Pages

Saturday, June 4, 2011

"கா" கொண்ட செந்தமிழ் நாடு...

ஏய் பல்லேலக்கா பல்லேலக்கா
சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா
திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏய் …பல்லேலக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா

இந்த சிவாஜிப் பாடல் கேட்கும் போதே இந்த "கா" பற்றி ஒரு அருமை இருக்கு என எண்ணலாம்.

"இலங்கைப் பேச்சுத்தமிழ் பிரதேச அடிப்படையிலேயே பல கிளை மொழிகளாக ஆராய்ப்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ் என்பன எவ் வகையான நோக்கினும் அக்கிளை மொழிகளுள் முக்கியமானவை. இந்திப்பேச்சுத் தமிழோடு ஒப்பிடும்போது இலங்கைப்பேச்சுத் தமிழ் செந்தமிழுக்கு மிகவும் அண்மையில் உள்ளது. இலங்கைப் பேச்சுத் தமிழில் எந்தக்கிளைமொழி செந்தமிழ் பண்புடையதென்ற வினா எழுகின்றது. யாழ்ப்பாணப்பேச்சுத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையதென்ற கருத்து 1918 ஆம் ஆண்டு ஹோர்னல் (Hornell) என்பவரால் வெளியிடப்பட்டுள்ளதாக கூய்ப்பர் (Kuiper) தெரிவித்துள்ளார். மட்டக்களப்புத் தமிழே மிகவும் செந்தமிழ்ப் பண்புடையதென்ற கருத்து 1966 ஆம் ஆண்டில் கமீல் சுவெலபில்லினால் (Kamil Zvrelebil) வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய பெருமையுடையது மட்டக்களப்புத் தமிழ்" என்று பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் பற்றிய குறிப்புக்களை முனைவர் மு.இளங்கோவன் குறிப்பிடுவதை இங்கே காண்க.


மிகப்பழைய விளிப்புப் பெயர்களையும் அசைச்சொற்களையும் கொண்டுள்ள மொழிவழக்கு இன்றும் மட்டக்களப்புத் தமிழ்வழக்கில் காணலாம். பேச்சுவழக்கிலே தமிழ் எழுத்து வழக்கையும் இலக்கியச் செம்மையையும் காணலாம்.

"இலக்கிய வழக்குச்சொற்களில் இடம்பெறும் சில ஒலிகளுக்குப் பதிலாக பேச்சுவழக்கில் வேறு சில ஒலிகள் இடம்பெறுவது "இருவழக்கு" மொழிகளிற் சாதாரணமாகக் காணப்படும் ஒரு மொழியியற் பண்பாகும். தமிழ் இலக்கியவழக்குச் சொற்களிலும் படுவான்கரைத் தமிழ்ச் சொற்களிலும் இடம்பெறும்" என முனைவர் அ.சண்முகதாஸ் படுவான்கரைத் தமிழ் பற்றி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

"புள்ளலெக்கா புள்ளலெக்கா - உன்ர
புருசனெங்க போனதுகா
கல்லூட்டுத் திண்ணையில
கதைபழகப் போனதுகா"

என்று மட்டக்களப்பு நாட்டுக்கவி வழக்கில் "கா" என்னும் அசைமொழி இரு பெண்களின் வினாவிலும் விடையுமாய் வந்திருக்கிறது. இங்கு "வீடு" என்ற சொல் மருவி "ஊடு" என கல்லூடு என்ற தொடரில் வருகிறது.

"யா, கா, பிற, பிறர்க்கு, அரோ, போ, மாது என வரூஉம்
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி" - சொல் 279

என்னும் தொல்காப்பியர் சூத்திரத்தில் காட்டப்பட்டுள்ள ஏழு அசைச் சொற்களும் பண்டை செய்யுள் வழக்கில் இருக்கிறது.

நன்னூலில் கலித்தொகையுள் "காண்டி" என்னும் முன்னிலைவினை சேர்ந்து "கா" என்ற அசைநிலைச் சொல் இருந்தது எனவும் பின் மருவியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆயினும் மட்டக்களப்புத் தமிழகத்திலே செய்யும் வழக்கிலும் பேச்சுவழக்கிலும் "கா" காணலாம். "கா" என்ப உயர்ந்தோர் வழக்காக அமைக்கப்பட்டதை நன்னூலில் காணலாம்.
"காண்டிகா கால்கள் கழலுமே" என்பது மட்டக்களப்பு புலவர்மணி அவர்களின் 'பகவத் கீதை வெண்பாவின் ஓரடி ( மட்டக்களப்புத் தமிழகம் - பண்டிதர் வீ.சி. கந்தையா)

தமிழில் தொல்காப்பியர் காலத்து அசைநிலை இடைச்சொற் பிரயோகம் இன்றும் வழக்த்திலுள்ளது இம்மொழிவளம் இன்னும் சங்கத்தின் தொடர்பாய் அமைவது சிறப்புப்பொருந்திய தமிழின் சிறப்பு.

"மட்டக்களப்பிலே ஆடவர் தோளிலும் கா
அரிவையர் நாவிலுங் கா" என்ற ஒரு தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார் (பக்.19, மட்டக்களப்புத் தமிழகம்)
"மறுகா" - மறுகால், பிறகு என்று பொருள்படும்.

இன்னும் இப்பொழுதும் தாயை விளிக்கும் " கோ" "கா" என்று காணலாம்.
'அம்மா! கோ!! வாவங்கா...வாகா! " என்பது அம்மா வா அம்மா என்பதைக்குறிக்கும்.

அரிசிக்காரி குத்தரிசி மூடையைச் சுமந்த வண்ணம் " அரிசிரிக்கே அரிசி" என்று சொல்ல வாங்கும் பெண்ணொருத்தி "பச்சரிசாகா.. செவப்பரிசாகா.. " என்பர்.

இங்கே அரிசி விற்கும் பெண் - அரிசிக்காரி எனவும்
பச்சரி - வெயிலில் காய வைத்து அவிக்காதல் குற்றப்படும் அரிசி ஆகவும்
செவப்பரிசி - செந்நிற அரிசி தவிட்டு அரிசி ஆகவும் கொள்ளப்படும்.

மேற்குறிப்பிட்ட பாடலில் வரும் "புள்ளலெக்கா" என்பதில் "பிள்ளை" என்பது புள்ள என்று வந்திருக்கிறது. அனேகமாக ஆண்பிள்ளைகளை 'பிள்ளை்' என்றழைப்பர் ஆயினும் மட்டக்களப்பிலே பெண்களையே பிள்ளை என்றழைப்பது பெருமை.

இதனாலேயே மட்டக்களப்பில் தாய்வழிப் பரம்பரையில் தாய் பிள்ளையுடன் சேர்ந்து வாழுதல் வழக்கு. இதனால் தாய்வழிக் குடியே பிள்ளையின் குடியாக குடிப்பரம்பரை வளர்கிறது. பெண்மைக்கு பெருமை சேர்த்து கல்யாணத்தின் பின்னர் தாயுடன் மகள் அதாவது பிள்ளை மருமகனும் சேர்ந்து வாழும் குடும்பமுறை இன்றும் மட்டக்களப்பிலே இருக்கிறது.

இன்றும் பண்பாடு கலாசார விழுமியங்களை வெளிக்காட்டும் தமிழ் கொண்ட வளம்மிகு நாடு.பாடல் இங்கே...வாழ்த்துகிறோம் சகோதரர்களே.13 comments:

Jana said...

பண்டிதர் வீ.சி. கந்தையா

இல்லை
கலாநிதி வீ.சி. கந்தையா..

அவர் யார் என்று தெரியுமா ரமேஷ்??????

றமேஸ்-Ramesh said...

@@ ஜனா அண்ணா
பண்டிதர் அதற்குப்பின் வித்துவான் பட்டமும் பெற்றவர். ஆனால் கலாநிதி பற்றி தெரியவில்லை. அவர் பற்றி அறிந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும்கால் இன்னமும் அறியலாமே.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

நிரூபன் said...

கா.. பற்றி ஒரு காத்திரமான, இலக்கிய நூல்களினை அடிப்படையாக் கொண்ட விரிவான பதிவினை வழங்கியிருக்கிறீர்கள்..

நன்றி சகோ.

நிரூபன் said...

கா பற்றிய காதில் கேளாத பல விடயங்களை இப் பதிவின் மூலமாக அறிந்தேன் சகா.

நிரூபன் said...

’நீரோடும் நாட்டில்
மீன் பாடக் கேட்டு
நெல்லாடும் பூமியிது....

பாடல் இக்கால இசையுடன் ஆங்கிலமும் தமிழும் கலந்து மண் வாசனை மிகு கருத்துக்களைச் சொல்லி நிற்கிறது.

பகிர்விற்கு நன்றி மாம்ஸ்

கடம்பவன குயில் said...

கா பற்றிய தங்கள் பதிவு மிக அருமை. அத்தனையும் நான் அறியா புது செய்திகள். மிக்க நன்றி சகோ.

ஹேமா said...

புதுசா இருக்கு றமேஸ் !

Seelan said...

அருமையான விடயங்களை அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீக்கள் ரமேஸ் வாழ்துகள்......

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லதொரு பகிர்வு நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said...

(கா-சோலை, காத்தல் என்றுகூட பொருளுண்டு நண்பா.)

றமேஸ்-Ramesh said...

@@யோகா - :)நன்றி

@@ நிரூபன் - நன்றி. உங்களாலே ஆரம்பிச்சது.
@@ குயிலே - தமிழ் கண்டீர் நன்றி
@@ஹேமா - இதுவரைக்கும் இணையத்தரவேற்றம் இல்லை என நினைக்கிறேன்.நன்றி

@@ சீலன் - அண்ணலே தங்களது பாடல் மட்டுநகர் புதுமுயற்சி..வாழ்த்துக்கள்
@@முனைவர். இரா குணசீலன்- நன்றி நண்பரே. தமிழ் சேர்த்தது மகிழ்ச்சி.

சந்ரு said...

நல்ல தொகுப்பு ரமேஸ் பயனுள்ள தகவல்கள்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு