Pages

Wednesday, November 2, 2022

வாழி பாடுதலும் 10 ஆம் நாள் நினைவேந்தலும்.


கொண்டைக்டர் சிவஞானம் என்று தான் அப்பாவை அழைப்பர். அதனால் எனக்கும் ”கொண்டைக்டர்” பட்டம் கிடைத்தது.
சாவீடு என்றாலே எங்களது வீடுகளில் வைகுந்த அம்மானை பாடுவோம். இது எட்டுநாட்களுக்குள் முடிக்கப்படும் சிலவேளை பத்தாம் நாள் பாடி முடிக்கப்படும்.
ஆனால் எனது மாமன் மறைந்துவிட்டார் மணியம் மாமா சொன்னார் அதற்கு வரையறை இல்லை பாடி முடிக்கும் நாள் பொங்கல் படையல் வைத்து வழிபடல் வேண்டும் என்று.
அவ்வாறே இன்று பத்தாம் நாள் நினைவேந்தலில் பாடி முடித்தோம். அம்மம்மாவின் தங்கை எங்கள் ஆசம்மா தான் பாடி முடித்தார். அவரோடு இணைந்து கோபாலபிள்ளை அண்ணன், பாபு மாமா, தேவி சித்தி எல்லாரும் பாடித்தான் அம்மானை முற்றுப்பெற்றது.
அண்மையில் நினைவேந்தலுக்கு அரசு தடுத்தமை மிகவும் கண்டனத்துக்குாியது.
இறப்பின் வலி கொடியது. அதற்கு கட்டாயம் நினைவேந்தல் வேண்டும். அப்பா இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளக்கூட முடியவில்லை.
இன்று எங்கள் மருமகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளது தோழ தோழிகளது பெற்றோர் காலைச்சாப்பாடு கொண்டு வர மனதை ஏதோ ஒரு ஜென் நிலையா,?? என்னவென்னபது?
அன்பின் ஒரு வகையை உணர்ந்து தான் ஆகவேண்டும்.
என்னே ஊர் பண்பாட்டு வழக்கம்..
இந்த கொவிட் காலத்திலும் அச்சம் இல்லாமல் சுகாதார வழிவகையில் ஒவ்வொருநாளும் கிடைக்கும் உபசாரங்களும் அனுதாபங்களும் எத்தனை கடன் பட்டுள்ளோம் அனைவருக்கும். ஏக்கமும் கலக்கமும் கொண்ட இந்நேரம் வாழ்தலின் இனிமையை சொல்லிச் செல்லுகின்றது.
அப்பா நீங்கள் வாழ்கிறீர்கள் என்றே சொல்லுவோம்...
கொண்டக்டராக இருந்து சேவையும் செய்தமை என்ன புண்ணியம் செய்தமோ!!!...
உண்மையில் அப்பா 2010 ஆம் ஆண்டுதான் இறந்திருக்கவேண்டும். அந்த நிமோனியாவால் அவதிப்பட்டதை என்னவென்று சொல்ல.. தாதியான அக்காவின் துணையினால் சேவை என்பதை செவ்வனே செய்யும் அக்காவின் பாிகாரங்கள், வைத்திய ஆலோசனைகள், வைத்தியர்களின் அர்ப்பணிப்பினால் இந்த பத்துவருடங்கள் எங்களோடு வாழ கிடைத்தது.
கடைசி இரண்டு மாதங்கள் சிறுநீர் செல்லும் பிரச்சனை, அதற்கு முதல் சில வருடங்களாக பார்க்கின்சன் நரம்புப் பிரச்சனை, கடைசியாக மீண்டும் நிமோனியா, இளைப்பு வந்து இறக்கும் உச்சம் சென்று மீண்டு நலமாகி இரு நாட்களின் பின்னர் இயற்கை எய்தினார்..
”அம்மா அப்பா போயிடுவார்” என்று அம்மாவிடம் சொன்னால் அம்மா ஏசுவா. சும்மா இரு அப்பா இருப்பார் என்று உறுதியாக சொல்லி வந்த அம்மா 13 ஆந்திகதி பின்னேரம் தான் அதிக அழுகையும் என்தோள் மீது சாய்ந்து அப்பா வேணும்டா என்று அழுகை வரத்தான் எனக்கு சந்தேகம் வந்தது. என்மகன் ஆரணன் எப்போதும் ” அப்பா” அம்மா” இரண்டு வார்த்தைகள் தான் சொல்லி வந்தவன் அன்றுதான் ”அப்பா, அப்பப்பபா”.. அப்பப்பா” என்று சொன்னான். பிறகு அப்பாவிடம் கூட்டிச் செல்ல தம்பி என்று அவாின் இரு கைகளும் தூக்க எத்தனித்ததையும் ஆரணன் கைசையினால் விடைபெறுதலையும் சொல்ல, எனக்கு அப்பா எங்களை விட்டுச் செல்லப்போகிறார் என்பதை எதிர்வுகூறியது போலாகியது.
14 ஆம் திகதி அதிகாலை 12.10 - 12. 30 இடைவெளிகளில் அப்பா நீள் நித்திரையிலானார்.
கண்கள் நீயே
காற்றும் நீயே
ஊனும் நீ
உயிரும் நீ....
தாமரையின் வாிகள் கொல்லாமல் கொல்லும்.... பாடல் தான்
இப்போதும் ”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் பின்னே” எவ்வளவு அழகாக நா.முத்துக்குமார் சொல்லிச் சென்றுள்ளான்...
திருவாசகத்தின் பல பக்கங்களை வாசிக்க வேண்டிய தருணத்தை தந்து சென்றுள்ளார் எனது தந்தை....
அவன் தாழ் பணி செய்ய புறப்பட்ட எனது தந்தையின் கண்கள் திறந்து பார்ப்பது போலயே இருக்கிறது. இறுதிக் கடமைகள் செய்துகொண்டே இருக்கிறோம்...
இன்னும் வாழ்க்கையை சொல்லித் தருகிறார்...
படம்
வைகுந்த அம்மானை நிறைவுநாள் பதிவு.




No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு