Pages

Thursday, December 23, 2010

ஈழத்துப்பூராடனாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி

"'தேற்றாத்தீவு ஈழத்துப்பூராடனாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகளையும் அனுதாபங்களையும் அன்னாரின் குடும்ப உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.... _தேனூர் வாழ் சமூகம்"'"

ஈழத்து பூராடனார் என இலக்கிய உலகில் அறியப்பட்ட திரு. செல்வராசகோபால் அவர்கள் கனடாவில் Mississauga நகரில் 21 .12 .2010 அன்று காலமாகிவிட்டார்


நமது பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகப்புத்தக குறிப்பிலிருந்து
பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார் நினைவின் சுவடுகளில்
by Balasingam Sugumar on Wednesday, 22 December 2010 at 16:07


பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப் பூராடனார்

தமிழ் மொழி தொன்மை யான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டு ள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் இலக்கியம், இலக்கணம், அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப் புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.

சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள். சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு. சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள்.

சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டி ருப்பார்கள். சுருங்கச் சொன்னால் சிலர் இயலிலும் சிலர் இசையிலும், சிலர் நாடகத்திலும் இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு.

மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் இலங்கையில் பிறந்து இன்று கனடாவில் வாழும் அறிஞர் ஈழத்துப் பூராடனார் (பிறப்பு 13.12.1928) அவர்களின் படைப்புகளை யான் பதினேழாண்டுகளாக நன்கு அறிவேன். எண்பத்திரண்டு அகவையிலும் அடக்கமும் அமைதியும் கொண்டு தமிழுக்கு உழைப்பதைத் தம் கடமையாகக் கொண்டு இவர் இயங்குகிறார்.

பதிப்புத் துறையில் இவருக்கு மிகப் பெரிய பட்டறிவு உண்டு என்பதாலும் தாமே அச்சுக்கூடம் வைத்திருப்பதாலும் தமிழுக்கு ஆக்கமான நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார். தம் நூல்களைத் தமிழ் வழங்கும் உலகப் பல்கலைக்கழகம் சிலவற்றிற்கு அன்பளிப்பாக வழங்குவதைக் கடமையாகக் கொண்டவர். கனடாவில் இவர்களின் அச்சகம் சிறப்புடன் செயல்படுகின்றது. நூல்களும் இதழ்களும் குறிப்பிடத்தகும் தரத்துடன் வெளிவருகின்றன.

ஈழத்துப் பூராடனாரின் படைப்புகள் கண்டு உலகமே வியக்கும்படியாக இவர் தம் தமிழ்ப் படைப்புகள் உள்ளன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர் இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.

ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் இந்த நிகண்டு நூலைப் படைக்க அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். மட்டக்களப்பில் பயிலப்பட்டு வரும் சொற்கள் மற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குப் புதியதாக இருப்பதுடன் மட்டக்களப்பில் இருப்பவர்களுக்கே பல தடுமாற்றங்களை உண்டு பண்ணுவதை உணர்ந்து ஆசிரியர் இந்த நூலை இயற்றியுள்ளார். ஈழத்துப் பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,1. உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)

2. அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)

3. தொழிற் பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)

4. இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)

5. கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்கள்)

என ஐந்து வகையாகப் பகுத்துத் தமிழுக்கு அணிசெய்யும் அழகிய நூலைத் தந்துள்ள இவர் பணியை எவ்வளவு போற்றினாலும் தகும். வழக்கில் பொருள் விளங்காத சொற்களை நிலைப்படுத்தி விளக்கம் தந்துள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984இல் முதல் பதிப்பும் (48 பக்கம்) இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தன. மட்டக்களப்பிற்கு மாட்சி தரும் பாடும்மீன் என்னும் நீரர மகளிரின் பெயரில் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள், சொற்றொடர்களின் அகராதி’ என்னும் ஈழத்துப் பூராடனாரின் மற்றொரு சொல்லாய்வுக்கு உரிய நூலும் குறிப்பிடத் தகுந்ததே ஆகும். மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள், பழக்க வழக்கம், பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப் பூராடனார் வழங்கியுள்ளார். மட்டக்களப்பின் மகிழ்வுப் புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள் வயல் இலக்கியம், ஊஞ்சல் இலக்கியம், வசந்தன் கூத்து ஒருநோக்கு, மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்கள் இவரின் நாட்டுப்புறவியல் துறைக்குரிய பங்களிப்பாக விளங்குகின்றன.

நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள் கூத்தர்வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், மட்டக்களப்பு மாநில இருபாங்குக் கூத்துகளை விளக்கும் வகையில் இவர் தந்துள்ள கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம், வடமோடி கூத்து, இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும், கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும், கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை இரு பாங்குக் கூத்துக்கலைஞன் ஏசு.ஈ. கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை என்னும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாகும்.

மொழிபெயர்ப்பு வகையில் நம் ஈழத்துப் பூராடனார் அவர்கள் தம் பன்மொழி அறிவுகொண்டு பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். கிரேக்க நாட்டின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட் ஓடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டு வடிவில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதுவரை கிரேக்க நூல்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் நம் ஈழத்துப் பூராடனாரின் பணிகள் போற்றத் தகுந்தன.

இலங்கையில் பிறந்து கல்விப் பணியாற்றி ஓய்வாக வாழ்க்கை வாழ வேண்டிய சூழலில் இடம்பெயர்ந்தாலும் தம் தமிழாய்வுக்கு விடை தராத ஈழத்துப் பூராடனாரின் கிரேக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இங்கு தனித்துச் சுட்டத்தக்கன.

ஈழத்துப் பூராடனாரின் கிரேக்க காவிய மொழிபெயர்ப்பு

அறிஞர் ஈழத்துப் பூராடனார் கிரேக்க மொழியில் ஓமார் எழுதிய ஒடிசி இலியட்டு காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும். கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மூலமாகக் கொண்டு நம் ஈழத்துப் பூராடனார் தமிழில் செய்யுளில் தந்துள்ளார். தமிழ் போல் உயரிய மொழியான கிரேக்க மொழி பாவியங்கள் அந்த மொழியின் இலக்கியச் செழுமையை உணர்த்துவதுடன் கிரேக்க மக்களின் கடல் பயண அறிவு, இசை அறிவு, நாடக அறிவு என யாவற்றையும் காட்டும் ஆவணமாக உள்ளது.

ஈழத்துப் பூராடனார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். 11100 பாடல் வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கிரேக்க மொழி ஓமரின் காப்பியங்கள் பற்றி ஈழத்துப் பூராடனார் பின்வரும் குறிப்புகளைத் தந்துள்ளார்.

‘கிரேக்க மொழி தமிழைப் போன்று செம்மொழி இலக்கியம் படைத்த ஒரு பண்டைய மொழி. இதில் உள்ள மகாகாவியங்களில் ஹோமர் மகாகவியின் ஒடிஸ்சியும் இலியட்டும் மிகவும் பழைமையுஞ் சிறப்பும் வாய்ந்தவை. இதன் கிளைக் கதைகளாகவே ஆதிக் கிரேக்கத்தின் பிந்திய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை அநேகமாக நாடக வடிவிலேயே அமைந்துள்ளன. கப்பற் பயணங்களிற் தேர்ந்தவராய் கிரேக்கர் முதலிடம் வகித்தது போல் நாடக அரங்குகளை அமைப்பதிலும் நடத்துவதிலும் அவர்கள் தலையா சிறப்புற்றிருந்தனர். எனவே நாடக இலக்கியங்கள் அங்கு நிலைபெற்று வளரலாயிற்று. (இலியட் பக்கம் 8)

பண்டைக்காலத்தில் கூத்தும் நாடகமும் செழித்திருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 99 வகையான கூத்துக்களை எடுத்துக்காட்டும் சிலப்பதிகார உரையாசியர் அடியாக்கு நல்லார் தமிழகத்தின் செழித்த கூத்து மரபுகளை நமக்கு நினைவூட்டியுள்ளது போல் கிரேக்கர்களின் நாடக இசையறிவு யாவும் கிரேக்க மொழியில் இருந்துள்ளதை ஈழத்துப் பூராடனார் தமிழுக்கு வழங்கியுள்ள தமிழாக்கத்தின் வழியாக அறிய முடிகிறது.

அண்மைக் காலமாக ஈழத்துப்பூராடனார் ஐஞ்குறுநூற்று அரங்கம், சூளாமணித் தெளிவு, கல்லாடம் கற்போம், சொல்லாடுவோம், நைடதம் யாருக்கும் ஒரு ஒளடதம் ஆய்வுக் கண்ணோட்டம், சீவகசிந்தாமணி, ஆய்வுச் சிந்தனைகள், பெருங்கதை ஆய்வுநோக்கு, உள்ளிட்ட நூல்கள் பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ் நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக உருவாக்கியுள்ளார். தமிழ்மொழியின் தோற்றம், அதன் சிறப்பு உணர்த்தும் நூலாக இது உள்ளது.

இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும், உலகளவில் தமிழ்ப் பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.

தமிழ் கணிப்பொறித் துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செயற்துள்ளனர். இவர்கள் வெளியிட்ட பெத்லகேம் கலம்பகம் என்ற நூலே தமிழில் கணிப்பொறியில் அச்சான முதல் நூலாக விளங்குகிறது

நன்றி சுகுமார் சேர்.

தமிழ்ப்பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் இயற்கை எய்தினார்! -முனைவர் மு.இளங்கோவன் விரிவாக எடுத்துரைக்கிறார்

1 comment:

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

முதலில் அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....


நல்ல தகவல்களை ஒருங்கே தந்தது சிறப்பு....
ஒரு சிறந்த இலக்கிய வாதியை ஈழத்து இலக்கியத் துறை இழந்து விட்டமை வருத்தத்திற்குரியது.......

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு