Pages

Wednesday, March 23, 2011

இளமையில் கொடிது வறுமை

ஒருவாறு மீண்டு(ம்) வந்திருக்கிறேன். கழுத்துவலியும் வாழ்க்கை வலியும் நெம்புகோலை எனக்குள்ளே தொலைத்து விட்டு கண்டுபிடித்து வந்திருக்கிறேன்.
கணணித் திரைப்பக்கம் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறேன். கீழ் காணும் செய்தி என்னை இப்பதிவை எழுதத்தூண்டியது.
நன்றி battinews, இதுதான் தலைப்பு
கிழக்கு மாகாணத்தில் மூவாயிரத்து ஐநூறு குழந்தைத் தொழிலாளிகள்

இந்த செய்தி எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பது கருத்துக் கணிப்பாக இருக்கலாம்
ஆயினும் இந்நிலைமை நமது மக்களுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் எதிர்காகல நமது நாட்டுப்பொருளாதாரத்துக்கும் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
வறுமை என்ற தோரணையில் பொதுவாக பிள்ளைகள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து வாழ்க்கையை எவ்வாறு கொண்டுசெல்லவேண்டும் என்ற முனைப்பில் தாங்கள் வருமானம் ஈட்டும் தொழில்களைத்தேடி தங்கள் கல்வி மற்றும் கற்றல் முயற்சிகளிலிருந்து நழுவிப்போவது கண்கூடாக தெரியும் உண்மை.
எனது பாடசாலையில் பந்தாந் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை அடிக்கடி அவதானித்தேன் நான் அவர்களுக்கு பாடம் எடுப்பதில்லை, இருந்தாலும் அவன் நடவடிக்கைகள் இவனும் பொருளாதார தேவை உள்ள மாணவனாக இருப்பான் என நினைத்து அவனை அணுகினேன். அவன்

"எனது அப்பா போர்ச்சூழலில் எனக்கு சின்னவயசாக இருக்கும்போது ஆமிகாரக்காரக்களால் கொல்லப்பட்டுவிட்டார். எனக்கு ஒரு தங்கச்சி மட்டும் அம்மாவோடு மாங்கேணியில் (வாகரை பிரதேசம்)வசிக்கிறார்.நான் இங்கு விடுதியில் (hostel) தங்கியிருந்து ஆறாந்தரத்திலிருந்து படித்துவருகிறேன். காசு அம்மா தருவா லீவுக்கு கூட்டிக்கொண்டு போவாவு. நான் காசு கொண்டுவார இல்ல அதால தான் கன்டீன்ல(Canteen)சாப்பிடுற இல்ல"

எனக்கு குபுக்கென்று அழவேண்டும் போல இருந்தது. பின்னர் அவனது கடந்தகால பாடங்களில் எடுத்த புள்ளிகளையும் மேலும் சில தேவைகளையும் கேட்டறிந்துகொண்டேன்.அவன் 45- 60 வரையில் அவனது புள்ளிகள் இருந்தன. ஆனாலும் அந்த இலவச பாதிரியாரின் விடுதியில் படித்து வளரும் அந்தபிள்ளையிடம் கேட்ட சில கேள்விகளுக்கு அவன்:

"எத்தனை நாளைக்கு சேர் பாதர்(பாதிரியார்) பார்ப்பார். நான் படிச்சு என்தங்கச்சியை பார்க்கணும். அம்மாவோடு இருந்து உழைச்சுக்கொடுக்கணும்"
என்றதும் போதும் இந்த பிள்ளையின் ஏக்கமும் வாழ்க்கைக்கோலமும்.

வாழ்க்கையின் இளைமையில் வறுமை ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் பிள்ளைகள் தங்கள் படிப்பை நிறுத்திக்கொண்டு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. யாரவாது படிக்கக்கூடிய பிள்ளைக்கு அதன் பொருளாதார நிலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றால் அவற்றில் சிறிதளவேனும் நிவர்த்தி செய்து அப்பிள்ளைகளை படிக்கச்செய்து அவர்களுக்கு ஒரு முன்னேற்றப்பாதை காட்டி அவர்களை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தையும் வாழவைப்பது கடவுளுக்குசெய்யும் தொண்டாக இருக்கும் அல்லவா.
நமது நாளாந்த செலவில் சிறுதொகைப் பணத்தை இவர்களுக்காகவாவது கொடுத்துதவும் போது அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றும் தீபங்களாக இருக்கலாம்.

அதற்காக அவர்கள் நமக்கு மீண்டும் உதவவேண்டும் நாங்கள் சொல்லும் வேலைகளைச் செய்யவேண்டும் என்றில்லாமல் உதவிதேவைப்படும் போது அவர்களுக்கு உதவிசெய்து அவர்கள் சந்திக்கும் வேறொரு பொருளாதார தேவைப்படும் பிள்ளைக்கு உதவச் செய்ய வைத்து நிலைத்து நிற்கச் செய்தல் காலத்தால் அழியாத சேவை. கடவுள் பார்வை அது அல்லவா.
பொருளாதார தேவையுள்ள பிள்ளைகள் அனேகம் பேர் இருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டால் போதும் என்ற நிலைமையும் இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பிள்ளையால் எவ்வாறு படிக்கமுடியும் படிப்பு பற்றி எவ்வாறு சிந்திக்கமுடியும்.????


எங்களால் எல்லாப் பிள்ளைகளுக்கும் உதவமுடியாது ஆனால் ஒரு பிள்ளைக்காவது உதவலாம் இல்லையா. அப்பிள்ளையும் பொருளாதார தேவை இப்பொழுது இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அப்பிள்ளையே மற்றவருக்கும் உதவும் பிள்ளையாக இருக்ககூடியதாக இருக்கலாம் தானே. எதையும் எதிர்மறை எண்ணத்தோடு பார்க்காமல் பிள்ளைநலச் சிந்தனையோடு அவர்கள் கல்வி, எதிர்கால வாழ்க்கை பற்றி சிந்திப்போமானால் கண்களின் ஓரத்தில் இதயத்தின் ஆழத்தில் சில ஈரவிழுதுகள் நெஞ்சனை நனைத்துக் கொள்ளும்.

இதற்காக தற்பொழுது எங்கள் கிராமத்தை சேர்ந்து புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் எங்களது பொருளாதாரதேவையுள்ள பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டு வருகிறார்கள். நன்றிகள் உறவுகளே.
இதில் கனடா வாழ் நமது "இராஜேந்திரம் ராஜன்" அண்ணா அவர்களின் முயற்சியால் கடந்தவருடம் பெப்பிரவரி 2010 இல் ஆரம்பிக்கப்பிக்கப்ட்ட பணவுதவித்திட்டம் ஒருவருடம் கடந்து பிள்ளைகளின் கல்வி வாழ்க்கைக்கு உதவிக்கொண்டிருக்கிறது.இதில் கடந்த வருட க.பொ.த. சாதாரண தரத்தில் இத்திட்டத்துக்குள் உள்வாங்கிய மாணவன் திறமையாக சித்தியெய்தி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.
இதேபோல் இன்னும் பல நமது உறவுகள் உதவுவதற்கு காத்திருக்கிறார்கள் என்பது சந்தோசம்.

பிள்ளைகள் தங்கள் பொருளாதார நிலைமை குறைவு என்பதால் மற்றவர்களிடம் கைநீட்டிக்கொள்ள மாட்டார்கள். கேட்கவே அச்சப்படுவார்கள். தங்களுக்குள்ளே அழுது பெற்றோரை கஸ்டப்படுத்தி படிப்பை தொடரமுடியாமல் இடைவிலகி தொழிலுக்கு செல்ல சிந்திப்பார்கள். இந்நிலைமையே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இதனால் நீங்கள் யாருக்காவது பணஉதவி செய்யும் போது, செய்யப்படும் இந்த உதவி பிள்ளைகளின் மனம் பாதிக்கப்படாமல், அவர்கள் உளரீதியாக ஒரு கல்வி ஊக்கப்படுத்தலுக்கு மாத்திரம் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாராவது யாருக்கூடாகவாவது உதவுங்கள் ஆனால் சரியான தேவை தேவைப்படும் பிள்ளைகளை இனங்கண்டு அவர்கள் வாழ்க்கைக்கு உன்னத ஒத்துழைப்பு நல்குங்கள். கடவுளின் கருணையும் எல்லா ஆசிர்வாதமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
பிள்ளைகளின் கல்வி சமுதாயத்தின் வெளிச்சம். அதுவே நமக்கு விடிவு.

7 comments:

மைதீன் said...

ஒரு போர் மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு துயரங்களை கொண்டுவருகிறது.

ம.தி.சுதா said...

இது முடியாத சோகம்... இன்னும் சில அண்டகளுக்கு பழைய வடு ஒன்றின் காரணமாக தொடரும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்..

மதுரை சரவணன் said...

கல்விக்கு உதவும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி;வாழ்த்துக்கள்

ஹேமா said...

எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய உங்கள் அக்கறைக்கு நன்றி றமேஸ்.நீங்கள் இன்னும் குணமடைந்து சுகமாயிருக்க என் பிரார்த்தனைகள் !

நிரூபன் said...

எங்கள் சமூகத்தில் வெளித் தெரியாதிருக்கும் சிறுவர்களைப் பற்றிய பகிர்வினைத் தந்திருக்கிறீர்கள். வாசிக்கும் போது மனதை நெருடுகிறது.

Chitra said...

இந்நிலைமையே குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
இதனால் நீங்கள் யாருக்காவது பணஉதவி செய்யும் போது, செய்யப்படும் இந்த உதவி பிள்ளைகளின் மனம் பாதிக்கப்படாமல், அவர்கள் உளரீதியாக ஒரு கல்வி ஊக்கப்படுத்தலுக்கு மாத்திரம் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் யாராவது யாருக்கூடாகவாவது உதவுங்கள் ஆனால் சரியான தேவை தேவைப்படும் பிள்ளைகளை இனங்கண்டு அவர்கள் வாழ்க்கைக்கு உன்னத ஒத்துழைப்பு நல்குங்கள்.


......மனதை கனக்க வைத்த அதே நேரம், சிந்திக்கவும் வைத்து இருக்கீங்க.... அங்குள்ள நிலையை தெளிவாகவும் விரிவாகவும் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

அன்புடன் மலிக்கா said...

மனதை கனக்க வைத்த பதிவு.
குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய உங்கள் நல்லுள்ளத்திற்கு வாழ்த்துக்கள்..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு