Pages

Sunday, October 17, 2010

காவி நிறக்காதல் கொடிமர வேர்களில்

மீண்டும் காதல் என்ற சங்கீதத்தில் சில சுருதிகளை மீட்டுப்பார்க்க வேண்டும் என்ற உணர்வு. வாழ்க்கையை வாசித்த யாசித்த பண்பாட்டு மாற்றங்களை தன்பாட்டுக்குள் கொண்டுவந்த அந்த சாமி. காதலை மறப்பதற்காக ஒரு கோழைத்தனமாய் தன் காதலி பிரிகிறாள் என்ற எண்ணத்தில் காவியுடுத்திய காதலன் அந்த சாமி.

தன் கண்முன்னமே தன் காதலி யாருக்கோ மனைவியாகிவிடுவாள் என்று எண்ணி தாங்கொணா துயரம்தலையில் அழுத்த சாமி தேடி சாமியாகிறான். ஆனால் அங்கே யாரை மறக்கவேண்டும் மனதில் பதிந்த அந்த முகத்தை அழிக்க அழிக்கவேண்டும் என்று எண்ணி காவியுடை தரித்தானோ அதே அவளைத் தவிர அவள் முகத்தைத் தவிர அவன் பிரார்த்தனையும் மறக்க முடியாத தன்மையும் நின்று அவனை உலுக்கி எடுத்தது. முடியாமல் மீண்டும் மலையிலிருந்து காட்டிலிருந்து அந்த காவி இறங்குகிறது. கொடுமை என்னவென்றால் அதே உடையில் சில சில்லிடும் சிலிர்ப்புக்கு அந்த பழைய நினைவுகள் மட்டும் நிலைத்து நிற்க அந்த பழைய இடமும் புளிக்காத காதல் என்ற உணர்வும் மட்டும் கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் 18 வருசங்கள் கடந்த பின்னும் இன்னும்.......

பாவம் காதல் காதலிக்கவிடவில்லை இல்லை காதலித்த காதல் வாழவைக்கவில்லை அந்த சாமியை. பச்சைக் காடுகளில் பச்சையானவர் இங்கு பழைய இச்சைக்கான காதலை கச்சையில்(காவியில்) தேக்கிக்கொண்டு அலையலையாய் புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு நிகழ்கால நிகழ்வுகளையும் கடந்தகால அவரது நிஜங்களையும் ஒப்பிட்டு காதலிக்கிறார் இப்போதும் அந்த பழங்காதலை.

இடம் மாறி தடம் மாறி இந்த சமூக மாற்றங்களின் வாசனை நுகரும் இந்த சாமியின் மனதில் இன்னும் மாறாத அந்த "மதுபாலா" என்ற அழகிய காதல் மட்டும் மாறாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.
"காணாமல் போயிருப்பாளா
நான்
காணாமல் போனதால்
ஆகாமல் போயிருப்பாளா"
ஏங்கிக்கொண்டு அவளைத் தேடித்தேடி அலைகிறது இந்த காவி. பவ்வேறு மாற்றங்கள் ஆனாலும் தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தன் காதலின் அடிச்சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கிறது இந்த சாமிக்கு.
அப்படியே தானும் தன் பள்ளித்தோழனும் மாட்டிக்கொண்ட ஒரு காட்டுக்குள்ளே மீண்டும் அந்த காதல் நதி விளையாடிக்கொண்டிருக்குது.
"சந்தித்த சில நொடிகள்
சங்கடமான பொழுதுகள்" இருவருக்கும் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரானவர்கள் இப்போ இருவரானவர்களாக நினைத்துக்கொண்டு அந்த சாமி கதறியழும் காதலில் தெரிந்தது.
அப்போது அந்த நிசப்த அலைவரிசையில் சில நிஜங்கள் வெளிக்கொணரப்பட்டது
"... என் வாழ்க்கையில் காதலங்கிறது இறந்த காலம். உங்களை நான் காதலிச்சது நிஜம்; ஆசைப்பட்டது நிஜம்; அழுதது நிஜம்; பிரிஞ்சது நிஜம்; கரைஞ்சது நிஜம்; எல்லாம் இறந்த கால நிஜங்கள். வாழ்க்கையை உணர்ச்சிமயமாப் பார்க்கிற காலம் முடிஞ்சு போச்சு. இது அறிவுமயமாய் பார்க்குற பருவம்" என்று அழுத்தமாக்கிய அவள் குரல்
........"நீங்க திரும்பி வரலேன்னா எனக்கு வாழ்க்கை இல்லேன்னு நெனச்சன்" ... "நீங்க திரும்ப வந்தாலும் உங்களுக்கு வாழ்க்கை இல்லேன்னு நெனச்சன்" என்று முற்றுப்புள்ளி வைக்காமல் வைத்த அவளை கண்களால் கழுவிய கண்ணீரை உதிர்த்திய சாமிக்கு அவள்
" காதல்ங்கிறது காதலிக்கிறது மட்டுமில்ல இளங்கோ! காதலை நிறைவேத்துறது. உங்களுக்கு காதலிக்க மட்டும்தான் தெரிஞ்சது. காதலிக்க மட்டும்தான் முடிஞ்சது; நீங்க பாதிக்காதலன்."
என்று அறிவுரை வழங்கிய அங்க ஒரு யுத்தமே நடந்தேறியது.
கடைசியில் சாமியாரின் தோள்களில் தொக்கியுள்ள குழந்தைக்கு அவள் தாய்மையின் தவிப்பில் "போய் வருகிறேன் கண்ணே! இல்லை ஜென்மங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்யை. போகிறேன் கண்ணே! என்னைச்சுமந்த மண்ணே!......என் இளமையின் பெரும் பகுதியை மயக்கத்தில் வைத்திருந்த மாஜி காதலரே! என்னை நோக்கி மரணம் அல்லது மரணத்தை நோக்கி நான்..." சில வினாடிகள் மெளனம் சாமியாரின் உள்ளத்தில் ரணம் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

இவ்வாறு அற்புதமாக காதலும் சமூகமும் என்ற கட்டமைப்புக்குள் கற்பனைச் சாமியையும் காதலையும் கதையாக்கிய கவபேரரசு வைரமுத்து அவர்களின்
காவி நிறத்தில் ஒரு காதல் என்ற புத்தகத்தைப் படித்தேன். பகிர்ந்துள்ளேன்.
இது 1991 இல் அவர் பதிப்பித்த புத்தகம்


இப்போ வைரமுத்து அவர்கள் 1983 காலப்பகுதியில் எழுதிய கவிதை இரண்டும் என்னை ஏதோ செய்தது. கவிதையில் காதல் கதையில் காதல் அற்புதப்படைப்பு கட்டாயம் வாசியுங்கள் இரண்டு புத்தகங்களையும்.


துப்பாக்கி எப்போது பூப்பூப்பது


அன்பனே
உன்
தோழியைவிட
துப்பாக்கியை நேசிக்கும்
தோழனே

என்னோடு
மெழுகுவத்திகளும்
அழுதுகொண்டிருக்கும்
இந்த
மெல்லிய இரவில்
கடிதத்தில் விழும் என்
கண்ணீர்ச் சொட்டு

கடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?

நாங்கள்
நட்சத்திரங்களைப் பார்த்து
நாளாயிற்று
எங்கள் வானத்தைப்
புகைமண்டலம்
போர்த்திருக்கிறது

மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்

அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை.

காதலா
நீயும் நானும்
ரகசியமாய் நடந்து போகும்
ராத்திரிச் சாலை
இப்போது -
வெடிகுண்டுகளின்
விதைப் பண்ணையாகிவிட்டது

மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.

இனியவனே
என்
வாலிபத்தை
வாசித்தவனே

உனக்கு
என் நினைவுகள் வந்ததுண்டா?
எப்போதாவது?

இருக்காது
துப்பாக்கி எப்போது
பூப் பூப்பது?

ஆனால்
என் தலையணையருகே
சில
உலகக் காவியங்களும்
உன் நினைவுகளும் தவிர
ஒன்றுமில்லை.

இப்போது
கல்யாணத்தை நான்
காதலிக்கவில்லை

ஆனால்
பிள்ளைபெற்றுக் கொள்ளப்
பிரியப்படுகிறேன்

ஏனென்றால்
ஈழ யுத்தத்திற்கு
இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்
தம்பதிகளாய் இருப்பதினும்
சுதந்திர ஈழத்தில்
கல்லறைகளாய் இருப்போம்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை கொடிமரத்து வேர்கள் என்ற புத்தகத்தொகுப்பிலிருந்து.

அக்டோபர் மாதம் வாசிப்பு மாதம் ஆகையால் வாசியுங்கள் கதையும் கவிதையும் உங்களுக்குள்ளும் உணர்வு பீறிட்டு இதயச்சுவர்களின் சில கிறல்களில் காதல் தெரியும். காவியம் தெரியும்.
கனக்கும் இதயம் கொண்டு விடைபெறுகிறேன் சில் திருப்திகளுடனும் திருத்தப்படவேண்டிய தீர்ப்புக்களுடனும் தமிழனாய்

11 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃகடிதத்தில் அழிவது
மெல்லினமும் வல்லினமும்தான்
கண்ணீரில் அழிவது
தமிழினமே அல்லவா?ஃஃஃஃ
ரொம்ப நல்லாயிருக்க.. ஆனால் இப்போ எனக்கு வைரமுத்துவை பிடிக்குதில்லை... காரணம் அவரது பச்சோந்தித் தனமான செயற்பாடுகள்...

Ramesh said...

@@ம.தி.சுதா said...
///ஆனால் இப்போ எனக்கு வைரமுத்துவை பிடிக்குதில்லை... காரணம் அவரது பச்சோந்தித் தனமான செயற்பாடுகள்...///

நண்பா இங்கு தான் நாம் பிறழ்கிறோம்.
அவரவர் சொந்த வாழ்க்கை நமக்கு அவசியமில்லை. அவர் யாராகவாவது இருந்துட்டுப்போகட்டுமே. எவரின் கருத்துக்கள் திறமைகள் தெரிகிறதோ அத்திறமையை ரசிப்போம் சுவைப்போம். அது போதும். அவர் நம்மளப்போலவே நமக்கு சார்பாகவே இருக்கணும் என்று ஒருஅவசியமில்லையே. அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக மாறிக்கொள்ளவேண்டுமே. சாத்தியமா இது.
ஒவ்வொருவரும் அவர்கள் தேவையின் பால் ஒவ்வொரு பக்கம் சாய்வது இயற்கை.

நன்றி சுதா வருகைக்கும் கருத்துக்கும்

Bavan said...

//கவிதையில் காதல் கதையில் காதல் அற்புதப்படைப்பு கட்டாயம் வாசியுங்கள் இரண்டு புத்தகங்களையும்.//

நிச்சயமாக..:) பகிர்வுக்கு நன்றி..:D

தீபன் said...

"மனிதன் மட்டும்தான்
சிரிக்கும் ஜீவராசியாம்
அப்படிப் பார்த்தால்
இப்போது இங்கு யாரும்
மனிதராசி இல்லை"

சரியாக சோல்லிருக்கிறார் மீண்டும் மனித இனம் விலங்காகி காடுகளில் வாழ்வது போன்றே ஓர் உணர்வு...

றமேஸ் உங்கள் கருத்துக்கும் உடன்படுகின்றேன், திறமைகளைவிடுத்து தனிமனிதனை பார்க்கும் பழக்கம் மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது...

இன்னொருவரை எதிர்பார்த்து
இதுவரை ஏமாந்தது போதும்

Kousalya Raj said...

//மரணத்திற்கு இங்கு யாரும்
வருந்துவதில்லை
உயிர்கள் இங்கே
இலையுதிர்காலத்து
இலைகளாயின.//

மரணம் ஒரு சாதாரண நிகழ்வாகி போனதால் வருத்தம் பழகி போய்விட்டது....

வைரமுத்துவின் இரண்டு விதமான எழுத்துக்களையும் வாசிக்கிற வாய்ப்பிற்கு மகிழ்கிறேன்....

//நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக மாறிக்கொள்ளவேண்டுமே. சாத்தியமா இது.
ஒவ்வொருவரும் அவர்கள் தேவையின் பால் ஒவ்வொரு பக்கம் சாய்வது இயற்கை.//

இந்த சிதறலில் சிக்கிக்கொண்டேன்...யதார்த்தம்...நிதர்சனம்....இதை புரிந்துகொள்ளணும் நாம்.....நன்றி சகோ...

Ramesh said...

@@Bavan said...
// நிச்சயமாக..:) பகிர்வுக்கு நன்றி..:D////
நன்றி பவன்.
வரும்போது தருகிறேன்

Ramesh said...

@@ தீபன்... said...

////சரியாக சோல்லிருக்கிறார் மீண்டும் மனித இனம் விலங்காகி காடுகளில் வாழ்வது போன்றே ஓர் உணர்வு...

றமேஸ் உங்கள் கருத்துக்கும் உடன்படுகின்றேன், திறமைகளைவிடுத்து தனிமனிதனை பார்க்கும் பழக்கம் மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது...

இன்னொருவரை எதிர்பார்த்து
இதுவரை ஏமாந்தது போதும்////

நன்றி தீபன்

Ramesh said...

@@Kousalya said...
///மரணம் ஒரு சாதாரண நிகழ்வாகி போனதால் வருத்தம் பழகி போய்விட்டது....

வைரமுத்துவின் இரண்டு விதமான எழுத்துக்களையும் வாசிக்கிற வாய்ப்பிற்கு மகிழ்கிறேன்....
///
நன்றி வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
///

////இந்த சிதறலில் சிக்கிக்கொண்டேன்...யதார்த்தம்...நிதர்சனம்....இதை புரிந்துகொள்ளணும் நாம்.....நன்றி சகோ...////
நன்றி சிக்கியதற்கு. வருக வருகவே

Chitra said...

அருமையான கவிதைகளை/புத்தகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க....

Ramesh said...

@@Chitra said...
///அருமையான கவிதைகளை/புத்தகங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க....////

நன்றி சித்ரா...

Rebecca said...

உங்கள் அருமையான கருத்துக்களுக்கு என் வாழ்த்துக்கள். "மனிதன் மட்டும் தான் சிரிக்கும் ஜீவராசியாம்... அற்புதமான வரிகள் ஆனால் இன்று யார் சிரிக்கிறார்கள்? தேவைக்காகவும், இலாபத்திற்காகவும், சுட்சுமத்திற்காகவும் தானே சிரிக்கிறார்கள்.
உணர்வுகளை புரிந்து கொள்ளும் உன்னதமான சூழ்நிலை மலர வேண்டும் வாழ்த்துக்கள்...!

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு