Pages

Saturday, January 2, 2010

2010 ஆம் ஆண்டின் திருவாசக முற்றோதல்

இவ்வாண்டுக்கான எனது முதல் பதிவு... இது நம்ம ஊரின் நிகழ்வுப்பதிவு. புது வருடத்தின் முதல்நாள் கோயிலிலே கழிந்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

எம்பெருமான் சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே நம்ம சமய குரவர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம். பன்னிரு சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது (எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் இருக்கின்றன).
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பது ஆன்றோர் வாக்கு.மனதை உருக்கும் பக்திச் சுவை தனைக்கொண்ட திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன.

இச்சிறப்புப் பொருந்திய திருவாசகத்தினை எமது கிராமத்தின் இந்து இளைஞர் மன்றத்தினர் தேற்றாத்தீவு ஸ்ரீமத் தந்திரதேவா தபோவனத்துடன் இணைந்து "திருவாசக முற்றோதல்" நிகழ்வை தேற்றாத்தீவு ஸ்ரீ படபத்திர காளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடத்தினர்.
காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு மாலை 6.00 மணியளவில் நிறைவுற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நம்ம ஊரின் மைந்தன் பல பிரதேசங்களில் சைவத்தொண்டுகளை ஆற்றும் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு வருகை தந்த சைவப்பழம் திருமதி. மாரிமுத்து தியாகராசா அம்மையார் வரவேற்கப்படும் போது...



பூசையுடன் திருவாசக முற்றோதல் ஆரம்பம்


திருவாசகம் முற்றோதல்....



தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வரவேற்பும் கருத்துரை நிகழ்வுகளும்....

ஆசியுரை தேற்றாத்தீவு ஸ்ரீ படபத்திர காளி அம்மன் ஆலயத்தின் பிரதமகுரு ஸ்ரீ ரவிஜி ஐயா அவர்கள் வழங்கினார். அவர் தமது கருத்துரையில் "தேற்றாத்தீவு கிராம மக்களின் குழந்தைகள் கருவுற்றிருக்கும் போதே இசைஞானமும் சமயப்பற்றும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்பது தெட்டத்தெளிவாக அவர்களின் சமய பஜனை நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன" என்று சொன்னது நம் மனதை நெகிழ்வுபடுத்தியது.

தொடந்து நம்மவர்கள் கருத்துரை வழங்கிய பின் திரு.பரதன் கந்தசாமி அவர்கள் எமது மூத்த சமயப்பற்றாளர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.

 
 

எமது பிரதம வருந்தினரான திரு.பரதன் கந்தசாமி அவர்கள் கருத்துரை வழங்கினார்.


அதில் அவர் "எத்தனையோ இடங்கள் சென்று பாராட்டுக்களை பெற்றதைவிட எனது ஊரில் இப்படியான சிறப்பான நிகழ்வொன்றில் கிடைத்த இந்தப்பாராட்டும் வைபவம் எனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சி எனவும் தனது சேவை எங்குற்றாலும் எமது ஊரின் சைவச்சிறப்பை எடுத்துரைப்பதில் பின்னிற்பதில்லை" என்றபோது ஒவ்வொருவர் மனதிலும் நன்றி சொல்லத் தோன்றியது. தொடர்ந்து அவர் தான் சைவப்பணிக்காக தனது சேவையை கொண்டுசெல்ல கல்முனை நகரில் "நால்வர் கோட்டம்" என்று ஆரம்பித்திருப்பதாகவும் அங்கு பல சைவ சமய நிகழ்வுகளும் இடம்பெறுவாதாகவும் இங்கு கட்டாயம் நமது கிராமமக்கள் வரவேண்டும் என்றும் சைவசமயத்துக்காக தன்னை அர்ப்பணிப்தாகவும் சொன்ன இவர், திருவாசகம் பற்றியோ சமயத்தின் சிறப்பு பற்றியோ சொல்வது தேற்றாத்தீவு மக்களுக்கு திரும்பத்திரும்பச் சொல்வது போலாகும் என்று எமது சமயச்சிறப்பை சில வரிகளிலே சிறப்பாகச் சொல்லி முடிக்க, நன்றியுரையை காயத்திரி சோதிடர் திரு.கு.தவராசா அவர்கள் வழங்கினார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட மதிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
தொடர்ந்து திருவாசகம் முற்றாக ஓதப்பட்டு மாலை 6.00 மணியளவில் சிறப்புப் பூசையுடன் திருவாசகம் முற்றோதல் நிறைவுற்றது.

நிகழ்வுகளின் நிழல்படங்கள்

2 comments:

Paleo God said...

தொடரட்டும் உங்கள் சைவ பணி.. எல்லாம் வல்ல இறையும் இயற்கையும் நலமே தந்து வளமே வாழ வேண்டுகிறேன் ...:))

Ramesh said...

பலா பட்டறை said...
நன்றி பலாபட்டறை..
இவ்வாண்டின் முதல் வருகைக்கு.
நன்றியோடு வாழ்த்துக்கள்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு