Pages

Friday, November 5, 2010

தேனூரானும் நாட்டாரியலும் (சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்)

தேனூர் எனும் பெயர் எங்கட ஊர் தேற்றாத்தீவுக்கு வரக்காரணமே கவிஞர் தேனூரான் தான். தருமரெத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஊர் மேல்கொண்ட இலக்கியப் பாசத்தால் இப்புனைபெயரை தனதாக்கிக்கொண்டார். இவரை தேனூரான் மாமா என்று சிறுவயதுகளிலிருந்து அழைத்து வருகிறோம்.இலக்கியத்தில் மிகுந்த வல்லமைவாய்ந்த இவரைப்பற்றிய பதிவு இது.

இவருக்காக நான் எழுதிய கவிதை கலாபூசணம் விருதுபடைத்தபோது; இங்கு காண்க.

கிழக்கிலங்கை தமிழ்பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள் (ஆய்வரங்கக் கட்டுரைகள்) என்ற புத்தகம் அண்மையில் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடாக அமையப்பெற்றதை ஒர் ஆவணப்படுத்தலாகவே உணரலாம். இதில் நாட்டாரியல் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளில், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் தொன்மையையும் நாட்டுவழக்காறுகளையும் தெளிவாக எழுச்சிபெறச் செய்திருப்பது மகிழ்ச்சி.


கிராமத்து மண்ணின் மகிமையை அதன் நாட்டுவழக்கை தொன்றுதொட்டு வரும் பண்பை தமிழின் தொடர்ச்சித்தன்மையை அதிகளவில் படம் போட்டுக்காட்டும் புத்தகம் அது. அதைவிட ஆவணம் என்றே சொல்லலாம். ஆனாலும் அங்கே குறை (சொல்ல வேண்டியது ).
இப்புத்தகம் பல்வேறு சமூகத்தையும் மக்களையும் சென்றடையும் நோக்கு குறைவாக இருக்கிறது.பல்கலைக்கழக அல்லது இன்னொரு ஆய்வாளர்களுக்காக மட்டும் இருப்பதாக உணர்கிறேன். காரணம் இப்புத்தகம் விற்பனைக்கு கிடைக்குமா என்பது சந்தேகப்படுத்துகிறது. தமிழ் இலக்கிய விழாவின் ஆய்வரங்கில் அறிஞர்களால் உணர்த்தப்பட்ட ஆய்வரங்கக்கட்டுரைகளையே இப்புத்தகம் கொணர்ந்திருக்கிறது. ஆனாலும் பல்வேறு ஆய்வுகள் கருத்தரித்தும் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் கர்ப்பிணிகளாய் இன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது கவலைக்குரிய விடயம்.
இப்புத்தகத்தினூடு எமது ஊரின் பெருமைசேர்க்கும் கவிஞர் தேனூரான் நாட்டார் அறிவியல் என்ற ஆய்வுக்கட்டுரையைத் தொகுத்துத்தந்துள்ளார்.

"ஒரு நாட்டான் நாட்டார் அறிவியில் பற்றி கூறுவது சிறப்பு, தான் உண்டவற்றை, உண்டு ரசித்தவற்றை அதனால் ஏற்பட்ட மகிழ்வை, பிறருக்குக் கொடுப்பது சொல்வது பொருத்தம், ஆண்டவனின் செல்வப்புதல்வர்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஏழையாயினும் சந்தோசச் செல்வம் பெரிதும் படைத்தவர்கள். அறிவியல் மேதைகள் தாம் பட்டினிகிடந்தும் தமது வீட்டுவாயிலில் வரும் விருந்தினர்களை இதயபூர்வமாக வரவேற்பார்கள். அழகிளராக இருந்தும் தமது அழகைப்பற்றி அகந்தை சிறிதும் அற்றவர்கள்......"
என்று முன்னுரைக்கும் போது நாட்டாரியலின் மேன்மை விளங்கும்.

வழமையான ஆய்வாக இல்லாமல் ஒரு வித்தியாசமான ஆனாலும் நாட்டாரியல் தொடர்பாக பல்வேறு அணுகுமுறைகளை சிந்தனைகளை கவிஞரின் எளிமைத்தன்மையைப் போலவே நுண்ணிய முறையில் தெளிவாக்கியிருப்பது அவருக்குரிய அந்த எழுத்தாற்றலை எல்லாருக்குமாக கொண்டுவந்திருப்பது தெளிவு.

நாட்டாரியலின் தொன்மையை எழுத்துலகில் தடம்புரளச்செய்வதில் இவருக்கு எப்போதும் பெருமையான விடயமும் இவருக்குரிய திறமையையும் வெளிக்காட்டுகிறது. பல்வேறு ஆய்வுகளுக்காக இவரின் துணையை நாடும் பல்கலைக்கழக பேராசியரியர்களும் மாணவர்களும் அவரிடமிருந்து தேனைப் பெற்று வெறும் கூடாக இவரைப் பார்ப்பது நமது மனதுக்கு கவலையாகவும் வெட்கப் படவேண்டிதொன்றாகவும் காணப்படுகிறது.
தமிழ் இலக்கிய விழா - 2010 சிறப்பு மலர் கிழக்குமாகாண கல்வி பண்பாட்டல்வல்கள் அமைச்சின் வெளியீட்டுநூலிலும் நமது மண்ணின் சிறப்புப் பேணும் மட்டக்களப்பு பிரதேச சடங்குசார் கூட்டுக்கலை வசந்தன் - கொம்புமுறி என்ற தலைப்பில் வசந்தன் கூத்து மற்றும் கொம்புமுறி விளையாட்டு என்பற்றை கலைநுட்பத்தின் வெளிப்பாட்டாக அற்புதமாக எவ்வாறு இக்கலைகள் நடைபெறுகிறது என பல்வேறாக ஆய்வெடுத்து எடுத்துரைக்கிறார். கொம்புமுறி விளையாட்டு எமது ஊரின் பெருமைசேர்க்கும் பழைமையான விளையாட்டு ஆதலால் தான் எமது கிராமத்தின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் பெயரானது கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் என்று. அத்தோடு மட்டுமில்லாது வசந்தன் கூத்து என்ற எமது மற்றுமொரு பாரம்பரிய ஆடல்வகையைபற்றிய எழுத்தாடலும் அருமையாக விளக்கி எழுதியுள்ளார்.
(அண்மையில் எமது கிராமத்தின் பாலமுருகன் கோயிலுக்கு பால்குடபவனி விழா நடைபெற்றபோது கவி தேனூரானும் வசந்தன் குழுவின் சில பாலகர்களும் பவனிவரும் போது)

ஆனாலும் வறுமையும் புலமையும் சேர்ந்திருப்பது இவரது வாழ்க்கைக்கும் பொருத்தம் என்பதற்கு இவரும் ஒரு சான்று. வசந்தன் கூத்துப்பற்றிய அச்சேற்றப்படாத பல்வேறு ஆய்வுகள் கட்டுரைகள் இன்னமும் கையெழுத்துப்பிரதியாக்கி வைத்திருப்பது மகத்தானது.

அவற்றுள் ஆய்வுப்பார்வையில்.....
  • வசந்தன் பாடல்கள் - என்ற கையெழுத்துப்பிரதியில் வசந்தன் எனும் பெயர் வரக்காரணம், தோற்றப்பின்னணிச் சுருக்கம், கண்ணகி இலக்கியங்கள், வசந்தன் பாடல்களின் அமைப்பும் கண்ணகி வழிபாடுகளும், வேளாண்மைச் செய்கையில் வசந்தன் என்று பல்வேறு அங்க இலக்கணங்களை வசந்தன் பாடல்கள் தாங்கி நிற்கின்றன.
  • வசந்தன் கூத்தின் தோற்றமும் வரவாற்றுப்பின்னணியும். - இதில் வசந்தன் கூத்தின் தோற்றம் மற்றும் சமூகப்பின்னணி, கொம்புமுறிச் சடங்கு, வசந்தன் கூத்தின் தற்கால நிலை என்று கூத்தின் தொன்மையும் தன்மையும் தற்கால நிலைமையும் என்று எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்தின் அளிக்கை முறை - இங்கு தேற்றாத்தீவு மற்றும் வந்தாறுமூலைக் கிராமங்களில் வசந்தன் கூத்தின் அளிக்கை முறைபற்றிய ஆய்வாக எழுதப்பட்டுள்ளது.
  • வசந்தன் கூத்துப்பற்றிய ஓர் நோக்கு - இதில் களுதாவளைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு ஆய்வாக்கப்பட்டுள்ளது.
  • வசந்தன் கவிகள் - என்ற நூலாக்க்படவேண்டியதில் பராக்கே, ஊஞ்சல், தானானாப் பள்ளி, பிள்ளையார் வசந்தன், கள்ளியங்கூத்து, கூவாகுயில் வசந்தன், செவல்வாட்டு வசந்தன், அனுமான் வசந்தன், நாடக வசந்தன் என அத்தனை வசந்தன் பாடல்களும் கையெழுத்தாக்கப்பட்டுள்ளது


தேனூரான் பல்வேறு இலக்கியத்துறைகளில் துறைபோந்தனனாக இருக்கிறார். இயல், இசை , நாடக, மாந்திரிக, நாட்டு வைத்தியம் என்று பலவாறு திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகள் பெற்றாலும் பெருமை என்பது சிறிதுமின்றி பேரெடுக்கப் பிறந்தாலும் இலக்கியம் என்பது ஒவ்வொரு கலைஞனாலும் பயணிக்கக் கூடிதாக இருந்தாலும் அவனது ஆக்கங்கள் நூலுருப்பெறுவதில் பெருதுவைக்கும் இன்பம் அந்தந்த கலைஞனுக்கே சிறப்பு மட்டுமல்லாமல் இலக்கியத்தின் தொடர்ச்சித் தன்மைக்கும் தமிழின் நீடித்து நிலைபெறுதலுக்கும் அவசியம்.

செம்மொழித் தமிழினிச் சாகாது என்றால் ஒவ்வொரு கலைஞனின் படைப்புக்களும் வெளிப்படுத்த வேண்டும். நூலுருவாக்கம் என்பது ஆவணப்படுத்தலின் உச்சம். எனவே இந்தப் பண்படுத்தப்பட்ட தமிழ் நிலத்தை நூலுவாக்க முயற்சிக்கும் போது தமிழ் தாய் பல பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வாள் என்பது திண்ணம்.

இவரின் படைப்புக்களில் சில அச்சேற்றப்படாமலும் அச்சேற்றி சில மீள்பதிப்புக்கு ஆளாகமலும் என..

  • "மட்டக்களப்பின் கிராமியக் கலைகள்"
  • "நாட்டார் கலையில் காவடியாட்டமும் இந்துகலாச்சாரமும்"
  • "மட்டக்களப்பின் மாந்திரிகைக்கலையும் ஒரு கிராமியக் கலையே"
  • "தேற்றாத்தீவு பாலமுருகன் பாமாலை"
  • "களுதாவளைப்பிள்ளையார் அற்புதப் பொன்னூஞ்சல்"
  • வடமோடி தென்மோடி கலந்த பரிசோதனையாக "அகலிகை" என்ற நாட்டுக்கூத்து

என்று இன்னும் பல எனக்குத் தெரிந்தவை பற்றி சொல்லுகிறேன். 2003 இல் மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவை வெளியிட்ட "தேனகம்" என்ற நூலில் கூட "மட்டக்களப்பில் பறையர் சமூகம்" என்ற ஆய்வுக்கட்டுரை அவரின் சமூகவெளிப்பாட்டின் எழுச்சியை எடுத்தியம்புகிறது.

பல்கலைக்கழக மட்டத்தில் நோக்கும்கால் இவருக்கு எத்தனையோ பட்டங்கள் வழங்கலாம். ஏன் கிழக்குப்பல்கலைக்கழகம் இவரின் பல கட்டுரைகள் உட்பட பல்வேறு ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறதை மறுக்க முடியாது. ஆனாலும் பல்வேறு நூல்கள் படைக்க எத்தனிக்கும் இந்தக் கிராமத்துக்காரனினால் நூலுருவாக்கம் செய்யமுடியாமல் போவது கிராமத்துக்கலைகள் பண்பாடுகளின் வெளிச்சம் என்பவறை இழந்து இருப்பது மனவேதனை தரும் விடயம்.
இதுவே தான் சேர்ந்திருப்பது வறுமையும் புலமையும்.

இவர் பற்றிய இன்னும் பல சிறப்புக்களை பிறிதொரு பதிவில் எழுதுவதற்கு ஆவலாக இருக்கிறேன். நான் இவர் பற்றிய வீடியோ மற்றும் ஆவணப்படுத்தலாக ஆரம்பித்திருக்கிறேன். இவர் போன்று இன்னும் பல இலைமறைகனிகளான பழம்பெரு இலக்கிய சமய கலாசார மூத்தவர்களைப்பறிய ஆய்வு எழுத ஆவலாக உள்ளேன். காரணம் இருக்கும் போது வாழ்த்தவேண்டும் அவர்களுக்கு புகழ்சேர்க்க வேண்டும் அவர்கள் திறமைகளை மெச்சவேண்டும். இறந்தபின் இவர்கள் பேசப்படவேண்டும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்ற முனைப்போடு....

யாராகினும் நூலுருவேற்ற விரும்பினால் கிராமத்துக்காரனின் படைப்பை ஆவணப்படுத்த முனைந்தால் தமிழுக்குச் செய்யும் ஒரு தொண்டாக இருக்கும் என்பது உண்மை.

7 comments:

ம.தி.சுதா said...

நான் அறிந்திடாத பல புதிய தகவல்களை தங்கள் பாணியில் தந்துள்ளீர்கள் .. வாழ்த்துக்கள்.

Ramesh said...

@@ம.தி.சுதா said...

///நான் அறிந்திடாத பல புதிய தகவல்களை தங்கள் பாணியில் தந்துள்ளீர்கள் .. வாழ்த்துக்கள்.///

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
அனைவரும் அறிந்திடவேண்டும்

Sivatharisan said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

Unknown said...

வணக்கம் உங்களது பதிவுக்கு நன்றிகள்

Unknown said...

தேனூரான் பற்றிய எனது ஆய்வுக்கு உங்கள் உதவியை வேண்டுகிறேன். உங்கள் மின்ஞ்சல் முகவரியினை அல்லது தெலைபேசி இலக்கத்தினை பதிவுசெய்தால் மிகவும் உதவியாக இருக்கும்

Unknown said...

தேனூரான் பற்றிய எனது ஆய்வுக்கு உங்கள் உதவியை வேண்டுகிறேன். உங்கள் மின்ஞ்சல் முகவரியினை அல்லது தெலைபேசி இலக்கத்தினை பதிவுசெய்தால் மிகவும் உதவியாக இருக்கும்

Unknown said...

வணக்கம் உங்களது பதிவுக்கு நன்றிகள்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு