Pages

Sunday, June 19, 2011

வலிகளால் ஒரு வரலாற்றுத்தேடல் - 'கொட்டியாரம் இலக்கிய மரபு'

வலிகளால் ஒரு வரலாற்றுத்தேடல் - 'கொட்டியாரம் இலக்கிய மரபு' நூல் விமர்சனம்.


'அனாமிகா' பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக விளைந்த 'கொட்டியாரம் இலக்கிய மரபு' எனும் தொகுப்பு நூல் ஒரு வரலாற்றின் தடங்களை, தமிழின் பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படுத்தலின் ஆரம்பமாக வெளிவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைகலாசார பீடாதிபதி பாலசுகுமார் அவர்களின் மற்றொரு அடயாளப் பொக்கிசமான 'கொட்டியாரம்' தொகுப்பாக அமைந்த இந்நூலில் பிரமிளா சுகுமார் அவர்களின் அற்புதமான பதிப்புரையே செல்வச்சிறப்பு மிக்க எழில்கொஞ்சும் எல்லா வளமும் கொண்ட அந்த கொட்டியாரப்பூமியின் மண்ணின் மணத்தைச் சொல்லும் அழகு அருமை.
எல்லோருக்கும் கிட்டாது என நினைக்கிறேன். தோட்டங்கள், பண்படுத்திய நிலம், விளைந்த நெல்மணிகள் என்றும் மருதம், நெய்தல், முல்லை மூன்றும் குழைந்து எழுந்த அந்த புன்னிலம் 'கள்ளம் கபடமில்லாம நல்ல மக்கள், மரியாதை, பண்பு, உபசரிப்பு என்று எல்லா பழக்கங்களும் என்னுள் வந்து செறிய' என்ற வசனமே அத்தனை நெருசல்களில் அகப்பட்ட மனதை இலகுவாக்கி மண்ணின் பெருமையை பறைசாற்றும்.

அடுத்து முன்னுரையை பாலசுகுமார் அவர்கள் அழகாக தொகுத்து இருக்கிறார். தாய்நிலத்தின் தொன்மையையும் அதனோடு இணைந்த அத்தனை ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் சொல்லும் அழகில் நமக்கு அந்த நிலத்தை சென்றுவந்த ஒர் உணர்வு பீறிட்டு எழும். அந்த அழகும் வளமும் நிறைந்த நித்திலத்தை வாசிப்பில் நுகரமுடியாது உணர்வின் உரசல்களில் தான் அந்த கனம் தெரியும். ஆனாலும் முன்னுரையே முழுசாக விளைந்த நெல்மணியாகிறது.

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம் என்று ஆரம்பிக்கும் வரலாற்று ஆய்வில் கிறிஸ்துவுக்கு முன்னைய மற்றும் பிந்திய காலப்பகுதியில் சான்றுகளை விளக்கி கொட்டியாரத்தின் புராதனத்தை அதன் தொன்மையை வெளிக்கொணர கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டட சிற்ப மற்றும் இடிபாடுகள் என்று அத்தனை விடயங்களினூடு சான்றுகளை அடுக்கிக்கொண்ட கட்டுரை அற்புதமான ஆய்வாகவும் அதனிறுதியில் சொல்லியிருக்கும் ' கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிறபொழுது மேலும் விரிவான விளக்கங்களைப் பெறமுடியும். இது ஒரு அறிமுகக்குறிப்பே' என்று சொல்லும் போதே இந்நூலின் தொடர்ச்சியானதன்மையை வெளிக்காட்டிநிற்கிறது.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய 'கொட்டியாரப்பற்றுப் பிரதேசத்தின் பொருளாதார வளவாய்ப்புக்கள்' என்ற ஆய்வுக கட்டுரையில் இம்மானிலத்தின் செல்வச்செழிப்பான பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மக்கள் மேற்கொள்கின்றனர் என்பதை தௌ்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

அடுத்து மண்சார்ந்த மக்கள் என்ற சொற்றொடரே மக்களின் காலக்கண்ணாடியாக இருக்கும் இலக்கியங்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் மக்கள் எவ்வாறு எவ்வகையான இலக்கியங்களை மேற்கொண்டனர் என்பதை மண்மொழி இலக்கியங்கள், மரபுசார் சிற்றிலக்கியங்கள், தொல்சீர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகம் என்னும் பகுப்புக்களாகப் பிரித்து அழகாக எளிமையாக சிறப்பாக முற்குறிப்போடு சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலின் மற்றொரு சிறப்பு. 'மண்மொழி இலக்கியங்களில்' கிழக்குமாகாணத்துக்கே தனித்துவமான நாட்டார் இலக்கியக்கூறுகள் பலவற்றின் சிலவற்றை இப்பகுப்பில் காணலாம். உழவு, கொம்பு, வசந்தன், கும்மி, கும்ப விழா போன்றவற்றில் இடம்பெறும் பாடல்களில் சிலவற்றை அச்சுருவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் பள்ளு, குறவஞ்சி, உலா போன்ற மண்சார் மரபிலக்கியங்களில் காணப்படும் குளிர்த்தி, காவியம், தாலாட்டு, அகவல், மான்மியம், ஊஞ்சல் போன்றவை மரபுசார் சிற்றிலக்கியங்களின் சில கொட்டியார மண்ணின் மைந்தர்களால் பாடப்பட்ட காவியங்கள், அம்மன் பாடல்கள் என்பன இப்பகுப்பில் அடங்குகின்றன. இங்கே யுத்த சூழ்நிலைகளால் அழிந்துபோனவைகள் போக மீதியில் பொறுக்கி எடுக்கப்பட்டவைகளின் சிலவற்றை இங்குகாணலாம். ' காலம் அழித்ததுபோக மீதியாக இருப்பற்றை தேடிப்பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இளம் சந்ததியினர் ஈடுபடவேண்டும்' என்று சொல்லும்போதே இளம் சமுதாயத்துக்கு விடப்பட்டுள்ள இந்த இலக்கியச் சங்கிலித் தொடரை தொடர்பறா நிலையில் பேணவேண்டும் என்பதை காட்டிநிற்கிறது.

அடுத்து இடம்பெறும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுப்பில் தமிழில் வழியான காவியமரபு பற்றிக்குறிப்பிட்டு அங்கே கொட்டியாரத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடிஅமாவாசை விழாவில் படித்து பயன்சொல்லும் திருக்கரைசைப் புராணத்தின் சில அழகான பாடல்களை அச்சுருவேற்றம் செய்தமை அற்புதம்.

நாவல்கள் என்ற பகுப்பில் முழுமையாக எந்த நாவலும் இடம் பெறாமல் சில நாவல்களின் சுவைமிகு குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கபட்டுள்ளது. கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தின் வாழ்வின் கண்ணாடியான நாவல்களில் இப்பிரதேசத்து சிறப்பையும் வரலாற்றையும் எடுத்தியம்பக்கூடியதாக இருப்பதனால் அவரது நாவல்களின் ஒரு சில பகுதிகளை இப்புத்தகத்தின் வாயிலாக நாம் காணலாம். அடுத்து சிறுகதைகள் என்ற பகுப்பு. இங்கே ஈழத்து சிறுகதைகளின் ஆரம்ப படையல்களைத் தந்த இலங்கையர்கோன் கொட்டியாரப்பிரதேசத்தில் அரச அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்பது அவரது சிறுகதைகளில் மண்ணின் நடத்தைசார் பாதிப்புகளை எடுத்துக்காட்டியதை கொட்டியாரத்தின் சிறப்பை நுகரலாம். அத்தோடு சிறுகதைகளுக்கு மேற்கோள் காட்டும் வண்ணம் 'ஈழத்து சிறுகதை மன்னன்' கலாநிதி வ.அ. இராசரெத்தினம் அவர்களதும், மூதூர் அ.ச. பாய்வா மற்றும் கேணிப்பித்தன் அவர்களதுமான சில சிறுகதைகளை கொண்ட இப்புத்தகம் மெருகேறி வாசிக்கத்தூண்டும் ஒரு இலக்கியப்படைப்பாக நிற்கும்.

'கவிதைகள்' என்கிற பகுப்பில் மரபு மற்றும் புதுக்கவிதைகளை ஆக்கிய அத்தனை கொட்டியாரப்படைப்பாளிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முனைப்பில் அப்படைப்பாளிகளின் சில சிறப்பான கவிதைகளை காலத்தின் வடுக்களில் கொட்டியாரம் பட்ட அவஸ்தைகளையும் சமூகத்தின் அத்தனை காலப்பகுதிகளிலும் அடைந்த துயரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை உதிர்க்கும் மனதையும் நெஞ்சில் கனத்தையும் காட்டிநிற்கும் கவிதைகளுக்கு ஒரு வணக்கம்.

கடைசியில் பண்பாட்டுக்கலைகளின் வளர்ச்சியில் ஒரு தமிழ்க்கிராமத்து மண்ணின் வெளிப்பாடாக எழுந்த 'கூத்து' அக்கொட்டியாரப்பூமியிலும் அண்ணாவிமார்களால் பயிற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எழுந்த நாடகக்கலைகளை கொட்டியாரப் பிரதேசமும் கட்டிக்காத்து பல இசைக்கழகங்களால் மேடையேற்றப்பட்டன என்பதை நிரூபிக்கும் வண்ணம் அப்பிரதேசத்தில் எழுந்த நாடகங்களில் சிலவற்றை இத்தொகுப்பில் இணைத்து ஒரு பண்பட்ட கலாசாரத்தின் தமிழின் இன்ப இலக்கியங்ளை வெளிக்கொணர்ந்து மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வாண்மையைக் கொண்டுசெல்லக்கூடிய தன்மையைக் காட்டி நிற்கிறது.

4 comments:

Ashwin-WIN said...

நூல ஆய்வு ம்ம்ம்.:)))
கொட்டியாரம் என்பது எந்த ஊரு பாஸ்??

றமேஸ்-Ramesh said...

@@ அஷ்வின் : இங்கு போய்க் காண்க.
இது திருகோணமலையின் அழிக்கப்பட்டுவரும் ஒரு தாய்த்தமிழ்ப் பிரதேசம்.
http://koddiyaram.blogspot.com/
இங்குள்ள மக்களின் தமிழின் தொன்மையை ஆவணப்படுத்திய புத்தகமே அது.

LOSHAN said...

நல்ல பதிவு சகோதரா.. கொட்டியாரம் - பெயரே பெரும்பான்மையோரைப் பயப்படுத்துமே.
அழகான இடம் என அறிந்துள்ளேன்

றமேஸ்-Ramesh said...

@@ லோஷன்: நன்றி சகோ.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு