2004-12-26 அன்று ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். நாங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அடுத்த நாள் எமது அரையாண்டு இறுதிப்பரீட்சைக்காக காத்திருந்த தருணம். அவசர அவசரமாக காலைச்சாப்பாட்டுக்கு அக்கா கடை(கூழ் பார்)க்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்.
அப்போது நமது நண்பர்கள் ஓடோடி தொலைபேசி அழைப்பெடுக்க வந்துகொண்டிருந்தார்கள். "என்னடா புதினம் ஓடிவாரேல் எண்டு கேட்டன்" அதிர்ச்சியாயும் ஆனால் நம்ப முடியாமலும் இருந்த அந்தச்செய்தி காதை அடைத்தது. "கடல்பெருகுது மச்சான் கரையோரத்தை அழிக்குதாம்டா" என்றான் ஒருவன்.
கண்களில் கண்ணீர் கனக்க நானும் தொலைபேசி அழைப்பெடுக்க முண்டியடித்த நேரம் அது... இலக்கத்தை சுழற்றினேன்.. " ராங் ராங்..." அழைப்பை யாரும் எடுக்கவில்லை நெஞ்சு உடைஞ்சது. வீட்டில் யாராவது இருக்கிறார்களா....? யாருமே இனி எனக்கில்லையா...??? அழிந்துபோய்விடார்களா..??? எங்காவதும் தப்பி ஓடிவிட்டார்களா.....? நெஞ்சுக்குள் படபடப்பு... சற்று நேரம் அமைதியில் அழுகை இல்லை ஆனாலும் கண்ணீர்த்துளிகள் தொப்பென என் மேல்சட்டையில் விழுந்தபோதுதான் உணர்ந்தேன் மனது அழுகிறது.. நான் நானாக இல்லை என..
அப்போது என் நண்பர்களும் ஓடி வந்தார்கள்.... மனதுக்கு தெம்புகொடுத்து மீண்டும் என் வீட்டு இலக்கங்களை சுழற்றிய போதுதான் மூச்சு வந்தது. எனது அக்கா.."தம்பி .. " என் கண்கள் கண்ணீரைச் சொரிந்து ....' அக்கா.. அம்மா அப்பா..சின்ன அக்கா...அன்ரி மாமா..' என்று குடும்பத்தவர்களை தடுமாறி ஒருமாதிரியாக சொல்லி முடிக்க .. "பயப்படாத எல்லாரும் பாதுக்காப்பாக இருக்கிறார்கள்.. நாங்களும் பக்கத்தவர்களும் வீட்டுக்கு மேலுள்ள கொங்கிறீட்டு தட்டில் இருக்கிறோம் என்ற போது நிம்மதி வந்தது.
தொலைபேசியைத் துண்டித்து நான் வர.. என் நண்பன் அவன் வீடு கடலுக்கு மிகக் கிட்ட இருந்தது.. அவன் தம்பட்டை எனும், கடலுக்கு மிக அண்மைய கிராமத்தைச் சேர்ந்தவன்.
இதற்கு இரண்டு வாரங்கள் முன் என நினைக்கிறேன் பல்கலைக்கழக நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி(இப்போ இல்லப்பா)போட்ட போது இவனுடன் வாதங்களில் ஏற்பட்டபோது சொன்ன விடயம் உன்ர வீடும் ஊரும் அந்த அத்திப்பெட்டி போல அழியும்டா பாரு.. என்று கேலி செய்தோம்.. ஆனா அது அவ்வளவு விரைவா நடக்குமென்று நினைக்கவேயில்லை..
நல்லாதெரிந்தது அவன் கண்கள் குளமாக என்மனது நெகிழ்ந்தது. மீண்டும் என்மனம் நிலையாக இல்லை ஏனெனில் இவன் என் ரூமெட் (விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தோம்).. அவனுக்கு ஏதும் என்றால் நாம தானே உதவவேண்டும். ம்ம்ம்.. அடுத்த கவலை அவன் வீட்டாரைப்பற்றி நெஞ்சுக்குள் ...மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுத்தேன்அவன் வீட்டு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.. இதயத்தின் துடிப்பு உயர்வானது. கடவுள் மீது நம்பிக்கை அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று. அதுமட்டுமே நாசிக்குள் இருந்தது எனக்குள்ளும் என் நண்பனுக்குள்ளும். அவன் மனம் வீழ்ந்தது முகம் துடித்தது இப்போதும் என் கண்ணுக்குள்.
மீண்டும் தொலைபேசி இலக்கங்களைச் சுழற்றினேன் எனது மற்றுமொரு நண்பன் ஒருவனுக்கு (இவன் அக்கரைப்பற்று, கோளாவிலைச் சேர்ந்தவன்). லைன் கிடைச்சுட்டு சற்று நிம்மதி அப்போது நண்பகல் கடந்து விட்டது. உடனே விடயத்தை சொன்னேன். அவனை தம்பட்டைக்கிராமத்துக்கு சென்று பார்த்து வரும்படி சொல்ல அவனும் சைக்கிளில் பயந்து பாய்ந்து ஓடி சென்றான்.. வீடு உடைந்து தெரிந்தது... ஆனால் ஆளரவம் வீட்டில் இல்லை.. சுற்றுப்பார்க்கையில் பக்கத்துவீட்டுப்பக்கத்தில யாரோ ஒருவர்..அவரிடம் அவன் தளுதழுத்த குரலில்" இந்த வீட்டுக்காரர்கள் தப்பிவிட்டார்களா???" அவர் " ஓம் தம்பி அவர்கள் அனேகமாக தம்பிலுவில் உறவினர்களிடம் தங்கியிருக்க வேண்டும்" என்றார்.. நிம்மதிப் பெருமூச்சொடு அவன் இதை அப்படியே என்னிடம் ஒப்புவிக்க. நான் பாதிப்புற்ற நண்பனிடம் சொல்ல இதய துடிப்புவேகம் சற்று குறைந்தது ஆனாலும் நம்பிக்கை மட்டுமே.. ஏனெனில் என் நண்பன் அவனைச் சமாதானப்படுத்தவே சொல்கிறேன் என்று நினைத்தான்.
இதற்கிடையில் நானும் நண்பனும் (பாதிக்கப்பட்ட) பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு சிறிய வாகனமொன்றில் அவன் அண்ணாவிடம் போவதற்கு வந்தோம். அண்ணாவுக்கும் மனசுல தெம்பில்லை ஆறுதல் சொல்ல முடியவில்லை. இருந்தபோதும் கோளாவில் நண்பன் சொன்ன வார்த்தைகளை மட்டும் நெனச்சுக்கிட்டு இருக்க.
மீண்டும் என் கோளாவில் நண்பன் " டேய் அவன் அப்பா அம்மா எல்லோரும் ஆலையடிவேம்பு முருகன் கோவிலில் இருப்பதாக சொல்ல" அவன் விசாரித்து அதை முருகன் கோவில் ஐயர் வீடு என்று உறுதிப்படுத்தினான். அதை என் நண்பனிடமும் அவன் அண்ணாவிடமும் சொல்லி அன்று பின்னேரம் ஒரு சிவப்பு நிற சைக்கிளில் 24 KM தூரம் ஓடி எனது வீட்டுக்கு சென்றேன். எனது வீட்டுக்காரர்களைச் சந்தித்ததும் சற்று மகிழ்ச்சியடைந்தாலும், எங்கட வீட்டு வருமான தோட்டம் எல்லாம் முற்றாக அழி்க்கப்பட்டுவிட்டது என்று சொல்லக்கேட்க இடி விழுந்தது.
அடுத்தநாள் அதே சைக்கிளில் என் நண்பனின் அம்மா,அப்பா இருந்த ஊர் நோக்கி என் பணயம் ஆரம்பித்தது. ஆனால் கல்முனை வரையும் தான் அந்த சைக்களில் போக முடிந்தது. பின்னர் சைக்கிளை வேறொரு நண்பனிடம் வைத்துவிட்டு அவர் இவர்களில் மோட்டார் சைக்கிளில் தொங்கிக்கொண்டு செனறேன். அங்கு கோளாவில் நண்பனுடன் சேர்ந்து அந்த முருகன் கோவிலைச்சென்றடைந்தேன்.
நிம்மதி அவர்களைக்கண்டு நடந்ததை எல்லாம் விபரிக்கமுடியவில்லை அன்று இருந்தாலும் அவர்கள் பட்ட கஸ்டத்தை மட்டுமே கேட்டுக்கொள்ள முடிந்தது. அதை அப்படியே மட்டக்களப்பிலுள்ள எனது நண்பனிடம் சொல்லி சந்தோசப்பட்டேன்.அன்றிரவு அங்கே தங்கிவிட்டு அடுத்தநாள் எனது விட்டுக்கு வந்தேன். பின்னர் நான் மட்டக்களப்புக்கு சென்று எனது பல்கலைக்கழகத்து நண்பர்கள் சேர்ந்து சேகரித்த நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு என் நண்பனையும் சேர்த்துக்கொண்டு செங்கலடி - அம்பாறை வழியாக அக்கரைப்பற்று நகரத்தை வந்தடைந்தோம். அப்போது நண்பர்களிடம் சொல்லி நானும் எனது நண்பனும் அங்கே இறங்கி அவன் அம்மா அப்பாவிடம் சென்றடைந்தோம்.
பி்கு: பல வருடங்கள் கடந்தும் இப்போது என் நண்பன் என்னுடன் எவ்வித தொடர்புமில்லை. ஆனாலும் நான் அவனுக்கு ஒரு நண்பன்.
அவனுக்காக சில வருடங்கள் முன் எழுதிய கவிதை:
என் உணர்வுகளை சுவீகரித்து
உரமாக்கியவனே !
இழப்புக்களை ஏற்று
எடுப்புக்களை விடுத்து
விருப்புக்களைப் பகிர்ந்து
நட்புக்கு வழிவகுத்தவனே!
அன்பு மை கொண்டு
நட்புக்கவி வரைந்தவனே !
உன்வெட்டிப்பேச்சு
உயிர் உண்மை மூச்சு
கட்டிக்கொள்ள கொட்டிக்கிடக்கு
ஆயிரம் ஆசைகள்
நெஞ்சினில்....
உன்நினைவுகள்
விழுங்கவும் முடியாத
வெளியேற்றவும் முடியாத
எச்சிலைப்போல்
எனக்குள்ளே
புதைந்துகிடக்கின்றன
உந்தன் நினைவுவிரல்கள்
உணர்வின் கதவுகளை
தட்டத்தொடங்க
இறந்தகாலத்தின் ஆழத்தில்
உறங்கும் நம் நினைவுகள்
மேற்பரப்புக்கு வந்துவிடுகின்றன
உன்னோடிருந்த காலங்கள்
சந்தோசச் சாரல்கள்
உற்ற சோகங்கள்
வேதனைகள்
துயரங்கள்
கலக்கம், கண்ணீர்
உனக்கு மட்டும் சொந்தமல்ல
எனக்கும் உரியதுடா
மறந்துவிடாதே..
உனக்காக எழுதப்படும்
இக்கவிதை- என்
உருக்கும் உணர்வுகளை
கண்ணீரின் ஊர்வலத்தை
மனக்காயத்தின் சுவடுகளை
காட்டவில்லையடா
மறந்துவிடாதே
கையேந்தி காற்றை
ஊதாவிட்டால்
புல்லாங்குழல் கூட
வெட்டப்பட்ட வெறும்
மூங்கில்தான்
உன்தன் நினைவுகள்
நீங்கமறுத்து
இறுகப்பிணைந்து கொள்கின்றன
இதனால்
இறுகப்பிணைந்த நட்புடன்
என்றும் இணைய
நினைக்கும்
இதயத்துடன்
காத்திருக்கிறேன்
மீள இணைந்துகொள்.....
15 comments:
நிஜங்களைக் கொண்டு அருமையான பதிவு
கவிதையில் வலி தெரிகிறது
மறக்கும் சம்பவமா அது. உயிரக்காப்பற்ற ஓடிய ஓட்டம்..
தீபன்:
//நிஜங்களைக் கொண்டு அருமையான பதிவு///
உங்கள் உதவியை என்னால் மறக்கமுடியாது நண்பா. உன்னாலேயே அவனின் பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது.. அவன் சார்பிலும் நன்றி சொல்லத்தோணுது.
///கவிதையில் வலி தெரிகிறது//
வலித்ததால் தான் இந்தக் கவிதை
அஸ்பர்: உண்மைதான் நினைவுகளில் என்றும் இந்த ஓட்டம் இருக்கும்
நன்றி வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
These memories won't vanish even after 50 years pass
Suren: sure after my death also
வாழ்க்கையில் ஜீரணிக்க முடியாத வேதனை நண்பர்களின் பிரிவுதான் ..ம்..ம்..
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் இல்லை. .....
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் இல்லை. .....
///வாழ்க்கையில் ஜீரணிக்க முடியாத வேதனை நண்பர்களின் பிரிவுதான் ..ம்..ம்..///
ம்ம் நேசிக்கத் தெரிந்த மனது அதான் இப்படி ...
காத்திருப்போம்
நன்றி பாலா...
///by shan said...
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரம் இல்லை. .....///
உண்மைதான் தம்பி ஆனால் சிலபேருக்கு நம்பிக்கைத்துரோகம் சொல்லத்தேவையில்லை. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். நீங்களும் பார்த்து நடங்க..உங்கள் வலைப்பூவின் பெயரையும் மாற்றிவிட்டிருக்கிறேயல் என்று நினைக்கிறேன்..
நன்றி வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
மறக்க முடியாதது . இன்றும் எமது எண்ணத்தில் அப்படியே இருக்கு
//// thambiluvil தம்பிலுவில் said...
மறக்க முடியாதது . இன்றும் எமது எண்ணத்தில் அப்படியே இருக்கு///
நன்றி தம்பிலுவிலூரான் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்..
சுனாமியல்லோ அது..
மறக்க முடியாத சுனாமி.
regards
ram
www.hayyram.blogspot.com
நன்றி ஹேராம் முதல் வருகை மற்றும் பின்னூட்டலுக்கு
Post a Comment