பல எனக்குத் தெரிந்தவை பற்றி சொல்லுகிறேன். 2003 இல் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவை வெளியிட்ட "தேனகம்" என்ற நூலில் கூட "மட்டக்களப்பில் பறையர் சமூகம்" என்ற ஆய்வுக்கட்டுரை அவரின் சமூகவெளிப்பாட்டின் எழுச்சியை எடுத்தியம்புகிறது.

பல்கலைக்கழக மட்டத்தில் நோக்கும்கால் இவருக்கு எத்தனையோ பட்டங்கள் வழங்கலாம். ஏன் கிழக்குப்பல்கலைக்கழகம் இவரின் பல கட்டுரைகள் உட்பட பல்வேறு ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறதை மறுக்க முடியாது. ஆனாலும் பல்வேறு நூல்கள் படைக்க எத்தனிக்கும் இந்தக் கிராமத்துக்காரனினால் நூலுருவாக்கம் செய்யமுடியாமல் போவது கிராமத்துக்கலைகள் பண்பாடுகளின் வெளிச்சம் என்பவறை இழந்து இருப்பது மனவேதனை தரும் விடயம்.
இதுவே தான் சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்.

இவர் பற்றிய இன்னும் பல சிறப்புக்களை பிறிதொரு பதிவில் எழுதுவதற்கு ஆவலாக இருக்கிறேன். நான் இவர் பற்றிய வீடியோ மற்றும் ஆவணப்படுத்தலாக ஆரம்பித்திருக்கிறேன். இவர் போன்று இன்னும் பல இலைமறைகனிகளான பழம்பெரு இலக்கிய சமய கலாசார மூத்தவர்களைப்பறிய ஆய்வு எழுத ஆவலாக உள்ளேன். காரணம் இருக்கும் போது வாழ்த்தவேண்டும் அவர்களுக்கு புகழ்சேர்க்க வேண்டும் அவர்கள் திறமைகளை மெச்சவேண்டும். இறந்தபின் இவர்கள் பேசப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்ற முனைப்போடு....

யாராகினும் நூலுருவேற்ற விரும்பினால் கிராமத்துக்காரனின் படைப்பை ஆவணப்படுத்த முனைந்தால் தமிழுக்குச் செய்யும் ஒரு தொண்டாக இருக்கும் என்பது உண்மை.

Wednesday, February 10, 2010

சீதேவித் தொழில் வெற்றிலைச் செய்கை

ஹாஹாஹா... என்ன தலைப்பு எண்டு குமுற வேண்டாம். இது நம்ம பிரதேச மக்களின் ஆண்டாண்டு காலமாக செய்கை பண்ணப்பட்டு வரும் பிரதான வாழ்வாதார தொழில் இந்த வெற்றிலை (வெத்தில எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்)செய்கை.
மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. வெற்றிலைத்தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.
வெற்றிலை பல மருத்துவத்துக்கு உதவக்கூடியது ஆனாலும் இது பெரும்பாலும் மெல்லப்படுதலுக்கே (chewing betel) பயன்படுகிறது. ஆனாலும் திருமண வைபவங்கள் கோயில் நிகழ்வுகளில் பிரதான இடம் வகிக்கிறது.
இதன் மருத்துவ பயன்கள் பற்றி நம்ம சங்கவி தனது பதிவிட்டிருக்கிறார். பாருங்க வெற்றிலையின் மகத்துவம்

இந்த வெற்றிலை நம்ம ஊரில் எப்படி செய்கை பண்ணப்டுவது என்று பாருங்க.
இவ்வாறு கொடி படருவதற்கு கம்புகள் வரிசைக்கிரமமாக நடப்படும் இக்கம்புகளினருகில் வெற்றிலைக்கொடி(வெற்றிலைக் கொழுந்து) வரிசைக்கிரமமாக நடப்படும் . நிரல் வரிசை "சீத்து" என்று அழைக்கப்படும். இரண்டு கம்பு வரிசைகளுக்கிடையில் "புருவம்"  என்று சொல்லுவர். இரண்டு சீத்துக்களுக்கிடைப்பட்ட வாய்க்கால் இதனை "மூட்டான்" என்றழைப்பர். 
 சற்று வளர்ச்சியுற்ற கொடி நாற்றுப்பருவம் பாருங்க...
பின்னர் வளர்ச்சியுறும் போது ஆரிக்கை கொண்டு கம்போடு சேர்த்து வெற்றிலைக்கொழுந்து  (வெற்றிலைக் கொடி) கட்டப்படும்.இதன்போது வெற்றிலையின் பற்றுவேர்கள் கம்பினைப் பற்றிக்கொண்டு வளரும். வளர்ந்த வெற்றிலை தோட்டம் பாருங்க..( ஆரிக்கை என்பது தென்னங்குருத்து என்று சொல்லப்படும் இளம் ஓலையினைக் வெயிலில் காயவைத்து நார்நாராக கிழித்து எடுக்கப்படும் நார்) ஒரு இசைப்பட்டதாரி நீர் பாச்சுகிறார் பாருங்க நம்ம நண்பன்தான்
இதன் குறிப்பிட்ட 12-20 நாட்களின் இடைவெளியில் அறுவடை அதாவது வெற்றிலை பறிக்கப்படும். இது கீழிருந்து மேல்நோக்கி மூன்று அல்லது நான்கு வெற்றிலைகள் கைகளினால் பறிக்கப்படும். பின்னர் இது வளர்ச்சியுற்று கொழுந்து கம்புகளின் உச்சியை அடையும் போது இதனை "அலம்பல்" என்று கூறப்படும் அதாவது கிளைவிட்ட மேலுள்ள கம்புகளில் கொழுந்து படர்வதைக் குறிப்பர். இதன் பின்னர் இக்கொழுந்து கீழ் இறக்கப்பட்டு பதிக்கப்படும். அதாவது மண்ணினுள் வெற்றிலைக்கொடி சுருட்டப்பட்டு மண் போடப்பட்டு மீண்டும் சிறிய உயரத்துக்கு கொழுந்து கம்போடு கட்டப்பட்டு மீண்டும் வளர்க்கப்படும். காட்சிகள்............
ஆரிக்கை
அலம்பலில் கொழுந்து
அலம்பலில் இருந்து கொழுந்து இறக்கப்படுகிறது....
இறக்கப்பட்ட கொழுந்து மீள கம்புடன் கட்டப்படுதலும் கொடி மண்ணுக்குள் மறைக்கப்படலும்


நீர் ஊற்றி வளர்க்கப்படும் வெற்றிலைக் கொழுந்து இரசாயனப் பசளைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் மாட்டெரு மூலம் இயற்கைப்பசளையையே இடப்படுவதால் வெற்றிலைத்தோட்டச் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரும் மாட்டுக்கொட்டில்களில் மாடுகள் வளர்த்து இதிலிருந்து மாட்டெருவும் மண்ணடன் சேர்த்து தோட்டத்துக்கு இட்டு கொழுந்து வளர்க்கப்படும். இது நீர் வெற்றிலை என்பதால் தினமும் தோட்டத்துக்கு நீர் ஊற்றப்பட வேண்டும்.

மாட்டுக்டுகொட்டில் மாட்டெரு உற்பத்தி
ம்ம்ம்..........
இதுதான் நம்ம வெற்றிலைச்செய்கை. எமது கிராமத்தவர்களின் பிரதான தொழில்களில் இதுவும் ஒன்று. இத்தொழிலாலே எனது குடும்பப் பொருளாதாரப்பாரம் தாங்கப்படுகிறது. பாருங்க நம்ம அப்பாவும் மாமாவும் தோட்டத்தில் சாப்பிடுறாங்க
வேலைகளுக்கிடையில் இளைப்பாறும் உறவுகள்........

Saturday, January 30, 2010

மீன்பிடித்தொழிலும் நம்ம பாரம்பரியமும் மாறுமா???

சமையலறையிலிருந்து
அம்மா: "தம்பி கடக்கரையில்(கடற்கரை)மீன் படுதாம் எழும்புடா மீன் வாங்கிட்டு வாடா... "
"என்னம்மா சும்மா நித்திரை கொள்ளவிட மாட்டியா??"... என்று முணுமுணுத்து... "ம்ம்ம்ம்மா ... அப்பா " எண்டு எழும்பி காலைக்கடனையெல்லாம் முடித்துக்கிட்டு கடற்கரைக்கு போனேன். "ஓடியா ஒரு கை பிடி.. ஏலோ...ஏலோ..."என்ற ஆர்ப்பரிப்புடன் வலை இழுக்க ஆரம்பித்தார்கள் நானும் பிடித்து இழுத்தேன்...

ஆமா.. எப்படி இது .........?
நம்ம ஊருல கடல் மீன்பிடித்தொழில் ஆத்து(நன்னீர்) மீன்பிடித்தொழில் என இருவகை தொழில்களிலும் பாரம்பரிய தன்மையே இன்னும் காணப்படுகிறது.
பாருங்க கரைவலை என்று அழைக்கப்படும் நம்ம ஊரு(தேற்றாத்தீவு) மீனபிடித்தல் முறை எப்படி என்று..

முதல்ல தோணியில்(canoe) கரைவலை ஏற்றப்படும் இது தான் கரைவலைத்தோணி அதன்மேல் கரைவலை உள்ளது.

பின்னர் மீன்கூட்டத்தைக் கண்டவுடன் "தோணி" தள்ளப்பட்டு வளைத்து கரைவலை போடப்படும்.(அதாவது தோணியின் மூலம் வலை கடலுக்குள் இடப்படும்) மீன்கூட்டத்தை (Schooling of fish) "சிகப்பு " எண்டு சொல்லுவர். "டேய் அங்கபாரு சிவப்பு தெரியுது ...." இப்படி சொல்லுவர்.
பின்னர் இழுக்கும் கயிறு இதனை "கம்பான்" கயிறு என்றழைப்பர். இது ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தோணியிலிருந்து கொடுக்கப்படும். பின்னர் இருபக்கமும் கயிறு இழுக்கப்படும் இதனையே வலையிழுத்தல் என்று சொல்லப்படும். கயிறு இழுக்க பெரிய கண் வலை இழுக்க பின்னர் சிறிய கண் வலை இழுக்கப்படும் அதன்பின் மிகச்சிறிய கண் உள்ள வலை அதாவது மடி என்றழைக்கப்படும் வலை கரையேறும். இதிலே தான் சிறைப்படுத்தப்பட்ட மீன்கள் இருக்கும். பின்னர் தோணி கரைக்குத் தள்ளப்படும்.
பாருங்க கரைவலை மீன்பிடிக் காட்சிகளை...

இதுதான் கரைவலையின் முழுத்தோற்றம்

கடலுக்குள் வலை போடப்படுகிறது

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு